உலக புத்தக நாள் சிந்தனை முத்துக்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

உலக புத்தக நாள் சிந்தனை முத்துக்கள்!

கி.வீரமணி

சிறந்த புத்தகங்கள் அரிய நண்பர்களை விட மேலானவர்கள்.

***

தனிமையில் பயணிக்கும்போது புத்தகங்களே. பயணச் சுமையைக் குறைத்து, துணைவனாக இருப்பது.

***

வீட்டில் ஜன்னல்கள் வெளிச்சத்திற்கும். காற்றோட்டத்திற்கும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அறிவு வெளிச்சம். சிந்தனை ஓட்டம் என்ற தூய காற்று வரும் வகையில் நல்ல புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்து குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் படித்து விவாதித்து அறிவு பெற வேண்டும்.

***

ஓடி விளையாடுதல் உடலுக்கு நல்லது. தேடி புத்தகங்களைப் படிக்க வைப்பது அவர்களது அறிவு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

***

நல்ல புத்தகங்களைப் படிப்பதும். அதை அசை போட்டு எண்ணிடுதலும், பிறகு அதை அப்படியே செரிமானம் செய்து கொள்ளுதலும் வேண்டும்.

***

நல்ல புத்தகங்கள் அறிவு நீர் வீழ்ச்சிகளாகும். அறியாமை இருளில் சிக்கியுள்ள மனித குலத்தை அறிவு வெளிச்சத்திற்கு அழைத்துச் சென்ற மனிதர்களின் சிறப்பு அம்சமான ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைச் சாணை தீட்டி முனை மழுங்காமல் எப்போதும் கூர்மையுடன் வைத்திருக்க உதவும் சாணை தீட்டும் அருமையான கருவியாகும்.

***

உடல் நலத்திற்கு ஊட்டச்சத்துகள் வைட்டமின்கள் எவ்வளவு முக்கியமோ, அது போன்றே உள்ள நலத்திற்கும் வளத்திற்கும் புத்தகங்கள்தான் அரிய ஊக்கச்சத்துகள் ஆகும். புத்தகங்களைவிட அறிவுச் செல்வ வங்கி எதுவும் இல்லை

***

உழைப்பாலும், அயர்ச்சியினாலும் களைத்துப்போய் இருக்கும் நம் உள்ளங்கள் புத்தாக்கம் பெறவே புத்தகம் புதுமையானதாம் நம் அகத்தை ஆக்குவத்தினால்தான் அது புத்தகம் என்றே அழைக்கப்படுகிறதோ.

***

ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்தால் நல்ல உணவை- சுவைமிக்க விருந்துண்ட போது ஏற்படும் மகிழ்ச்சியைவிட அதிகம் ஏற்படும்.

***

 நல்ல நூல்களைப் படிப்பது என்பது நமக்குள் அவ்வப்போது தவிர்க்க முடியாமல் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைப்பதில் பெரும்பங்காற்றி அருமருந்தாகிறது.

***

வாசிப்பு குழந்தைகளின் மூளைக் கட்டமைப்பை ஆக்கப்பூர்வமாக மாற்றிவிடுகின்றது.

***

இன்றோ பக்திக்காக அல்ல புத்திக்காக புத்தக உலகம் நோய்கி பயணிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். வீட்டில் பூஜை அறையைவிட புத்தக அறை மிக முக்கியம். அறிவு கூர்மைப் படுத்தப்பட இந்த சாணை இயந்திரங்கள் தேவை தேவை.

***

 புரட்சிக்கு அடித்தளம் அமைக்க புத்தகங்கள் நவீன அறிவாயுதங்களாகப் பயன்படுகின்றன.

***

புத்தகங்களை நேசிப்பதை விட சுவாசிப்பதையே பழக்கமாகக் கொள்ளுங்கள்,அகத்தூய்மைக்கு அதைவிட சிறந்த மருந்து டானிக் - வேறு கிடையாதே!

***

பசித்தவர்களும் ருசித்துச் சாப்பிட்டே பழக்கப்பட்டவர்களும் எப்போதும் புதுப்புது உணவு வகைகளையும். புதிய சமையல் பக்குவங்களையும் ருசி பார்க்கவே விரும்புவர். அதுபோல புத்தகங்களை விரும்பி (சு) வாசித்தே பழக்கப்பட்டவர்கள் - புதிய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து படித்துச் சுவைப்பர்- செரிமானம் செய்து சிந்தனைப் பெட்டகத்தில் ஏற்றி வைப்பர்.

***

நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் அல்லவா! அவற்றை வாசித்து சுவாசிக்கலாமே! புத்தகங்களை வாசிப்பதன் மூலம் புத்தாக்கச் சிந்தனைகளை ஊற்றெடுக்கச் செய்யும் - உள்ளத்தைப் பெறுவோம்.

***

வாழ்க்கையில் அறிவை விரிவு செய்து அகண்டமாக்கிட அதனால் உயர்ந்திட புத்தகங்கள் போன்ற நல்ல ஆசான்களை வேறு எங்கும் காணவே முடியாது.

***

காதல் கூட ஒரு கட்டத்தில் கசக்கும் எல்லா நேரங்களிலும் இனிக்காது! புத்தகக் காதலோ, படிக்கப் படிக்க மேலும் இன்ப ஊற்றாகவே மனதுக்குள் அமையும்.

***

பணத்தைச் சேமித்தல் எவ்வகை முக்கியமோ. எதிர்கால வாழ்வுக்கு அது போலவே நேரத்தைச் சேமிப்பது - அதில் அன்றாடம் சிறிது நேரம் - படுக்கும்முன் புத்தகம் படித்தல் - பிறகு உறங்குவது என்று பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் மிகவும் அவசியம்.

***

காலை நடைப்பயிற்சி உடற்பயிற்சி போல். இரவில் உறங்குமுன் அறிவை விரிவு செய்து அகண்டமாக்கும் அறிவுப் பயிற்சி - சாணை தீட்டும் வாய்ப்பு வாழ்வில் ஒளியேற்ற -உயர் புத்தகம் வாசிப்பு அவசியம் தேவை.

***

அறியாமை இருட்டைப் போக்கி, அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்ச அவசியம் தேவை புத்தக அறைகள், வீட்டில் இடமில்லையே என்றால் குறைந்த பட்சம் ஒரு புத்தக அலமாரியாவது இருக்கட்டும். அதுதான் நல்ல குடும்ப விளக்கு

***

உடலுக்கு வலிமை தருவது உணவும், உடற்பயிற்சியுமாகும். அதுபோல் மூளைக்கு உணவும் உடற்பயிற்சியும் நல்ல புத்தகங்களே யாகும்.

***

 நல்ல நிலம் பண்படுத்தப்பட்டால் தான் பயிர்கள் சிறப்பாக வளரும்; மனிதனின் மூளையும் பண்படுத்தப்பட்டால்தான் அறிவுப் பயிர் செழிக்கும். அதற்கு நூல்களே சிறந்த கருவிகளாகும்.

***

 நல்ல நூலை நாள்தோறும் படிப்பவர்களின் மனம் விசாலப் பார்வையால் விரியும், அகண்டமான அந்த அறிவினால் உலகை விழுங்க முடியும்.

***

சாணை தீட்ட, அறிவுள்ள நூல்களே தக்க உணவுகள் அதற்கு. ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கும்முன் நல்ல நூல்களை ஒரு பத்து மணித்துளிகளாவது படிக்கும் பழக்கம் நல்ல பழக்கம்.

***

அறிவைப் பக்குவப்படுத்த சாணை தீட்டிக் கொள்ள புத்தகங்கள்: நல்ல கருவிகள், ஆனால், புத்தகப் புழுவாக மட்டும் இருந்தால் போதுமா? கண்டிப்பாகப் போதாது. அவை மூலம் கிடைக்கும் பலனை மக்களின் சமுதாய வாழ்வுரிமைக்கும், உயர்வுக்கும் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தினால்தான், உலகம் உயரும். உழைப்பவர் உன்னத நிலைதனை அடைவர்.

***

நிலத்தை உழுதுதான் வேளாண்மை செய்ய முடியும். அதுபோல, மனத்தை உழுதுதாள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த முடியும். அந்த உழவுக்கான அரிய கருவிகள் தான் அறிஞர்களின் இதய ஓடையை நமக்குப் பாய்ச்சும் அறிவுக் கருவூல நூல்கள்,

***

மனிதர்களை மாற்றிடும் அரிய சாதனைச் சிறப்பு வாய்ந்த பல நூல்களால்தான். மாறிய மனிதர்களால் சமூக, அரசியல். பொருளாதார மாற்றங்கள் உருவாயின.

***

நம்மைச் செம்மைப்படுத்த ஆழப்படுத்த, அகலப்படுத்த, பதப் படுத்த, பண்படுத்த நூல்கள்தான் எத்துணை பெரிய படைக்கலன்கள் என்பதைப் படித்து, இன்பமெய்தி அனுபவம் பெற்றோர் உணர்வார்கள்,

***

பசிக்கு உணவு என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அறிவுக்கு உணவு என்று கருதி, பயனுள்ள நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும் பிறரிடம் புத்தகங்களை வாங்கினால், தவறாமல் மறக்காமல் அவற்றை திருப்பித் தரவேண்டும்.

புத்தகங்களை படிப்பதில் கூட பல நிலைகள் உண்டு. சில புத்தகங்கள் சுவைக்கப்பட வேண்டியவை.

சில புத்தகங்கள் அப்படியே விழுங்கப்பட வேண்டியவை.

சில புத்தகங்கள் நன்றாக மென்று தின்று செரிமானம் செய்யப்பட வேண்டியவை.

சில புத்தகங்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே படிக்கக் கூடிய தகுதி பெற்றவை.

சில புத்தகங்கள் வெறுமனே படிக்கப்பட வேண்டியவை.

சில புத்தகங்கள் படிக்க வேண்டியவைகள்: ஆனால் ஆவலுடன் அல்ல. சில புத்தகங்கள் கவனத்தோடும், கருத்தோடும்

கவலையோடும் முழுமையாகப் படித்து முடிக்கப்பட வேண்டியவை.

தொகுப்பு: வாழ்வியல் வாசகன்


No comments:

Post a Comment