அம்பேத்கர் பெயரை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள் - எச்சரிக்கை! தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 14, 2023

அம்பேத்கர் பெயரை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள் - எச்சரிக்கை! தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

தஞ்சை, ஏப்.14  அம்பேத்கர் பெயரை அரசியலுக்குப் பயன்படுத்துகிறார்கள் - எச்சரிக்கை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

இன்று (14.4.2023) தஞ்சைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய 133 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை - நம்முடைய தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் சமத்துவ நாளாக அறிவித்து, உறுதிமொழி ஏற்கும்படியாக செய்திருக் கிறார்கள். 

சமூகத்தில் மாற்றங்கள், புரட்சிகள் வரவில்லையானால் அரசியல் சுதந்திரம் பயனற்றது

இன்னுமும் நாட்டில் சமத்துவம் நிலவவில்லை. அரசியல் சுதந்திரம் கிடைத்து, சமூகத்தில் மாற்றங் கள், புரட்சிகள் வரவில்லையானால், அந்த அரசியல் சுதந்திரம் பயனற்றது என்று அம்பேத்கர் அவர்கள் சொன்னார்கள். அதைத்தான் இன்றைக்கு நடைமுறை யில் பார்க்கின்றோம்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்கிற சட்டம், தீண்டாமை ஒழிப்பை மய்யப்படுத்தியது; ஜாதி ஒழிப்பை மய்யப்படுத்தியது என்று சொன்னாலும், இன்னமும் அதற்கு முட்டுக்கட்டைகள் பல இடங்களிலிருந்து கிளம்பக் கூடிய அளவிற்குப் பிற்போக்குவாதிகள் பல இடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அது வெவ்வேறு இடங்களில் இருக்கிறது.

நேரிடையாக எதிர்க்க முடியாதவர்கள், மறைமுக மாக அதற்குக் குழிதோண்டலாமா என்று பார்க் கிறார்கள்.

தந்தை பெரியாரும், அம்பேத்கரும் இணைந்து...

தந்தை பெரியாரும், அம்பேத்கரும் இணைந்து பல நேரங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். அப்படிப்பட்ட ஜாதி ஒழிப்பு என்பதை நாம் உருவாக்கி, ''அனைவரும் ஒருவரே! அனைவரும் சமமான வர்களே! அனைவரும் உறவினர்களே!'' என்கிற மனிதநேயத்தை உருவாக்கவேண்டும்.

அதையே  இன்றைய உறுதிமொழியாக நாம் எடுத்துக்கொண்டு, அந்த மனிதநேயத்தை நோக்கி நம்முடைய சமுதாயத்தை வழி நடத்தவேண்டும்.

திராவிட மாடல் ஆட்சி சமத்துவ நாள் என்று அறிவித்து வழிகாட்டியிருக்கிறது!

அதில், கட்சி, ஜாதி, மதம் என்கிற வேறுபாடில்லாமல் அனைவரும் ஒன்று சேரவேண்டும். அதற்கு 'திராவிட மாடல்' ஆட்சி, அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை ''சமத்துவ நாள்'' என்று அறிவித்து, வழிகாட்டி இருக் கிறது.

அதை வெறும் நாள் பிரகடனமாக இல்லாமல், உண்மையிலேயே சமத்துவம் வரக்கூடிய அளவிற்கு வரவேண்டும். அதற்குரிய பங்களிப்பை நாம் ஒவ்வொருவரும் தரவேண்டும்.

வெறும் ஏட்டளவில் இருந்தால் மட்டும் போதாது...

செய்தியாளர்: ஆலப்பள்ளம், மதுக்கூரில் உள்ள கோவிலில் நேற்று, மாற்று ஜாதியினரை, மற்ற ஜாதி யினர் உள்ளே அனுமதிக்கவில்லை என்பதால், காவல் துறையினரின் பாதுகாப்புடன் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு வந்தார்கள்; அதனால் கோவில் தீட்டாகி விட்டது என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்:  இன்னமும் தீண்டாமை, ஜாதி, ஜாதி வெறி ஒழிக்கப்படவில்லை என்பது அங்கு மட்டுமல்ல, இன்னும் பல ஊர்களில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்களைக்கூட நடத்த முடியவில்லை என்று சொல்கிறார்கள்.

நான் முதலில் சொன்ன கருத்துப்படி, சமத்துவ நாள் என்று வெறும் ஏட்டளவில் வந்தால் மட்டும் போதாது; தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதி, 75 ஆண்டுகளாகின்றன. ஆனால், அது நடைமுறையில் பின்பற்றப்படவில்லை.

இன்னுங்கேட்டால், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் இறந்தால்,  உடலைக் கொண்டு செல்வதற்கான பாதைகள் இல்லை. தனி சுடுகாடு என்கிற கொடுமையும் இருக்கின்றது.

எனவேதான், ஜாதி ஒழிப்பும், சமத்துவமும் இன்னும் போய்ச் சேரவேண்டிய இலக்குகள் ஏராளமாக இருக் கின்றன.

இந்த அரசு, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும். எடுப்பதற்கான உறுதிபூண்டுள்ள அரசு இது என்பதுதான் சமத்துவ நாள் அறிவிப்பு.

அம்பேத்கரை அரசியல் வாக்கு வங்கிக் கருவியாகப் பார்க்கிறார்கள்!

செய்தியாளர்: இந்த ஆண்டு, பா.ஜ.க.வினர்கூட அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுகிறார்களே?

தமிழர் தலைவர்: காந்தியாரையே அவர்கள் கொண் டாடுகிறார்கள்; காந்தியாருடைய கொலைக்கு யார் காரணம் என்று எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

அம்பேத்கர் அவர்கள்தான் நல்ல அளவிற்கு வாக்கு வங்கிக்குப் பயன்படுவார்கள் என்பதற்காக அவர்கள் அதனைச் செய்கிறார்கள்.

சமுதாயப் புரட்சியாளராக அம்பேத்கரை நாங்கள் பார்க்கிறோம்; அவர்கள் பார்ப்பது அரசியல் வாக்கு வங்கிக் கருவியாகப் பார்க்கிறார்கள்.

செய்தியாளர்: தி.மு.க. அமைச்சர்கள்மீது ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்:  அம்பேத்கரைப்பற்றி பேசுகின்ற நேரத்தில், அண்ணாமலையைப்பற்றி பேசாதீர்கள்.

நன்றி,வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment