வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? இரண்டாம் நாள் கூட்டம் - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? இரண்டாம் நாள் கூட்டம் - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்

 ‘‘வைக்கம் போராட்டத்தில் நான் கலந்துகொள்ள 

முடியாது’’ என்றார் இராஜகோபாலாச்சாரியார்!

வேறு எந்த மாநிலத் தலைவரும் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை!

இரண்டாம் நாள் கூட்டத் தொடரில் பழ.அதியமான் எழுதிய புத்தகத்தில் உள்ள  ஆதாரத்தை எடுத்துக்காட்டினார்  தமிழர் தலைவர் ஆசிரியர் 

சென்னை, ஏப்.23  ‘‘வைக்கம் போராட்டத்தில் நான் கலந்துகொள்ள முடியாது’’ என்றார் இராஜகோபாலாச் சாரியார்! வேறு எந்த மாநிலத் தலைவரும் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை - பழ.அதிய மான் எழுதிய புத்தகத்தின் ஆதாரத்தை எடுத்துக் காட்டினார்  இரண்டாம் நாள் கூட்டத் தொடரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக? இரண்டாம் நாள் கூட்டம்

கடந்த 11.4.2023 ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?'' என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு: மயிலாடுதுறை தளபதிக்கு நன்றி!

நேற்று போன்றே ஒரு நல்ல வாய்ப்பு; மயிலாடு துறையில் இருந்து நம்முடைய தளபதி அவர்கள் வைக்கம் நிகழ்ச்சிக்குச் சென்று, பழ.அதியமான் அவர்களோடு இருந்து ஓர் அற்புதமான படத்தை  எடுத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள், நன்றி!

இது ஒரு நல்ல வரலாற்று நிகழ்ச்சி!

அருமை நண்பர்களே, இன்று இரண்டு, மூன்று செய்திகளைத்தான் நான் சொல்லவிருக்கின்றேன்.

நாளைய தினம் நடைபெறவேண்டிய கூட்டம், அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று உங்களுக்கெல்லாம் தெரியும். காரணம் என்னவென்றால், ஆளுநர் மாளிகைமுன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட் டம், பொதுக்கூட்டமாக நாளை சைதாப்பேட்டையில் நடைபெறவிருக்கின்றது. அதை முன்கூட்டியே யூகித்து, கூட்டத்தை 13 ஆம் தேதியன்றுக்கு மாற்றினோம்.

நேற்று (10.3.2023) நடைபெற்ற கூட்டத்தில் பழ.அதிய மான் அவர்கள் அருமையாக உரையாற்றினார். இன்று பேராசிரியர் கருணானந்தம் அவர்கள்; நாளை மறுநாள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள்.

புத்தகங்களில் நிறைய தகவல்கள் உள்ளன. அவற்றை நீங்கள் வாங்கிப் படிப்பதோடு, அதில் உள்ள செய்திகளை வெளியில் பரப்பவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். அதைச் சுட்டிக்காட்டவேண்டும் என்பதுதான் என்னுடைய உரையின் நோக்கம்.

பார்ப்பனர்களுடைய  உள்நோக்கம்!

அந்தத் தகவல்கள், செய்திகளின் விளைவுகள் எப்படி இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். எந்த அளவிற்குப் பார்ப்பனர்கள் சனாதனத்திற்கு முட்டுக்கொடுக்கவேண்டும்; ஜாதி ஒழிப்பை முடிந்த அளவிற்கு எதிர்க்கவேண்டும் என்ற அளவிற்கு வேகமாக வந்துவிட்டாலும், அடுத்த கட்டத்திற்கு அவர்கள் எப்படி போகி றார்கள் என்றால், பெரியாருக்கும், திராவிடர் கழகத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் அந்தப் பெருமை வந்துவிடக்கூடாது என்பதுதான் அவர்களுடைய உள்நோக்கம்.

யாருக்கு வேண்டுமானாலும் அந்தப் பெருமை போகட்டும்; இன்னுங்கேட்டால், தனிப்பட்ட முறையில் அவர்கள் வெறுக்கக் கூடியவர்களுக்கு வந்தாலும் பர வாயில்லை. அவசியத்தை முன்னிட்டு, சந்தர்ப்பவாதத் தில், வைக்கம் போராட்டத்தில் காந்தியார்தான் எல்லாம் செய்தார் என்று சொன்னார்கள்.

அதற்கு என்ன காரணம் என்பதைப்பற்றி நேற்றே உங்களுக்குச் சொன்னேன். யார் யார் எதிர்த்தார்கள்? எவ்வளவு விஷமப் பிரச்சாரம் செய்தார்கள்? என்பதையும் சொன்னேன்.

திராவிடர் கழகம் திட்டம் வகுத்துக் கொடுத்தது!

பெரியார் நூற்றாண்டை நாம் கொண்டாடும்பொழுது, எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது,  என்னென்ன செய்யவேண்டும் என்று உங்களுடைய கருத்தை சொல்லுங்கள் என்று அவர் சொன்னபொழுது, ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தோம்.

வைக்கத்தில் ஒரு பெரிய அளவிற்கு நினைவுச் சின்னம் அமைக்கவேண்டும்; எழுத்துச் சீர்திருத்தத்திலிருந்து பல கருத்துகளைச் சொன்னோம்.

அந்தப் பணிகள் செயல்திட்டமாக நடைபெற்றன. வைக்கத்தில் சிலையை வைத்தார்கள். 

பிறகு ஜெயலலிதா முதலமைச்சராக வந்தார். அந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு அவருக்கு எண்ணம் இல்லை.

சோ போன்றவர்கள் அந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு திட்டம் வகுத்தார்கள்

எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுதே, பார்ப்பனர்கள் திட்டம், குறிப்பாக சோ போன்றவர்கள் அந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு திட்டம் வகுத்தார்கள்.

சிலர் புரியாமல், பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள், மாறிவிட்டார்கள் என்று நம்மாட்களே சொல்வார்கள். அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

அன்றைக்கே உடனுக்குடன் பதில் சொன்னோம்!

பழைய ‘விடுதலை' எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்தால், அவ்வப்பொழுது நாங்கள் பதில் சொல்லியிருக்கின்றோம். எதற்குமே நாம் விட்டுக் கொடுப்பதில்லை. உடனுக்குடன் பதிலை அன் றைக்குச் சொன்னது, இன்றைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

‘துக்ளக்'குக்கு பதிலடி!

‘துக்ளக்' இதழ் 15.11.1985 இல் ‘‘வைக்கம் சத்தியாகிரகம் சில உண்மைகள்'' என்ற தலைப்பிட்டு, திராவிட இயக்கத்தைப்பற்றி தவறான, விஷமத்தனமான கருத்து களை, அபத்தமான கருத்துகளை அவர்கள் வெளியிட்ட தற்கு பதில் எழுதினோம்.

அன்றைய பதில் 1985 ஆம் ஆண்டு.‘துக்ளக்' கட்டுரையில்,

‘‘தமிழக அரசும், கேரள அரசும் இணைந்து கேரள மாநிலத்தில் உள்ள வைக்கத்தில் ஈ.வெ.ரா. பெரியாருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப் போகிறார்களாம்! வைக் கத்தில் நடந்த போராட்டத்திற்கு ஈ.வெ.ரா.பெரியார் மட்டுமே காரணம் என்பதைப்போல, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நீண்ட நெடுங்காலமாகவே ஒரு சித்திரத்தைத் தீட்டி வருகிறார்கள்.

அப்போது நடந்த போராட்டத்தின் சரித்திரப் பின்ன ணியை அறிந்தவர்கள் சில உண்மைகளை மறந்திருக்க மாட்டார்கள். வைக்கம் போராட்டம் நடந்தபொழுது, பெரியார் ஈ.வெ.ரா. அப்போதைய சென்னை ராஜதானி யில் காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராக இருந்தார்.

வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ரா. மட்டுமின்றி, பல மாநிலத் தலைவர்களும் கலந்துகொண்டனர்'' என்று எழுதியது.

வேறு எந்த மாநிலத் தலைவரும் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை!

அய்யாவைத் தவிர எந்த மாநிலத் தலைவர் கலந்துகொண்டார் என்று அவர்கள் சொல்லட்டும். இன்னுங்கேட்டால், தெளிவான வரலாறு இருக்கிறது; வேறு எந்த மாநிலத் தலைவரும் வைக்கம் போராட் டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இன்னுங்கேட்டால், தமிழ்நாட்டிலிருந்து இராஜ கோபாலாச்சாரியாரும், மற்றவர்களும் அங்கே போன நேரத்தில், ஜார்ஜ் ஜோசப் அவர்கள், ‘‘நீங்களும் கலந்துகொள்ளுங்கள்'' என்று கேட்கிறார்.

‘‘நான் கலந்துகொள்ள முடியாது’’ என்றார் இராஜகோபாலாச்சாரியார்!

‘‘நான் கலந்துகொள்ள முடியாது'' என்று இராஜ கோபாலாச்சாரியார் மறுத்ததோடு மட்டுமல்லாமல், பெரியார் கலந்துகொள்ளக் கூடாது என்றும் பெரியாரிடம் சொல்கிறார்.

இவ்வளவும், பழ.அதியமான் அவர்கள் எழுதிய ஆய்வு நூலில் ஆதாரத்தோடு இருக்கிறது.

ஆகவே, அவர்களுடைய எண்ணம் என்ன என்பதைப்பற்றி தயவு செய்து நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.

அன்றைக்குத்தான் அந்த நிலை என்று மட்டும் நீங்கள் நினைக்கக் கூடாது.

பார்ப்பனர்களின் முன்னுக்குப்பின் முரணான கருத்து!

இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திலிருந்து, குருமூர்த்தியிலிருந்து, மற்றவர்களி லிருந்து எல்லா பார்ப்பனர்களும் வைக்கம் போராட் டத்திற்கும், பெரியாருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டனர்.

அதற்கடுத்து மறைக்க முடியவில்லை. மறைக்க முடியவில்லை என்றவுடன், மிகவும் சாமர்த்தியமாக, ‘‘பெரியாரும் கலந்துகொண்டார்'' என்றனர். இன்னும் சிலர், ‘‘பெரியார் கடைசி கட்டத்தில் கலந்துகொண்டார்'' என்றனர். இன்னும் சில பேர், ‘‘பெரியார், போனார், வந்துவிட்டார'' என்றனர். அதற்கடுத்ததாக மூன்று நாள்கள்தான் அங்கே இருந்தார் என்றனர் சிலர்.

வெள்ளைக்கார அதிகாரிகள் பதிவு செய்திருக்கிறார்கள்!

தந்தை பெரியார் அவர்களுடைய பங்களிப்பு என்ன என்பதை கேரளத்துக்காரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, வெள்ளைக்காரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். வெள்ளைக்கார அதிகாரிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒன்றை நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டு இருக் கிறேன். பெரியாருக்கு போராட்டம் நடத்துமாறு அழைத் தார்கள்; தந்தி கொடுத்தார்கள் என்றெல்லாம் இருந் தாலும், காந்தியாருடைய பங்களிப்புதான் வைக்கம் போராட்டத்தில் மிகவும் முக்கியமானது என்று ‘துக்ளக்' கட்டுரையில் எழுதினார்கள்.

இன்னுங்கேட்டால், அந்தப் போராட்டத்தை, மாநிலப் போராட்டமாக சுருக்கவேண்டும் என்று காந்தியார் நினைத்தார். மற்ற மாநிலத்தவர்கள் அங்கே வரக்கூடாது; வெளி மாநிலத்திலிருந்து உதவிகள் வரக்கூடாது என்றெல்லாம் சொன்னார்.

வைக்கம் போராட்டத்தில் கடைசிவரை  பெரியார் இருந்தாரா? என்று கேட்டனர்

வைக்கம் போராட்டத்திற்குப் பெரியார் இரண்டு நாள்கள்தான் இருந்தார்; திரும்ப ஈரோடுக்குச் சென்றார் அல்லவா! வைக்கம் போராட்டத்தில் கடைசிவரை பெரியார் இருந்தாரா? என்று கேட்டனர். 

எவ்வளவு சாமர்த்தியமான, விஷமத்தனமான கருத்தைப் பரப்புகிறார்கள் பாருங்கள்.

வைக்கம் போராட்டத்திற்கும், பெரியாருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? போனார், வந்தார் அவ்வளவுதானே தவிர, வேறொன்றும் இல்லை என்றார்கள்.

மன்னர் பத்மநாபன்

இவர்கள் சொல்வதில் உண்மை இருந்தால், எதற்காக வைக்கம் போராட்ட வெற்றி விழாக் கூட்டத்திற்குத் தந்தை பெரியாரையும், அன்னை நாகம்மையாரையும் அழைத்தார்கள்? மன்னர் பத்மநாபன் போன்றவர்கள் சொல்கிறார்கள், ‘‘நாகம்மையார் எங்களுக்குத் தாய் போன்றவர்; அந்த அம்மையார் போன்று யாரும் போராடி இருக்க முடியாது'' என்று கூறியுள்ளனர். நாயர் சர்வீஸ் சொசைட்டிக்கு அவர்தான் தலைவர். இன்னுங்கேட்டால், அவர் உயர்ந்த ஜாதி.

காந்தியார் என்ன சொன்னார்? மற்றவர்கள் யாரும் வைக்கம் போகக்கூடாது என்றதால், மற்ற மாநிலத்த வர்கள் அங்கு வருவதற்கே தயாராக இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சோவினுடைய கருத்து எவ்வளவு அபத்தமான கருத்து என்பதற்கு, காந்தி யாருடைய வாக்குமூலமே போதுமானதாகும்.

கே.பி.கேசவமேனன் எழுதிய புத்தகத்தில்...

அதற்கடுத்து நண்பர்களே, வைக்கம் போராட்டத்தில் கடைசிவரை பெரியார் இல்லை என்று சொல்கிறார்களே, கே.பி.கேசவமேனன் அவர்கள், எழுதிய புத்தகத்தில், கண்ணீர் வருவதுபோன்று பெரியாரைப்பற்றி எழுதி யிருக்கிறார். ‘‘கை விலங்கு போட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் வேறொரு மாநிலத்தைச் சார்ந்தவர். இதனால் அவருக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. ஆனால், அவர் நமக்காக இங்கே போராட வந்திருக்கிறார்; அதுபோன்ற உணர்வு இங்கே உள்ள நமக்கு வரவேண்டாமா?'' என்று உணர்ச்சிப் பூர்வமாக அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

6 மாத சிறைத் தண்டனை முடிந்து அய்யா அவர்கள் மீண்டும் போராட வருகிறார். உங்களுக்கெல்லாம் தெரியும், சத்ரு சங்கார யாகம் நடத்தி, அந்தவேளையில் மன்னர் இறந்துவிடுகிறார். பெரியாரை விடுதலை செய்கிறார்கள். ஒரு வார இடைவெளியில், ஈரோட்டிற்கு வருகிறார். மறுபடியும் வைக்கத்திற்கு வந்து போராடு வதற்கு அழைக்கிறார்கள். சி.பி.ராமசாமி அய்யர், இங்கே லா மெம்பர். அங்கே ராகவையா.

பெரியார்மீது தேசத் துரோக வழக்குத் தொடுத்தனர்!

மறுபடியும் வைக்கத்திற்குப் போராட வந்துவிட்டால், தொடர்ந்து நடத்துவார். தொடர்ந்து தொல்லை கொடுப்பார்; ஏனென்றால், அதில் மிகவும் உறுதியானவர். ஆகவே, என்ன செய்யவேண்டும் என்று யோசித்து, ஈரோட்டில் இறங்குவதற்குள், அதற்கு முன் அவர் எதிர்த்துப் பேசியதற்காக என்று வழக்குப் போட்டு 124-ஏ, செடியூசன் - தேசத் துரோகக் குற்றம் - மிகப்பெரிய அளவிற்கு தண்டனைக்குரியது.

அந்த வழக்கிற்காக ஈரோட்டில் கைது செய்தார்கள். கைது செய்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.

அன்றைய ஆட்சி லா மெம்பர் யார் என்றால், சி.பி.ராமசாமி அய்யர்.

வெள்ளைக்கார அரசாங்கத்தை எதிர்த்துப் பேசிய தால், 124-ஏ பிரிவில் பெரியாரை கைது செய்தார்கள்.

அன்னை நாகம்மையாரின் அறிக்கை!

‘‘பெரியாரின் கைதை அடுத்து, நாகம்மையார் வெளியிட்ட அறிக்கையில், வைக்கத்திற்கு தொண்டர்களையும், தலைவர்களையும் அழைத்தார்.

இந்தியாவில், பொதுவாழ்க்கையில், அதுவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, யாராவது இப்படி ஒரு தாயை, இப்படி ஒரு வாழ்க்கைத் துணைவியரை, லட்சியத்திற்கு ஒத்தவரை பார்க்க முடியுமா? என்று எண்ணிப் பாருங்கள்.

நாகம்மையார் எழுதுகிறார்:

‘‘என் கணவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த மாதம் முதல் தேதி திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலை யானார். இன்று காலை 10 மணிக்கு (11.9.1924) மறுபடியும் இராஜத் துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப் பாட்டிருக்கின்றார். இரண்டு வருஷத்திற்குக் குறை வில்லாத காலம் தண்டனையாகக் கிடைக்கக் கூடிய பாக்கியம் தமக்குக் கிடைத்திருப்பதாய்ச் சொல்லி என்னிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுவிட்டார்.

                                                                                                                            (தொடரும்)


No comments:

Post a Comment