தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை

வேளாண் அதிகாரி தகவல்

செங்கல்பட்டு மார்ச் 19 தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.  

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுமக்களின் நலன் கருதி அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளை 1-3-2023 முதல் 29-4-2023 வரை 60 நாட்களுக்கு தற்காலிகமாக தடை செய்தும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரடோல் பேஸ்ட்) பூச்சிக்கொல்லி மருந்தை நிரந்தரமாக பயன்படுத்த தடை செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

கடந்த 2017-2018 ஆம் ஆண்டில் கார்போ புரான், மோனோ குரோட்டோ பாஸ், அசி பேட், ப்ரோபெனோ போஸ், ப்ரோபெனோ போஸ் சைபர்மெத்ரின், குளோர் பைரிபாஸ் சைபர்மெத்ரின் ஆகிய பூச்சிக்கொல்லிகளின் நச்சுத் தன்மையால் விவசாயிகள் உயிரிழந்ததாகவும், எலிகளை கொல்வதற்கு பயன்படுத்தப்படும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரடோல் பேஸ்ட்) பூச்சி கொல்லி மருந்து தற்கொலை மரணங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வேளாண்மை உழவர் நலத்துறை அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மோனோகுரோட் டோபாஸ், ப்ரோபெனோபோஸ், அசிபேட், குளோர் பைரிபாஸ், ப்ரோபெனோபோஸ் சைபர்மெத்ரின், குளோர்பைரிபாஸ் சைபர்மெத்ரின் ஆகிய 6 பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (ரடோல் பேஸ்ட்) பூச்சிக்கொல்லி மருந்துகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி, இருப்பு, வினியோகம், விற்பனை மற்றும் கண்காட்சிகளில் பயன்படுத்துவதை தடை செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்தகைய பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர்,  அனைத்து பூச்சிக்கொல்லி  மருந்து விற்கும் நிறுவனங்களும் 60 நாட்களுக்கு இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ தடை செய்யப்படுகிறது. தடையை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நிறுவனங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment