ஈரோடு தொடங்கி கடலூரில் நிறைவடைந்த சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் (03.02.2023-31.03.2023) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 4, 2023

ஈரோடு தொடங்கி கடலூரில் நிறைவடைந்த சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் (03.02.2023-31.03.2023)

பயணங்கள் முடிவதில்லை - நமது  பரப்புரைப் பயணம் என்றும் தோற்றதில்லை

- முனைவர் க.அன்பழகன்

மாநில அமைப்பாளர்,

கிராமப்புற பிரச்சார குழு

சென்னை, ஏப்.4- இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்றத்தாழ்வு நீங்கிட, ஜாதி இழிவு ஒழிந்திட - அனைவர்க்கும் அனைத்தும் கிடைத்திடும் அரிய வாய்ப்பு கிடைத்திட ‘சமூகநீதி’ எனும் இலட்சியமே மாமருந்து என்ற தந்தை பெரியார் அதற்காக பொது வாழ்வுக்கு தன்னை அணியமாக்கி ஆரிய ஆதிக்கபுரிக்கு எதிராக சமூகநீதி வழங்கிட இடஒதுக்கீட்டுக் கொள்கையை கல்வி - வேலைவாய்ப்பில் கொண்டு வருதலே ஒரே வழி என்று பிரச்சாரம் - போராட்டம் எனும் களங்களில் சூத்திர - பஞ்சம மக்களை அணி திரட்டினார்.

சென்னை இராஜதானியில் அரசியல் சமூகநீதிக் கொள்கை அச்சாக ஆக்கப்பட்டது. நீதிக்கட்சி அதற் காகவே உருவானது. பார்ப்பனரல்லாதார் கல்வி வேலை வாய்ப்பிற்கு குரல் கொடுத்தது. 1920இல் தேர்தலிலும் வெற்றி பெற்றது.

தந்தை பெரியாரின் பெருத்த ஆதரவோடு இடஒதுக்கீட்டு முறைக்கு 1928இல் முறையான அரசாணை பிறப்பித்து நடைமுறைக்கு கொண்டு வந்தது.

நீதிக்கட்சி முதல்...

நீதிக்கட்சியைத் தொடர்ந்து ஆட்சி செய்த முதல மைச்சர்கள் இராமசாமி, பெருந்தலைவர் காமராசர் போன்றோரும், அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் இடஒதுக்கீடு இன்றைய தினம் 69 விழுக்காடு என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் காலத்தில் 49 விழுக்காடு என்ற அளவிலும் தமிழர் தலைவர் ஆசிரியரின் இன்றைய காலத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடும் தமிழ்நாடு அரசில் இந்த இரு பெருந்தலைவர்கள் உழைப்பால் - பிரச்சாரத்தால் - போராட்டத்தால் இந்த நிலையை (69%) எட்டியுள்ளது.

அய்யா பெரியார் காலத்தில் இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது போராடி இந்திய அரசியல் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தம் கொண்டு வர போராடி - வெற்றி பெற்று இடஒதுக்கீடு தந்த வகுப்பு வாரி உரிமை எனும் கொள்கையை காப்பாற்றினார்கள்.

இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மேல் வழங்கப்பட்டது என்ற உச்சநிதிமன்ற தடையை நீக்கிட, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 31சி பிரிவின் கீழ் உரிய சட்ட முன்வரைவு ஒன்றினை தானே உருவாக்கி தமிழ்நாடு அரசை நிறைவேற்றச் செய்து, அரசியல் சட்டத்தின் 9ஆவது அட்டவைணையில் அச்சட்டத்தினை சேர்த்திட உரிய சட்டத்திருத்தம் செய்ய மாநில, ஒன்றிய அரசினை பயன்படுத்தி - குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு 50 விழுக்காட்டுக்கு மேல் இருக்கும் 69 விழுக்காடு தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டை பாதுகாத்துத் தந்தார்க்ள்.

தந்தை பெரியார் அரசியல் சட்டத் திருத்தம் செய்ய வைத்து சமூகநீதியை காத்திட்டார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அரசிற்கு சட்டத்தையே எழுதிக் கொடுத்து சமூகநீதியை பாதுகாத்தார்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ரூ.9000 ஆண்டு வருமானம் மூலம் பிற்படுத்தப் பட்டோரை அடையாளம் காணும் சட்டத்திற்கு எதிரான அளவுகோல் வந்தபோது - அதனை தீயிட்டு சாம்பலாக்கி, அந்த ஆட்சியையே நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து, பொருளாதார அளவுகோலை திரும்பப் பெறச் செய்து அன்று பிற்படுத்தப் பட்டோருக்கு இருந்த 31 விழுக்காட்டை 50  விழுக்காடாக ஆக்கியவர் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசில் இடஒதுக்கீடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் - பின்னும் அறவே இல்லை. அரசியல் சட்ட வரைவுக்குழு தலைவர் டாக்டர் அம்பேத்கர் இதற்கு முயற்சி எடுத்தும் முடியாத நிலையில் இருந்தது.

1980ஆம் ஆண்டு அதற்கான பி.பி.மண்டல் குழு தந்த அறிக்கையில் 27 விழுக்காடு ஒன்றிய அரசில் இடஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

இந்த பரிந்துரையை செயலாக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி 42 மாநாடுகள் - 12 போராட்டங்கள் இந்திய அளவில் நடத்தியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.வடபுலத்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களை ஓரணியில் திரட்ட மண்டல் அணியை உருவாக்கி வி.பி.சிங் பிரதமராக பொறுப்பேற்றபோது ஒன்றிய அரசில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்தியா முழுவதும் பெற்றிட காரணமாகவும் - கர்த்தாவாகவும் விளங்கிடும் சமூகநிதியின் பாதுகாவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

இந்நிலையில் இந்திய ஒன்றியத்தின் நடுவண் அரசாக பி.ஜே.பி. வந்தபின் சமூகநீதியை முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு வேடந்தரித்து ஆட்டம் காட்டுகிறது.

இடஒதுக்கீட்டில் மீண்டும் கிரிமிலேயர் எனும் பொருளாதார அளவுகோலை கொண்டு வர, பணக்காரர்களில் ஏழைகள் (ணிக்ஷிஷி) என்று ஒன்றை உருவாக்கி 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது பி.ஜே.பி. அரசு.

இடஒதுக்கீட்டின் அடிப்படையை தகர்க்கும் - இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படும் - சமூகநிதியை ஒழிப்பதற்கான இச்சூழ்ச்சிகளை முறியடித்து கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு என்பது சமுதாய நிலையிலும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்டோர் எனும் அரசியல் சட்டம் தந்துள்ள சமூகநீதி உரிமையை பாதுகாக்க, சமூகநீதி பாதுகாப்பு பரப்புரைப் பெரும்பயணம்.

இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் நீதிக்கட்சி தொடங்கி, அதன் நீட்சியாக நடைமுறைப்படுத்திடும் திராவிட மாடல் என்னும் அனைவருக்கும் அனைத்தும் வழங்கிடும், தந்தை பெரியாரின் இலட்சியங்களை சட்டமாக்கிடும் அரிய திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று பரப்புரை செய்திடவும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பரப்புரை தொடர் பயணத்தை அறிவித்தார்கள்.

ஈரோட்டில்...

தந்தை பெரியார் பிறந்த ஊர், தாழ்ந்து கிடந்த தமிழர்களைத் தட்டியெழுப்பி தன்மானக் கொள்கைத் திட்டம் தந்த ஊர், திராவிடமாம் பேரினத்தை மானமும் அறிவும் பெற்றிடச்செய்த மகத்தான தத்துவம் பிறந்த ஈரோட்டில் - தந்தை பெரியாரின் போர்ப்படைத் தளபதி - தலைமகன் அண்ணா மறைந்த பிப்ரவரி 3ஆம் நாளில் பரப்புரை பயணம் தொடங்கியது. ஈரோடு சட்டமன்றத் தேர்தலுக்காக அங்கு முகாமிட்டிருந்த தமிழ்நாட்டின் அமைச்சர் பெரு மக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்தி அனுப் பிட தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையில் பரப்புரை பெரும்பயணம் தொடங்கியது.

தமிழர் தலைவருடன் தலைமைக் கழக பேச்சாளர் ஒருவர் மற்றும் பயணத்தில் பங்கேற்கும் 25 பரப்புரைப் படையினர் புடைசூழ எழுச்சிப் பயணம் தொடங்கியது.

பரப்புரை பயணங்கள்....

இப்பரப்புரைப் பயணம் நான்கு கட்டமாக நடைபெற்றது.

இந்த எழுச்சிப் பயணம்,

2 மாநிலங்கள்

30 நாள்கள்

39 மாவட்டங்கள்

57 கூட்டங்கள்

ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தினைக் கடந்து எழுச்சியை உருவாக்கியுள்ளது.

கடலூரில்...

சமூகநீதி - திராவிட மாடல் பரப்புரை எழுச்சிப் பயணம் 6475 கி.மீ. பயணம் செய்து கடலூரை வந்தடைந்தது. தந்தை பெரியார் பிறந்த ஊரில் தொடங்கிய எழுச்சிப் பயணம், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த ஊரில் நிறைவடைந்தது. கடலூர் முதுநகரில் பிறந்து 9 வயதில் மேடையில் பேசத் தொடங்கி - 10 வயதில் மாநாடுகளில் பேசி தனது ஆசிரியர் ஆ.திராவிடமணியின் வழிகாட்டலில் குன்றிலிட்ட விளக்காக ஒளிர்ந்து - தகத்தகாய சூரியனாய் பரிண மித்து இன்று 90 வயதில் 80 ஆண்டு பொது வாழ்வை நிறைவு செய்து - களத்தில் சமர் புரியும் அசாதாரண மனிதராய் - உலகில் இதுவரை யாரும் சாதித்தறியாத உலகச் சாதனையாளராய் விளங்கிடும் ஆசிரியர் அய்யா பிறந்த ஊரில் நிறைவு விழா.

கடலூரில் காணும் இடமெல்லாம் கழகக் கொடி பறந்தது. வண்ணச் சுவரொட்டிகள் - பளபளக்கும் பதாகைகள் - சேதுக்கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு அந்தக் கப்பலில் தமிழர் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நம்முடன் கொள்கை உறவு கொண்ட கட்சித் தலைவர்கள் வெற்றிக் களிப்பில் நின்றிடும் காட்சி. சிறப்பாக அமைக்கப் பட்டிருந்தது. ஏராளமான மக்கள் தலைவர்களின் உரையைக் கேட்க ஆர்ப்பரித்து திரண்டிருந்தனர். அப்போது கழக இளைஞரணி, மாணவரணி தோழர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி கொள்கை முழக்க மிட்டபடி தமிழர் தலைவரை உற்சாகமாக மேடைக்கு அழைத்து வந்தனர். மேடைக்கு அருகே மகளிர் அணியைச் சேர்ந்த தோழியர்கள் ரோஜா மலர் தூவி வரவேற்க ஆர்ப்பரித்த கூட்டத்தின் நடுவே வெற்றிப் புன்னகையோடு தமிழர் தலைவர் மேடைக்கு வந்தார்.

வண்ண விளக்குகள் மின்னிடும் மேடை - கடலூரில் கடலுக்கு இணையாக இங்கு ஒரே மக்கள் கடல். கடலில் அலைகள் ஆர்ப்பரிப்பதுபோல், மேடைக்கு முன் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆரவார முழக்கம் - ஒன்றிய அரசின் கிடுகிடுக்கச் செய்யும் உரிமை முழக்கம்.

பெரும் மக்கள் வெள்ளத்திற்கிடையே வைக்கம் போராட்டத்தை விளக்கும் சில முக்கிய காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. காண்போர் கண்களில் நீர் ததும்ப, வைக்கம் வீரரின் வெற்றிப் போராட்டத்தின் காட்சிகளை மெய்சிலிர்க்க கண்டோம்.

பரப்புரை பயணத்தின் முக்கிய பதிவுகள்...

ஒரு நாளைக்கு மாலை இரண்டு கூட்டங்கள். காலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் - தோழர்கள் குடும்பங்களின் சந்திப்பு.கூட்டங்களில் கழகப் பேச்சாளர்களின் சுமார் 1 மணி நேர உரைக்குப் பின் தமிழர் தலைவரின் உரை முக்கால் மணி நேரத்திற்கு குறைவின்றியும் அதிகபட்சமாக 1.15 மணி நேரமும் அமைந்திடும்.

சமூகநீதியை குழிதோண்டி புதைக்க முனையும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை விளக்கி ஆதாரத்துடன் உரை. மனுதர்மம் - சனாதனம் பற்றி எடுத்துக்காட்டு களோடு அசல் மனுதர்மத்தை காட்டி விளக்கிடும் பாங்கு. 

திராவிட மாடல் ஆட்சி நாயகர் தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய சிந்தனை - சிறப்பான செயல் -  திராவிட மாடலின் தாக்கங்களான அடுக்கடுக்கான ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் பாங்கு.

சமூகநீதி இந்திய ஒன்றியத்தின் உயர்வுக்கான இலட்சியம் திராவிட மாடல் நாட்டை வளமாக்கும் - அனைவர்க்கும் அனைத்தும் என்னும் நிலையை அடையச் செய்யும் மாமருந்து என மக்களிடம் எளிய நடையில், எழுச்சிப் பிரச்சாரத்தில் எடுத்துச் சொல்லி ஆற்றிடும் அரிய உரை.

வியந்து பார்க்கும் மக்கள்...

தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் மேடைக்கு 200 அடி தூரத்திலிருந்து இறங்கி நடந்து வரும்போது மக்கள் ஆரவாரம் - எழுச்சிப் பயணத்தின் பாடல் ஒலிக்கும் சிறப்பு களைகட்டி நின்றது.

மக்கள் இவருக்கா 90 வயது? இளைஞரைப் போல் எழுச்சி நடைபோட்டு வருகிறாரே என்று வியந்து பேசுவதை எல்லா ஊர்களிலும் காண முடிந்தது. இரவு உணவு தோழர்களுடன் ஊரின் வெளியே அமைந்துள்ள ஏதேனும் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கும் இடத்தில்.

அதன் பின்பு அடுத்த ஊர் நோக்கி பரப்புரை பயணம் பயணிக்கும்

பயணங்கள் முடிவதில்லை...

கடலூரில் பரப்புரை முடிந்தது. தோழர்களிடம் விடைபெற்றுச் செல்லும்போது, அடுத்த பயணம் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா பரப் புரை பயணமாக மதுரையில் தொடங்கி கேரளாவின் வைக்கம் வரை என்று கூறி, சிரித்த முகத்தோடு - பயணங்கள் முடிவதில்லை - நமது பரப்புரைப் பயணம் தோற்றதில்லை என்று சொல்லும் விதமாக கையசைத்து தமிழர் தலைவர் புறப்பட்டார்.

பெரியார் விட்டுச் சென்ற பணியை அவர் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலத்திற்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம் என்று சூளுரைத்து - அதே பணியாய் களமாடும் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில், வைக்கத்தில் தொடங்கிய பெரியார் பெரும் பணியை வையகம் முழுமையும் எடுத்துச் செல்வோம்.

பெரியாரின் புதியதோர் உலகமைப்போம்.

No comments:

Post a Comment