பழகுமுகாம் 5 ஆம் நாள்:கையில் கட்டியிருக்கும் மூடநம்பிக்கை கயிற்றுக்கு சக்தி அதிகமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

பழகுமுகாம் 5 ஆம் நாள்:கையில் கட்டியிருக்கும் மூடநம்பிக்கை கயிற்றுக்கு சக்தி அதிகமா?

அந்தக் கயிற்றை அறுக்கும் சின்ன கத்திக்கு சக்தி அதிகமா?

காணொலி வாயிலாகஆசிரியர் தாத்தாவின் கேள்வியும், பிஞ்சுகளின் பதிலும்!

வல்லம், மே 9  பெரியார் பிஞ்சு மாத இதழ், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர் நிலை பல்கலைக் கழகம் இணைந்து வழங்கிய ’பழகு முகாம்’ நிகழ்வின் அய்ந்தாம் நாளில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஜூம் காணொலியில் பெரியார் பிஞ்சுகளுடன் உற்சாகத்துடன் உரையாடினார்.

குழந்தைகள் இந்த சமூகத்தை சரியான பார்வையில் அணுகும் வாய்ப்பைக் கொடுப்பதற்காக, அவர்களின் கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பதற்கெனவும், சக குழந்தைகளுடன் பேதமின்றி பழகவுமான ஓர் அருமையான வாய்ப்பை, பழகு முகாம் என்னும் கோடை கால குழந்தைகள் முகாமை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 1993 ஆம் ஆண்டி லிருந்து இன்று வரை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த ஆண்டும் வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில், மே 2 முதல் மே 6 வரை பழகு முகாம் நடைபெற்றது. அதில் அய்ந்தாம் நாளான 6.5.2023 அன்று பிற்பகல், அய்ன்ஸ்டீன் அரங்கில் நடை பெற்ற நிகழ்வில், ஆசிரியர் தாத்தா ஜூம் காணொலி மூலம் பிஞ்சுகளுடன் கலந்துரையாடினார்.

செம்மரக் கன்றுகள் நட்ட பிஞ்சுகள்!

பழகு முகாம் அய்ந்தாம் நாளில் முதல் வகுப்பாக பிஞ்சுகள் அனைவரும் மரம் நட்டனர். ஏறக்குறைய பல்கலைக்கழக வளாகத்தில் எல்லா இடங்களிலும் மரங்களை நட்டுவிட்டதால், இனி வரும் ஆண்டுகளில் மரம் நடுவதற்கு இடம் தேடுவதில் சிக்கல் ஏற்படக்கூடும். அதன் முன்னோட்டமாக ஆர்கிடெக்ட் கட்டடத்தின் பின் பகுதியில் உள்ள சிறு இடத்தில் 74 பிஞ்சுகளும் இரண்டிரண்டு பேராக மொத்தம் 37 செம்மரக் கன்று களை நட்டனர். முன்னதாக இந்நிகழ்வுக்கு தலைமை யேற்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேலுச் சாமி ஒரு மரக்கன்று நட்டார். இப்பணிகளை பி.ஆர்.ஓ. பாண்டியனின் வழிகாட்டுதலில் மாரியம்மாள், பால்ராஜ், சேதுராமன், செல்வி, வெண்ணிலா, விஜயம்மா ஆகி யோர் தயார் செய்து வைத்திருந்தனர்.

