வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 17, 2023

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

 ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் வைக்கம் போராட்டமும், சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் பிரிக்கப்பட முடியாதவை!

மனிதநேயத்தை- மனித சமத்துவத்தைக் காப்பாற்றுவதற்காகவே இந்தப் போராட்டங்கள்

சென்னை, ஏப்.17  ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் வைக்கம் போராட்டமும், சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் பிரிக்கப்பட முடியாதவை; மனிதத்தைக் காப்பாற்றவேண்டும்; மனிதநேயத்தைக் காப்பாற்ற வேண்டும்; மனித சமத்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா 

ஏன்? எதற்காக?

கடந்த 10.4.2023 ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?’’ என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவில் முதல் நாள் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

10 ஆண்டுகளாக ஆதாரங்களைத் தேடித் தேடி எழுதியுள்ளார் தோழர் பழ.அதியமான்

இதுவரையில் பல செய்திகளை, பல நூல்களை எடுத்து ஆய்வு செய்தாலும்கூட, தமிழ்நாட்டிலிருந்து தொடர்ந்து வைக்கம் போராட்டத்தைப்பற்றி ஆதாரப் பூர்வமாக பல்வேறு தேசிய நாளிதழ்கள் என்று சொல்லக்கூடிய நாளிதழ்கள், கேரளாவினுடைய ஆவணக் காப்பகங்கள், எங்கெங்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதோ, அவற்றையெல்லாம் 10 ஆண்டுகளாகத் தேடித் தேடி தோழர் பழ.அதியமான் அவர்கள் ஆய்வு செய்து இந்த நூலை எழுதியிருக்கிறார்.

அதேபோன்று, சேரன்மாதேவி குருகுலப் போராட்ட மாக இருந்தாலும், அவருடைய ஆய்வு என்பது மிகச் சிறப்பானது. வரதராஜூலு நாயுடு அவர்களின் பங்களிப்பு, தந்தை பெரியாருடைய பங்களிப்புகுறித்து வெளியிட்டது மிகச் சிறந்த ஒன்று. அதற்காகவும் அவரை இந்த மேடையில் பாராட்டியிருக்கின்றோம். பெரியார் திடலிலும் அந்த நூலைப்பற்றி எடுத்துக்காட்டியிருக்கின்றோம்.

ஜாதி ஒழிப்புப் போராட்டங்களில் 

பிரிக்கப்பட முடியாத போராட்டங்கள்!

எனவே, முதலில் அறிவிக்கப்பட்டு இருப்பது, சேரன் மாதேவி குருகுலப் போராட்டமும் நூற்றாண்டு காண்கிறது.

ஜாதி ஒழிப்பிலே வைக்கம் போராட்டமும், சேரன் மாதேவி குருகுலப் போராட்டமும் பிரிக்கப்பட முடியாதவை.

அதற்கு முன்பு மிக முக்கியமான ஒரு செய்தியை சொல்லவேண்டும்; இங்கே பதிவு செய்யவேண்டிய விஷயம் அது.

கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் ராஜ்ஜியப் பகுதிகளில், மலையாளப் பகுதிகளில் தோள்சீலைப் போராட்டம்  நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது; அவ்விழாவில் நம்முடைய முதலமைச்சரும், கேரள மாநில முதலமைச்சரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

ஏனென்றால், முன்பு நாகர்கோவில் திருவிதாங்கூரில் இணைந்திருந்தது.

சுயமரியாதை இயக்கம் ஏன் தோன்றியது?

அவ்விழாவில், தோள்சீலைப் போராட்டத்தைப்பற்றி விரிவாகப் பேசி,  பெண்களுடைய உரிமை வேண்டும்; சுயமரியாதை இயக்கம் அதற்காகத்தான் தோன்றியது என்றெல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பேசினார்.

மலையாளத்தில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்

அதற்கடுத்த ஒரு மாத இடைவெளியில், கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்க விழா நடை பெற்றபொழுது, நம்முடைய நூலாசிரியர் பழ.அதியமான் அவர்களையும் அழைத்துப் பாராட்டினார். மலை யாளத்தில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் நாம் அன்போடு வரவேற்கின்றோம்.

வைக்கம் போராட்டத்திற்கு முன்பு நடைபெற்றது தோள்சீலைப் போராட்டமாகும். இவை எல்லாவற் றையும்விட, மனித உரிமைப் போராட்டம்.

‘ஹியூமன் ரைட்ஸ்' என்று சொல்லக்கூடிய கருத்தியல் இருக்கிறதே, அந்தக் கருத்தியலுக்கு வடிவம் கொடுத் தவை மேற்கண்ட போராட்டங்கள்.

மனித சமத்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டங்கள்!

அந்த வடிவம் கொடுத்த நிலையில், மனிதத்தைக் காப்பாற்றவேண்டும்; மனிதநேயத்தைக் காப்பாற்ற வேண்டும்; மனித சமத்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவே நண்பர்களே, அந்தப் போராட்டங்கள் உருவாயின.

தோள்சீலைப் போராட்டத்தை நினைத்தால், நம்மு டைய ரத்தம் எல்லாம் கொந்தளிக்கிறது. ஒரு பெண் துணிந்து செய்த செயலை அப்படியே சனாதனவாதிகள் மறைத்துவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள்; வரலாற்றிலிருந்தே எடுத்துவிடவேண்டும் என்று சொல்கிறார்கள்.

இன்னும் இதுபோன்ற புத்தகங்கள் வரவில்லை; வராமல் தடுக்கிறார்கள்.

வைக்கம் போராட்டத்தைத் திசை திருப்பினார்கள். ஆனால், இன்று அந்தப் பொய்த் திரைகள் கிழிக்கப்பட்டு வருகின்றன.

உண்மையான வரலாறெல்லாம் வெளியே வரக்கூடாது என்று நினைக்கிறார்கள்

பல இடங்களில் இதுபோன்ற செய்திகள் வெளிவந்தால், நாங்கள் சொல்லுகின்ற மதவெறிக்கு ஆபத்தாக முடியுமே, இளைஞர்கள் எல்லாம் ஹிந்துத்துவா பக்கம் இருக்கமாட்டார்களே, மத வெறிக்குப் பலியாகமாட்டார்களே, விழித்துக் கொள்வார்களே என்பதற்காக இந்த வரலாறெல் லாம் வெளியே வரக்கூடாது என்று நினைக் கிறார்கள்.

நாம் புதைபொருளைக் வெளிக் கொண்டு வருகிறோம்; இருப்பதை புதைகுழிக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இதுதான் சனாதனத்திற்கும், சமதர்மத்திற்கும் போராட்டம்.

இதுதான் மனுதர்மத்திற்கும், மனித தர்மத்திற்கும் போராட்டம்.

அரசியல் போராட்டமல்ல - 

இனப்போராட்டம்தான்!

பெரியார் சொல்லுவார், ‘‘இந்த நாட்டில் இனப் போராட்டம்தான் நடந்திருக்கிறதே தவிர, அரசியல் போராட்டமே என்றைக்குமே நடந்ததில்லை. அரசியல் போராட்டம் என்ற வடிவில், உள்ளே பிரித்துப் பார்த்தால், இனப் போராட்டம்தான் நடக்கிறது'' என்று சொல்வார்.

2017 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில், ஒரு பெரிய நூற்றாண்டு விழாவை நடத்தினார்கள்; ஆனால், இந்த அளவிற்கு பெரிய விளம்பரம் கிடைக்கவில்லை.

நாராயணகுருவினுடைய 

பரிபாலன சபை!

சகோதரர் அய்யப்பன் அவர்கள், எஸ்.என்.டி.பி. யோகம்  என்ற நாராயணகுருவினுடைய பரிபாலன சபையில், மிக முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாத்திகர்.

ஒரு கடவுள், ஒரு ஜாதி என்று சொன்னார் நாராயண குரு. அந்த ஒரு கடவுள் என்பதை ஏற்காமல், ஒரு ஜாதி என்பதை அன்றைக்கே ஏற்றுக்கொண்டிருப்பவர் சகோதரர் அய்யப்பன் அவர்கள்.

அய்யப்பன் பி.ஏ., படித்து, சட்டமன்ற உறுப்பினராக இருந்து, 1940 ஆம் ஆண்டுகளில், தந்தை பெரியாரோடு மிக நெருக்கமாக இருந்தவர். அவர் நடத்திய மலையாள பத்திரிகைக்குப் பெயர் ‘‘சகோதரர்!''

டாக்டர் பல்ப்

அந்தப் பத்திரிகையில் தெளிவாக, சமத்துவத்தை சொன்னார். எப்படி டாக்டர் பல்ப் என்று அவர்கள் மிகப்பெரிய அளவிற்குக் கல்வியை உருவாக்கினாரோ, அதுபோல. இன்னும் பல பேர் வெளியே வரவேண் டியவர்கள், தெரியப்படுத்த வேண்டியவர்கள் இருக் கிறார்கள். நாம்தான் விடாமல் சொன்னோம்.

டாக்டர் பல்ப் நாராயண குரு அவர்களுக்கிடையே கொள்கையளவில் பல பிரச்சினைகள் வந்தாலும், ஈழவர்கள் படிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கி, எப்படி ‘திராவிட மாடல்' ஆட்சி இன்றைக்குப் படி, படி என்று - பனகல் அரசர், டி.எம்.நாயர், தியாகராயர், தந்தை பெரியார், காமராஜர் என்று வரிசையாக அண்ணா, கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை படிப்பு, கல்லூரி என்பதை முக்கியமாகக் கொண்டு, கல்விக் கண்ணை திறந்தார்கள். 

அதேபோன்றுதான் டாக்டர் பல்ப் அவர்கள் ஒரு பெரிய பார்மசிஸ்ட்.

கள்ளிக்கோட்டையைச் சேர்ந்த விஜயராகவன்

இவர், மாணவராக இருந்து ஒரு வேலையைத் தேடிய நேரத்தில் நடந்ததை,  கள்ளிக்கோட்டையைச் சேர்ந்த விஜய ராகவன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய நாடாளு மன்றத்தில் பதிவு செய்த ஒரு செய்தியை உங்களுக்கு நான் சொல்கிறேன்.

சமஸ்தானத்தில் இருக்கக்கூடிய சமஸ்தான அதிபதி யான ராகவய்யா என்ற திவான், டாக்டர் பல்ப் அவர் களை வரச் சொன்னார், அவர் ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர்.

தனக்கு அழைப்பு வந்தவுடன் அவர் சென்றார்.

‘‘ஏன் லண்டனுக்குப் போய் படிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; உங்களுக்கு எதற்காக இடம் கொடுக்க வேண்டும்?'' என்று ராகவய்யா, டாக்டர் பல்ப்பைப் பார்த்துக் கேட்டுவிட்டு,

‘‘நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்கிறேன்; இங்கே அய்ந்து தென்னம்பிள்ளை இருக்கிறது; அதை எடுத்துக்கொண்டு போய் தோட்டத்தில் நட்டு, வளர்த்து, உங்கள் பாரம்பரியமான கள் இறக்கும் தொழிலைச் செய்யுங்கள்'' என்றார்.

உடனடியாக டாக்டர் பல்ப் அவர்கள் எழுந்து வெளியே வந்துவிட்டார். பிறகு, லண்டனுக்குச் சென்று படித்தார்.

படித்து முடித்துத் திரும்பி வந்தார் டாக்டர் பல்ப் அவர்கள், நாராயண குரு இயக்கத்தில் இணைந்து, ஏராளமான பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வருவதற்கு அடித்தளமிட்டார்.

ஆகவே, சமுதாயத்தில் பார்ப்பனர்கள் மனுதர்மத்தை எப்படி கடைப்பிடித்தார்கள் என்பதைப் பாருங்கள். நடக்கக்கூடாது, படிக்கக்கூடாது, அந்தஸ்தோடு இருக்கக்கூடாது; கீழ்ஜாதிப் பெண்கள் மார்பகத்தை மறைக்கக்கூடாது;  கோவில் தெருக்களில் நடக்கக்கூடாது என்ற கொடுமையெல்லாம் இருந்தது.

ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைத் 

தடுத்து விட்டார்கள்!

அதைவிட இன்னொரு வேடிக்கை என்ன வென்றால், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொன்னதைப்போல, படிக்கட்டு ஜாதி முறையை உருவாக்கியது மட்டுமல்ல; அவர்களுக்குள்ளேயே ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைத் தடுத்து விட்டார்கள்.

அதாவது அங்கே பறையர், தீயர், புலையர், ஈழவர் என்று வரிசையாக இருந்ததை, எல்லோ ரையும் சேர்த்தார்கள்.  அவர்ணஸ்தர்கள், வரு ணஸ்தர்கள் என்ற பாகுபாடு இருக்கிறது.

வருணஸ்தர்கள் இல்லாமல், அவர்ணஸ் தர்களுக்குள்ளேயே கூட, பிரிவுபடுத்தினார்கள். பிரிவுக்குள்ளே பிரிவு என்று வைத்தார்கள்.

இப்பொழுது ‘புது டெக்னிக்' என்னவென்றால், ஜாதிப் பெருமைகளை சொல்லிக்கொண்டு, எங்கள் ஜாதி பெரியது; உங்கள் ஜாதி சிறியது என்று பாகுபாட்டை வளர்க்கிறார்கள். அதற்கு இன்னொரு பெயர் ஆங்கி லத்தில் ‘சோசியல் இஞ்ஜினியரிங்' என்று சொல்கிறார்கள்.

ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் இயக்கம்!

ஆகவே, சகோதரர் அய்யப்பன் அவர்கள் தலை மையில் ஒரு பெரிய இயக்கம் நடத்தப்பட்டது. தீயர் களும், புலையர்களும், பறையர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள் என்று.

இந்த இயக்கம் -  போராட்டம் 1917 ஆம் ஆண்டில்! அதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வைக்கம் போராட்டம், கோவில் தெருக்களில் நடப்பதற்காக.

அந்தப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவிற்காக, என்னை முக்கிய விருந்தினராக கோழிக்கோட்டிற்கு அழைத்திருந்தார்கள். அந்த விழாவில் நான் பேசிய உரையை, ஆங்கிலத்தில் புத்தகமாக, அய்யப்பன் அவர்களுடைய படத்தைப் போட்டு வெளியிட்டார்கள்.

சமபந்தி போஜனம் போன்று 

மலையாளத்தில் ‘‘மிஸ்ர போஜனம்''

அவர்கள் மொழியில் சொல்லவேண்டுமானால், நம்மூரில், ‘சமபந்தி போஜனம்'' என்று நடத்துகிறார்களே, அதுபோன்று அன்றைக்கு எல்லோரையும் அமர வைத்து சாப்பிட வைத்தார்கள். அதை ‘‘மிஸ்ர போஜனம்'' என்று மலையாளத்தில் சொல்வார்கள். சகோதரர்கள் உடன் உண்ணல். ‘‘மித்ர பேதம்'' என்றால், சகோதரர் களுக்குள் பேதம்; அதை மலையாளத்தில் ‘‘மிஸ்ர'' என்று உச்சரிக்கிறார்கள்.

1917 ஆம் ஆண்டு மிஸ்ர போஜனம்; அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து வைக்கம் போராட்டம்; அதற்கு முன்பாக தோள்சீலை போராட்டம் என்று வரிசையாக நடந்தன.

இராணியார் வைத்த கேள்வி என்ன? காந்தியார்மூலம் போனபொழுது, ‘‘கோவில் தெருவில் திறந்து விடு வதற்குக்கூட எனக்கு ஆட்சேபனை இல்லை. அடுத்தகட்டமாக கோவிலுக்குள் நுழையவேண்டும் என்று சொல்வார்களே? அதுதான் எங்களுக்குப் பெரிய வருத்தம்'' என்றார்.

அந்த ஆக்கிரமிப்பிலிருந்து எப்படி வெளியில் வருவது? ஆகவே, அவர்களை தெருவில் நடக்க விடக்கூடாது; இதுதான் ஹிந்து தர்மம்.

ஏனென்றால், ஹிந்து மத முறைப்படி நடக்கக்கூடிய ஆட்சி; இராஜா மார்த்தாண்ட வர்மன் ஆட்சியில், எப்படியெல்லாம் ஜாதிக் கொடுமைகள் செய்தார்கள் என்பதற்கு ஒரு பெரிய புத்தகமே, ஆய்வே இருக்கிறது.

‘‘உங்கள் நூலகம்'' என்பதில், ஆய்வாளர் ஆ.சிவசுப் பிரமணியம் அவர்கள், அந்த நூலினை பல குறிப்பு களையெல்லாம் எடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு, விரிவாக எழுதியிருக்கிறார்.

ஜாதியக் கொடுமைகள், ஹிந்து மதம் என்ற பெய ராலே, சனாதன மதத்தை, மனுதர்மத்தை அவர்கள் காப்பாற்றி, அபராதம் விதித்தார்கள்; கடுமையாக நடத்தி னார்கள் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எனவேதான், உடன் உண்ணுவதற்கே அவர்களைப் பிரித்து வைக்கக்கூடிய அளவிற்கு இருந்தார்கள்.

2017 இல் ‘‘மிஸ்ர போஜனம்'' இயக்கத்தின் நூற்றாண்டு விழா

இதிலே, சகோதரர் அய்யப்பன் அவர்கள் முயற்சி எடுத்து நடத்திய ‘‘மிஸ்ர போஜனம்'' விழாவின், நூறாண்டு விழாவை, 2017 ஆம் ஆண்டு நடத்தினார்கள்.

நடைமுறையில் எதார்த்தத்தை ஒட்டி போகக் கூடியவர் தந்தை பெரியார்.

‘‘இப்பொழுதுள்ள பிரச்சினை, கோவில் தெருக்களில் நடக்கவேண்டும் என்பதுதானே தவிர, கோவிலுக்குள் போவது என்று இல்லை. அதை நீங்கள் அனுமதிக்க வேண்டும். ஆனால், எப்பொழுதுமே நாங்கள் கோவிலுக்குள் போகமாட்டோம் என்ற உத்தரவாதத்தைக் கொடுக்க முடியாது'' என்று சொன்னார்.

பழ.அதியமான் அந்தத் தகவல்களையெல்லாம் அவருடைய நூலில் விரிவாக சொல்லியிருக்கிறார். மூன்று வீதிகளைத் திறந்து விட்டார்கள் வைக்கத்தில்.

மண்டல் ஆணைய அறிக்கையில்கூட பதிவாகியிருக்கிறது

அந்த வைக்கத்தினுடைய கொடுமைகள் எப்படி இருந் தன என்பதுபற்றி மண்டல் ஆணைய அறிக் கையில்கூட பதிவாகியிருக்கிறது - இரண்டாவது கட்டத்தில்.

திருவிதாங்கூர் வைக்கத்தில் கோவில் தெருக்களில் நடப்பதற்கு அவ்வளவு பெரிய போராட்டம் - சிறைத் தண்டனை - ஓராண்டுகால போராட்டம். 

ஏழு கட்டமாக இதைப் பிரித்திருக்கிறார் பழ.அதிய மான் அவர்கள்.

(தொடரும்)


No comments:

Post a Comment