குலக்கல்வியை வீழ்த்திய ஜாதி ஒழிப்புப் போர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

குலக்கல்வியை வீழ்த்திய ஜாதி ஒழிப்புப் போர்

- முனைவர் இரா.சுப்பிரமணி

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஒரு இனம் தமக்கான கலை, இலக்கியம், சமூகம், பண்பாடு, இறையியல், அரசியல், கல்வி உரிமைகளை மீட்டெடுக்க அயராமல் களமாடி வெற்றிகளை ஈட்டிய வண்ணம் இன்றைக்கும் பன்முனைப் போராட்டங்களைத் தொடர்ந்து வருகிறதென்றால் அந்த இனம்  திராவிட இனமாகத்தான் இருக்கும். அது, தமது அடையாளங்களையும் உரிமைகளையும் மீட்டெடுக்க போராட்டங்களைத் தொடங்கிய நாள்முதல் இன்றுவரை அதே போர்க்குணத்தோடு பயணித்து வருகிறது. 

திராவிடர்கள் நிறைந்திருந்த இந்திய நிலப்பரப்பின் வடபகுதியில் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட மனுதர்மம் ஜாதிகளை கட்டமைத்து, பிறப்பின் அடிப்படையிலான சமூக அடுக்குமுறைகளை உருவாக்கியது. இம்மண்ணின் ஆதிக்குடிகளைச் சூத்திரர்கள் என்று ஒதுக்கிவைத்த அந்த மனுதர்மம் அவர்களுக்கான வாழ்வியல் உரிமைகளையும் தனது கட்டுக்குள் வைத்துக்கொண்டது.

இந்திய மண்ணில் பார்ப்பனர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அன்றைய குருகுலக் கல்வி மூலமாக ‘ஒரு சூத்திரன் வேத மந்திரங்களைக் காதால் கேட்க நேர்ந்திடின் அவன் காதுகளில் உருக்கிய உலோகத்தினை ஊற்ற வேண்டும். அவன் வேத மந்திரங்களை ஓதினால் அவன் நாக்கினை வெட்டவேண்டும். அவன் சில வேதங்களை மனப்பாடம் செய்திருந்தானேயானால் அவனைக் கோடரியால் வெட்ட வேண்டும்’ என்ற  மனுதர்மம் நிலைநாட்டப்பட்டது.

உலகில் அறிவு பெறுவதையும், கல்வி கற்றுக்கொள்வதையும் தடைசெய்த ஒரே அமைப்பு ஹிந்து சமுதாய அமைப்பு என்பதனைச் சுட்டும் டாக்டர் அம்பேத்கர் “எந்தச் சமுதாயமும் பொதுமக்கள் அறிவைத்தேடி அடைவதைக் குற்றமாகக் கருதித் தண்டனை ஏதும் அளித்ததில்லை. பொதுமக்களுக்கு அறிவைத் தரமறுத்த ஒரே தெய்வீகச் சட்ட வல்லுநராக மனு ஒருவரைத்தான் கூறலாம்” என்றார்.

இந்தியச் சமூகத்தில் கல்வி என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த அந்நிலை மெல்லமெல்லத் தமிழ்நாட்டிலும் வேர்பிடித்து வைதீகத்தின் பிடியில் இருந்த மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் அப்போக்கு ஆதிக்கம் பெறத்தொடங்கியது. 

இந்தியாவில் சமயப் பணிகளை மேற்கொள்ள வந்த கிறித்துவ குருமார்கள் 1750 ஆம் ஆண்டு வாக்கில் கல்விக் கூடங்களை உருவாக்கத் தொடங்கினர். இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஆங்கிலேயர்கள் அதற்கென ஒரு இலட்ச ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தனர். வங்காளத்தில் வாரன் ஹேஸ்டிங் பிரபுவும், சென்னையில் தாமஸ் மன்றோவும் கல்விக் கூடங்களை உருவாக்கத் தொடங்கினர். 1834ஆம் ஆண்டு மெக்காலேவால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை அனைவருக்கும் கல்வி என்ற பொதுநிலையை உருவாக்கியது. கல்வியில் சமயச் சார்புநிலை இல்லாமல் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மெக்காலே நிறம், ஜாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்ட இடமாகக் கல்விக்கூடங்கள் அமையப்பெற வேண்டு மென்பதனைத்  தமது கல்விக்குறிப்பில் உறுதிப்படுத்தினார். பார்ப்பன ஆதிக்கத்திலிருந்த குருகுலக்கல்வி ஆங்கிலேயர் ஆட்சியில் சிதைவுறத் தொடங்கியது.

விடுதலைப் பெற்ற இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கும் அடிப்படைக்கல்வி தருவது ஒன்றிய, மாநில அரசுகளின் கட்டாயக் கடமை என்பதனை உறுதிபட எடுத்துரைத்தது. அரசியல் சட்டத்தின் அப்பிரிவினைச் செயல்படுத்தும் முகமாகச் சென்னை மாகாண அரசின் கல்வித்துறை 1950 ஆம் ஆண்டு அதற்கான பத்தாண்டு செயல்திட்டம் ஒன்றைத் தீட்டியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக அய்ந்து இலட்சம் மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதோடு, ஒரு கோடி ரூபாய் நிதி கல்விக்காக ஒதுக்கப்படவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்த இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால் மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்தது. இச்சூழலில் தமிழ் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இராஜகோபாலாச்சாரியார் புதிய கல்விக்கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதன்படி  பள்ளிகளுக்கான  வேலைநேரம் இரு சுற்றுகளாக மாற்றப்பட்டது. அதன்படி முதல் சுற்றில் மாணவர்கள் பள்ளியில் ஆசிரியரிடம் பாடம் கற்க வேண்டும்; இரண்டாவது சுற்றில் மாணவர்கள் அவரவர் தந்தையிடம் வீட்டில் அவர்களுடைய குலத்தொழிலைக் கற்கவேண்டும். மாணவிகள் தாயாரிடமிருந்து சமையலையும், வீட்டு வேலைகளையும் கற்றுக் கொள்ளவேண்டும். உலகில் எங்குமே நடைமுறையில் இல்லாத அப்புதிய கல்விக்கொள்கை 1953-1954ஆம் கல்வியாண்டில் முதல்கட்டமாகத் தமிழ்நாட்டின் கிராமப்புறப் பள்ளிகளில் மட்டும் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் நகர்ப்புறங்களுக்கும் அப்புதிய கல்விக் கொள்கை விரிவாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டது.

மாறுபட்ட தொடக்கக் கல்வித்திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின்படி பள்ளிகளின் வேலை நேரம் அய்ந்து மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இத்திட்டம் ஜாதி அமைப்பைப் பலப்படுத்தும் குலக்கல்வித் திட்டமென வெகுண்டெழுந்த அமைப்புகளும், கட்சிகளும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பலப்படுத்தவே இராஜகோபாலாச்சாரி இத்திட்டத்தைக் கொண்டுவந்ததாகக் குற்றம் சாட்டின. 1953ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் போராட்டத்தில் இறங்கினர். காமராசரும் இத்திட்டத்தை எதிர்த்தார். ஈ.வெ.கி.சம்பத் தலைமையில் தி.மு.கழகம் குலக்கல்வித் திணிப்பு  எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தது. 

“சிரைக்கிறவன் மகன் சிரைக்கவும், வெளுக்கிறவன் மகன் வெளுக்கவும்தான் கற்றுக் கொள்ள வேண்டுமா? அப்படியானால் பார்ப்பன வீட்டுப் பிள்ளைகள் எந்தத் தொழில் செய்வார்கள்? பள்ளியில் படிக்கும்போதே வக்கீல் தொழிலையும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே டாக்டர் தொழிலையும் செய்வார்களா? பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராகட்டும். அக்கிரகாரத்துக்குத் தீவைக்க நாள் குறிக்கும் வரை காத்திருங்கள்” என்றார் தந்தை பெரியார்.

வர்ணாசிரமத்தை நிலைநாட்டி சூத்திர மக்களின் கல்வி உரிமையைப் பறிக்க முனைந்த முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரி வீட்டு முன்பு மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் எனத் தமிழ்நாடு முழுவதும்  போராட்டத் தீ பற்றிக் கொண்டது. ஆயிரக்கணக்கானவர்கள் கைது - ஆண்டுக்கணக்கில் சிறைத்தண்டனை எனக் கல்விக்கான உரிமைப் போர்க்களம் மக்களின் தியாகத்தால் மிளிர்ந்தது.  

அப்போராட்டங்களை முனைப்பாக முன்னெடுத்த விடுதலை (16.07.1953) நாளேடு ‘ஆச்சாரியாரே! உங்களுக்கு இன்னும் பலி எத்தனை வேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பியது. அதில் “ஆச்சாரியார் அவர்களுடைய வர்ணாசிரமப் புனரமைப்பு வேலையான கல்வித் திட்டமானது 70 ஆண்டுகளுக்கு முன்பு, பேயாட்டம் ஆடி, இதுவரை சுமார் 1700 பேரைச் சிறையிலடைத்தும், அய்ம்பது பேர்கள் வரையில் சுட்டும், அடித்தும் தள்ளி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டும், 10 பேர்களைச் சுட்டுக் கொன்று சுடுகாட்டில் புதைக்கச்செய்தும், 10 பேர்கள் குண்டாந்தடி அடியாலும், துப்பாக்கி வெடியாலும் கால் கைகள் இழந்தும் முடமாக்கப்பட்டும், 53 ரயில் வண்டிகள் வரை நிறுத்தப்பட்டுக் காலதாமதம் செய்யப்பட்டும் ஆன பலி கொண்டுவிட்டது” என்பதனைச் சுட்டிக்காட்டியது.

மறியல், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக்கூட்டம் என எதற்கும் பணியாத இராஜகோபாலாச்சாரி சென்னையில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசும்போது “அவனவன் ஜாதித் தொழிலை அவனவன் செய்யவேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்கவேண்டியது இல்லை. குலத்தொழிலைச் செய்தால் போதும். எல்லோரும் படித்தால் எங்கிருந்து வேலைகிடைக்கும்” என்ற தொனியிலேயே தனது பேச்சைத் தொடர போராட்டத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும், பரம்பரைத் தொழில் செய்யாத குலத்தில் பிறந்த மாணவர்கள் வயல் வேலைகளிலும், தொழிற்சாலைகளிலும், விவசாயத்தொழில், கொட்டகை போடுதல், செங்கல் அறுத்தல், கிணறுகள் வெட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்ற அரசின் அறிவிப்புக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு உருவானது. 

இராஜகோபாலாச்சாரியின் குலக்கல்வித் திணிப்பை வெறுமனே கல்வியில் கொண்டுவரப்பட்ட மாற்றம் என்று தந்தை பெரியார் அணுகவில்லை. அதனை ஆரிய திராவிடப் போரின் தொடர்ச்சி என்றே கருதினார். குலக்கல்வி எதிர்ப்புப் போர்க்களத்தை முந்தைய போராட்டங்களைவிட சற்று கடுமையாகவே அணுகிய பெரியார் “பார்ப்பனர்களைச் சமூக விலக்கம் செய்யுங்கள்; அவர்களுக்கு யாரும் துணி துவைக்காதீர்கள்; சவரம் செய்யாதீர்கள்; வயலில் உழாதீர்கள்; குடும்ப நிகழ்ச்சிகளுக்குப் பார்ப்பானை அழைக்காதீர்கள்; பார்ப்பான் பூசாரியாக இருக்கும் கோயிலுக்குப் போகாதீர்கள்; பட்டினி கிடக்க நேரிட்டாலும் பார்ப்பான் உணவுக் கடைகளைப் புறக்கணியுங்கள்; பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்காதீர்கள்” என்ற முழக்கத்தைத் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்தார்.

போராட்டங்களைக் கடுமையாகக் கையாண்ட அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து 24.7.1953 ஆம் நாள் துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டுச் சென்னையில் கண்டன ஊர்வலமும் நடத்தப்பட்டது. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொண்டர்களையும் பொதுமக்களையும் காவல் துறையினர் கண்மூடித்தனமாக வேட்டையாடுவதைக் கண்டித்த பெரியார் இதே நிலை நீடித்தால் நாட்டில் ரத்தக்களறி ஏற்படும் என எச்சரித்தார். ஒரு இலட்சம்பேர் வரை கூடிய அந்த ஊர்வலத்தில் பெரியார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்றார்.

குலக்கல்வித் திட்டத்தை எதிர்ப்பதற்கென்றே ஆச்சாரியார் கல்வி எதிர்ப்புப் படை அமைக்கப்பட்டது. அதன்படி  தஞ்சையிலிருந்தும் ஈரோட்டிலிருந்து குலக்கல்வித் திணிப்பு எதிர்ப்புப் படைகள் பெரும் ஆரவாரத்துடன் புறப்பட்டன. அப்போது பேசிய பெரியார் “இப்போதே சொல்லுகிறேன்; இந்தக் கல்வித்திட்டம் எடுக்கப்பட்டால் மட்டுமே போதாது; நம்முடைய மக்களுக்கு உத்தியோகம், கல்வி எல்லாவற்றிலும் சரியானபடியான விகிதாச்சாரம், பார்ப்பானுக்கு 100க்கு 3, நம்மவர்களுக்கு 97 என்கிற மாதிரி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டாக வேண்டும். இந்த இரண்டும் திராவிட மக்களின் ஜீவாதாரமான - உரிமையான பிரச்சினைகள், இந்த இரண்டு காரியங்கள் நிறைவேறுவதற்காக இந்த இனம் கடைசிவரை உயிரைப் பணயம் வைத்துப் போராடியே தீரும்! இதில் சந்தேகமே இல்லை.” (புரட்சிக்கு அழைப்பு, 31.01.1954) என்றார்.

‘குலக்கல்வித் திட்டத்தை ஒழித்துக்கட்டுவோம்! இன்றேல் செத்தொழிவோம்!’ ‘ஜாதி ஒழிப்பும் ஆச்சாரியார் கல்வித்திட்ட ஒழிப்பும் ஒன்றே’  என்ற தந்தை பெரியாரின் குலக்கல்வித் திணிப்பு  எதிர்ப்பு போராட்டம் என்பது ஜாதி ஒழிப்புப் போராட்டம்தான் என்பதனைத் தெளிவுப்படுத்தியது. “ஆச்சாரியார் கல்வித்திட்டம் ஜாதியை வளர்க்கும் கல்வித்திட்டம். ஆகையால்தான் ஜாதி ஒழிக்கும் பணியில் முன்நின்று இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம்” என்றார் பெரியார்.

தந்தை பெரியாரின் போராட்டமும், அறிஞர் அண்ணாவின் போராட்டமும் தொடர் போராட்டங்களாக இருந்தன. அதிலும் தி.மு.கழகம் முப்பெரும் போராட்டங்களை முன்னெடுத்தது. தமிழ்நாடெங்கும் குலக்கல்வி எதிர்ப்பு மறியல் தொடர் போராட்டம், தமிழர்களை நான்சென்ஸ் என்று விமர்சித்த நேருவுக்கு எதிரான மறியல் போராட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் டால்மியாபுரம் என்ற வடநாட்டுப் பெயரைக் கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என்ற ரயில் மறியல் போராட்டம் என்ற மும்முனைப் போராட்டம் அரசுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியது. பெரியார், அண்ணா, கலைஞர் நடத்திய போராட்டங்களை மிகக் கடுமையாகக் கையாண்ட இராஜகோபாலாச்சாரி மக்களின் பேரெழுச்சியைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் திணறினார்.

மக்கள் போராட்டத்தின் பன்முக எழுச்சிக்குப் பணிந்த இராஜகோபாலாச்சாரி தலைமையிலான அமைச்சரவை 8.4.1954 அன்று பதவி விலகியது. அதனைத்தொடர்ந்து காமராசர் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. ஆச்சாரியாரால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்க அமைக்கப்பட்ட ஏழுபேர் கொண்ட குழுவின் பரிந்துரையைக் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்திய அதேகல்வி அமைச்சரான சி.சுப்பிரமணியம் முன்மொழிய இராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் 18.05.1954 அன்றைய சட்டசபைத் தீர்மானம் மூலம் ரத்து செய்யப்பட்டது.

இராஜகோபாலாச்சாரியால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம் என்பது ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையைப் பறிக்க கொண்டுவரப்பட்ட திட்டம் மட்டுமல்ல என்பதனைத் துல்லியமாகக் கணித்தார் பெரியார். அத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுமானால் அது ஜாதிகளின் இருத்தலை உறுதி செய்துவிடும் என்று கருதினார். அதனால்தான் குலக்கல்வி எதிர்ப்பு என்பது வர்ணாசிரமத்தின் அடித்தளத்தில் உருவான ஆரிய திராவிடப் போர் என்பதனையும் ஜாதி ஒழிப்புப் போர் என்பதனையும் தந்தை பெரியார் தெளிவுபட எடுத்துரைத்தார்.

கல்வி அறிவைப் பெறுவதற்கும், கற்பதற்குமான உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் ஓர் இனம் மாபெரும் போராட்டத்தை நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்பது உலக வரலாற்றில் காணக்கிடைக்காத அரிதானவொரு நிகழ்வாகும். பல்வேறு வழிகளில் ஜாதியை நிலைநாட்ட முயன்ற வர்ணாசிரமம் இராஜகோபாலாச்சாரியின் குலக்கல்வி வடிவில் மீண்டும் உயிர்பெற முனைந்தது. ஆனால், தந்தை பெரியார் தலைமையிலான போராட்டம் குலக்கல்வியை மட்டும் முடிவுக்குக் கொண்டுவரவில்லை, ஜாதி எந்த வடிவில் வந்தாலும் அதனை வேரடி மண்ணோடு வீழ்த்துவோம் என்ற அழுத்தமான செய்தியையும் விடுத்தது.  

குருகுலங்களால் மறுக்கப்பட்ட கல்வி உரிமையையும், ஜாதிகளின் பெயரால் பறிக்கப்பட்ட கல்வி உரிமையையும் மீட்டெடுத்து கல்வியில் சமூக நீதியை நிலைநாட்டிய இயக்கம் திராவிட இயக்கம். கல்வி கற்கும் உரிமையை நிலைநாட்டி இருப்பதிலும், கல்வியில் சமூகநீதியைக் கொண்டு வந்திருப்பதிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இந்திய  மாநிலங்களில் தனித்த அடையாளத்தோடு கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்வதற்குக் காரணம் குலக்கல்வியை வீழ்த்திய வீரமிகு வரலாற்றுப் பக்கங்களையும் தன்னகத்தே கொண்டதாகும்.

(1952இல் முதலமைச்சராக இருந்த இராஜகோபால் ஆச்சாரியார் 6000 பள்ளிகளில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். (11.04.1952)

No comments:

Post a Comment