கருநாடக பிஜேபி அரசின் இடஒதுக்கீட்டுக் குளறுபடிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 3, 2023

கருநாடக பிஜேபி அரசின் இடஒதுக்கீட்டுக் குளறுபடிகள்

கருநாடகாவில்  இசுலாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை அம்மாநில பா.ஜ.க. அரசு நீக்கிவிட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இசுலாமியர்களுக்கு இதுவரை 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. அதனை மொத்தமாக நீக்கி விட்டார்கள். இனி இசுலாமியர்கள், கருநாடகாவைப் பொறுத்த வரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்க மாட்டார்கள்.

நாட்டிலேயே எங்கும் இல்லாதவகையில் இசுலாமியர்களை உயர் ஜாதியினர் பட்டியலில் கொண்டு போய் சேர்த்துவிட்டார்கள். நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வரும் இசுலாமியர்களை கருநாடகாவில் ஒரே நாளில் உயர் ஜாதி பட்டியலில் அடைத்து விட்டார்கள்.

இதற்கு பா.ஜ.க. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறும் காரணம் - இங்கே மதரீதியான இடஒதுக்கீடு கிடையாது என்கிறார்.  இதன் அடிப்படையில் அவர்கள் கூற்றின்படி உயர்ஜாதி யினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்குள்ளும், இசுலாமி யர்கள் செல்ல முடியாது, காரணம் அங்கே மத ரீதியிலான இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு விட்டதே! 

இசுலாமியர்கள், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கப் போவது இல்லை. அப்படியானால் அவர்களுக்கு எதற்காக தனியாக 4 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சொல்லி அதனை ஒழித்து விட்டார்கள் என்பதுதான் உண்மை!

இசுலாமியர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட 4 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை என்ன செய்தார்கள் என்று பார்த்தால்  - கருநாடகாவைப் பொறுத்தவரையில் முக்கியமான சமூகப் பிரிவுகளாக இருக்கும் லிங்காயத்துகள், ஒக்கலிகா கவுடாக்கள் ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு தலா 2 விழுக்காடு என தாரை வார்த்து விட்டார்கள். இவர்கள்தான் கருநாடகா தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பவர்கள். இதனை விட ஆதாய அரசியல் செயல்பாடு வேறு இருக்க முடியுமா? இந்த அடிப்படையில் ஒக்கலியர் இடஒதுக்கீடு 6 விழுக்காடாகவும், லிங்காயத்துகள் ஒதுக்கீடு 7 விழுக்காடாகவும் உயர்ந்துவிட்டது. இதனை தனது சாதனையாக பா.ஜ.க. சொல்லிக் கொள்கிறது.

மதச்சிறுபான்மையினரான இசுலாமியர்களையும் - சமூகப் பிரிவுகளான இரண்டு ஜாதியினரையும் எதிரெதிராக நிறுத்தும் வழக்கமான பிரித்தாளும் தந்திரத்தை அரங்கேற்றி விட்டது கருநாடக  பா.ஜ.க. அரசு,  ‘இசுலாமியர்களிடம் இருந்து பறித்து உங்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி இருக்கிறோம்’ என்று மார்தட்டுகிறது பா.ஜ.க.

ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. "இசுலாமியர் களிடம் இருந்து பறித்து எங்களுக்குத் தருவதை ஏற்கமாட்டோம். இது எங்கள் இருவருக்கும் இடையே சண்டை மூட்டும் முயற்சி" என்று லிங்காயத்து மக்கள் சொல்லி வருகிறார்கள். "எங்களுக்கான தனி இடஒதுக்கீடாக 15 விழுக்காடு தர வேண்டும் என்று கேட்டு வந்தோம். ஆனால் ஏமாற்றி விட்டது பா.ஜ.க." என்று அவர்கள் குமுறுகிறார்கள்.

இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு விதி பி3(கருநாடகா)இல் இருந்து தங்களை மாற்றி  இட ஒதுக்கீடு விதி 2 ஏ-க்குள் (கருநாடகா) கொண்டு வரவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.  இசுலாமியரிடம் இருந்த 2 விழுக்காட்டை எடுத்து இவர்களுக்குக் கொடுத்து சமாளிக்கப் பார்த்தது பா.ஜ.க. ஆனால் அதனால் அரசு அம்பலப்பட்டுப் போய்  நிற்கிறது. லிங்காயத்துகளின் கோபம் பா.ஜ.க. மீது அதிகமாகி உள்ளதுதான் உண்மை.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை மாற்றி அமைத்தது போலவே தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் இடஒதுக்கீட்டிலும் தனது விளையாட்டைக் காட்டியது கருநாடக பா.ஜ.க.

தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான  இடஒதுக்கீட்டை 15 இல் இருந்து 17 விழுக்காடாகவும், பழங்குடி இடஒதுக்கீட்டை 3 இல் இருந்து 7 ஆகவும் உயர்த்தி இருக்கிறார்கள். பட்டியல் பிரிவினரில்  பஞ்சாரா சமூக மக்களின் உள் ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது.  இதனை எதிர்த்து கடுமையாகப் போராடி வருகிறார்கள். மேனாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப் பட்டு இருப்பது இதனால்தான்! "இந்தப் பிரச்சினையை விரைவில் நானே தீர்த்து வைப்பேன்” என்று எடியூரப்பா சொன்னாலும் அதனை யாரும் ஏற்கத் தயாராக இல்லை.

20.03.2023 அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா,  இதோ பாருங்கள் இசுலாமியர்களின் இட ஒதுக்கீட்டை பிடுங்கிவிட்டோம், லிங்காயத்திற்கும், ஒக்கலிகாவிற்கும் அந்த இட ஒதுக்கீட்டை பகிர்ந்து கொடுத்துள்ளோம் என்று வெளிப்படையாகவே மேடை போட்டு பேசினார். அதாவது மதரீதியிலான பிளவை ஏற்படுத்தி ஹிந்துத்துவ வெறியூட்டி அதை வாக்குகளாக மாற்றிவிட தென் மாநிலங்களில் கருநாடகாவை சோதனைக்களமாக்கிப் பார்க்கிறது பா.ஜ.க. 

குஜராத், அரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதே போன்று செய்துதான் ஆட்சியைப் பிடித்தனர். கருநாடகாவையும் தற்போது சோதனைக்களமாக்கி, வாக்குவேட்டையில் இறங்கி உள்ளனர் - ஆனால் அந்த யுக்தி கருநாடகாவில் பலிக்கப் போவதில்லை.

பழங்குடியினமக்கள் போராட்டக்குழுவால் கடந்த மார்ச் 

22ஆம் தேதி சிவமோகா மாவட்டத்தில் உள்ள எடியூரப்பாவின் வீடு கடுமை யான தாக்குதலுக்கு ஆளானது. மேற்கு கருநாடகாவில் பல மாவட்டங்களில் லிங்காயத்துகள் மற்றும் பழங்குடியினச் சமூ கங்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 ஆனால் இந்த போராட்டங்களை பா.ஜ.க. மாநில மற்றும் டில்லி தலைமை இரண்டுமே ஊடகங்களில் செய்தியாக வராமல் பார்த்துக் கொண்டு, மக்கள் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளனர் போன்ற ஒரு போலியான சூழலை காண்பித்து வருகின்றனர்.

சமூகநீதிக்கு அடிப்படையிலேயே எதிரானதான ஆர்.எஸ்.எஸின் அரசியல் பிரிவான பிஜேபி அரசு, ஒடுக்கப்பட மக்களின் சமூகநீதி எழுச்சியாலேயே வீழப் போகின்றது என்பதைப் பார்க்கத் தான் போகிறோம்.


No comments:

Post a Comment