நடப்பாண்டில் 50,000 இலவச விவசாய மின் இணைப்பு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 13, 2023

நடப்பாண்டில் 50,000 இலவச விவசாய மின் இணைப்பு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவிப்பு

சென்னை, ஏப். 13- தமிழ்நாட்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று பேரவையில் மின்துறை அமைச்சர் வி,செந்தில்பாலாஜி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (12.4.2023) நடந்தது. இதற்கு பதில் அளித்தும், அறிவிப்புகளை வெளி யிட்டும் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது:

தமிழ்நாட்டில் விளைநிலங்களின் பரப்பை அதிகரித்து விவசாய உற்பத்தியை பெருக்கி, உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் நடப்பு 2023-_2024ஆம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப் படும்.

இவை சாதாரண வரிசை, சுயநிதி திட்டம், சிறப்பு முன்னுரிமை, தத்கால், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம் (தாட்கோ) திட்டங் களின் மூலம் வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் ஏற்கெனவே 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் 2.99 லட்சம் ஏக்கர் பாசன பரப்பளவு அதிகரித்துள்ளது. 1.50 லட்சம் விவசாயி களுக்கு ரூ.333 கோடி மானியம் வழங்கப் பட்டுள்ளது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற முதலமைச்சரின் வைர வரிகளுக்கு ஏற்ப,  மின்சார வாரியம் செயல்படுகிறது. 

234 தொகுதிகளிலும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப் புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியின்போது,10 ஆண்டு களில் 4.10 லட்சம் இலவச விவசாய மின் இணைப் புகள் வழங்கப்படும் என்று அறிவித்து 2.20 லட்சம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. அரசு, தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.

சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக் குடி மாவட்டங்களில் சூரிய ஒளி ஆற்றல் அதிகமாக உள்ளதால் அங்கு அதிக அளவில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவுவதற்கு வசதியாக புதிய 400 கிலோ வோல்ட், 230 கிலோ வோல்ட், 110 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். கோவை, மதுரை, கரூர் மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றப் படும். மின்பாதையில் ஏற்படும் பழுது களை கண்டறிய ட்ரோன்கள் கொள் முதல் செய்யப்படும்.

திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்க ளில் தேரோடும் மாட வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள், புதைவடங்களாக மாற்றி அமைக்கப் படும். மின் வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டு அதுதொடர்பாக திருப் திகரமான அறிவிப்பு விரைவில் வெளி யாகும்.

விடுபட்ட கேங்மேன்களுக்கு பணி வழங்குவது குறித்து குழு அமைக்கப் பட்டுள்ளது. விரைவில் இதற்கு தீர்வு ஏற்படுவதுடன், அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான இடமாறுதல் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளி யாகும். ஸ்மார்ட் மீட்டர்கள் புதிய வடிமைப்பில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணி முடிந்ததும் 3 கோடி மின் நுகர்வோரின் வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத் தப்படும் என்றார்.

பேரவையில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேசியபோது, ‘‘தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 96 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதில் 500 மது பானக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும். 

டாஸ்மாக்கில் மொத்தம் 24,318 பணியாளர்கள் தொகுப் பூதியத்தில் பணியாற்றுகின்றனர். இதில், ஏப்.1 முதல் மேற்பார்வையாளர் களுக்கு ரூ.1,100, விற்பனையாளர்களுக்கு ரூ.930, உதவி விற்பனையாளர் களுக்கு ரூ.840 என தொகுப்பூதியம் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.31.57 கோடி கூடுதலாக செலவாகும்” என்றார்.

No comments:

Post a Comment