இந்தியாவின் பிரச்சினைகளை மவுனத்தால் தீர்த்துவிட முடியாது சோனியா காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 15, 2023

இந்தியாவின் பிரச்சினைகளை மவுனத்தால் தீர்த்துவிட முடியாது சோனியா காந்தி

இந்தியாவின் இன்றைய சூழ்நிலையை புரிந்து கொள்வது என்று வரும்போது, பிரதமர் நரேந்திர  மோடியின் செயல்பாடுகள் அவரது பேச்சுக்களை விட உரக்க ஒலிக்கின்றன என்பதை இந்திய மக்கள் இப்போது  அறிந்து  கொண்டார்கள். எதிர்க்கட்சிகள் மீது தனது கோபத்தைக் காட்டாமல் இருக்கும் போதும், இன்றைய  கேடுகளுக்கு மேனாள்  தலைவர்களை  குற்றம்  சாட்டாமல் இருக்கும்போதும், நம்மை வருத்தும் மிகமிக முக்கியமான பிரச்சினைகளை ஒன்று அலட்சியப்படுத்தி ஒதுக்கித் தள்ளிவிடுகிறார் அல்லது இந்தகைய பிரச்சினைகளை மக்களின்  கவனத்தில் இருந்து  திசை திருப்புவதற்காக சொற் சிலம்பம் ஆடுகிறார். மறுபக்கம்  அவரது  செயல் பாடுகள் அரசின்  உண்மையான நோக்கங்களை  அதிக அளவில் கற்பனை செய்து பார்க்க இயலாதவை களாக இருக்கின்றன.

ஜனநாயகத் தூண்கள் 

மீதான தாக்குதல்

கடந்த சில மாதங்களாக, பிரதமரும் அவரது அரசும், இந்திய ஜனநாயகத்தின் மூன்று  தூண்களான நாடாளுமன்றம், சட்டமன்றம், நிருவாகத்  துறை  மற்றும் நீதித்துறை ஆகியவற்றை  நன்கு  திட்டமிட்டு  ஓர் ஒழுங்குடன் சீர்குலைத்து வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக் கிறோம். ஜனநாயகம்  பற்றியும் மற்றும்  ஜனநாயக  நெறிமுறைப்படி  தங்கள்  செயல்பாட்டுக்கு  பொறுப்பேற்று பதில்  கூறுவது பற்றியும்  அவர்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த வெறுப்பை எடுத்துக் காட்டுவதாக அவர்களது  செயல்பாடுகள் உள்ளன. கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது, நாடாளுமன்றத்தை செயல் படவிடாமல் இருப்பது  என்ற உத்திகளை  அரசு  கடைப்பிடித்ததையும், வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு, சமூகப்பிரிவினைகள் போன்ற நாடு மற்றும் மக்களின் தீவிரமான பிரச் சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பாமல் தடுத் ததையும்,  அரசின் ஆண்டு வரவுசெலவு நிதிநிலை அறிக்கை மற்றும்  இதர முக்கியமான  பிரச்சினைகளில் ஒன் றான  அதானி ஊழல் விவகாரத்தைப் பேசுவதை தடுத்ததையும் நாம் கண்டோம். எதிர்க்கட்சிகளின் உறுதியான நிலைப்பாட்டை எதிர்கொள்ள வேண்டி யிருந்த  நரேந்திரமோடி  அரசு, நாடாளுமன்ற பேச்சுகளை  அவைக் குறிப்பில் இருந்து  நீக்குவது, விவாதத்தைத் தடுப்பது, நாடாளுமன்ற உறுப்பினர் களைத் தாக்குவது மற்றும் இறுதியாக மின்னல் வேகத்தில் நாடாளுமன்ற  காங்கிரஸ் உறுப்பினரை தகுதி நீக்கம் செய்தது போன்ற இதற்கு முன்னர் எப்போதுமே நடைபெற்றிராத நடவடிக்கைகளை  மேற்கொண்டது.  அதன் விளைவாக 45 லட்சம் கோடி ரூபாய்  வரவு  செலவு  திட்ட நிதிநிலை அறிக்கை எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப் பட்டது. தனது தொகுதியில் புதிய திட்டங்களைத் துவக்கி வைப்பதில் மும்முரமாக பிரதமர் இருந்தபோது மக்களவையில் நிதிநிலை  மசோதா அவசரம் அவசரமாக நிறை வேற்றப்பட்டது.

ஒன்றிய  புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை நரேந்திர  மோடி அரசு தவறாகப் பயன்படுத்தி வருவது மக்கள்  அனைவரும் மிகமிக  நன்றாக அறிந்து  இருக்கும் செய்திதான். இவற்றின் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 95 சதவிகித  வழக்குகள் எதிர்க்கட்சிகள்மீது பதிவு  செய்யப்பட் டவைதான். ஆனால் கட்சி மாறி பா.ஜ.கட்சியில் இணைந்தவர்கள் மீது பதிவு  செய்யப்பட்ட வழக்குகள் மாயமாக மறைந்து போயின. தேசிய  பாதுகாப்புக்கான  சட்டங்கள் பத்திரிகையாளர்கள், சமூக நலத் தொண்டர்கள்,  மற்றும்  புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் ஆகி யோருக்கு  எதிராக  தவறாகப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. பிரதமரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வியாபாரிகளுக்கு  எதிரான நிதிநிலை மோசடி குற்றச் சாட்டுகள் அலட்சியப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படும் போதே, சத்தியம், நியாயம், நேர்மை பற்றியெல்லாம் மிகப் பிரமாதமான அறிக்கைகளை பிரதமர் வெளி யிடுகிறார். கைது செய்யப்படுவதைத்  தவிர்ப்பதற்காக நாட்டை  விட்டோடிய மெஹல் சோக்சி மீதான   பன்னாட்டு காவல்துறையின் அறிக்கை  திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  பில்கிஸ்  பானு  பாலியல் பலாத்கார குற்ற  வழக்கில் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் இருந்த வர்கள் விடுதலை செய்யப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களுக்கு  பா.ஜ.க. தலைவர்கள்  கலந்து கொள்ளும் கூட்டங்களின் மேடைகளில் இடமும் அளிக்கப்பட்டு வருகிறது.

சில  மேனாள் உயர்நீதித் துறை நீதிபதிகளை தேசவிரோதிகள் என்று ஒன்றிய சட்ட  அமைச்சர் கூறியதோடு,  அவர்கள் அதற்கான விலையைக்  கொடுக்க வேண்டும்  என்றும் எச்சரித்துள்ளதன் மூலம், நீதித் துறையின் நம்பகத் தன்மையை சீரழிப்பதற்கான நன்கு திட்டமிடப்பட்ட  முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களை தவறாக வழி நடத்துவதற்கும், அவர் களது உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதற்கும், அதன்  மூலம் தற்போது பணி யாற்றிக் கொண்டிருக்கும் நீதிபதிகளை  அச்சுறுத்து வதற்கும்  ஆனவையே   இவை எல்லாம் என்பதால் தான் இந்தப்  பாதை வேண்டுமென்றே  தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலும் அச்சுறுத்தலும்

பொருளாதார பலம் பெற்ற  தனது நண்பர்களுடன் இணைந்து  அரசு  மேற்கொண்ட அச்சுறுத்தலின் மூலம், ஊடகத்தின் சுதந்திரம் வெகுகாலத்துக்கு முன்பே சமரசம் செய்து  கொள்ளப்பட்டு விட்டது. செய்தி  ஒளிபரப்பு  நிறுவனங்களின்  மாலை நேர விவாதங்கள், அரசை கேள்வி கேட்பவர்களை  வாய் மூடச்  செய்வதற்காக  போடப்படும் கூச்சலாகவே ஆகிவிட்டது.  இதனால் மட்டும்  மனநிறைவடையாமல், அரசு விரும்பாத செய்திகளை போலி செய்திகள்  என்று  முத்திரை குத்தி, அந்நிறுவனம் பெற்றுள்ள செய்திகளுக்கான சட்டப்படியான  பாதுகாப்பை,  தகவல் தொழில்  நுட்பச் சட்டத்தைத் திருத்தியதன் மூலம்,  மோடி அரசு  நீக்கி விட்டது. 

அரசை விமர்சனம் செய்வதை  குற்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கான  அடிப் படையாக அரசு பயன்படுத்திக் கொள்ளக்  கூடாது  என்று  அண்மையில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதனை  அரசு  ஏற்றுக் கொண்டதா? தங்களின் மாபெரும் தலைவரைப் பற்றிய விமர்சனத்தை வெளியிடும் எந்த  ஒரு மேடை யையும்  துன்புறுத்துவதற்கு  பா.ஜ.கட்சி மற்றும்;  ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின்  வழக் குரைஞர்கள்  தயாராக நிற்கின்றனர்.

பேசாமல் மவுனமாக இருப்பதனால் இந்தியா வின்  பிரச்சினைகள் எதுவும் தீர்ந்து விடப்போவதில்லை. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும்  அரசின் நடவடிக்கைகளைப் பற்றிய  நியாயமான  கேள்விகளுக்கும்  கூட பதில் அளிக்காமல்  பிரதமர் மவுனம்  சாதிக்கிறார்.   தனது  வரவு செலவு திட்ட  அறிக்கையில்,  நாட்டில் நிலவும் மிகப் பெரிய  அளவிலான வேலையில்லா திண்டாட்டம், பண வீக்கம், விலைவாசி உயர்வு ; ஆகிய பிரச்சினைகள் பற்றி, அவை  உண்மை யிலேயே இல்லாதது போலவே,  நிதிஅமைச்சர் எதுவுமே குறிப்பிடவில்லை. பால்,  காய்கறிகள், முட்டைகள், சமையல் எரிவாயு  மற்றும்  சமையல் எண்ணெய்  போன்ற  அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை  வாங்க  முடியாமல் தவித்துக்  கொண்டிருக்கும் கோடிக்  கணக்கான  மக்களுக்கு  அவரது  மவுனம் எந்த  உதவியும் செய்யப் போவதில்லை.  அதே  போல வரலாறு காணாத வேலையில்லாத்  திண்டாட்டத்தால் நாட்டில் நிலவும் பிரச்சினையையும் அது  தீர்த்து  வைக்கப்  போவதில்லை. 2022ஆம் ஆண்டுக்குள்  விவசாயி களின்  வருவாயை  இரண்டு  மடங்காகப் பெருக் குவேன்  என்ற தனது  உறுதிமொழி  பற்றியும் பிரதமர் சவுகரியமாக  மவுனம் சாதிக்கிறார். ஆனால்,  விவசாயிகளின் இடுபொருள் செலவு  அதி கரித்துள்ளதும்,  அவர்கள்  உற்பத்தி செய்யும்  விவ சாயப் பொருள்களுக்கு  நியாயமான  விலை கிடைக் காத நிலையும் இங்கு இப்போதும் நிலவுகிறது.

பா.ஜ.க. மற்றும்  ஆர். எஸ். எஸ்., அமைப்புகளால் உருவாக்கி  தூண்டிவிடப்படும் வெறுப்பும்  வன் முறையும்  நாளுக்கு  நாள் வளர்ந்து  வருவதை  பிரதமர்  அலட்சியப் படுத்தி  ஒதுக்கித் தள்ளுகிறார். குற்றவாளிகளை  நீதிமன்றத்துக்குக் கொண்டு செல் லாதது ஒரு புறம் இருக்கட்டும். அமைதி நல்லிணக் கத்தை வலியுறுத்தி ஒரு முறைகூட அவர் வேண்டு கோள் விடுக்கவில்லை.

மத விழாக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற் கானவை என்பதை மறந்து விட்டு, மற்றவர்களை  அவர்களின் மதம், உணவு,  ஜாதி, பாலினம் அல்லது மொழி ஆகியவற்றின் அடிப் படையில், பாகுபாடு காட்டுவதற்கும்,  அச்சுறுத்துவ தற்குமான நிகழ்ச்சி களாகக் கருதப்படுவதாகவே தெரிகிறது.

நாட்டின் எல்லைப் பிரச்சினையில், சீனாவின் ஊடுருவலை பிரதமர் மறுத்துள்ளார். அது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.  சீனாவைப் பொறுத்தவரை, ஒரு தோல்வி மனப்பான்மைக்கு அயல்துறை அமைச்சர் வந்துவிட்ட நிலையில்,   சீனாவுக்கு  தனது நிலைப் பாட்டை  மாற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு துணிவு வந்துவிட்டது.

வரும் நாட்கள் மிகமிக  முக்கியமானவை

பிரதமர் என்னதான் முயற்சி செய்தாலும், இந்திய மக்களை வாய்பேசாத  ஊமைகளாக  ஆக்கிவிட இயலாது.  ஆக்கப்பட அனுமதிக்கவும் மாட்டார்கள். அடுத்த  சில மாதங்கள் நமது  ஜனநாயகத்திற்கு சோதனை மிகுந்த மிகமிக முக்கியமானவையாகும். நமது நாடு  குறுக்குச்  சாலையில் இப்போது  நின்று கொண்டிருக்கிறது. தனக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும்  தவறாகப் பயன்படுத்தி, பல முக்கியமான  மாநிலங்களில் நடைபெற  உள்ள  சட்டமன்றத்  தேர்தலில் வெற்றி பெறுவதற்கு  பா.ஜ.க. கடுமையான  முயற்சிகளை மேற்கொள்ளும். 

பாரத் ஜோடோ யாத்ராவில் செய்ததைப் போல தனது  செய்தியை  மக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும்  காங் கிரஸ் கட்சி  மேற்கொள்வதுடன், அரசமைப்பு  சட்டத் தையும் அதன் மாண்புகளையும் பாதுகாப் பதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகளுடன்  கை கோர்த்துப் போராடும். 

நமது  போராட்டமே மக்களின் குரலை பாது காப்பதுதான். பிரதான எதிர்க் கட்சியாக  காங்கிரஸ் கட்சி தனது இந்த  புனிதமான  கடமையை நன்கு உணர்ந்துள்ளது.  அதனை நிறைவேற்றுவதற்கு  ஒத்த கருத்துடைய  அனைத்து கட்சிகளுடனும் இணைந்து  செயல்பட காங்கிரஸ் தயாராக உள்ளது.

நன்றி : 'தி  இந்து' 11-04-2023

தமிழில் : த.க.பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment