ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை கேரள அரசு நிராகரித்தது - பழைய பாடத்திட்டம் தொடரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை கேரள அரசு நிராகரித்தது - பழைய பாடத்திட்டம் தொடரும்

திருவனந்தபுரம், ஏப்.28- மத்திய இடை நிலைக் கல்வி வாரி யத்திற்கான (Central Board of Secondary Education - CBSE)  பாடத்திட்டங்களை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) வகுத்தளித்து வருகிறது. 2014-ஆம்  ஆண்டு நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி என்சிஇஆர்டி மூலம் பாடத்  திட்டங்களை மாற்றியமைத்து வருகிறது. ஹிந்துத்துவா அரசியல் நிகழ்ச்சி  நிரல் அடிப்படையில் வரலாற்றை மோசடியாக திருத்தி வருகிறது. 

அந்த வகையில்தான் சமீபத்தில் சிபிஎஸ்இ 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வரலாறு, குடிமையியல் மற்றும் ஹிந்தி  பாடத்திட்டங்களில் பல்வேறு பகுதிகளை நீக்கி என்சிஇஆர்டி அறிவித்தது. குடிமை யியல் பாடப்புத்தகத்திலிருந்து, ‘பனிப்போர் காலம்’ மற்றும் ‘உலக அரசியலில் அமெரிக்க மேலாதிக்கம்’ ஆகிய அத்தியாயங்களையும், அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்திலிருந்து, ‘சுதந்திர இந்தியாவில் அரசியல்’ பாடத்தின் இரண்டு அத்தியா யங்களையும் நீக்கியுள்ளது.

மேலும் “மக்கள் இயக்கத்தின் எழுச்சி” மற்றும் “தனிக் கட்சி ஆதிக்கத்தின் சகாப்தம்” ஆகியவையும் நீக்கப்பட்டுள்ளன. "இந்தியாவில் சோசலிஸ்டுகள்" மற்றும் "கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி" மற்றும் "சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியா வில் காங்கிரசின் ஆட்சி போன்ற" அத்தியாயங் களும் நீக்கப்பட்டுள்ளன. 

வரலாறு பாடப்புத்தகத்திலிருந்து "முக லாய சாம்ராஜ்யம்" தொடர்பான அத்தி யாயமே நீக்கப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு தற்போதைய பிரதமரும், அப் போதைய குஜராத் முதலமைச்சருமான மோடி  அரசால் முஸ்லீம் மக்களுக்கு எதிராக  கட்டவிழ்த்துவிடப்பட்ட  குஜராத் கலவரம் தொடர்பான பாடப்பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன. இது தவிர ஹிந்தி  புத்தகத்தில் இருந்து சில பத்திகள்  மற்றும் கவிதைகளும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் பகுதிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 

புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் நடப்பு 2023-2024 கல்வி அமர்வு முதலேயே நடை முறைக்கு வரும் என்றும் என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

வழிகாட்டுதல் குழு அமைத்த கேரள அரசு

என்சிஇஆர்டி இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே தாங்களும் அதையே பின்பற்றப் போகிறோம் என  உத்தரப் பிரதேச மாநில கல்வி வாரியம் அறிவித்துள்ள நிலையில், இடது சாரிகள் ஆட்சி செய்யும் கேரள மாநில  அரசு என்சிஇஆர்டி-யால் நீக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக கேரள மாநில  கல்வி அமைச்சகம், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (எஸ்சிஇ ஆர்டி) தலை மையில் வழிகாட்டுதல் குழு அமைத்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

துணைப் பாடங்களாக அறிமுகப்படுத்த பரிந்துரை

இதுதொடர்பாக கேரள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்சிஇஆர்டி - ஷிசிணிஸிஜி) 25.4.2023 அன்று அறிக்கை வெளியிட்டது. அதில்,”11 மற்றும் 12-ஆம் வகுப்புகளின் பாடப்புத்த கங்களில் இருந்து என்சிஇஆர்டி நீக்கிய பகுதிகள் வரலாறு தொடர்பானவை என்பதால் கேரளாவில் அவற்றைத் தொடர்ந்து கற்பிக் கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். நீக்கப்பட்ட பகுதிகளை துணைப் பாடப்புத்தகங்களாக  அறிமுகப் படுத்தி கற்பிக்க வேண்டும். இதற்காக கூடுதல் பாடப்புத்தகங்களை அச்சிட வேண்டும். 1800 விஞ்ஞானிகள், கல்வியா ளர்கள் அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து டார்வினின் பரிணாமக் கோட்பாடு உள்பட முக்கியமான தலைப்புகளை கைவிடுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இறுதி முடிவெடுக்கும் பொறுப்பை கேரள கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி உறுதி

இதுதொடர்பாக கேரள மாநில கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி கூறுகை யில், ”அரசமைப்புச் சட்டம் மற்றும் மதச் சார்பின்மை மாண்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து கேரளா முன்னேறி வருகிறது. என்சிஇஆர்டி "முகலாய வரலாறு", "குஜராத் கலவரம்" மற்றும்  "டார்வினின் பரிணாமக் கோட்பாடு" ஆகியவற்றை பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கப்பட் டுள்ள நிலையில், அந்த பாடப்பகுதிகளை தொடர்ந்து கற்பிக்க வேண்டும் என கேரள அரசு  கருதுகிறது. இதனால்  என்சிஇஆர்டி நீக்கிய பாடங்களை  கற்பிக்க ஒன்றிய அரசு அனுமதி மறுக்கும் வரை மாநில அரசு பாடப்புத்தகங்களை சுதந்திர மாக அச்சிட லாம். மேலும் நீக்கப்பட்ட பாடங்களை எந்த வகையில் கற்பிப்பது என்று கேரள அரசு ஆராயும். இந்த  பாடங்களை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனைகள் ஒன்றிய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப் படும்” என அவர் கூறியுள்ளார்.

சீத்தாராம் யெச்சூரி கருத்து

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத் தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: “வரலாற்றுப் பாடப் புத்த கங்களிலிருந்து முக்கியமான அத்தியாயங் களை நீக்கி, பாசிச ஹிந்துத்துவா அர சியல் திட்டத்திற்குத் துணையாக வர லாற்றை மாற்றி எழுதும் மோடி அரசின் முயற்சி களுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், கேரள இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசு 11 மற்றும் 12-ஆம் வகுப் புகளுக்கான முந்தைய பாடப் புத்தகங் களைத் தொடர முடிவு செய்துள்ளது” என கூறியுள்ளார்.


No comments:

Post a Comment