முற்றிலும் முடங்கியது நாடாளுமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 28, 2023

முற்றிலும் முடங்கியது நாடாளுமன்றம்

புதுடில்லி, மார்ச் 28-  ராகுல் காந்தி பதவி தகுதி இழப்பு, தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டார். இதை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வரு கின்றன.

இந்நிலையில் நேற்று (27.3.2023) காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, ராகுல் காந்தியின் பதவி தகுதி இழப்பு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவ டிக்கை குறித்து நாடாளுமன்ற வளா கத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆலோ சனையில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ராகுல் பதவி தகுதி இழப்பு, அதானி விவகாரங்களைக் கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப் பினர். மேலும் சத்யமேவ ஜெயதே என்ற தலைப்பில் மிகப்பெரிய அளவி லான பதாகையையும் அவர்கள் ஏந்தி வந்தனர். ஜனநாயகத்தைக் காப்பாற் றுவோம் என்றும் பதாகைகளை அவர்கள் கைகளில் வைத்திருந்தனர். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் பகுதி வரை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, சமாஜ்வாதி, அய்க்கிய ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அய்யுஎம்எல், மதிமுக, கேரள காங்கிரஸ், திரிணமூல் காங் கிரஸ், ஆர்எஸ்பி, ஆம் ஆத்மி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி, சிவசேனா (உத்தவ் பிரிவு) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

நாடாளுமன்றத்தில் தொழிலதிபர் அதானி, ராகுல் விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இதனால் 2 வாரங்களாக நாடாளுமன்ற அவைகள் முடங்கின.

இந்நிலையில் நேற்று (27.3.2023) காலை மக்களவை தொடங்கியதும், ராகுல் காந்தி எம்.பி. பதவி தகுதியிழப்பு விவகாரத்தை கருப்பு உடையணிந்து வந்திருந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர். எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மய்யப் பகுதிக்கு வந்து  அரசைக் கண் டித்து முழக்கம் எழுப்பினர்.

அப்போது மக்களவைத் தலைவரை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், ஹிபி எடன் ஆகியோர் பதாகைகளையும், காகிதங்களையும் தூக்கி வீசினர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க் கட்சி எம்.பி.க்களின் அமளியின் காரண மாக அவை பிற்பகல் 2 மணி வரையும், அதன் பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவையும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பங்களாவை காலி செய்ய உத்தரவு

வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினர் என்ற முறையில் ராகுல் காந்திக்கு டில்லி துக்ளக் லேன் பகுதியில் 12-ம் எண் கொண்ட அரசு பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில்தான் ராகுல் காந்தி தங்கியிருந்தார். இந் நிலையில் அவமதிப்பு வழக்கில் சூரத் நீதிமன்றம், ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து அவரது எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு பங் களாவை காலி செய்யுமாறு மக்களவை வீட்டு வசதிக் குழு நேற்று தாக்கீது அனுப்பியுள்ளது. தாக்கீது வழங்கப்பட்டு 30 நாட்க ளுக்குள் அவர் தான் தங்கியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்றும் அந்த தாக்கீதில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment