ஆளுநர்கள் பகடைக் காய்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

ஆளுநர்கள் பகடைக் காய்களா?

ஆளுநர்  திரு. ஆர்.என். ரவி அவர்கள் தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்கள் அனுப்பும் செய்திகளை மட்டுமே அப்படியே பேசுகிறார் போலும்! அவர் மேடையில் பேசும் அனைத்தும் தீவிரமான அரசியல் சார்ந்து இருக்கிறதே தவிர கடுகளவு கூட மக்களின் மீதான அக்கறையாகத் தெரியவில்லை.  மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையின் படி இந்தியாவிலேயே  தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் நடப்பது பாஜக ஆளும், மத்தியப்பிரதேசம் , உத்தரப்பிரதேசம், அரியானா, குஜராத், மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில்தான். இது குறித்து குற்றவியல் பகுதி தொடர்பான ஆவணங்களில் முழு புள்ளி விவரம் உள்ளது. ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அதை மறைத்து அரசியல் உள்நோக்கத்தோடு மேடைகளில் பேசி வருகிறார்.  பொறுப்பான பதவியில் இருப்பவர்  தேசிய மனித உரிமைகள் ஆணையம், மற்றும் குற்றப்பதிவு ஆணையத்தின் புள்ளிவிவர அறிக்கையில் உள்ளவற்றைப் பார்க்காமல் பாஜகவினர்  அவரது சமூக வலைதளங்களில் அனுப்பியதை அப்படியே படித்துக்காண்பிக்கிறார். 

அதே போல் கல்வி தொடர்பான புள்ளிவிவரத்தையும் கடந்த மாதம் தவறாக பேசியுள்ளார்.

"தமிழ்நாட்டில் 51 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். இதை எண்ணி நாம் பெருமை அடைய வேண்டும். தமிழ்நாட்டில் 24 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளில் வெறும் 13 முதல் 14 சதவீத குழந்தைகளே பள்ளிக்கு செல்கின்றனர்.

சில சமூகத்தினரால் மட்டுமே 70 முதல் 75 சதவீதம் அளவிற்கு கல்வியில் வளர்ச்சி அடைய முடிகிறது. இந்த சதவிகிதத்திற்கான இடைவெளியை தான் நாம் பார்க்க வேண்டும். இன்னும் பல இடங்களிலும் பல கோவில்களிலும் பல பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட சமூக  மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை உள்ளது." என்று கூறியிருந்தார். 

ஆனால் ஆளுநர் பேசியதற்கும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒன்றிய அரசு வெளியிட்ட  உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தில், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்தொகை விகிதம் 39.6 விழுக்காடாகவும், பழங்குடியின மக்களின் விகிதம் 40.7விழுக்காடாகவும் உள்ளது. இது இந்தியாவின் மொத்த சராசரியை விட இருமடங்கு அதிகம்.

வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களைத் தவிர்த்து அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களில் தமிழ்நாடே இதில் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டின் உயர் கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தை எடுத்துக் கொண்டால் 51.4% ஆக உள்ளது. இதிலும் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடே முதலிடம் வகிக்கிறது. இந்தியாவின் மொத்த சராசரி 27.1 ஆக உள்ள நிலையில் தமிழ்நாடு பன்மடங்கு உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி இவரை அனுப்பிய ஒன்றிய அரசே கொடுத்த புள்ளி விவரங்களுக்கும் ஆளுநர் பேசிவருவதற்கும் இடையே மலைக்கும் மடுவிற்குமான வேறுபாடு உள்ளது. ஆனால் இது பற்றி எதுவுமே கவலைப்படாமல் யாரோ சமூகவலை தளங்களில் அனுப்பி வரும் தவறான தகவல்களை மட்டுமே எடுத்துக் கொண்டு தொடர்ந்து பேசி வருகிறார். சில அரசியல்வாதிகள் உண்மைகளை மறைத்து பொது வெளியில் தங்களது அரசியல் லாபத்திற்காக இப்படி பேசலாம், ஆனால், ஒரு மாநில ஆளுநரே இப்படிப் பேசுவது தவறான முன்னுதாரணமாகிவிடும்.

தெரிந்துதான் ஆளுநர் பேசுகிறாரா? தெரியாமல் பேசுகிறாரா? என்பது முக்கியமான கேள்வியாகும்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி சரியாக இயங்கவில்லை என்று தனக்குத்தானே முடிவு செய்து அந்தப் பணியைச் செய்கிறாரா?

ஒன்றிய அரசின் அதிகாரத்தில் பிஜேபி வந்தபின் ஆளுநர்களின் பதவி என்பது கேலிக்குரியதாகி விட்டது.

அதுவும் குறிப்பாக பிஜேபி ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைத் திட்டமிட்ட வகையில் தெரிவு செய்து அனுப்பி வருவது எதற்கெனத் தெரிகிறது - இவை எல்லாம் மக்களுக்கு எங்கே தெரியப் போகிறது என்று மனப்பால் குடிக்க வேண்டாம்  ஒன்றிய அரசு - தக்க தருணத்தில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

No comments:

Post a Comment