‘‘அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்கவேண்டும் என்று கருதக்கூடியவர்களில் ஒருவன் நான்!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 3, 2023

‘‘அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்கவேண்டும் என்று கருதக்கூடியவர்களில் ஒருவன் நான்!''

கடலூர்: சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை

கடலூர், ஏப்.3 ‘‘அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும்  என்று கருதக்கூடியவர்களில் ஒருவன் நான்'' என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழா

கடந்த 31.3.2023 அன்று மாலை கடலூரில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நிறைவு விழா - மாநாடு

மிகுந்த எழுச்சியோடு, கடலூரில் சிறப்போடு நடைபெறக்கூடிய இந்தப் பயணத்தினுடைய நிறைவு என்று சொன்னாலும், இது ஒரு சமூகநீதி பாதுகாப்பு, ஜாதி ஒழிப்பு பாதுகாப்பு, சனாதன ஒழிப்புப் பணியினுடைய ஓர் உத்வேகம், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய மாநாடு என்று என்னிடம் அனுமதி கேட்காமலேயே நம்முடைய தோழர்கள் நிறைவு விழா என்று சொல்லி, இங்கே மாநாடு போட்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் திரள் மாநாடுதான் என்பதை இங்கே நீங்கள் குழுமியிருப்பதன்மூலமாக மிக அருமையாக நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பரப்புரையின் 30 ஆவது நாள் - 

57 ஆவது கூட்டம்

அப்படிப்பட்ட  அருமையான, வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த பரப்புரையின் 30 ஆவது நாள் - 57 ஆவது கூட்டம் என்றாலும், சிறிதும் களைப்பில்லாது பேசக்கூடிய அரிய வாய்ப்பு. 

காரணம், இந்த மேடை.

இந்த மேடையில் இருக்கின்ற என்னுடைய சகோதரர்கள், இந்த மேடையில் தருகின்ற ஆக்கம், அதனை மேடையில் வீசுகின்ற மெல்லிய பூங்காற்று என்று சொன்னார்கள்; இது மெல்லிய பூங்காற்று அல்ல. சூறாவளியாக வருகின்ற எதிர்ப்புகளையெல்லாம் நாம் சந்திக்கின்ற ஆற்றலை பெற்றிருக்கக்கூடிய தலைவர் கள்தான் இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றார்கள்.

நம்முடைய பெருமைக்குரிய அமைச்சர் இந்த மாவட்டத்தினுடைய அமைச்சர். 

திராவிட இயக்கக் கொள்கையின் 

பாரம்பரியம்

எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி அவரைப் பார்க்கின்ற பொழுது - என்னவென்று சொன்னால், எனக்கு அவரு டைய தந்தையாரோடு அமர்ந்து பேசி பழக்கம். இன்றைக்கு அவரோடு அமர்ந்து பேசுகின்றோம். இதுதான் இந்தக் கொள்கையின், திராவிட இயக்கக் கொள்கையின் பாரம்பரியம்.

பல பேர் புரியாமல் சொல்வார்கள், வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்று.

தந்தை ஒரு கொள்கை; மகன் வேறொரு கொள் கையில் இருக்கக்கூடாது. தந்தையின் கொள்கையில்தான் மகன்  வரவேண்டும். இந்த உரிமை வேறு எவருக்கும் கிடையாது; திராவிட இயக்கம் அதை முன்னெடுத்து செய்யக்கூடிய வாய்ப்பு.

அதற்கு அடுத்தபடியாக நேரு குடும்பத்தை எடுத்துச் சொல்லலாம். ஏனென்றால், இது பதவியை நோக்குவது அல்ல நண்பர்களே; இது மானத்தையும், அறிவையும் நோக்குவது; புதிய சமுதாயத்தைப் படைப்பது.

துரை.சந்திரசேகரன் அவர்களின் எல்லையற்ற உழைப்பு இந்த மாநாட்டின் மிகப்பெரிய வெற்றி!

