வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 11, 2023

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

 மூன்றே நாள்களில் தி.மு.க. அரசுக்கு இருவெற்றிகள்!

முதலமைச்சரைப் பாராட்டி மகிழ்கிறோம் (அனைவரும் எழுந்து கைதட்டி வரவேற்பு)

போரில்லாமலே வெற்றி கண்ட தந்தை பெரியார் முறையில் நமது முதலமைச்சர் ஈட்டிய வெற்றிகள்!

சென்னை, ஏப்.11  தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பின்வாங்கல், ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் என்ற இரு வெற்றிகளைக் கடந்த மூன்றே நாள்களில் குவித்துள்ளார் தமிழ்நாடு முதல மைச்சர். தந்தை பெரியாரின் போரில்லா வெற்றி முறையை நமது முதலமைச்சர் ஈட்டியுள்ளார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா 

ஏன்? எதற்காக?

நேற்று (10.4.2023) ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?'' என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

விஷமப் பிரச்சாரத்தினுடைய 

பொய்த் திரை கிழிக்கப்பட்டது

மிகுந்த மகிழ்ச்சியோடு, உங்களையெல்லாம் சந்திக் கின்ற நாளாக இந்த வைக்கம் நூற்றாண்டு தொடக்கத்தில், அதை எப்படியெல்லாம் திசை திருப்பவேண்டும், இருட்டடிக்கவேண்டும்; அதில் தந்தை பெரியார் அவர்களுக்குப் பங்கே இல்லை. ஏதோ விபத்து போல, பெரியார் அவர்கள் போராட்டம் கடைசியாக முடிகின்ற நேரத்தில் சென்றார் என்று, ஒரு விஷமப் பிரச்சாரத்தை செய்துகொண்டிருந்தவர்களுக்கு, மிகப்பெரிய அள விற்கு, அந்த விஷமப் பிரச்சாரத்தினுடைய பொய்த் திரையைக் கிழிக்கும் வண்ணம் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ‘திராவிட மாடல்' ஆட்சியின் ஒப்பற்ற எடுத்துக்காட்டான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரளத்தில் முற்போக்கு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய தோழர் பினராயி விஜயன் அவர்களும் இணைந்து ஒரு மாபெரும் வைக்கம் நூற்றாண்டு தொடக்க விழாவினை நடத்திய நேரத்தில், பல அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அதைப்பற்றியெல்லாம் இங்கே சிறப்பாக எடுத்துச் சொன்னார் நம்முடைய பழ.அதியமான் அவர்கள்.

பழ.அதியமான் எழுதிய 

‘‘வைக்கம் போராட்டம்''

‘‘வைக்கம் போராட்டம்'' என்ற ஓர் அருமையான ஆய்வு நூலை சிறப்பாகத் தந்துள்ள பழ.அதியமான் அவர்களே,

திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

பொருளாளர் தோழர் வீ.குமரேசன் அவர்களே மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கக்கூடிய இயக்கப் பொறுப்பாளர்களே, 

இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் ஆகிய வற்றின் பொறுப்பாளர்களே,

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் அவர்களே, புதுமை இலக்கியத் தென்றல் அணியின் தலைவர் அவர்களே,

மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருக்கின்ற தோழர் களே, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாள் ஓர் இனிய நாள், மகிழ்ச்சிக்குரிய நாள்.

இந்த வரலாற்றை, வரலாற்றுச் சுவடுகளைப் பார்க்கி றோம்; திரும்பிப் பார்க்கிறோம்; ஓர் அரிமா நோக்கோடு திரும்பிப் பார்க்கிறோம் என்றாலும், ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள்; சிலர் அறியாமலும் இருந்திருக்கலாம்.

ஆணவத்தினுடைய உச்சாணிக் கொம்பில் நின்று பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு, தக்கப் பாடம்

இன்று காலை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஓர் அரசு, குட்டக் குட்டக் குனியக் கூடிய அரசல்ல; அது திரும்பவும் நிமிர்ந்து பார்க்கக் கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய அரசு என்பதை நிலை நாட்டியுள்ளார். நம்முடைய மாண்புமிகு, மானமிகு முதலமைச்சர் அவர்கள், ஒரு வரலாற்றுச் சிறப்புமிகுந்த தீர்மானத்தை, தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஓர் ஆளுநர் தானடித்த மூப்பாக நடந்துகொள்ளுகின்ற நேரத்தில், அரசமைப்புச் சட்டத்தைத் திரித்துச் சொல்லக் கூடிய அளவிற்குத் துணிந்து, ஒரு பின்னணியைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்ற அந்த ஆண வத்தினுடைய உச்சாணிக் கொம்பில் நின்று பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு, தக்கப் பாடம் கற்பிக்கக் கூடிய வகையில், அடுத்து மக்கள் மன்றம் - அதைக்கூட அவர்கள், அவருக்கே உரிய பாணியில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் அவர்கள், கடிதோச்சி மெல்லெறிக என்பதைப்போல, அவர்கள் கடிதோச்சி மெல்ல எறிந்திருக்கிறார்கள்.

அதைத்தான் அவர்கள் சிறப்பாக, ஆழமாக, சொற்களிலே நளினத்தோடும், பண்போடும் பேசினார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மற்றவர்கள் எல்லாரும் சொன்னார்கள்.

மக்கள் விரோத  செயல்

அதில் குறிப்பாக உங்களுக்குத் தெரியும், பல சட்ட வரைவுகள் ஊறுகாய் ஜாடியில் ஊறிக்கொண்டிருக் கின்றன. அது மக்களுக்கு விரோதமான செயலாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆட்சியை, நடக்கவிடாமல் செய்ததை, இப்படி ஓர் அதிர்ச்சியைக் கொடுத்தது மட்டுமல்ல, அதற்கு முன்பு,  தமிழ்நாட்டில், நம்முடைய முதலமைச்சர் தலைமையில் உள்ள மதச்சார்பற்ற கூட்டணியைச் சார்ந்த அத்துணைப் பேரும், ஆளுநர் மாளிகைக்கு முன்பு 12 ஆம் தேதியன்று ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அறிவிப்பு கொடுத்து, ஆயத்த மாகி வரக்கூடிய சூழ்நிலையில், இன்றைக்குக் காலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓர் எதேச்சதிகாரம் எதிர்த்து, சட்டம் மக்களுக்காகத் தான், சட்டம் சமுதாயத்திற்காகத்தான், விதிமுறைகளும் அவ்வாறே என்பதற்கு அடையாளமாக, சட்டமன்ற விதிமுறைகளையே சற்று திருத்தி, இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.

தீர்மானத்திற்கு 

144 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

அந்தத் தீர்மானத்திற்கு 144 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தார்கள். இதில் வெட்கக்கேடு என்னவென்று சொன்னால், எதிர்க்கட்சி என்று தங்களை அழைத்துக் கொள்ளக்கூடிய எதிர்க்கட்சித் தலைவரும், அவருடைய கட்சியைச் சார்ந்தவர்களும், ஏனெனில், யார் அ.தி.மு.க. என்று சொல்வதற்கே கொஞ்சம் யோசனை செய்யவேண்டி இருக்கிறது. எது அ.தி.மு.க.?  என்பது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

ஆகவேதான், அடிமை தி.மு.க.வா? அண்ணா தி.மு.க.வா? அல்லது அடகு வைக்கப்பட்ட தி.மு.க.வா? அவரா? இவரா? என்று போட்டிப் போட்டுக் கொண் டிருக்கக்கூடிய நிலை!

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றவர் என்ன செய்திருக்கவேண்டும்? 

சட்டமன்றம் என்பது எல்லாவற்றிற்கும் மேலானது. இன்னுங்கேட்டால், நீதிமன்றத்தினுடைய எல்லை என்பது வேறு; சட்டமன்றத்தினுடைய எல்லை என்பது வேறு. ஒன்றை இன்னொன்று கேள்வி கேட்க முடியாது என்பதுதான் உண்மை நிலை!

ஜனநாயகத்தை முதுகில் குத்துவது போன்ற கேவலமான செயல்!

இப்படிப்பட்ட சூழலில், எதிர்க்கட்சியினர் வெளி நடப்பு செய்தார்கள் என்பது இருக்கிறதே, இதைவிட ஜனநாயகத்தை முதுகில் குத்துவது போன்ற கேவலமான மிகப்பெரிய செயல் வேறு இருக்க முடியாது.

ஆளுநர் ஒருபக்கத்தில் ஆட்சிக்கு விரோதமாக நடந்துகொள்கிறார் என்றால், இவர்களுடைய சொந்த சுயலாபத்திற்காக, மடியில் கனம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் நடந்துகொள்வது விசித்திரத்திலும் விசித்திரம்; வேதனையிலும் வேதனை!

பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றத்திற்கு சிலர் வந்து வித்தை காட்டினார்கள்; வராமலேயே இருந் தார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், இரண்டு மணிநேரம் அத்தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற்று, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நியாயங்கள் எங்கிருந்தாலும், 

யார் செய்தாலும் வரவேற்போம்!

திராவிடர் கழகம் வழக்கம்போல், நியாயங்கள் எங்கிருந்தாலும், யார் செய்தாலும் வரவேற்போம் என்ற நிலையில், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்த வாரத்தில் மூன்று நாள்களில், இரண்டு வெற்றிகளைப் பெற்றிருக்கிறார். போர் நடைபெறாமலேயே வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆன்-லைன் சூதாட்டத் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்பதைவிட, அதற்கு ஒப்புதல் கொடுக்கும்படியாக செய்யப்பட்டு விட்டார் என்பதுதான் மிகவும் சரியானது.

ஆளுநர் அதை மனதார செய்தாரோ இல்லையோ, செய்யும்படி செய்யப்பட்டு விட்டார்.  அதற்காக நம் முடைய முதலமைச்சர் அவர்களைப் பாராட்டவேண்டும்.

பெரியாரின் போர் முறைகளில் 

தலைசிறந்த போர் முறை!

பெரியாருடைய போர் முறைகளில் ஒரு தலைசிறந்த போர் முறை என்னவென்றால், போரில்லாமல் வெற்றி காண்பவர் தந்தை பெரியார்.

அதற்குப் பிறகு, இப்பொழுது போரில்லாமலேயே, மூன்று நாள்களில் நம்முடைய முதலமைச்சர் இரண்டு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றார்.

ஒன்று, டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படும் என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப் பட்டது. அதைக் கண்டித்து என்னுடைய தலைமையில், 8.4.2023 அன்று தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. போராட்டம் நடைபெறும் அன்று காலையிலேயே அந்த அறிவிப்புத் திரும்பப் பெறப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. ஆகமொத்தம் அந்த அறிவிப்புத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப் ஷ்ஷ்பட்டது.

ஆன்-லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல்!

அதற்குப் பிறகு, இரண்டாவது, இன்றைக்கு ஆளு நருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஆன்-லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது.

இன்றைக்குத் திங்கள் கிழமை - அது சனிக்கிழமை.

அனைவரும் எழுந்து நின்று 

கைதட்டி வரவேற்று முதலமைச்சரைப் பாராட்டுவோம்!

ஆகவேதான், முதலாவதாக முதலமைச்சருக்கு நம்முடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை இந்தக் கூட்டத்தின்மூலமாகத் தெரிவிக்க, அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றுப் பாராட்டுவோம்.

நல்ல ஜனநாயகக் காப்புரிமை!

சட்டமன்றத்தில்  இது ஒரு நல்ல ஜனநாயகக் காப் புரிமையாகும்.

(அனைவரும் எழுந்து நின்று கைதட்டி, வரவேற்றுப் பாராட்டினார்கள்).

அந்த வகையில், 13 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், சைதை தேரடியில் கூட்டணிக் கட்சிகளுடைய கண்டனப் பொதுக்கூட்ட நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கிறது.

இறுதிப் போரில் 

வெற்றி பெறவேண்டும்!

இது ஒரு தற்காலிக வெற்றிதான் - அதனால் மகிழ்ச்சிகரமான நாள் இந்த நாள்.  களங்களில் வெற்றி தான் - இறுதிப் போரில் முழு வெற்றி பெறவேண்டும் அதுதான் மிகவும் முக்கியம்.

வைக்கம் நூற்றாண்டுத் தொடக்க விழாவை  தமிழ்நாடு முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் சேர்ந்து அங்கே அவர்கள் கொண்டாடியதற்கு நன்றி செலுத்தவேண்டும். 

ஆனால், பழம் நழுவி பாலில் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்ததுபோன்று இரு வெற்றிகள் மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றன.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

ஏன்? எதற்காக? தமிழர் தலைவரின் 

மூன்று நாள் சொற்பொழிவின்

முதல் நாள் பேருரை தொடங்கியது

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? எனும் தலைப்பில் இம்மாதம் 10,11,13 ஆகிய மூன்று நாள்களில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேருரை ஆற்றுகிறார் என அறிவிக்கப்பட்டபடி, நேற்று (10.4.2023) மாலை சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தமிழர் தலைவர் பேருரைக்கான கூட்டத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக பெரியார் படத்தில் இடம் பெற்ற வைக்கம் போராட்டகாட்சி திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு பெற்று பலராலும் பகிரப்பட்டதும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டதுமாகிய வைக்கம் போராட்ட நூற்றாண்டையொட்டி தந்தைபெரியார் குறித்து வெளியிடப்பட்ட இசைக் காட்சிப்பதிவு திரையிடப்பட்டது. கருநாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடினார். எழுத்தாளர் பெருமாள் முருகன் பாடலை இயற்றியிருந்தார். பாடல் குறித்து அறிமுகவுரை பழ.அதியமான் வழங்கினார்.

பாடல் திரையிடலைத் தொடர்ந்து, வைக்கம் போராட்டத்தின் காலப்பதிவு எழுத்தாளர் பழ. அதியமான் ஆக்கத்திலிருந்து பெரியார் வலைக்காட்சிக் குழுவினரின் சிறப்பான ஏற்பாட்டில் வைக்கம் போராட்டத் தொடக்கம், பெரியார் பங்களிப்பு, வைக்கம் போராட்ட வெற்றி என அனைத்தும் 1924 பிப்ரவரி6 தொடங்கி 1925ஆம் ஆண்டு நவம்பர் 29 முடிய அனைத்து தரவுகளும் திரையிடப்பட்டன.

இப்பேருரைக் கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய எழுத்தாளர் ஆய்வாளர் பழ.அதியமான் அவர்களைப் பாராட்டி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார் தமிழர் தலைவர்.

கூட்டத்தில் வைக்கம் போராட்டம் குறித்த இயக்க வெளியீடுகள், பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூல் வெளியிடப்பட்டு, கழிவு விலையில் அளிக்கப்பட்டன.

தமிழர் தலைவர் எழுதிய ‘‘வைக்கம் போராட்ட வரலாறு'' (ரூ.100), ‘‘காங்கிரஸ் வரலாறும், வைக்கம் போராட்டமும்!'' (ரூ.200), பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் எழுதிய ‘‘வைக்கம் போராட்டம் ஒரு விளக்கம்!'' (ரூ.30), ‘‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப்போர்'' (ரூ.20), ‘‘தீண்டாமையை ஒழித்தது யார்?'' (ரூ.30), ‘‘வானொலியில் தந்தை பெரியார்'' (ரூ.25) ஆகிய புத்தகங்களின் மொத்த நன்கொடை ரூ.405. கூட்டத்தில் ரூ105 கழிவுடன் ரூ.300க்கு வழங்கப்பட்டன.

பழ.அதியமான் எழுதிய ‘‘வைக்கம் போராட்டம்'' நூலின் விலை ரூ.390. கூட்டத்தில் ரூ.300-க்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் புத்தகங்களை தமிழர் தலைவரிடமிருந்து வரிசையில் சென்று பலரும் பெற்றுக்கொண்டனர்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப்பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தாம்பரம் ப.முத்தையன், ஆ.வெங்க டேசன், வேண்மாள் நன்னன், இரா.தமிழ்ச்செல்வன், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி,தொண்டறம், கு.சோம சுந்தரம், செல்வ மீனாட்சி சுந்தரம், கி.தளபதிராஜ், பசும்பொன் மு.இரா.மாணிக்கம், சீர்காழி ராமண்ணா உள்பட பலர் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர்.

திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிர் பாசறை உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சார்பில் சண்முகப்ரியன், கார்வேந்தன், சே.மெ.மதிவதனி, தொண்டறம், இறைவி, மு.பவானி, பசும்பொன் புரசை சு.அன்புச்செல்வன் ஆகியோர் பேருரை ஆற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் முன்னிலையில் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.

புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சி சுந்தரம் நன்றி உரையாற்றினார்.

நிகழ்வின் காட்சிப்பதிவு நேரலையாக பெரியார் வலைக்காட்சியில் ஒளிரப்பானது.

முதலமைச்சருக்கு மக்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு!

தமிழர் தலைவர் உரையாற்றத் தொடங்கியதும்,  நேற்று (10.4.2023) சட்டமன்றப் பேரவையில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் குறிப்பிட்டு ஜனநாயகம் காக்கப்பட்டது என்று முதல மைச்சருக்குப் பெருமளவிலான பாராட்டைத் தெரிவித் ததும் பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் பேருரை  பல்வேறு வரலாற்றுத் தகவல்களுடன் அமைந்தது.


No comments:

Post a Comment