சங்கிப் பேச்சா - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

சங்கிப் பேச்சா - உயர்நீதிமன்ற நீதிபதி பேச்சா?

02.04.2023 அன்று சென்னை தியாகராயர் நகர் வாணி மகாலில் "தமிழ் வளர்த்த ஆழ்வார்கள்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் ஸுவாமிநாதன் பேசும் போது   பாஜக பிரமுகர் எச். ராஜாவை ஸ்ரீ ராஜாஜி என்றும், தமிழ்த்தாய்வாழ்த்தை அவமதித்த சின்ன சங்கராச்சாரி சங்கரனை பால பெரியவா என்றும் குறிப்பிட்டார்.  அதே நேரத்தில் அவரைச்சந்திக்கவந்த மேனாள் அற நிலைத்துறை அமைச்சரின் உதவியாளர் கிறிஸ்தவன், அவன் பேசினான், வந்தான், வருத்தப்பட்டான் என்று ஒருமையில் பேசியுள்ளார்

 மேலும் நான் பேசியதெல்லாம் விவாதப்பொருளாகும். அது பற்றி கவலையில்லை, நான் நீதிபதி இதற்கு மேல் பேசக்கூடாது என்றும் குறிப்பிட்டார். 

இந்த நீதிபதி தொடர்ந்து தனது பதவிக்குப் பொருத்தமற்ற வகையில்  பேசி வருகிறார்.

நான் இப்போது சொல்லப் போவது விவாதத்துக்கு உரியதாக இருக்கலாம். அதுபற்றி நான் கவலைப் படவில்லை என்று அவர் பேசியதிலிருந்து தெரிந்த சர்ச்சைக்குரியதை ஒரு  நீதிபதி பேசலாமா? இவர்மீது உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? நீதித்துறை ஜாதித் துறையாக மாறலாமா?

2.4.2023 அன்று தியாகராயர் நகர் வாணி மகால் அரங்கில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்  பேசியதன் முழு உரை.

ரங்கராஜ் பாண்டே ஜி எப்போதும் ஸ்மைலோடு இருப்பார். அவர் எனக்கு அறிமுகமானதே ஒரு இன்சிடெண்ட் தான்.

சமீபத்தில் நான் மதுரையில்  இருந்த போது ஓர் இசை விழாவிற்கு என்னை வரச்சொல்லி பெரியவர் ஒருவர் அழைத்தார். நானும் ஏதோ முக்கியமான ஒரு நிகழ்ச்சி என்பதால் மதுரை நீதிமன்றத்திற்கு அரைநாள் லீவு போட்டுவிட்டு விமானம் பிடித்து நேரடியாக நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கு வந்தேன், கடைசி வரை என்னை மேடைக்கு அழைக்கவே இல்லை. இது தொடர்பாக பாண்டேஜியிடம் கேட்ட போது அவர்கள் உங்களை என்ன சொல்லி அழைத்தார்கள் என்றார். அப்போதுதான் எனக்கு புரிந்தது, என்னை அவர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்தார்களே தவிர என்னை நிகழ்ச்சிக்கான முக்கிய விருந்தினர் என்று அழைக்கவில்லை. ஒரு நீதிபதியையே பார்வை யாளராக அமர வைத்தனர். 

அதே போல் மேலும் ஒரு நிகழ்ச்சியில் நான் முன்பே வந்து உட்கார்ந்து விட்டேன், ஆனால் அந்த மாவட்ட நீதிபதி பெண் ஒருவர் வருகைதந்த போது சிவப்புக் கம்பளம் விரித்து பேண்டு வாத்தியங்கள் முழங்க அவரை வரவேற்றனர். அப்போது பாண்டேஜி என்ன இது சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு இத்தனை தடபுடல் வரவேற்பு என்று கூறி எனக்கு போன் செய்தார். நான் ஹாலில் ஒரு பார்வையாளராக அமர்ந் திருப்பதாக கூறினேன். இப்படித்தான் பாண்டேஜிகும் எனக்கும் நல்ல நட்பு கிடைத்தது 

நான் ஒன்றும் பெரிய ஸ்காலர் கிடையாது பேசுவ தற்கு - காரணம் ஸ்வாமிகள் உட்கார்ந்திருக்கிறார்கள். பல மேதைகள் இங்கே இருக்கிறார்கள். இருந்தாலும் நான் 10 நிமிடம் பேசிவிடுகிறேன். பாண்டேஜி சீமானைப்பற்றியும் பேசினார், அதே நேரத்தில் ராஜாஜி அவரின் தகப்பனார் ஹரிஹர சர்மா குறித்தும் பேசினார். ராஜாஜியோட தகப்பனார் மிகப்பெரிய சமஸ்கிருத வித்வான், அவர் தமிழில் இருந்து சமஸ்கிருதத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை அகராதியை எழுதியுள்ளார்.

 ராஜாஜியின் தகப்பனார் புனாவில் பி.டி. வாத்தியாராக இருந்துள்ளார். அவர் ஹனுமான் இன்ஸ்டியூட் போன்ற இடத்தில் படித்திருக்கிறார். இப்போதுதெரிகிறதா ராஜாஜி ஏன் போராளியாக இருக்கிறார் என்று. போராட்டக் குணம் அவரது ஜீனிலேயே உள்ளது. 

ராஜாஜியின் தகப்பனார் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் டிக்ஸ்னரியை சென்னையில் வெளியிடுகிறார்கள், அந்த நிகழ்வில் பாலபெரியவர் இருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அவர் எழுந்து நிற்கவில்லை. அவர் மவுனநிலையில் இருந்தார். அது மிகப் பெரிய சர்ச்சை ஆனது, சீமான் கட்சியினர் ராமேஸ்வரத்தில் உள்ள சங்கரமடத்தில் புகுந்து  பிரச்சினை செய்கின்றனர். ரகளை பண்றாங்க அதுதொடர்பாக ஒரு எப் .அய். ஆர். பதிவு செய்யப்பட்டது. அந்த எப்.அய்.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்கள். 

 அந்த வழக்கு என்னிடம் வந்தது. நான் கேட்டேன், 'ஏன் அந்த மடத்தில் புகுந்து ரகளை செய்யவேண்டும்?' என்றேன். அதற்கு அவர்கள் "நாங்கள் எல்லாம் தமிழ் ஆர்வலர்கள், சாமியார் தமிழை அவமதித்துவிட்டார்" என்று கூறினார்கள். "சரி நீங்க தமிழ் ஆர்வலர்கள் என்று கூறுகிறீர்களே இரண்டு திருக்குறள் சொல் லுங்கள்" என்றேன். அவர்களுக்குக் கடைசி வரை திருக்குறளே வரவில்லை. அதாவது இவர்கள் தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ் தொடர்பான ஒன்றுமே இவர்களுக்குத் தெரிவதில்லை. 

 கும்பகோணத்தில் ஒரு வேத பாடசாலை நிகழ்ச்சி நடந்தது, அந்த நிகழ்ச்சியில் வேதம் முடித்த பாலகர்களுக்கு சான்றிதழ் வழங்கினேன். அப்போது மிகப் பெரிய பெரியவா படத்தை எனக்குத் தந்தார்கள். நான் முன்பு மிகபெரிய வழக்குரைஞர் என்றுகூறுவதில் சங்கடப்படமாட்டேன், உண்மையைத்தானே கூறி னேன். என்னைப் பார்க்க எல்லாவிதமான மக்களும் வருவார்கள் - மிகப்பெரிய அரசியல் வாதிகளும் வருவார்கள். என்னுடைய அலுவலகத்தில் பெரிய மகாபெரியவா படம் மாட்டி வைத்திருப்பேன், அப்போது ஓர் அரசியல்வாதி வந்தார். பேசிக்கொண்டே இருந்தார். திராவிடமாடல் என்பது போல் திராவிட குரல் என்று இருக்குமே அந்தக்குரலில் அவர் கடைசியாக கேட்டார்? "உங்களுக்கு பின்னால் இருக்கிறதே அந்த படத்தில் உள்ளது உங்கள் தாத்தாவா" என்று கேட்டார். எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக அமைந்துவிட்டது, இத்தனைக்கும் அவர் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர். (கூட்டத்தில் கைதட்டல் சிரிப்பலை) அவரோட பிஏ வந்து ஒரு கிறிஸ்துவன் இருக்கான், நானும் அவனும் நிறையவழக்கு தொடர்பாக பேசியிருக்கிறோம். நானும் அவனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு திரும்பச்செல்லும் போது என்னிடம் கேட்டான். அய்யா சாரு, வந்து உங்களிடம் அன்று பெரியவா குறித்து கிண்டலாக கேட்டபோது எனக்கு ரொம்பசங்கடமா போச்சு என்றான். எதுக்கு இந்த தமிழ் ஆர்வலர் கதையும், அரசியல் வாதிகதையும் கூறுகிறேன் என்றால் நாம் ரொம்பவே விலகிப்போய்விட்டோம் அதை இணைப்பதுபோல் தான் இந்த நூல் உள்ளது ஆகவே இந்தகதையைக் கூறினேன். 