அப்படிப்பட்ட அருமையான இந்த மாநாட்டிற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய மாவட்டத் தலைவர் தண்ட பாணி அவர்களே, வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் எழிலேந்தி அவர்களே, கழகப் பொதுச்செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களின் எல்லையற்ற உழைப்பு இந்த மாநாட்டின் மிகப்பெரிய வெற்றியாக ஆகியிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்தவுடன், சிலர் என்னிடம் கேட்டார்கள்; ‘‘பெரியார் நிறைய சொத்து வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் போலிருக்கிறதே; உங்களிடம் இல்லாத பணமா?'' என்று கேட்டார்கள்.

நான் அதை மறுத்ததே இல்லை. 

நிறைய சொத்துக்களை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்; நாங்களே கணக்குப் பார்க்க முடியாமல் இருக்கிறோம். உண்மைதான்.

அந்த சொத்துகளில் ஒன்று அசையும் சொத்துகள்; மற்றொன்று அசையா சொத்துகள்.

பதவி சபலங்களுக்கு ஆளாகாமல்...

அசையும் சொத்துகள் எது என்று சொன்னால், சந்திரசேகரனைப் போல, கழகத்தைப் போல, எங்கள் கொள்கைகளுக்காக தன்னுடைய வாழ்க் கையை, தொண்டிற்காகவே வேறு எந்த சபலங் களுக்கும் ஆளாகாமல், பதவி சபலங்களுக்கு ஆளாகாமல் செய்யக்கூடிய எண்ணற்ற கருப்புச் சட்டை, கருப்பு மெழுகுவத்திகள், கருஞ்சிறுத்தைகள். 

‘‘காட்டில் ஒரு முயல்குட்டி துள்ளக்கூடும்

கருஞ்சிறுத்தை கண்விழித்தால்

தெரியும் சேதி!''

என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் எழுதினார்கள்.

அப்படிப்பட்ட கருஞ்சிறுத்தைகளாக இருக்கக்கூடிய நம்முடைய இயக்கத் தோழர்கள் அசையும் சொத்துகள்.

‘திராவிடம் வெல்லும்' என்ற 

அந்த அசையாத கொள்கைதான், எங்களின் அசையாத சொத்து

அசையா சொத்து எதுவென்றால், இந்தக் கொள்கை ஒருபோதும் அசையாது; ‘திராவிடம் வெல்லும்' என்ற அந்த அசையாத கொள்கைதான், அசையாத சொத்து.

அதற்காகப் பாடுபடுவதுதான் எங்களுடைய வேலை.

இங்கே அருமையாகச் சொன்னார் நம்முடைய வீட்டுப் பிள்ளை சகோதரர்.

வாரிசு உரிமை என்று சொல்லக்கூடிய அளவில் வந்தாலும் தவறில்லை.

நாங்கள் துணிந்து சொல்பவர்கள்

மற்றவர்கள் கொஞ்சம் யோசிப்பார்கள்; நாங்கள் துணிந்து சொல்பவர்கள். ‘‘கேட்டால், கேளுங்கள், விட் டால் விடுங்கள், அதைப்பற்றிக் கவலையே இல்லை'' என்று எடுத்துச் சொல்லக் கூடிய அளவில் இருப்பவர்கள்.

நம்முடைய துரை வையாபுரி அவர்கள் மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள்.

இந்தக் கொள்கை என்பது இது ஆயிரங்காலத்துப் பயிர்; இதை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடி யாது. பலமுள்ளவர்களாலேயே அசைக்க முடியாது என்று சொன்னால், வெறும் மிஸ்டு கால் கட்சியை வைத்துக்கொண்டா அசைக்க முடியும்?

இன்று அவர்களுடைய கட்சியின் பதவியை வியாபாரமாக்கி இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரு கட்சியில் இருந்தவர், அந்தக் கட்சியை விட்டு வெளியே செல்லும்பொழுது, அந்தக் கட்சித் தலைவருக்கு இந்தக் கொள்கை இருக்கிறது; அந்தக் கொள்கை இருக்கிறது என்று சொல்வார்கள்.

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் 

தூய்மையாக இருக்கவேண்டும்

ஆனால், இதை சொல்வதற்கு எனக்கே வெட்கமாக இருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுவாழ்க்கை யில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்கவேண்டும் என்று கருதக்கூடியவர்களில் ஒருவன் நான்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், கட்சியை விட்டு அவர்கள் வெளியேறும்பொழுது ‘மலை 420' என்று சொல்லக்கூடிய அளவிற்கு வருகிறார்கள் என்று சொன் னால், எவ்வளவு பெரிய சங்கடமான சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைதிப் புரட்சியில் மிக முக்கியமானது!

இங்கே நம்முடைய வேளாண் துறை அமைச்சர்  என்று சொல்லுவதைவிட, திராவிட மாடல் ஆட்சி, நம்முடைய ஒப்பற்ற சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்த அமைதிப் புரட்சியில் மிக முக்கியமானது என்னவென்றால், பதவியேற்கும்பொழுது, ‘‘முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின்'' என்ற வார்த்தையைச் சொல்லி அதில் ஒரு பெரிய பிரமிப்பை உண்டாக் கினாரோ, ஒரு பெரிய கலகலப்பை உண்டாக் கினாரோ, ஒரு சிந்தனையை உண்டாக்கினாரோ - அதேபோன்றுதான் நண்பர்களே, உழவர் நலன் அமைச்சர் என்பதுமாகும்.

உழவர் நலன் துறை அமைச்சர்!

அதற்கு முன்பு, விவசாயத் துறை அமைச்சர் என்றுதான் சொல்வார்கள்.

இப்பொழுது உழவர் நலன் துறை அமைச்சர்.

உழவர்தானே வேளாண்மை செய்பவர்கள். ஆகவே, உழவர் இல்லை என்றால், வேளாண்மை இருக்க முடி யாது.

ஆகவே, உழவர் நலன் துறை அமைச்சர் என்பதுதான் மிக முக்கியமானது.

தமிழுக்கு இருக்கிற சிறப்பு மட்டுமல்ல, திராவிடத் துக்கு, திராவிட இயக்கத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கின்ற அறிவார்ந்த செம்மொழி அறிவு.

உழவர் நலன் துறை.

அதேபோன்று, மீன்வளத் துறை அமைச்சர் என்று தான் முன்பெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது மீனவர் நலம் என்று மாற்றினார். மீனவர் நலமாக இருந்தால், மீன் வளமாக இருக்கும்.

ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அருமையான வேளாண்  துறைக்காக தனியாக பட்ஜெட்.

உழவர் நலன் துறை அமைச்சரின் பட்ஜெட் மிக அருமையாக இருந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், நம் முடைய குடும்பத்தவருமான கே.எஸ்.அழகிரி அவர்களே,

எழுச்சித் தமிழரைப் பாராட்டுவது, வாழ்த்துவது, புகழ்வது என்பது, எங்களையே நாங்கள் பாராட்டுவது போன்றதாகும்.

இது மூன்றாவது குழல் மட்டுமல்ல; எப்பொழுதும் நாங்கள் கையிலேயே வைத்திருக்கின்ற குழல்தான்.

ட்ரிக்கரை அழுத்தினால், பட்டென்று வெடிக்கும். அதனால்தான், நான் பேசவேண்டியதையெல்லாம், அவரே பேசிவிட்டார்.

மூன்றாவது குழல் ஒலித்ததை 

நான் வழிமொழிகிறேன்

அதனால், நான் மிக சுலபமாக, எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்,  மூன்றாவது குழல் ஒலித்ததை நான் வழிமொழிகிறேன் என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிடலாம்.

இன்றைக்கு சனாதனத்தை எதிர்த்து அவ்வளவு பெரிய சமர் புரியக்கூடிய ஆற்றல் அவரிடம் உண்டு. அவருடைய பட்டாளத்திற்கு உண்டு.

எனவே, எங்களிடத்தில் காவிகள் வாலாட்டலாம் என்று நினைத்தால், அவர்களுடைய வால் ஒட்ட நறுக்கப்படும் என்பதைச் சொல்லிக் கொள்கின்றோம்.

இந்த மண் சாதாரண மண் அல்ல.

எங்கள் மேயர் அம்மா சுந்தரி இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார். 

சென்ற தடவை மேடையில் அவர்கள் உரையாற்றும் பொழுது, கடவுளை வைத்து வாழ்த்தினார்கள். அது அவர்களுக்குப் பழக்கமான விஷயம்.

இப்பொழுது பேசினார்கள் என்றால், வெறும் வாழ்த்தை மட்டும்தான் சொல்வார்கள்.

அமைச்சர் உரையாற்றி முடித்தவுடன் சொன்னார், ‘சாமி' தூக்கிக் கொண்டு போனார்கள், இந்த சாலையில். இந்த காரணீஸ்வரர்கோவில் தெரு; எங்களுக்கொன்றும் வித்தியாசம் இல்லையே! நாங்கள் ஏன் கடவுளோடு சண்டை போடப்போகிறோம்?

அந்த ராமனைக் காட்டி, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறுத்தினார்களே!

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கிடைக் கக்கூடிய வேலை வாய்ப்பைத் தடுத்து, அந்தத் திட் டத்தை நிறைவேற்றாமல் தடுத்தார்களே, காரணம், அது ராமன் கட்டிய பாலம் என்றார்கள்.

கலைஞரின் கேள்வி!

அப்பொழுதுதான் கலைஞர் கேட்டார், ‘‘ஏன்யா, ராமன் பாலம் கட்டுவதற்கு, அவர் என்ன என்ஜினியரா? அவர் எந்த என்ஜினியரிங் காலேஜில் படித்தார்?'' என்று.

தவறில்லை, அது கிண்டல் இல்லை. என்ஜனியர்தான் பாலம் கட்ட முடியும்.

அமைச்சர் அவர்களும் எங்களைப் போன்றே, வழக் குரைஞர்தான். அவர் துறையில், அவர் கெட்டிக்காரராக இருக்கலாம்; அவரே வேளாண் துறையில், பொறியியல் துறை இருக்கிறது.

அதற்கடுத்து. ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை.வைகோ அவர்களே,

தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர், அன்பிற்குரிய எங்களுடைய அருமை நண்பர் அவரும் வழக்குரைஞர் - இளம்வழுதியினுடைய வாரிசான புகழேந்தி அவர்கள்.

ஒவ்வொருவரையும் பார்த்தீர்களேயானால், பழகிய வர்கள், நடந்த இடம், வளர்ந்த இடங்களையெல்லாம் பார்க்கும்பொழுது, என்னுடைய வயது 90, 90 என்று சொன்னார்கள்.

ஒரே ஒரு வேண்டுகோள் அதுதான் - நான் சொன் னால், உங்களுக்கு ஏமாற்றமே தவிர, எனக்கு ஏமாற்றமே கிடையாது.

1.பயாலாஜிக்கல் ஏஜ் - 2.பிசியலாஜிகல் ஏஜ் - 3.சைக்காலாஜிகல் ஏஜ்

இது வீம்பிற்காக அல்ல; மனிதனுடைய வாழ்க் கையில் வயது என்று சொல்வது இருக்கிறதே - அது மூன்று பகுதியாகும். 

ஒன்று, பிறந்த நாள் கணக்கு - அதுதான் 90 வயது. பயாலாஜிக்கல் ஏஜ் என்று ஆங்கிலத்தில் அதற்குப் பெயர்.

இரண்டாவது, பிசியலாஜிகல் ஏஜ் - உடற்கூறைப் பொறுத்த வயது. 

மூன்றாவது சைக்காலஜிகல் ஏஜ்

வியாதி என்பது எல்லோருக்கும் வரலாம்.

(தொடரும்)


No comments:

Post a Comment