நேனோ ரோபோ உதவியுடன் மனிதர்களின் ஆயுள் நீடிப்பு கூகுள் மேனாள் விஞ்ஞானி கணிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 2, 2023

நேனோ ரோபோ உதவியுடன் மனிதர்களின் ஆயுள் நீடிப்பு கூகுள் மேனாள் விஞ்ஞானி கணிப்பு

புதுடில்லி ஏப். 2  இன்னும் 7 ஆண்டுகளில் நேனோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன மேனாள் விஞ்ஞானிரே குர்ஸ்வேல் கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் மேனாள் விஞ்ஞானி ரே குர்ஸ் வேல்(75). கணினிப் பொறியியலாளரான இவர், இதுவரை 147 முன் கணிப்புகளை கூறியுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. 2000-ஆம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கணினி வெல்லும் என இவர் கடந்த 1990ஆ-ம் ஆண்டே கூறினார். அது சரியாக இருந்தது. அதேபோல் இன்டர்நெட் வளர்ச்சி, வயர்லெஸ் தொழில் நுட்ப மாற்றம் அதிகளவில் இருக்கும் என இவர் கூறிய முன் கணிப்புகளும் மிகச்சரியாக இருந்தது. இவரை தற்போது விளாகர் அடாஜியோ என்பவர் நேர்காணல் செய்து யூ-டியூப்பில் காட்சிப் பதிலாக வெளியிட்டுள்ளார். அதில் ரே குர்ஸ்வேல் கூறியிருப்பதாவது: கடந்த 2005-ஆம் ஆண்டில் வெளிவந்த `தி சிங்குலாரிட்டி இஸ் நியர்’ என்ற புத்தகத்தில் 2030ஆ-ம் ஆண்டுக்குள் மனி தர்கள் நிரந்தர வாழ்க்கையை அனுபவிக்க தொழில்நுட்பம் அனுமதிக்கும் என கூறியிருந்தேன்.

தற்போது மரபியல், ரோபோடிக்ஸ், மற்றும் நேனோ தொழில்நுட்பத்தில் முன்னேற் றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் நரம் புகள் வழியாக செலுத்தப்படும் ‘நானோபோட்ஸ்’ எனப்படும் மிக நுண்ணிய ரோபோக்கள் வரப்போகின்றன. இவை 50 முதல் 100 நானோ மீட்டர் அகலம்தான் இருக்கும். தற் போது டிஎன்ஏ ஆய்வு, செல் இமேஜிங் பொருட்கள் போன் றவற்றில் நேனோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன.முதுமை மற்றும் உடல்நல பாதிப்பில் இருந்து மனிதர்களை காக்கவும், உடலில் உள்ள செல்களை பழுது பார்க்கவும் நேனோ ரோபோ உதவும். இதன்மூலம் மனிதர்கள் தாங்கள் விரும்பியதை எவ் வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டு ஒல்லியாகவும், தெம்புடனும் இருக்கலாம். நாம் கூடுதலாக சாப்பிட்டாலும், அதை வெளியேற்றும் வேலையை நேனோபோட் செய்யும் என 2003-இல் எனது கட்டுரையில் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment