இன்று வெள்ளுடைவேந்தர் தியாகராயர் 172ஆம் ஆண்டு பிறந்த நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

இன்று வெள்ளுடைவேந்தர் தியாகராயர் 172ஆம் ஆண்டு பிறந்த நாள்

 பார்ப்பனரல்லாதார் இடையே எழுச்சியை ஏற்படுத்திய தனித் தலைவரைப் போற்றுவோம் - பின்பற்றுவோம்!

சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் பிறந்த நாளில் அவர் விரும்பிய சமத்துவ, சமூகநீதி - ஆளுமை மிகுந்த அனைவருக்கும் அனைத்தும் கிட்டச் செய்வதே நமது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

"நீதிக்கட்சி" என்று வெகு மக்களால் அழைக்கப்பட்ட திராவிடர் இயக்கத்தின் நிறுவனத் தலைவர்களில் முக்கியமானவர் சர். பிட்டி. தியாகராயர் அவர்கள் ஆவார்.

அவரது 172ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று!

திராவிடத் தலைவர்களான தியாகராயரும், டி.எம்., நாயரும், டாக்டர் சி. நடேசனாரும் இட்ட வித்து இன்றும் ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, எங்கும் தழைத்து அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரது தலைமையில் ஒப்பற்ற 'திராவிட மாடல்' ஆட்சியாக செழித்து வளர்ந்தோங்கி நிற்கிறது! 

இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழுகிறது! 

'விடுதலை' நாளேடு துவக்கப்பட்ட அந்நாளில் ஓர் அருமையான தலையங்கத்தின் தலைப்பு 'ராயர்  - நாயர் சகாப்தம்' என்பதாகும்! 

அவ்விரு பெரும் சிற்பிகளும், டாக்டர் 

சி. நடேசனாரும் பதவிக்குப் போகாமலே ஆட்சி செய்த அற்புதத்தை உருவாக்கிய தன்னலமற்ற தகைமைசால் தலைவர்கள் அன்றோ!

அவர்களது கொள்கைகள் அந்நாளின் பிரதமர் பனகால் அரசர்மூலம்  - ஆட்சி பீடத்தில் அமர்ந்தனவே!

பதவிக்கு ஆலாய்ப் பறக்கும் பாழும் அரசியல் களத்தில், வந்த பிரதமர் (முதல்வர் பதவியை) வேண்டாமென மறுத்து, தன் கட்சிக்காரர் கடலூர் சுப்பராயலு ரெட்டியாரை அமர வைத்த பெரு உள்ளத்தவர் வெள்ளுடைவேந்தர் தியாகராயர் அல்லவா!

வெள்ளைக்காரக் கவர்னர் வேல்ஸ் இளவரசரான ஆல்பர்ட் எட்வெர்ட்டை வரவேற்க தன் உடை, நடையை மாற்றாத 'சுயமரியாதை வீரர்' நமது 'ராயர் பெருமான்!' (12.1.1922)

1916லேயே - நூறாண்டுக்கு முன்பே பார்ப்பன ஆதிக்கத்தின் முகமூடியைப் பிய்த்தெறிந்து சமூகநீதிக் கொடியை இந்த மண்ணில் பறக்கச் செய்தவர்!

மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி

பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி!

எல்லாவற்றையும் தாண்டிய மனிதநேயத்தின் மகத்தான பேருருவம்!

அவர் படத்திற்கு  - சிலைக்கு மாலை அணிவித்தால் மட்டும் போதாது; அவர் காண விரும்பிய சமத்துவ, சமூகநீதி - ஆளுமை மிகுந்த அனைவருக்கும் அனைத்தும் கிட்டச் செய்வதே நமது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

1919இல் காங்கிரசில் சேர்ந்து 1925இல் அதன் பார்ப்பன இன ஆதிக்கத்தைக் கண்டுணர்ந்த தந்தை பெரியார் பிற்காலத்தில் வருந்திக் கூறிய நெஞ்சைத்தொடும் வார்த்தைகள் என்ன தெரியுமா?

"பார்ப்பனரல்லாத திராவிட மக்களின் நலனைப் பாதுகாக்க வந்த  ஜஸ்டிஸ் கட்சியை சில காலம் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற்கு "பிராயச் சித்தமாகவே" நான் இத்தனைக் காலமும் உழைத்து என் "பழியைத்" துடைத்துக் கொள்கிறேன்" என்று நெஞ்சுருகக் குறிப்பிட்டாரே தந்தை பெரியார். அதைவிட "ராயர் - நாயர்" சகாப்தப் பெருமைக்கும், தேவைக்கும் சரித்திரச் சான்று வேறு என்ன வேண்டும்?

வாழ்க தியாகராயர் பெருமான் தொண்டு!

வருக அவர் காண விரும்பிய புதுமைச் சமூகம்!

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

27.4.2023


No comments:

Post a Comment