செய்திச் சிதறல்கள்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

செய்திச் சிதறல்கள்...

பக்தி வியாபாரம் இன்டர்நேஷனல் ஆகிவிட்டதோ?

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 

வெளிநாட்டு கரன்சி மாற்ற அனுமதி 

திருமலை, ஏப்.23  திருப்பதி ஏழுமலையானுக்கு வெளிநாட்டு பக்தர்கள் அவரவர் நாட்டு கரன்சிகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவற்றை இந்திய நாட்டு ரூபாயாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு, வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் சட்டத்தின்கீழ் காணிக்கை செலுத்தியவரின் முழு விவரத்துடன், சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். 

ஆனால், இதற்கான உரிமத்தை திருப்பதி தேவஸ்தானம் கரோனா பரவலுக்கு முந்தைய ஆண்டு முதல் புதுப்பிக்காததால் ரூ.30 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் தேவஸ்தானத்திடமே தேங்கியுள்ளன. இதனை மாற்ற வேண்டுமானால், இதற்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியதன்படி, திருப்பதி தேவஸ்தானம் கடந்த 15 நாள்களுக்கு முன் ரூ.3 கோடி அபராதம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்தது. இதனிடையே உண்டியலில் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் விவரம் தெரிய வாய்ப்பில்லை என்பதால் இதற்கு விலக்கு அளிக்க தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது. 

இதை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், பக்தர்களின் விவரம் அளிக்க தேவஸ்தானத்துக்கு விலக்கு அளித்து, வெளிநாட்டு கரன்சிகளை காணிக்கையாக பெறவும், வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து ரூ.30 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி, இந்திய ரூபாயாக மாற்றுவதற்காக வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது.


போட்டித் தேர்வுகளில் தோல்வி: இரண்டு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

கிருஷ்ணகிரி, ஏப்.23 தான் பெற்ற இரண்டு குழந்தைகளுக்கு மாத்திரைகளை கரைத்துக் கொடுத்து கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு கிருஷ்ணகிரி அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அரசு போட்டித்யீ தேர்வுகளில் தொடர் தோல்விகளால் மன முடைந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை அருகே கோழி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வா (வயது 30). இவர்களுக்கு இனியா (வயது 8) என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் (வயது 4) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் தெய்வா தனது குழந்தைகளுடன் கோழிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகே மாமனார் ஆறுமுகம் (வயது 58) அவருடைய மனைவியுடன் தனியாக வசித்து வருகின்றனர். 

எம்.எஸ்சி. முதுகலை கணித பட்டதாரியான தெய்வா அரசு பணிக்காக போட்டி தேர்வுகளுக்குப் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்ற தெய்வா தொடர் தோல்விகளைச் சந்தித்ததாக தெரிகிறது. இதனிடையே மாமனார் ஆறுமுகத் திற்கும் - தெய்வாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (22.4.2023) நீண்ட நேரமாகியும் தெய்வா மற்றும் குழந்தைகள் வெளியே வராததால் சந்தேகமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது தெய்வா தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில்  கிடந்தனர்.  

பின்னர் இதுகுறித்து கல்லாவி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினர் 3 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஊற்றங்கரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக தெய்வாவின் தாயார் பூங்கொடி கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெய்வா குழந்தை களுக்கு அளவுக்கு அதிகமான மாத்திரைகளை கொடுத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இரண்டு குழந்தை களுக்கு மாத்திரை கரைத்து கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment