கருநாடகா மாநிலத்தில் நடைப்பயணம் தொடங்குகிறார் ராகுல் காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 3, 2023

கருநாடகா மாநிலத்தில் நடைப்பயணம் தொடங்குகிறார் ராகுல் காந்தி

புதுடில்லி, ஏப். 3-  சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் கொள்ளவிருக்கும் கருநாடகாவில் 'ஜெய் பாரத்' பேரணியை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. வரும் 9ஆம் தேதி கருநாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இந்தப் பேரணியை மேற்கொள்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாரில் ராகுல் காந்தி 'ஜெய் பாரத்' பேரணி மேற்கொள்கிறார். தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி ராகுல் காந்தி வயநாட்டில் பிரச்சாரம் செய்கிறார். அவர் மக்களின் குரல். அவரை ஒருபோதும் மவுனமடையச் செய்ய முடியாது. அவரது குரல் இன்னும் சத்தமாக, வலிமையாக ஒலிக்கும்" என்று கூறியுள்ளார். மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்ட பின்னர் அவர் கலந்து கொள்ளும் முதல் பேரணி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் பேரணி மீது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

2024இல் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கருநாடக சட்டப்பேரவைத் தேர்தல் பாஜகவுக்கு அதன் பலத்தை நிரூபிக்கவும், காங்கிரசுக்கு அதன் வலிமையை பறைசாற்றவும் முக்கியமான களமாக உள்ளது. இதற்கிடையே கருநாடக தேர்தலில் மக்கள் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளுக்கு விடைகொடுத்துவிட்டு தங்களையே ஆதரிப்பர் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.224 தொகுதிகளைக் கொண்ட கருநாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கருநாடகாவில் கடந்த மே 2018இல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அங்கு தொங்கு சட்டப்பேரவை உருவானது.

பாஜக தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. காங்கிரஸ் 80, ஜேடிஎஸ் 37 சீட்கள் வைத்திருந்தன. காங்கிரஸ் அதிக சீட்கள் வைத்திருந்தாலும் கூட மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் குமாரசாமியை முதலமைச்சராக்கியது. ஆனால் 2019 ஜூலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவலால் அந்த ஆட்சி கலைந்தது. பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா முதலமைச்சரானார். ஆனால், அவர் ஜூலை 2021இல் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் பசவராஜ் பொம்மை முதலமைச்சரானார். தற்போது கருநாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தாலும்கூட அது மீண்டும் அதனைத் தக்கவைக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை "வரும் தேர்தலில் கருநாடகாவில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment