சட்டமன்றத்தில் இன்று! சிதம்பரத்தில் ‘இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 18, 2023

சட்டமன்றத்தில் இன்று! சிதம்பரத்தில் ‘இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்’

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவிப்பு


சென்னை, ஏப்.18- “பெரியவர் இளையபெருமாள் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும்” என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110 இன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (18.4.2023)  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு,

ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளிவிளக்காக மட்டுமல்ல; நெறிசார்ந்த அரசியலின் அடையாளமாகவும் விளங்கிய அய்யா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் விதி 110இன்கீழ் அறிவிப்பு ஒன்றை இம்மாமன்றத்தில் அறிவிப்பதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன்.  

எல்.இளையபெருமாள் எத்தகையவர்!

சமூக சீர்திருத்தத்தின் பெருமைமிகு தலைவர்களான அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, சுவாமி சகஜானந் தர் ஆகியோர் வரிசையில் கம்பீரமாக நின்று போராடியவர் களில் ஒருவர்தான் பெரியவர் எல்.இளையபெருமாள் அவர்கள்.   நந்தனை மறித்த சிதம்பரம் மண்ணில் பிறந்து, நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்காக அடைபட்டு இருந்த உரிமை வாசலைத் திறந்தவர் இளையபெருமாள் அவர்கள்.   பள்ளியில் படிக்கும் போது இரட்டைப் பானை முறையை பார்க்கிறார். பள்ளிக்குள் மறைந்திருந்து இரவு நேரத்தில் பானைகளை உடைக்கிறார் இளையபெருமாள் அவர்கள். இப்படி அவர் தொடர்ச்சியாக உடைத்ததால்தான், இரட்டைப் பானை முறை அந்தக் காலத்தில் அந்த வட் டாரத்தில் நீக்கப்பட்டது. இராணுவத்தில் சேர்கிறார், அங்கும் பாகுபாடு காட்டப்பட்டது. உடனடியாக, துணிச்சலோடு உயர் அதிகாரிக்குப் புகார் செய்கிறார்; அந்தப் பாகுபாடு களையப் படுகிறது. ஓராண்டு காலத்திலேயே இராணுவத்தில் இருந்து விலகி மக்கள் பணியாற்ற வந்துவிடுகிறார்.  

அண்ணல் அம்பேத்கர் பாராட்டு!

ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டம் - தஞ்சை மாவட்டத்தில் 1940 முதல் 1970 வரையில் நடந்த மிகப்பெரிய சமூகப் போராட்டங்களை நடத்தியவர் பெரியவர் இளைய பெருமாள் அவர்கள்.  பட்டியலின மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட இவரது போராட்டங்கள்தான் காரணம். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இளைய பெருமாள் அவர்களுக்கு, சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில், 1952 ஆம் ஆண்டு, கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது; வெற்றியும் பெற்றார். அப்போது அவருக்கு  வயது 27.   டில்லி சென்ற இளையபெருமாள் அவர்கள், அண்ணல் அம்பேத்கர் அவர் களைச் சந்திக்கிறார். 'இவ்வளவு இளம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக ஆகி வந்திருக்கிறீர்களே? அந்த மக்களுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்?' என்று கேட்டிருக்கிறார்.

தென்னார்க்காடு மாவட்டம், தஞ்சை மாவட்டங்களில்தான் நடத்திய மக்கள் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை இவர் பட்டியல் போட்டுச் சொன்னதைக் கேட்டு, அண்ணல் அவர்களே வியப்படைந்திருக்கிறார்கள், இளையபெருமாள் அவர்களைப் பாராட்டி இருக்கிறார்கள். 

1980 முதல் 1984 வரை சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர் பெரியவர் இளையபெருமாள் அவர்கள்.

ஜாதி வெறியர்களின் தாக்குதல்!

அவரது பெரும் சிறப்புகளில் மிக முக்கியமானது; பட்டியலின பழங்குடி மக்களின் மேன்மைக்கான 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அகில இந்திய ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை அவர் வகித்ததுதான்.  மூன்றாண்டு காலம் இந்தியா முழுமைக்கும் பயணம் செய்து, ஜாதிக் கட்டமைப்பையும், தீண்டாமைக் கொடுமையையும் ஆய்வு செய்தார்கள். அந்த அறிக்கையானது இந்தியச் சமூக அமைப்பின் ஜாதிய வேர்களை மறைக்காமல், துல்லியமாக வெளிப்படுத்தும் அறிக்கையாக அமைந்திருந்தது. எனவே, இந்த அறிக்கை வெளியே வருவதைத் தடுக்க சிலர் முயற் சித்தார்கள். அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் அன்று அவரது அறையில் தாக்குதல் நடத்தினார்கள்.  அங் கிருந்து தப்பி வந்து அறிக்கையைத் தாக்கல் செய்தார் பெரியவர் இளையபெருமாள் அவர்கள்.  இப்படி நடக்கும் என்று தெரிந்து, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் அவர்களிடம் அறிக்கையின் பிரதியைக் கொடுத்து வைத்திருந்தார் இளைய பெருமாள் அவர்கள்.    அதனால்தான் அந்த அறிக்கையை அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிந்தது.  பிற்காலத்தில் கொண்டு வரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு அடித்தளமே பெரியவர் இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கைதான்.  

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் - இளையபெருமாள் கமிட்டி அறிக்கை

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள், 1971 ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதற்கு எதிராக சிலர் உச்சநீதிமன்றம் போனார்கள். அப்போது கழக அரசு தாக்கல் செய்த மனுவில், 'சமூக சீர்திருத் தத்துக்காக அமைக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி அறிக்கை அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்று குறிப்பிட்டோம்.   'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் செல்லும்' என்பதற்கு ஆதாரமாக இளையபெருமாள் ஆணைய அறிக்கையையே உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.

தலைவர் கலைஞர் அவர்கள், பெரியவர் இளைய பெருமாள் மீது மிகப்பெரிய மரியாதையை வைத்திருந்தார்கள். சிதம்பரத்தைச் சேர்ந்தவர் என்பதால் 'சம்பந்தி' என்றுதான் அழைப்பார்கள். எனது பெரியம்மா பத்மா அவர்களது ஊர் சிதம்பரம்.  1980 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி அம்மையார், தலைவர் கலைஞர், பெரியவர் இளைய பெருமாள் ஆகிய மூவரும் திறந்தவெளி காரில் ஊர்வலமாகச் சென்று வாக்குக் கேட்டதை தமிழ்நாடு அறியும்.  1998 ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன்முதலாக பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்குத்தான் முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கினார்கள்.  

இந்திய மனித உரிமைக் கட்சியின் சார்பில் சமூகநீதி மாநாட்டை இளையபெருமாள் அவர்கள் சென்னையில் நடத்தியபோது அதனைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களைத்தான் அழைத்திருந்தார்கள்.  'சலிப்பேறாத சமூகத் தொண்டர்' என்று இளையபெருமாள் அவர்களைப் பாராட்டி இருக்கிறார் தலைவர் கலைஞர் அவர்கள். இவர்கள் இருவருமே 1924 ஆம் ஆண்டு பிறந்தவர்கள், அதே ஜூன் மாதம் தான் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்தது ஜூன் 3. இளையபெருமாள் அவர்கள் பிறந்தது ஜூன் 26. இது மிகமிக பொருத்தமானது ஆகும்.   

அத்தகைய சமூகப் போராளியைப் போற்றுவதை திராவிட மாடல் அரசு தனது கடமையாகக் கருதுகிறது.  சமூக இழிவு களையப்பட வேண்டும்; ஜாதிய வன்முறை ஒடுக்கப்பட வேண்டும்; அனைத்து சமூகங்களின் ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும்; சமத்துவ, சுயமரியாதைச் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக உழைத்த பெரியவர் இளையபெருமாள் அவர்களின் தொண்டை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.  

'தீண்டாமையை ஒழிக்க ஜாதி அமைப்பின் ஆணிவேரை வெட்டியாக வேண்டும். அதற்கு ஜாதிய அமைப்பின் பிடிப்பை உடைத்தாக வேண்டும்' என்ற பெரியவர் இளையபெருமாள் வழியில் சுயமரியாதைச் சமதர்ம சமூகத்தை அமைப்போம் என்று கூறி அமைகிறேன்.

-இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment