சனாதன சக்திகளை வீழ்த்த திராவிடர் கழகம் அமைக்கும் களங்களில் கைகோர்த்து களமாடுவோம்! எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

சனாதன சக்திகளை வீழ்த்த திராவிடர் கழகம் அமைக்கும் களங்களில் கைகோர்த்து களமாடுவோம்! எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உறுதி

 படிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும் - புரட்சியாளர் அம்பேத்கரும்!

அகில இந்திய அளவில் காங்கிரசோடு இணைந்து தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதை

துணிச்சலாக முதன்முதலில் பிரகடனப்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர்தான்!

கடலூர், ஏப்.8 படிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் தந்தை பெரியாரும் - புரட்சியாளர் அம்பேத்கரும்! அகில இந்திய அளவில் காங்கிரசோடு இணைந்து தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதைத் துணிச்சலாக முதன்முதலில் பிரகடனப்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர்தான்! சனாதன சக்திகளை வீழ்த்த திராவிடர் கழகம் அமைக்கும் களங்களில் கைகோர்த்து களமாடுவோம் என்றார்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழா

கடந்த 31.3.2023 அன்று மாலை கடலூரில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

திராவிடர் கழகத்தோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைத்து, மூன்றாவது குழல் துப்பாக்கி விடுதலைச் சிறுத்தைகள் என்று சொல்லப்படும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நேரிய வழியில் இயங்குகிறது; மக்களை அரசியல்படுத்துகிறது; அமைப்பாக்குகிறது; சமூகநீதிக்காகப் போராடுகிறது; தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் கொள்கைகளை இன்றைக்கு நெஞ்சில் ஏந்தி இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதைத் தமிழர் தலைவர் அவர்கள் நமக்கு சான்றாக வழங்கியிருக்கிறார். அந்தப் பெருமையோடு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன்.

யாரால் ஆபத்து?

இன்றைக்கு சமூகநீதியைப் பாதுகாக்கவேண்டும் என்கிற தேவை எங்கிருந்து வந்தது?

ஏன் இந்தப் பயணம்?

சமூகநீதிக்கு ஆபத்து என்பதை உணர்த்துவதற்காகத் தான்.

யாரால் ஆபத்து?

சனாதன சக்திகளால்!

யார் அந்த சனாதன சக்திகள்?

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்க் கூட்டம்.

அவர்களால் இயக்கப்படுகின்ற பாரதீய ஜனதா கட்சி.

அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

கோல்வால்கரின் கொள்கைகளைப் பரப்பிக் கொண் டிருக்கிறார்கள்.

நாம் பெரியாரின் கொள்கைகளையும், அம்பேத்கரின் கொள்கைகளையும் பரப்புகின்றோம்.

கோல்வால்கர் யார்?

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய தலைவர்களில் ஒருவர், முதன்மையானவர். ஹெட்கேவாருக்குப் பிறகு, தலைமை ஏற்ற இரண்டாவது தலைவர் அவர்.

அவர் அந்த இயக்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை வரையறுத்தார். அவருடைய கொள்கைப் பிரகடனம் வேறொன்றுமில்லை - காலங்காலமாக இந்த மண்ணில் நீடித்து நிலைத்து இருக்கக்கூடிய சனாதன தருமத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பதுதான்.

சனாதன தருமம் என்றால் என்ன?

சனாதனம் என்ற சொல்லுக்குப் பொருள் - அழியாதது என்று பொருள்.

நிலையானது என்று பொருள்.

சனாதன தர்மம் என்பது, 

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது!

ஆனால், அவர்களின் கொள்கைப்படி, சனாதன தர்மம் என்பது, பிறப்பின் அடிப்படையில் மனித குலத்தில் உயர்வு - தாழ்வு உண்டு.

இந்த உயர்வு - தாழ்வு எப்பொழுதும் அழியாது - மாறாது.

பிறப்பில், பிராமணர்களே உயர்ந்தவர்கள்; மற்ற அனைவரும் பிராமணர்களின் அடிமைகள். கீழ்ஜாதி. இதுதான் சனாதன தர்மம் - இதை யாரும் மறுக்க முடியாது.

இதுதான் காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டது.

இதுதான் மனுஸ்மிருதி என்பதில் எழுதி வைக்கப் பட்டு இருக்கிறது.

அதைத்தான் புஷ்யமித்திர சுங்கன் என்கிற அரசன் தன்னுடைய அரசாட்சியின், அரசமைப்புச் சட்டமாகப் பிரகடனம் செய்தான்.

நான்கு வருணம் என்கிற வருணாசிரம தர்ம அடிப்படையில்தான் ஆட்சி நிர்வாகம் நடக்கும். குலத் தொழிலை யாரும் மீறக்கூடாது. சூத்திரர்கள் படிக்கக் கூடாது. பார்ப்பனப் பெண்மணியாக இருந்தாலும், சூத் திரப் பெண்மணிகளாக இருந்தாலும் பெண்கள் அனை வருமே பாவ யோனியில் பிறந்தவர்கள்தான்; அவர் களும் படிக்கக்கூடாது; இதையெல்லாம் வரையறுத்தது சனாதன தர்மம் - வருணாசிரம தர்மம். அதைச் சட்ட மாகப் பிரகடனப்படுத்தியதுதான் மனு -  அதன் பெயரே மனுஸ்மிருதி என்று அழைக்கப்படுகிறது.

அதுதான் நீண்ட நெடுங்காலமாக இந்த மண்ணில் ஆட்சியாளர்களுக்கு வழிகாட்டக் கூடிய ஒரு நூலாக இருந்தது.

தோள் சீலைப் போராட்டம் - 

200 ஆம் ஆண்டு

அண்மையில் நான் 200 ஆம் ஆண்டு தோள் சீலைப் போராட்ட நிகழ்வில் பங்கேற்றேன். இரண்டு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும், தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களும் பங்கேற்ற அந்த மாநாட்டில் நானும் கலந்துகொண்டேன்.

அங்கே உரையாற்றியவர்கள்  அந்தக் காலத்தில் சனாதன தர்மம் எப்படி இருந்தது என்பதை எடுத் துரைத்தார்கள். திருவிதாங்கூர் மகாராஜா, பத்மநாபா கோவிலின் வாசலில் நின்று சபதம் எடுத்துக்கொண்டு, என் ஆட்சி நிர்வாகத்தில், இங்கு சனாதன தர்மம் கடைப்பிடிக்கப்படும்; பாதுகாக்கப்படும் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டு ஆட்சி நடத்தினார் என்று வரலாறு சொல்கிறது.

இந்த சனாதன தர்மப்படி, பிராமணர்களே மிக உயர்ந்த சமூகங்களைச் சார்ந்தவர்கள்; அக்கரகாரத்தில் பிறந்தால் போதும், அவர்கள் உயர்ந்தவர்கள்; மற்ற வர்கள் அனைவரும் அவர்களுக்கு சேவை செய்யக் கூடிய ஜாதிகள்.

யாரும், யாருடைய குலத்தொழிலையும் மீறக்கூடாது; குறிப்பாக கல்வி பெறக்கூடாது. அதிகாரம் பெறக்கூடாது. இதையெல்லாம் ஆட்சியாளர்கள் மூலமாக நிலைநாட்டி னார்கள். இதைத் தகர்த்தெறிவதற்காக காலம் நமக்கு அவ்வப்பொழுது போராளிகளைத் தந்துகொண்டே இருந்தது.

முதல் சனாதன எதிர்ப்புப் போராளி

 கவுதம புத்தர்

அதில், முதல் சனாதன எதிர்ப்புப் போராளியாக கவுதம புத்தர் விளங்கினார். இன்று நம்முடைய தலை வர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.

அவர் நேரிடையாக, பெரியாரைப்போல, அம்பேத் கரைப்போல, பார்ப்பனியத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அவர் ஒரு கொள்கைப் பிரகடனத்தைச் செய்தார்.

சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம்

இந்தக் கொள்கைப் பிரகடனம் பவுத்த கொள்கை - புத்தரின் கொள்கை.

புரட்சியாளர் அம்பேத்கரின் பதில்!

புரட்சியாளர் அம்பேத்கரை எல்லோரும் விமர்சித் தார்கள். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், Liberty, Equality and Fraternity  - என்கிற சொற்களை நீங்கள் பிரெஞ்சு புரட்சியில்  இருந்து காப்பியடித் திருக்கிறீர்கள் என்று விமர்சனம் செய்தபொழுது, அவர் பொறுமையாக எழுந்து பதில் சொன்னார், ‘‘சில நண்பர்கள் இங்கு விமர்சனம் செய்தார்கள் -Liberty, Equality and Fraternity - என்கிற இந்த சொல்லாடல்களை நான் பிரெஞ்சு புரட்சியிலிருந்து காப்பியடித்ததாகச் சொல்லுகிறார்கள். அவர்களுக்கு நான் பணிவோடு சொல்ல விரும்புகின்றேன். இந்தக் கோட்பாட்டு முழக் கங்களை நான் பகவான் புத்தரின் போதனைகளிலிருந்து எடுத்தேன்'' என்று சொன்னார்.

சமத்துவம் இந்த மண்ணில் நிலைக்கவேண்டும் என்று முதலில் பரப்பியவர் புத்தர்.

சமத்துவம் நிலைபெறவேண்டுமானால், சகோதரத் துவம் வேண்டும்.

சகோதரத்துவம் தேவை என்றால், ஜாதி ஒழிப்பு முக்கியமானது.

ஜாதி ஒழிப்பு இல்லாமல், சகோதரத்துவம் மலராது. அரசியல் மேடைகளில் நாம் அண்ணன் - தம்பி என்று கைகுலுக்கிக் கொள்கின்றோம். சமூகத்தில் அப்படி இல்லை. எதார்த்தம் இல்லை. எந்த ஜாதியும், இன்னொரு ஜாதியை, அண்ணன் - தம்பி என்று உறவு கொள் வதில்லை.

ஒரு பார்ப்பனப் பெண், ஒரு பார்ப்பனரல்லாதவரை அண்ணன் என்று உறவாட முடியுமா? தம்பி என்று உறவாட முடியுமா?

சகோதரத்துவத்தை இங்கே மறுத்தது 

சனாதன தர்மம்!

இவ்வளவு பெரிய தடுப்புச் சுவரை எது ஏற் படுத்தியது?

சகோதரத்துவத்தை இங்கே மறுத்தது எது? தடுத்தது எது? அழித்தது எது?ஒழித்தது எது?

சனாதன தர்மம்.

அதைத்தான் பெரியாரும், அம்பேத்கரும் பார்ப்பனி யம் என்று அடையாளப்படுத்தினார்கள்.

சனாதன தர்மத்தின் இன்னொரு பெயர்தான் பார்ப்பனியம்.

பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும், அவர்களும் சூத்திர ஜாதியைச் சார்ந்தவர்கள்தான்!

பார்ப்பனர்களின் நலன்களுக்காக, பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு, பார்ப்பனர்களால் பாதுகாக்கப்பட்டு, பார்ப்பனர்கள் பயனடைந்த ஒரு கோட்பாடுதான் பார்ப்பனியம். அதுதான் சனாதன தர்மம்; அதுதான் வருணாசிரம தர்மம். அதுதான் மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்கள்; இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகை என்றால், அதில் 65 கோடி பேர் பெண்கள். 65 கோடி பேர் ஆண்கள். அந்த 65 கோடி பெண்களும் சூத்திரர்கள், வருணாசிரம தர்மப்படி. அவர்கள் பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும், அவர் களும் சூத்திர ஜாதியைச் சார்ந்தவர்கள்தான் என்று சனாதன தர்மம் சொல்கிறது; வருணாசிரம தர்மம் சொல் கிறது; மனுஸ்மிருதி சொல்லுகிறது. ஒட்டுமொத்தமான மக்கள் தொகையில் சரி பாதியை கல்வியற்றவர்களாக, அதிகாரமற்றவர்களாக, உரிமையற்றவர்களாக, பேச் சுரிமையற்றவர்களாக முடுக்கி வைத்திருந்தது இந்த சமூகம். 

அவ்வப்பொழுது புரட்சியாளர்கள் 

தோன்றினார்கள்!

அதைத் தகர்த்தெறிவதற்காக அவ்வப்பொழுது புரட்சி யாளர்கள் தோன்றினார்கள். மகாத்மா ஜோதிபாபூலே, கருநாடகத்தில் தசரம்மா, தமிழ்நாட்டில் தந்தை பெரியார், மகாராட்டிரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர், திருவிதாங் கூர் சமஸ்தானத்தில் அய்யா வைகுண்டர்,  கேரளாவில் சிறீ நாராயண குரு - இவர்கள் எல்லாம் சனாதன தர்மத்தின் கொடுமைகளை மக்களிடத்தில் எடுத்து வைத்தார்கள்; எதிர்த்தார்கள்.

அய்யா வைகுண்டரும், நாராயணகுருவும், ஆன்மிக வழியில் போனார்கள்; தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் அரசியல் தளத்திலே கலாச்சார தளத்திலே நின்று போராடினார்கள். அதைத் தகர்த் தெறிந்துவிட்டு, சகோதரத்துவத்தை நிலை நாட்டுவதற்கு ஒரு யுக்தி கையாளப்பட்டது; கண்டறியப்பட்டது.

அந்த யுக்திதான் சமூகநீதி.

சமூகநீதி கோட்பாட்டின் 

அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு!

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இந்த எளிய மக்களுக்கு, காலங்காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பதை நியா யப்படுத்துகிற, உறுதிப்படுத்துகின்ற ஒரு கோட்பாடுதான் சமூகநீதி.

சமூகநீதி கோட்பாட்டின் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு இருக்கிறது, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். பெரியாருக்கு முன், எத்தனை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளை ஞர்கள் மருத்துவர்களாக வந்தார்கள்; பொறியாளர்களாக வந்தார்கள்; பேராசிரியர்களாக வந்தார்கள்; வழக்குரை ஞர்களாக வந்தார்கள்.

இட ஒதுக்கீடு வந்த பிறகுதான் - 

ஷெட்யூல்டு காஸ்டு, ஷெட்யூல்டு டிரைப்ஸ் ஆகிய சமூகங்களுக்கு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தின்மூலம் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திவிட்டார்.

ஓ.பி.சி. என்று அறியப்படுகிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த இயலவில்லை. அதற்கு தனியே ஒரு கமிஷன் போட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.

அம்பேத்கர் பதவி விலகுவதற்கு 

மூன்று முக்கியமான காரணங்கள்!

அந்தக் கமிஷன் அமைக்கப்படவில்லை.

ஜவகர்லால் நேரு அவர்களோடு முரண்பட்டு, அந்த அமைச்சர் பதவியை உதறிவிட்டு வெளியே வருகிற பொழுது, மூன்று முக்கியமான காரணங்களுள், ஓ.பி.சி. கமிஷன் அமைக்கப்படவில்லை என்பதும் ஒன்று.

தி கோட் ஆஃப் இந்து பில் என்கிற இந்து சட்ட மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதும், பிளானிங் கமிஷன் என்கிற திட்டக் குழுவில் என்னை உறுப்பினர்களாக  சேர்க்க அவர்கள் விரும்ப வில்லை என்று மூன்று முக்கியமான காரணங்களைச் சொன்னார் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.

இந்து சட்ட மசோதா என்பது ஒரு புரட்சிகரமான சட்டம். அது மட்டும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டு இருந்தால், இந்த சனாதனக் கும்பல் இன்றைக்கு எழுச்சி பெற்றிருக்க முடியாது.

பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கு கிற ஒரு சட்ட மசோதா. இந்து சமூகத்தைச் சார்ந்த பெண்கள் கல்வி பெறுவதற்கும், சொத்துரிமை பெறுவதற்குமான வாய்ப்பை உருவாக்குகிற சட்ட மசோதாவை புரட்சியாளர் அம்பேத்கர் வரையறுத்துக் கொடுத்தார், அது நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இது ஒரு வரலாறு.

கல்வி கற்றால்தான் 

அதிகார வலிமை பெற முடியும்!

சகோதரத்துவத்தை நிலைநாட்டவேண்டுமானால், சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமானால், எளிய மக்கள் கல்வியும், வேலைவாய்ப்பும் பெற்று, அதிகார வலிமை பெறவேண்டும். 

ஜாதி வெறியால் அதிகார வலிமை பெற முடியாது.

மத வெறியால் அதிகார வலிமை பெற முடியாது.

திருமாவளவன் ஏற்றுகின்ற கொடிக்கம்பத்தை அறுத்துப் போடுவதால், அதிகார வலிமையைப் பெற முடியாது.

சுவர் விளம்பரங்களை அழிப்பதால் அதிகார வலிமை பெற முடியாது.

கருச்சங்காடுகளில் பதுங்கிக் கொண்டு கார்மீது கல்லெடுத்து வீசுவதால் அதிகார வலிமையைப் பெற முடியாது.

கல்வி கற்றால்தான் அதிகார வலிமையைப் பெற முடியும். கல்வியின்மூலம் வேலை வாய்ப்பைப் பெற்றால்தான் அதிகார வலிமையைப் பெற முடியும்.

படிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் , தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும்!

படியுங்கள் என்று சொன்னவர்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோர்.

வெறுமனே படியுங்கள் என்று சொல்லாமல், அவர் கள் படிப்பதற்கான களத்தை அமைத்துக் கொடுத்த வர்கள், தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும்.

அது வெறுமனே பிச்சை என்கிற அடிப்படையில் வழங்கப்படக் கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது என்பதால்தான், வரையறுக்கப்பட்ட கோட்பாடுதான் சமூகநீதிக் கோட்பாடு.

அதைத் தகர்த்தெறிவதற்காகத்தான் சனாதனக் கும்பல், இடபிள்யூஎஸ் என்கிற பெயரில், பொருளா தாரத்தை அளவுகோலாகக் கொண்டு, முன்னேறிய ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு தருகிறார்கள்.

அவர்களின் நோக்கம் 

சமூகநீதியின் கோட்பாட்டை தகர்ப்பதுதான்!

அவர்களுடைய நோக்கம் முன்னேறிய ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு தருவதல்ல. சோசியல் ஸ்டேட்டஸ் என்கிற அடிப்படையில் சமூகநீதியின் கோட்பாட்டை தகர்ப்பது தான். அதுதான் அவர்களின் நோக்கம்.

பெரியாருடைய கருத்துக்கு, அம்பேத்கருடைய கோட்பாட்டிற்கு எதிராக அவர்கள் நகர்த்தியிருக்கின்ற செயல் திட்டம் அது.

ஆகவேதான், சமூகநீதிக்கு ஆபத்து!

ஆகவேதான், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் இன்றைக்கு நாடு தழுவிய பரப்புரையை 90 வயதில் மேற்கொண்டிருக்கிறார்.

மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வருவார்களேயானால்...

இன்னொருமுறை அவர்கள் ஆட்சிக்கு வருவார் களேயானால், சமூகநீதியைக் காப்பாற்ற முடியாது. சமூகநீதியை முன்மொழிகின்ற அரசமைப்புச் சட்டத் தையும் காப்பாற்ற முடியாது. இந்தத் தேசத்தையும் இனிமேல் யாராலும் காப்பாற்ற முடியாது.

‘‘உச்சநீதிமன்றமே மோடி அரசைக் கண்டித்திருக் கிறது. மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தாதீர்கள். பிற மதங்களின்மீது வெறுப்பை உமிழாதீர்கள்; மக்களை ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடுத்தாதீர்கள்'' என்று! 

மோடி அரசை உச்சநீதிமன்றம் 

எச்சரித்தது!

யாரோ ஒரு நல்ல புத்தியுள்ள நீதிபதி  உச்சநீதிமன்றத் தில் இருக்கிறார்; மோடி அரசை எச்சரித்திருக்கிறார்.

உலக நாடுகள் எச்சரிக்கின்றன.

மீண்டும் மோடி பிரதமரானால், உலகப் பொருளா தாரத்திற்கே ஆபத்து வரும் என்று அந்நிய நாடுகள் எச்சரிக்கின்றன.

‘‘12 லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது என்று தெரியவில்லை, வங்கிக் கணக்குகளில்'' என்ற செய்திகள் இப்பொழுது வெளியாகியிருக்கின்றன.

தனி நபரை உலகக் கோடீசுவரராக ஆக்குவதற்கு ஒருவர் ஆட்சி நடத்துகிறார்!

ஒரு தனி நபரை உலகக் கோடீசுவரராக ஆக்குவதற்கு ஒருவர் ஆட்சி நடத்துகிறார் - அதுதான் மோடி அரசு.

நாடாளுமன்றத்தில் என்ன கோரிக்கை?

அதானி என்ற நபர், இவ்வளவு பெரிய பங்குச் சந்தை ஊழல் செய்திருக்கிறாரே, பொருளாதாரத்தில் பெரிய சரிவு ஏற்பட்டு இருக்கிறதே, இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறதே!

ராகுல் காந்தியின் கேள்விகளுக்குப் 

பதில் இல்லையே!

அதனை விசாரிக்கவேண்டும் - அதானி குற்ற மிழைத்திருக்கிறார்; பங்குச் சந்தை ஊழல் செய்திருக் கிறார்; மோசடி செய்திருக்கிறார்.

உங்களுக்கும், அதானிக்கும் உள்ள உறவு என்ன?

இரண்டு பேரும் சேர்ந்து, சேர்ந்து விமானத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றீர்களே அதற்கு என்ன காரணம்?

இதைத்தான் ராகுல் காந்தி அவர்கள், நாடாளு மன்றத்தில் கேள்வியாக எழுப்பினார்.

இரண்டு அவைகளும் சேர்ந்து ஒரு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை அமைத்து விசாரிக்கவேண்டும் என்பதுதான் அவருடைய கோரிக்கை.

ஒரு தனி நபரைக் காப்பாற்றுவதற்காக, மாநிலங் களவை, மக்களவையை செயல்படவிடாமல் முடக்கிப் போட்டிருக்கின்ற அரசு மோடி அரசு. 

இந்த மோடி அரசு மிகவும் ஆபத்தான அரசு.

சமூகநீதிக்கு எதிரான அரசு.

சமத்துவத்திற்கு எதிரான அரசு.

இந்து மக்களுக்கு எதிரான அரசு.

அவர்கள் இந்துக்களுக்கானவர்கள் அல்ல. இந்துக் களின் நலனுக்கு எதிரானவர்கள். அதைப்பற்றி பேசி னால், மணிக்கணக்கில் பேச வேண்டி வரும்.

அப்படிப்பட்ட ஒரு மோசமான அரசை, தூக்கி எறிவதற்கான பயணம்தான், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் பயணம்.

சங் பரிவார் அரசை 

தூக்கி எறிவதற்கான பயணம்!

இது சமூகநீதிப் பாதுகாப்புப் பயணம் என்றால், சங் பரிவார் அரசை தூக்கி எறிவதற்கான பயணம். அதைத் தூக்கி எறிந்தால்தான், சமூகநீதிப் பாதுகாப்பாக அமையும்.

திராவிட மாடல் என்றால், சமூகநீதி மாடல் என்று பொருள்.

திராவிட மாடல் என்றால், சமத்துவத்திற்கான ஒரு முன்மாதிரியான ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிற அரசு என்று பொருள்.

பெரியார் வகுத்த பாதையில், அண்ணா கட்டிக்காத்த அரசியலை, கலைஞர் பேணிப் பாதுகாத்த கோட் பாட்டை, இன்றைக்கு உயர்த்திப் பிடித்து, இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய ஒரு மகத்தான ஆட்சி நிர்வாகத்தை அண்ணன் தளபதி அவர்கள் வழங்கிக் கொண்டிருக் கின்றார்.

சனாதன சக்திகளை வீழ்த்தவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்

ஆகவேதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை  விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து ஆதரிக்கிறது; உற்ற துணையாக இருக்கிறது. தி.மு.க. தலைவருக்குத் துணையாக இருந்து, சனாதன சக்திகளை வீழ்த்தவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

காங்கிரசோடு இணைந்து தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதைத் துணிச்சலாக முதன்முதலில் பிரகடனப்படுத்தியவர் 

தமிழ்நாடு முதலமைச்சர்தான்!

அகில இந்திய அளவில், காங்கிரசோடு இணைந்து தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதைத் துணிச்சலாக முதன்முதலில் பிரகடனப்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள்.

அப்படிப்பட்ட தெளிவும், துணிவும் அண்ணன் தளபதி அவர்களிடத்தில் இருப்பது இன்றைக்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு.

சமூகநீதியைப் பாதுகாப்பதற்காக, அய்யா ஆசிரியர் அவர்கள் மேற்கொண்டிருக்கின்ற இந்த முயற்சிக்கு என்றென்றைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் உற்ற துணையாக இருப்போம்.

திராவிடர் கழகம் அமைக்கும் களங்களில் கைகோர்த்து களமாடுவோம்!

தேர்தல் அரசியலில் வெற்றி - தோல்விகள் வரும், போகும். ஆனால், பெரியார் கண்ட கனவை நினைவாக் குவதற்கு - புரட்சியாளர் அம்பேத்கர் கண்ட கனவை நினைவாக்குவதற்கு  என்றென்றைக்கும் விடுதலைச் சிறுத்தைகள் இதே வேகத்தோடு, வீரியத்தோடு, திராவிடர் கழகம் அமைக்கும் களங்களில் கைகோர்த்து களமாடும் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment