ஒதுக்கி வைத்தல் நிகழ்ந்த புள்ளியில் இருந்துதான்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

ஒதுக்கி வைத்தல் நிகழ்ந்த புள்ளியில் இருந்துதான்...

இரா.எட்வின்

"Inclusive" சமூகப் பொதுவெளியில், குறிப்பாக சமூக வலைதளங்களில் பேரதிகமாக பயன்படுத்தப்படும் ஒற்றைச் சொல் இந்தச் சொல் இன்றைய ஒன்றிய பாஜக அரசையும் மற்ற மாநில பாஜக அரசுகளையும் முகம் சுழிக்க வைத்து வெறிகொள்ளச் செய்கிற ஒரு சொல்லாகவும் சனாதனத்தை எதிர்க்கிற, சமத்துவத்தைக் கோருகிற அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின். தனி மனிதர்களின் உயிர்ச்சொல்லாகவும் இந்தச் சொல் விளங்குகிறது. இந்த வார்த்தையின் உண்மையான பொருள் வித்தியாசங்களை கொண்டாட்ட மனநிலையோடு ஏற்பது, மதிப்பது என்பதும் வித்தியாசங்களைக் களைந்து ஒற்றையாகி விடாமல் அவரவர் அடையாளங்களும் விழுமியங்களும் சேதமடையாமல் ஒற்றுமையோடு வித்தியாசங்களை பாதுகாப்பது என்பதும் ஆகும். சமமான சமூக தகுதி, சமமான வாய்ப்புகள் என்பதுதான் "அனைவரையும் உள்ளடக்கிய" என்ற கட்டமைப்பின் லட்சியம் என்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களை அந்த சமமான வாய்ப்புகள் பின் தங்க வைக்கும் என்ற சமூக உண்மையின் வெளிச்சத்தில் கீழ் உள்ளவற்றை அலசவேண்டிய கடமை நமக்குள்ளது.

"அனைவரையும் உள்ளடக்கிய" அல்லது "அனைத் தையும் உள்ளடக்கிய" ஒரு கட்டமைப்பின் தேவை குறித்து ஏன் பேசவேண்டியத் தேவை இருக்கிறது?

அனைவரையும் உள்ளடக்குவதற்கு எந்த வகையில் “இடஒதுக்கீடு" அவசியமாகிறது?

அனைவரையும் உள்ளடக்குவதில் தேவைப்படும் ப்ரியாரிட்டி.

அனைவரையும் ஒற்றை வட்டத்திற்குள் அடக்கிவிட ஆசைப்படும் சனாதனவாதிகளின் கைகளில் இன்றைய ஒன்றிய அரசு இருக்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மானுட சமூகம் என்பதே "inclush" என்பதன் பொருள் வித்தியா சங்களை, அதன் விழுமியங்களைத் துறந்துவிட்டு “ஒற்றைச் சமூகமாக ஒடுங்கி நிற்க வேண்டும் என்பது சனாதனிகளின் வெறியாக இருக்கிறது.

தனது விருப்ப வெறியை அல்லது வெறிகொண்ட விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தன்னிடம் கை வசத்தில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் அதிகா ரங்களையும் ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி என்று ஒன்றிருக்கிறது. ஆண்டிற்கு அய்ந்துகோடி ரூபாய் என்ற அளவில் அய்ந்து ஆண்டுகளுக்கு 25 கோடி ரூபாய் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வரும். அதை செலவளிப்பதற்கு சில வழிமுறைகளை அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2005ஆம் ஆண்டு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும். பகுதிக்கு 15 விழுக்காடும், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு 7.5 விழுக்காடும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு அய்ந்தாண்டுகளுக்கு 3.78 கோடி ரூபாயும், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு' 187 கோடி ரூபாயும் கட்டாயமாக ஒதுக்கும். இதை இன்றைய பா.ஜ.க. அரசு தற்போது திருத்தியிருக்கிறது.

இந்தத் திருத்தத்தின்படி இனி தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிக்கும் நிதியைக் கட்டாயமாக ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை - பா.ஜ.க. மற்றும் சனாதனத்தை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தத் தளர்வு பெரும் வரமாக அமையும். 2005ஆம் ஆண்டில் அய்க்கிய முன்னணி அரசு கொண்டுவந்த வழிகாட்டுதலின்படி அந்தந்த நாடாளுமன்ற தொகுதி களுக்கு உள்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மற்றும் பழங்குடி மக்கள் வசிக்கும் மக்களுக்கு போய்சேர வேண்டிய அய்ந்து கோடியே அறுபத்தி இரண்டு லட்சம் இனி வாய்க்காது போகும். சனாதனவாதிகள்தான் இப்படி என்றால் சனாதனத்தை எதிர்ப்பவர்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை.

ஒன்றிய பா.ஜ.க. அரசு தாழ்த்தப்பட்ட சமூக மற்றும் பழங்குடி இனத்தவர். வசிக்கும் பகுதிகளை மேம்படுத்துவதற்கான நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கைவைத்தது சனாதனத்தை அழித்தொழிப்பதற்காக உண்மையாகவே போராடிக் கொண்டிருக்கிற திமுக அரசு அதை இட்டு நிரப்பும் என்று நம்பினோம். ஆதிதிராவிட மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காக 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை யிலான ஆறு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஏறத்தாழ 5318 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் திருப்பப்பட்டுள்ளது என்ற தகவலை மதுரையைச் சேர்ந்த செ.கார்த்திக் கூறுவதாக 23.02.2023 நாளிட்ட ஒரு இணைய செய்தி கூறுகிறது.

இந்த ஆறு ஆண்டுகளில் ஆதிதிராவிடர் மேம்பாட் டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி 75,930 கோடி ரூபாய் என்றும், அதில் செலவிடப்பட்டது 70,969 'கோடி ரூபாய் என்றும், செலவிடப்படாமல் அரசிற்கே திருப்பப்பட்ட நிதி 5,318 கோடி ரூபாய் என்றும் அந்தத் தகவல் கூறுகிறது

சரி, அதிமுக அரசின் அலட்சியத்தால்தான் இது நடந்திருக்க வேண்டும். இப்போதுதான் சனாதனத்தை எதிர்க்கிற திமுக ஆட்சியாயிற்றே. இப்போது இந்தப் பிரச்சினை எல்லாம் வர வாய்ப்பில்லையே - மனதை ஆற்றுப்படுத்த முனைகிறோம். இந்தக் கால இடை வெளியில் திமுக அரசும் இருந்திருக்கிறது என்ற உண்மையும், திமுக ஆட்சிக் காலத்தில் செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட தொகை மிக் கணிசமானது. திமுக அட்சி நடந்துகொண்டிருக்கும் தற்போதும், அதாவது, கடந்த 2021 - 2022 ஆம் நிதி ஆண்டில் 2418 கோடி ரூபாய் செலவளிக்கப்படாமல் திருப்பப்பட்டுள்ள தகவலையும் அந்த இணையம் மேலும் விவரிக்கிறது. இந்தத் தகவல் அச்சத்தைத் தருகிறது.

"அனைவரையும் உள்ளடக்கிய" கட்டமைப்பிற்கு தாழ்த்தப்பட்ட சமூக மற்றும் பழங்குடி இனத்தவர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான சிறப்பு ஒதுக்கீடு என்பது முன் நிபந்தனை - இந்தப் பிரிவினரின் மேம்பாட்டிற்கு என்று நிதி ஒதுக்கப்படுவதே அரிது. இப்படி அரிதாக ஒதுக்கப்பட்ட நிதிக்கான போராட் டங்களையும் தியாகங்களையும் சொல்லி மாளாது. இத்தனைப் போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் பிறகு ஒதுக்கப்படும் நிதியே மிக மிகக் குறைவானது. அப்படி ஒதுக்கப்பட்ட நிதியிலும் கணிசமான தொகை செலவிடப்படாமல் திருப்பப்படுவது என்பது, கொஞ்சம் கூடுதலும் கனமுமானது என்றாலும் அதை அப்படியேதான் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது, அது சமூகக் குற்றம்.

