மாணவர்களின் திறமையை, தன்னம்பிக்கையை சீர்குலைப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

மாணவர்களின் திறமையை, தன்னம்பிக்கையை சீர்குலைப்பதா?

ராணிப்பேட்டை, மார்ச் 13- தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரால், பூஜிக்கப்பட்ட எழுதுபொருள்கள் ராணிப்பேட்டையில் வழங்கப்பட்டதாக படத் துடன் செய்தி வெளியாகியுள்ளது.

தேர்வெழுதுகின்ற மாணவர்களுக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்து, வாழ்த்து தெரிவித்தால் யாராக இருந்தாலும் வரவேற் போம். அதேநேரத்தில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை இளம் தலைமுறையினரிடம் மூடத்தனங்களை புகுத்துவது என்றால் எவராக இருந்தாலும் கண்டிக்க வேண்டியதே ஆகும்.

ஆண்டு முழுவதும் கல்வி பயிலும் மாணவர்களிடையே போதிய அளவுக்கு கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, போட்டி நிறைந்த உலகில் தங்களுடைய ஆற்றலையும், திறமையையும் வெளிப்படுத்தவே தேர்வு முறை என்று எடுத்துச்சொல்லி, மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தல் வேண்டும்.

அப்படி இல்லாமல், பிரார்த்தனை, பூஜை என்கிற பெயரால் பகுத்தறிவுக்கு இடமில்லாத மூடத்தனங்களைத் திணிக்கலாமா?

இன்று (13.3.2023) தினமணி இணையப் பக்கத்தில் வெளியான தகவல் வருமாறு,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று திங்கள் கிழமை காலை பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்குவதை முன்னிட்டு தேர்வு தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு பூஜிக்கப்பட்ட எழுது பொருள்கள் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. 

ராணிப்பேட்டை சிறீ ராமானுஜர் ஆன்மீக அறக் கட்டளை சார்பில், நவல்பூர் சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் ஹயக்ரீவர் பூஜை செய்து  பூஜிக்கப்பட்ட எழுது பொருள்களை திங்கள் கிழமை வழங்கினர். இதில், ஆன்மீக அறக்கட்டளை தலைவர் கே. வெங்கடேசன், செயலாளர் கே. எம்.சிவலிங்கம், கோயில் நிர்வாகி மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் எஸ்.சசிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இவ்வாறு கல்வி பயிலும் மாணவர்களிடையே மூடத்தனங்களை புகுத்துவதன்மூலம் அவர் களின் தன்னம்பிக்கையை கேலிக்குரியதாக் கலாமா?

பள்ளி மாணவர்களிடையே மதவாத நஞ்சைப் பரப்பலாமா?

No comments:

Post a Comment