மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதில் திடீர் சிக்கல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 5, 2023

மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதில் திடீர் சிக்கல்!

 சில்லாங், மார்ச் 5- மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 26 இடங்களில் வெற்றிபெற்ற ஆளும் தேசிய மக்கள் கட்சி (NPP) தலைவர் கான்ராட் சங்மா,  3.3.2023 அன்று ஆளுநர் பாகு சவுகானைச் சந்தித்தார். அப்போது, பாஜகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மலையக மக்கள் ஜனநாயக கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள்   மற்றும் 2 சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள்  என மொத்தம் 32 பேரின் ஆதரவு தனக்கு உள்ளதாக கடிதம் அளித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார். 

இந்நிலையில்தான், மலையக மக்கள் ஜனநாயக கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,  “எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மெத்தோடியஸ் திஹர், ஷாக்லியர் வார்ஜ்ரி ஆகிய இருவருக்கும், என்பிபி கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவினை  வழங்க எந்தவித அங்கீகாரமும் அளிக்கவில்லை” என்று கூறியுள்ளது.  அத்துடன், என்பிபி கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும் மலைய மக்கள்  ஜனநாயக கட்சியின் தலைவர் கே.பி. பன்ங்னியாங், செயலாளர் பன்போர்லாங் ரிந்தாதியாங் ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்தச் சூழலில், மேகாலயாவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேகாலயாவில் ஆட்சி அமைப்பதற்கு 31 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலையில், அய்க்கிய ஜனநாயக கட்சிக்கு 11, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா 5, மக்கள் குரல் கட்சி 4, மலையக மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு தலா 2 என மொத்தம் 29 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள்  உள்ளனர். சுயேச்சைகள் இருவர் இந்த அணியை ஆதரிக்கும் பட்சத்தில் மேகாலயாவில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி அமைவதற்கும் ஒரு வாய்ப்பு உள்ளது.


No comments:

Post a Comment