வைதீக சடங்குகளில் பார்ப்பன புரோகிதர்களை நீக்கி விடுங்கள் 1927 இல் தந்தை பெரியார் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

வைதீக சடங்குகளில் பார்ப்பன புரோகிதர்களை நீக்கி விடுங்கள் 1927 இல் தந்தை பெரியார் எச்சரிக்கை!

நீங்கள் எல்லோரும் சூத்திரர்கள் என்று அனேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப் பட்டு வரும்போது ஆங்கில சட்ட புத்தகத்திலும் பதியப் பட்டிருக்கிறது உங்கள் லவ்கீக, வைதீக, காரியங்களில் நீங்கள் சூத்தி ரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர் ஆட்சேபித்து வருவதும் உங்களுக்கு தெரியும்.

தஞ்சை ஜில்லா துவார் என்ற கிராமத்தில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி அங்கு கூடின சபையில், நீங்கள் எல்லோரும் சூத்திரர்கள் என்றே தீர்மானமும் செய்து விட்டார்கள். இத் தீர்மானம் ராஜ்யவாதிகளாக நடிக்கும் பார்ப்பனர் களுக்கும், திருப்தியாக சம்மதம் தான் என்பதற்கு உங்களால் பிழைத்து வரும் சுதேச மித்திரன்- இந்து- முதலிய பார்ப்பன பத்திரிகைகள் கண்டிக் காமல் இருப்பதே போதுமான சாட்சியாகும்.

ஆராய்ச்சிக் குறைவினால் உண்டான குருட்டுத் தனமான மூடக் கொள்கைகளின் பாசத்தால் கட்டுப்பட்டு இருக்கும் உங்களை உள்ளே ரம்பப் பொடியை நிறைத்து வெளியே பொன்மூலம் பூசின நயவஞ்சகப் பேச்சால் இதுவரை ஏமாற்றி வந்த தைரியமும், குலத்தைக் கெடுக்கும் கோடரிக்காம்பு போன்றும், கோழை களான உங்களில் சிலர் அப்பார்ப் பனர்களுடன் சேர்ந்திருக்கும் தைரியமும், உங்களின் இழிவை நிலைநிறுத்தக் காரணமாய் இருந்தது.

நான்கு ஜாதியான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்- என்கின்ற நான்கு பதத்திற்கும் அவர்களின் இந்து சாஸ்திரத்தில் அர்த்தம் எழுதப்பட் டிருக்கிறது.

அதில் சூத்திரன் என்ற பதத்தின் அர்த்தம் அனை வருக்கும் தெரியாது.(1927) உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று பார்ப்பனர்களுக்கு தெரிந்திருந்தால் இத்தனை தைரியமாக நீங்கள் எல்லாம் சூத்திரர்கள் என்று அவர்கள் தீர்மானம் செய்திருக்க மாட்டார்கள்.

சூத்திரன் என்னும் பதத்திற்கு கிலேச முடையவன், துக்கி, வேசி மகன், ஆசாரம் இல்லாதவன், தேஜில்லாதவன், ஒழுக்கம் இல்லாதவன், ஏவல் தொழில் செய்வோன், சுத்தி இல்லாதவன், கண்டதைப் புசிப்போன், அடிமை, என்று இதே இந்து சாஸ்திரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

இந்த அர்த்தத்தை உடையவர்கள் நீங்களா னால் எங்களுக்கு பார்ப்பனரிடம் இனி சண்டையே இல்லை. இந்த இழிவான பட்டத்தை ஏற்றுக் கொள்ள உங்களுக்கு இஷ்டமில்லை என்பது உண்மையானால், உங்களின் வைதீகச் சடங்குகளைப் பூர்வீக உங்கள் வழக்கத்திற்கு கொண்டு வந்து, பார்ப்பன புரோகிதர்களை நீக்கி விடுங்கள்...!

 தந்தை பெரியார் குடியரசு இதழில் 03.07.1927 அன்று எழுதி  இருப்பது இன்றைக்கும் பொருத்த மாகத் தானே இருக்கிறது. சிந்திப்பீர்.

-குடந்தை க. குருசாமி


No comments:

Post a Comment