ஊழலை ஒழிப்போம் என்ற பா.ஜ.க.வின் லட்சணம் பாரீர்! "ஊழலால் கருநாடக மாநில வளர்ச்சியில் பின்னடைவு!" - நீதிபதி பி.எஸ்.பாட்டீல் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 23, 2023

ஊழலை ஒழிப்போம் என்ற பா.ஜ.க.வின் லட்சணம் பாரீர்! "ஊழலால் கருநாடக மாநில வளர்ச்சியில் பின்னடைவு!" - நீதிபதி பி.எஸ்.பாட்டீல் கருத்து

பெங்களூரு, ஏப். 23- ஊழல் புற்று நோய்க்கு நிகரானது. நிர்வாகத் திறனை அரித்துவிடும் என்று மக்கள் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். பாட்டீல் தெரிவித்துள்ளார். 

ஊழல் காரணமாக கருநாடக மாநிலம் அது அடைந் திருக்க வேண்டிய வளர்ச்சியை அடைய வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கருநாடகத் தலைநகர் பெங் களூருவில் நடந்த ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

 "புற்றுநோய்க்கு நிகரானது ஊழல். நிர்வாகத் திறனை அரித்துவிடும். ஊழல் காரணமா கவே கருநாடக மாநிலம், அது அடைந்திருக்க வேண்டிய வளர்ச் சியை  அடையவில்லை. கருநாடகா வில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே இதே நிலைதான் நீடிக்கிறது. 

ஊழல் மலிந்துவிட்டதால்  நேர்மையான அதிகாரிகள் மனம் நொந்து போயுள்ளனர். உண்மை யில் ஊழல் ஒழிப்பை அமைப்பு ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். அரசு அமைப்புகளில் ஊழலைக் களைவதை கையில் எடுக்கவேண்டும்.

 அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை லோக் ஆயுக்தா நீதிமன்றமே நிறைய முறை தாமாக முன்வந்து விசாரணைகளை நடத்தியுள்ளது. அரசு ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக் கில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மடல் விருபக்ஷப்பா மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். அவருக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால், அவர் விடுதலையானபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிக மோசமான முன்னுதாரணம். இதுதான் ஊழலை ஊக்குவிக்கும்.

நீதிமன்றங்கள் தன் கடமையைச் செய்து கொண்டு தான் இருக்கின்றன. நாங்கள் மக்களுக்காக காலநேரம் பார்க்காமல் பணியாற்றத் தயாராக இருக்கிறோம். நீதியை நிலைநாட்ட நானும், எனது ஊழியர்களும் நிறைய தருணங்களில் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றியுள்ளோம். எனவே, ஓர் அரசு அதிகாரி வேலையில் காட்டும் அலட்சியம், கடமையைச் செய்வதில் காலம் தாழ்த்துதல், வேறேதும் ஆதாயம் எதிர்பார்த்தல், மருத்துவமனைகளின் அவலம் என எதுவாக இருந்தாலும் மக்கள் அதைப் பற்றி புகார் கூற முன்வர வேண்டும்.

முதலமைச்சராகவே இருந்தாலும்கூட சட்டத்திலிருந்து தப்பிக்க இயலாது!

மருத்துவமனையின் அவலங்கள் குறித்த புகார்கள் மீது நாங்கள் நேரடியாக கள ஆய்வு செய்து பல்வேறு குறைபாடுகளையும் கண்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இப்போது அவற்றில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றம் தவறு செய்வது யாராக இருந்தாலும் விட்டு வைக்காது. இப்படிச்  சொல்வதன் மூலம் நான் அரசியல்வாதிகளை அச்சுறுத்தவில்லை. ஆனால், ஊழலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அது முதலமைச்சராகவே இருந்தாலும்கூட சட்டத்திலிருந்து தப்பிக்க இயலாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.

ஊழல் ஒரு புற்றுநோய். ஆனால், அதற்காக நாம் அதை எதிர்த்துப் போராடாமல் இருந்துவிட முடியாது. பொதுமக்கள் ஊழலுக்கு எதிராக வெகுண்டெழ வேண்டும். ஊழல்வாதிகளை அச்சுறுத்த வேண்டும். சமூக மேம்பாட்டுக்காக போராடுபவர்களுக்கு துணை நிற்க வேண்டும்"" என்று மக்கள் நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.பாட்டீல் பேசினார்.

No comments:

Post a Comment