இப்போது நாம் சொல்லப்போவது விவாதத்திற்குரிய தாக இருக்கலாம் அதுபற்றி நான் கவலைப்படவில்லை. இது தொடர்பான தீர்ப்பையே நான் கூறியுள்ளேன். அம்பேத்கர் எழுதிய கான்ஸ்டியூசன் தான் நம்ம அரசமைப்புச்சட்டம் என்பது எனக்கு மிகவும் பெருமையானது - அதை நான் சந்தோஷமாக கூறுவேன். கான்ஸ்டியுசன் மொராலிட்டி என்று ஒன்று இருக்கிறது. இதுதான் இதைத்தாண்டி நாம் போகவே கூடாது. நம்ம கான்ஸ்டியுசன் 1947 லிருந்து 1949 முடிந்து 1950 குடியரசு தினம் அன்று நம்மிடம் வந்தது.   இந்த கான்ஸ்டியூசன் என்றுமே இப்படி இருக்கணும் என்றால்  அழுத்தமாகவே நான் பதிவு செய்கிறேன் இந்த டெமோகிராடிக் புரொபைல் தொடரும் வரை க்கும் தான் இந்த கான்ஸ்டியூசன் அப்படியே இருக்கும் (பலத்த கைதட்டல்) இந்த டெமோகிராடிக் புரொபைல் ஆல்டர் ஆகிவிட்டால் கான்ஸ்டியூசன் இருக்காது, நமக்கு என்று பாரதீய தர்மம் இருக்கிறது, இந்த பாரதீய சம்பிரதாயம் தொடர்ந்து இருக்கவேண்டும். நமக்கு என்று ஒரு பாரதீய தர்மம் சம்பிரதாயம் இருக்கும் அல்லவா, அதைத்தான் நான் சொல்கிறேன்,  அப்படி இருந்தால்தான் தான் நம்ம கான்ஸ்டியூசன் இருக்கும். ஒரு நீதிபதி இதுக்கு, மேலே சொல்ல முடியாது. நீங்களே புரிந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான்! அந்த பாரதீய சாம்பிரதாயத்தை தொடர்ந்து பிணைத்துவைப்பதுதான்  இந்த நூல், என்வீட்டிற்கு நீங்கள் வந்தீர்கள் என்றால்(ஆத்துக்கு என்று கூப்பிட ஆசைதான்) என் வீட்டில் 3000 புத்தகங்கள் இருக்கிறது. இது எல்லாம் முன்னேற்றம் குறித்த நூல்கள்,

எப்படி நமக்கு ஆண்டாள் எல்லாரையும் காலம்பற எழுந்துபோ எழுந்துபோ என்று தூக்கத்தில் இருந்து எழுப்புகிறார் அல்லவா? அதுபோல் தான் நம்ம பாரத சம்பிரதாயத்தில் பல ஆபத்துகள் சூழ்ந்துள்ளது.இதுதெரியாம தூங்கிக்கொண்டு இருக்கிறோம்.  இந்த ஆபத்துக்களை கண்டு விழித்தெழு என்று ஆண்டாள் நம்மை கூப்பிடுவது போன்றுதான் நான் கூப்பிடு கிறேன். இங்கு உ.வே. சாமிநாதரின் வாரிசு இருக் கிறார்கள். பாரதியார் வாரிசு இருக்கிறார்கள் ஆகவே இதில் பேசு வதில் பெருமை அடைகிறேன். நன்றி !



No comments:

Post a Comment