இந்த வெளிச்சத்தில் "அனைவரையும் உள்ளடக்கிய" என்பதன் பொருள் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்புதானா? அல்லது, அனைவரும் என்பதில் ஏதேனும் முன்னுரிமை உண்டா? கல்வியைப் பொறுத் தமட்டில், அது யாருக்கானது என்று பார்த்தால் எல்லோ ருக்குமானது அல்ல என்று சனாதனத்தின் வழி நின்று “நன்னூல்” கூறுகிறது.

"தன் மகன் ஆசான் மகன்

மன்மகன்

பொருள் நனி கொடுப்போன்"

ஆகியோருக்கு மட்டுமே கல்வி தரப்பட வேண்டும் என்று நன்னூல் கூற, கல்வியை எல்லோருக்குமாக ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பாரதிக்கு அதில் ஒரு முன்னுரிமை' இருந்தது.

  "ஆங்கோர் ஏழைக்கு" என்று அவன் முன்னுரைக்கிறான். எல்லோருக்கும் சமமான கல்வியை உறுதிப்படுத்த விழையும் "யுனெஸ்கோ"விற்கு எவ்லோருக்கும் என்பதில் முன்னுரிமை இருக்கிறது. அதன் ஒரு அறிக்கையில் ““SHOULD INCLUDE THE EXCLUDED"" என்று வருகிறது. எல்லோரும் வரவேண்டும் என்பது "யுனெஸ்கோவின்" நோக்கம். ஆனால் புறக்கணிக்கப்பட்டவர்களும் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களும் கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் - அந்த அறிக்கை கூறுவது மிக மிக முக்கியமானது, எல்லா வாய்ப்புகளும் எல்லோருக்குமானதாக இருக்குமானால் "அனைவரையும் உள்ளடக்கிய” என்ற வாதத்திற்கே இடமில்லை. வாய்ப்புகளில் இருந்தும், உரிமைகளில் இருந்தும், பங்களிப்பில் இருந்தும் ஒதுக்கி வைத்தல் நிகழ்ந்த புள்ளியில் இருந்துதான் அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கான தேவை வருகிறது.

இப்படியாக உள்ளே வருகிற ஒதுக்கப்பட்ட பிரிவினரையும் மற்றப் பிரிவினரையும் ஒரே அளவுகோல் கொண்டு அளக்க முயற்சிப்பது என்பதும் குற்றம்தான். INCLUSION குறித்து கவலைப்படுவதிலும் களமேகுவதிலும் அதிகாரத்திற்கு வரும்போதெல்லாம். தன்னாலானதை எல்லாம் முடிந்தவரை செய்தும் கொடுக்கிற திமுக அரசே ஒதுக்கப்பட்ட நிதியை - தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் பழங்குடியினரும் வசிக்கும் பகுதி மேம்பாட்டிற்கான நிதியை முழுமையாக செலவழிக்காமல் திருப்புவதென்பது மிகுந்த கவலையைத் தருகிற ஒன்று. சமூக நீதிக்கான போராட்டத்தை துவக்கப் புள்ளியில் இருந்து தொடங்க வேண்டிய தேவையை இது கொண்டு வந்து நிறுத்தும் என்பதை திமுக புரிந்துகொள்ள வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய செயல் திட்டங்களை, திராவிடக் கட்சிகள் அமல்படுத்தியதன் விளைவாகத்தான் இன்று தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முதல் அய்ந்து இடங்களுக்குள் இருக்கிறது என்பதையும் இதுபோன்ற செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது போனால் இந்த நிலை கீழிறங்க வாய்ப்புண்டு என்பதையும் உணர வேண்டும். WE SHOULD UNLEARN WHAT WE HAVE LEARNT  என்று கூறுகிறார் அண்ணல் அம்பேத்கர் இதை அவசியம் கையில் எடுக்க வேண்டும். கற்றல் என்பது ஜாதி உள்ளிட்டு நாம் கற்று வைத்திருக்கிற அனைத்தையும் நம்மில் இருந்து அழித்தொழிக்க வேண்டும். இதைப் பள்ளிகளில் இருந்தும் தொடங்க 'வேண்டும்.

நன்றி: காக்கைச் சிறகினிலே - ஏப்ரல் 2023


No comments:

Post a Comment