நிகழ்வில் பழகு முகாம் ஒருங்கிணைப்பாளர்களும், பேராசிரியப் பெருமக்களுமான சித்ரா, அனுசுயா, கீதா, காயத்ரி, ஆனந்த ஞானசெல்வன், டாக்டர் ரமேஷ், ஊடகவியலாளர் உடுமலை வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிஞ்சுகளுக்கு மரக்கன்று நட்ட பிறகு, புத்தி வீரியமாக வேலை செய்தது. அதாவது, மரக்கன்றுக்கு தண்ணீர் அளவாக ஊற்ற வேண்டும். அல்லது வைத்துவிடுங்கள் மற்றதை நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று அறிவித்தும், அவர்களே தண்ணீர் ஊற்ற முயன்றனர். எப்படியென்றால், நேரிடையாக ஊற்றாமல் ஒரு அடி தள்ளி ஒரு சிறு பள்ளம் வெட்டி, அதில் ஊற்றினர். பிறகு அந்தப் பள்ளத்திலிருந்து சின்ன வாய்க்கால் வெட்டி விட்டு, பிறகு தண்ணீர் ஊற்றினர். இன்னும் சிலரோ, சனி கோளுக்கு வளையங்கள் உள்ளதுபோல, கூழாங் கற்களால் வட்டமாக ஒரு பாதுகாப்பு வளையம் அமைத் தனர். ஏற்கெனவே ஆலோசனை சொன்னவர்கள் அவர் களின் சிந்தனை ஆற்றலைக் கண்டு வியந்து அப்படியே விட்டுவிட்டனர். 

அதைத் தொடர்ந்து, பேராசிரியர் நல். இராமச்சந்திரன் கட்டட எழிற்கலை வளாகத்தில் உள்ள ’ஓபன் ஆர்ட் கேலரி’ பகுதியில் அணையில் இருந்து நீர் வெளியேறுவது போன்ற ஓவியம் வரையப்பட்டிருந்தது. அதன் கீழே துணைவேந்தருடன் பிஞ்சுகளை நிற்கவைத்தும், மெக் கானிக்கல் துறையில் அமைக்கப்பட்டிருந்த பட்டாம் பூச்சிக்கு முன்பாக பிஞ்சுகளை இரண்டு இறக்கைகள் போல் நிற்கவைத்தும் படம் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

கயிறு கட்டினால் பேய் வராது, நோய்தான் வரும்!

இரண்டாம் வகுப்பாக பாடம் நடத்திய தோழர் மதியழகன், ”சுற்றுகின்ற பூமியை சுழட்டி விட்டதாரு?” இறைவன் படைத்ததென நம்ப வச்சது யாரு? இயல்பாக இருப்பது தான் இயற்கையின்னு பேரு!” என்று எளிய மொழியில் பிஞ்சுகளுக்கு புரியக்கூடிய தமிழில் அருமையான மெட்டில் பாடி, ஆடி பிஞ்சுகளுக்கு பிரபஞ்ச தோற்றத்தை, இயற்கையை புரியவைத்தார். 

இரண்டாம் வகுப்பாக ஆசிரியர் ஜூம் காணொலியில் பிஞ்சுகளை சந்தித்து உரையாடினார். முதலில், ”பெரியார் தாத்தா படம் பார்த்தீர்களா?” என்று கேட்டார். பிஞ்சுகள் ”பார்த்தோம்” என்று பதில் வந்ததும், ”பெரியார் படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி என்ன?” என்று கேட்டு, ‘வைக்கம் போராட்டம்’ என்றும், ”ஏரியில் இருந்து ஈரோட்டுக்கு தண்ணீர் பாய்ச்சுவது” என்றும் ஆளா ளுக்கு ஒன்றைச் சொல்லி, ஆசிரியர் தாத்தாவை மகிழ வைத்தனர். 

தொடர்ந்து, ”பழகு முகாமில் கற்றுக்கொண்டது என்ன?” என்று கேட்டு, “காலையில் 5 மணிக்கு எழுவது” என்றும், ”விளையாட்டு” என்றும், “நீச்சல்” என்றும், “சிலம்பம்” என்றும், “கராத்தே” என்றும், ”கோமாளி” என்றும், “அனிமேசன்” என்றும், “பேய் பற்றிய வகுப்பு” என்றும் அவரவர்க்கு பிடித்ததை பட்டியல் இட்டு ஆசிரியரை உற்சாகத்தில் ஆழ்த்தினர். அதைத் தொடர்ந்து ஆசிரியர், ’எத்தனை பேர் கைகளில் கயிறு கட்டியிருக்கிறீர்கள்?” என்று கேட்டதும், அய்ந்து பிஞ்சுகள் கைகளை உயர்த்தினர்.

முன்னதாக பிஞ்சுகளுடன் பேசியதில் அவர்கள் பேய் என்றால் பயம் என்றும், பிரின்சு அதுகுறித்து நடத்திய பாடம் பற்றியும் கூறியிருந்தனர். அதை மனதில் வைத்து ஆசிரியர், “கையில் கயிறு கட்டினால் பேய் வராது! நோய்தான் வரும்!” என்றார். பின்னர் பிஞ்சு களுக்கு அந்தக்கயிற்றில் சக்தி எதுவும் இல்லை என்பதை எண்பிக்க, “கயிற்றை கத்தியால் அறுத்துப் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, ”சக்தி கத்திக்கா? கயிற்றுக்கா?” என்றார். “கத்திக்குத்தான் சக்தி” என்று ஒருமித்த குரலில் பதில் பிஞ்சுகளிடமிருந்து வந்தது. 

தொடர்ந்து, 1903 ஆம் ஆண்டில் பெரியார் தன் தந்தையின் கையெழுத்தைப் போட்டதால், நீதிமன்றத் தில் நடைபெற்ற வழக்கில், பெரியார் உண்மையைப் பேசி குற்றத்தை ஒத்துக்கொண்டதாலும், மாற்றி கையெ ழுத்து போட்டதால் மற்றவர்களுக்கு எந்த வகையிலும் தொல்லை ஏற்படாததாலும் வெள்ளைக்கார நீதிபதி பெரியார் குணத்தைப் பாராட்டி விடுதலை செய்த வரலாற்றை எடுத்துரைத்து, ”பொய் சொல்லி வெற்றி பெறுவதை விட, உண்மையைச் சொல்லி தோற்பதே மேல்!” என்று அறிவுரை கூறி, ”மூடநம்பிக்கையை கைவிட்டு, தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்” என்று பிஞ்சுகள் அனைவரையும் வாழ்த்தி விடைபெற்றார். தொடர்ந்து மூன்றாம் வகுப்பாக தோழர் அறிவரசன், நடைமுறை வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருட் களில் உள்ள அறிவியலை செய்முறைகளோடு விளக்கினார். 

நிறைவு விழா!

மதிய உணவுக்குப் பிறகு, பிஞ்சுகளின் பெற்றோர் களோடு அதே அய்ன்ஸ்டீன் அரங்கில் நிறைவு விழா நடைபெற்றது. பெரியார் பிஞ்சு அகரா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் கீதா அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்சி ஆசிரியரும் ஒருங் கிணைப்பாளருமான பவதாரணி அய்ந்து நாள் நிகழ்வுகள் பற்றிய தொகுப்பை வாசித்தார். பிஞ்சுகள் ஆரா, சண்மிதா, இசைப்பிரியா, இனியன் தமிழ், ஆனந்த பிரபாகரன் ஆகியோர் பழகு முகாம் பற்றிய தங்களின் கருத்தை நிறைந்த அவை முன் வைத்தனர். அதில் இசைப்பிரியா, ”இங்கிருந்து பிரிந்து போவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது” என்று குறிப்பிட்டார். 

பேராசிரியர் பர்வீன், “இங்கே கற்றுக்கொண்டதை வீட்டுக்குச் சென்ற பிறகும் தொடர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். அடுத்து பேசிய துணை வேந்தர் வேலுச்சாமி, “இந்த பல்கலைக்கழகத்தை நீங்கள் மறக்கக் கூடாது. வளர்ந்த பின் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து நன்றாகப் படித்து முன்னேற வேண்டும்” என்று வாழ்த்தினார். அடுத்து பிஞ்சுகளை வாழ்த்த வந்த முனைவர் அதிரடி க. அன்பழகன், “இங்கு குழந்தைகளை நம்பி அனுப்பிய பெற்றோர்களுக்கு நன்றி” என்றும், “மற்ற முகாம்களில் அறிவியல் கற்றுத்தரப்படலாம். ஆனால், இங்குதான் அறிவியல் மனப்பான்மை கற்றுத் தரப்படுகிறது” என்றும், “பழகு முகாமின் 90 வயது மூத்த குழந்தை ஆசிரியர் தாத்தா” என்றும், “புதியதோர் சமுதாயத்தை இந்த பெரியார் பிஞ்சுகள் உருவாக்க வேண்டும்” என்றும் வாழ்த்தினார். 

ஒருங்கிணைப்பாளர் பிரின்சு பேசும் போது, பழகு முகாம் வரலாற்றை எடுத்துரைத்தார். பெரியார் பிஞ்சு இந்தாண்டு 25 ஆம் ஆண்டைக் கொண்டாட உள்ளது. ஆசிரியர் தாத்தாவின் ஆலோசனையோடு ஒரு மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார். தொடர்ந்து பெற்றோர் சார்பில், பழ. செல்வகுமார், திருப்பூர் ஜெகநாதன், அண்ணா குமரேசன், கொரட்டூர் பன்னீர்செல்வம், இளமாறன் ஆகியோர் பழகு முகாம் பற்றி, மனம் விட்டுப் பாராட்டிப் பேசினார். இறுதியாக தர்சினி, ஆரா இருவரும் ஒலிவாங்கியில் ‘ஏஞ்சாமி, ஏஞ்சாமி’ என்ற பாடலைப் பாட, இசைப்பிரியா தனியாக நடனமாடி அனைவரின் கரவொலியைப் பெற்றனர். பேராசிரியர் அனுசுயா அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார். நிகழ்வில் டாக்டர் ரமேஷ், உதவிப்பேராசிரியர்கள் சித்ரா, காயத்ரி, வனிதா, இளங்கோ, பாண்டியன், ஒருங்கிணைப்பாளர்களான பயிற்சி ஆசிரியர்கள் பிரவீணா, முகில், லட்சுமி சுருதி, வினிசா மற்றும் பெற்றோரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

பெற்றோர்களுக்கு 

நிலை கொள்ளாத மகிழ்ச்சி!

சொர்ணா ரங்கநாதன் விடுதியிலிருந்து பெற்றோர்கள் முறைப்படி தங்கள் குழந்தைகளை விடுவித்துக் கொண்டனர். பிஞ்சுகள் தங்கள் பெற்றோர்களுக்கு தங்களுக்கு பிடித்த நண்பர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என்று ஓயாமல் அறிமுகம் செய்து கொண்டே இருந்தனர். பெற்றோர்களுக்கு நிலைகொள்ளாத மகிழ்ச்சி! அத்தனை பேரிடமும் நன்றி கூறி பிரியாவிடை பெற்றனர். பலரும் ஒருங்கிணைப்பாளர்களுடன் தங்கள் பெற்றோர்களையும் நிற்க வைத்து ஒளிப்படமும், சுயபடமும் எடுத்துக் கொண்டனர். விடை பெற்றுக் கொண்டிருந்த பிஞ்சுகளிடமும், பெற்றோர்களிடமும் பிரின்சு, உடுமலை இருவரும், ”அனைவரும் பெரியார் பிஞ்சு சந்தாதாரர் ஆகுங்கள். அதன் மூலம் தொடர்ந்து நாம் தொடர்பில் இருக்கலாம்”  என்று சொல்லி, சொல்லி அனுப்பினர். அந்த விடுதி முகப்பில் இதே காட்சியை ஒவ்வொரு குழந்தையிடமும், பெற்றோரிடமும் காண முடிந்தது. வந்திருந்தவர்களில் அனைவருமே அடுத்த ஆண்டும் வருவோம் என்றும் கூறி விடைபெற்றது காணக்கிடைக்காத காட்சிதான்.


No comments:

Post a Comment