'திராவிட மாடல்' ஆட்சியின் சுயமரியாதை - பகுத்தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட்! புது வரி ஏதும் போடாத பட்ஜெட்!! பாராட்டுவதற்கு வார்த்தை இல்லை - வாழ்த்துகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

'திராவிட மாடல்' ஆட்சியின் சுயமரியாதை - பகுத்தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட்! புது வரி ஏதும் போடாத பட்ஜெட்!! பாராட்டுவதற்கு வார்த்தை இல்லை - வாழ்த்துகள்!

பொருளாதார நெருக்கடி மிகுந்த ஒரு சூழலில் அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்பான பட்ஜெட்!

இல்லத்தரசிகளின் கண்ணீர் துடைக்கப்பட்டுள்ளது!

பொருளாதார நெருக்கடி மிகுந்த ஒரு சூழலில் அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்பான பட்ஜெட்! இல்லத்தரசிகளின் கண்ணீர் துடைக்கப்பட்டுள்ளது! 'திராவிட மாடல்' ஆட்சியின் சுயமரியாதை - பகுத் தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட்! பாராட்டுவதற்கு வார்த்தை இல்லை - வாழ்த்துகள் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஓர் அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வெறும் வரவு - செலவு கணக்குக்கான ஆண்டறிக்கை மட்டு மல்ல; அதையும் தாண்டி, அந்த அரசின் கொள்கை திட்டங்களை செயலாக்கி, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதோடு, மக்களாட்சியில் நடைபெறும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை அவ்வப்போது எப்படியெல் லாம் நிறைவேற்றி, மக்களின் - வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெருக்குவது என்பதாகும்!

தி.மு..வின் தனிமுத்திரை 

அதன் தேர்தல் அறிக்கையே!

தி.மு..வின் தனி முத்திரை அதன் தேர்தல் வாக்குறுதியே! சில தேர்தல்களுக்குமுன் தி.மு..வின் தேர்தல் அறிக்கையே இந்திய அரசியலில் கதாநாய கனாகவே வர்ணிக்கப்பட்டதை மறந்துவிட முடியாது!

சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல் வோம்' என்பதனை செயலில் நாளும் காட்டி வரும் ஆட்சி, திராவிடர் ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சியின் நீட்சியானதிராவிட மாடல்' ஆட்சி!

முழுமையாக இரண்டு ஆண்டுகள்கூட நிறையாத நிலையில், ‘இந்தியாவின் முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சர்' என்று வடபுலத்து ஏடுகள் பாராட்டி கருத்துக் கணிப்பு வெளியிட்டபோதுகூட, நமது முதல மைச்சர், ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மு..ஸ்டாலின் அவர்கள், ‘‘நான் முதல் முதலமைச்சராக வருவது எனக்கு முக்கியமல்ல; திராவிட மாடல் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழவேண்டும் என்பது தான் எமது இலக்கு'' என்று மிகுந்த தன்னடக்கத்தோடு குறிப்பிட்டார்!

அத்திசை நோக்கி அவரதுதிராவிட மாடல்' ஆட்சி எப்படி நாளும் சாதனை சரித்திரம் படைக்கத் திட்டமிட்டு செயலாற்றுகிறது; செயலாற்ற திட்டமிட்டு சரியான திசை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பதை உணர்த் துவதுதான் நமது ஆற்றல்மிகு நிதியமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று (20.3.2023) தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இரண்டாவது ஆண்டு முழுமையானபட்ஜெட்' என்ற நிதி நிலை அறிக்கை.

சமூகநீதிக்கான சாதனை ஆவணம்!

ஒருபட்ஜெட்எப்படியெல்லாம் பல அம்சங்களை - அரசின் கொள்கை லட்சியங்கள், அதனை அடைய வகுக்கும் வழிமுறை செயலாக்கத் திட்டங்கள், அதற்கானநிதி ஆதாரங்களைப் பெருக்குதல்' என்ற எல்லாவற் றையும் பகுதி பகுதிகளாக விளக்கும் சாதனை சரித்திர பட்ஜெட்டாக, எடுத்துக்காட்டானதாக தயாரித்துள்ள முதலமைச்சர், நிதியமைச்சர், அமைச்சரவையினர், நிதித்துறை செயலாளர் அனைவரும் மெச்சத்தகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

இது வெறும் புகழ்ச்சி உரை அல்ல; எந்த நிதிச் சூழலில் இந்ததிராவிட மாடல்' அரசு பதவியேற்று, அந்த இக்கட்டான நிலை இன்னமும் அறவே நீங்காது தொடரும் நிலையில் அசாதாரணத்திற்கிடையே மிகமிக சாமர்த்தியமாக ஏழை, எளிய மக்களின் மற்றும் நடுத்தர மக்கள் தொடங்கி, தொழிலில் முதலீடு செய்து, பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க விழைவோரிடமும் நம்பிக்கையை விதைத்து, தமிழ்நாட்டை ஒரு பொற்கால சரித்திரம் படைக்க அனைவரையும் திருப்தி செய்ய, மிகச் சாமர்த்தியமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தபட்ஜெட்' - ஒரு சமூகநீதிக்கான சரித்திர சாதனை ஆவணமாகத் திகழுகிறது!

சென்ற .தி.மு.. ஆட்சியின் பத்தாண்டுகால டாம்பீக ஆட்சி வாங்கிய கடன் ஒருபுறம் - ஆட்சியை விட்டுப் போகும்போது அவர்கள் விட்ட காலி கருவூலம் மறுபுறம், வாங்கிய கடனுக்குக் கட்டவேண்டிய வட்டிச் சுமை ஒருபுறம், நியாயமாகப் பெருக்கவேண்டிய வரி வருவாய்களைக்கூட பெருக்காமல், ‘‘கண்டதே காட்சி; கொண்டதே கோலம்'' என்று - ஆட்சியை நல்ல காட்சியாகவே நடத்தியதிலிருந்து, ‘மீட்சி' நடத்த வேண்டிய - சுமை மிகுந்த பொறுப்பினை ஏற்று, இந்த இரண்டாண்டு காலத்தில், நிதி நிர்வாகத்தைத் திறம்படச் செய்ததின் காரணமாகவே - இந்த அரசு பதவி ஏற்கும் போது சுமார் ரூ.62,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை 30,000 கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்துசாதனை' படைத்துள்ளனர்! இது செயற்கரிய செயல் அல்லவா?

அதுமட்டுமா?

அதுவும் மக்களுக்கான சமூகநலத் திட்டங்களுக்கும், வளர்ச்சி முன்னுரிமைகளுக்கும் சிறிதும் பாதிப்பின்றி இதைச் சாதித்துள்ளதுதான் தமிழ்நாடுதிராவிட மாடல்' அரசின் தனிப் பெருமை!

கடன் வாங்குவதில் 

காட்டப்பட்டுள்ள திறமை!

வரி வருவாய் தொடர்ந்து கீழிறக்கம் கண்டு வந்த தையும் கவனச் சிதறல் இன்றிகடிதோச்சி மெல்லெறிதல்' என்ற சாதுர்யம் பொங்கும் திட்டமிடுதலால், முன்பு வீழ்ந்த வருவாய் - 2021 ஆம் ஆண்டு 5.58 சதவிகிதமாகக் குறைந்து, இரண்டாண்டுகளில் இந்த அரசு எடுத்த தொடர் முயற்சிகளால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 6.11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும் உயர்த்திட முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசின் கடன் வாங்கும் பாதுகாப்பான அளவு 85,000 கோடி ரூபாய் என்று நிர்ணயம் செய்திருந்தாலும், ‘திராவிட மாடல்' அரசில் இந்த ஆண்டில் 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவில்தான் கடன் வாங்கப்படும் என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

அதுபோலவே, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 29 சதவிகிதம் கடன் வாங்க அனுமதி உள்ள போதிலும், அந்த உச்சவரம்பிற்குப்போகாமல், 25 சதவிகிதம்தான் கடன் வாங்கப்பட்டுள்ளது.

எனவே, மிகுந்த கவனத்துடன் நிதிநிலை மேலாண்மை (Fiscal Management)  நடைபெறுவது, தமிழ்நாடு அரசு அடிக்கட்டுமானத்தை சரியாமல் வைக்கவே - ஒவ்வொரு அடியையும் சிந்தித்து எடுத்து வைக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டானதாகும்!

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000/-

முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, குடும்பத் தலைவிகளான மகளிருக்கு அறிவித்த 1000 ரூபாய் மாதந்தோறும் அளிக்கப்படும் என்ற வாக்குறுதி வருகிற அண்ணா பிறந்த நாளிலிருந்து (செப்.15) அமலுக்கு வரும் என்பது இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி மட்டுமா?

குஜராத் மாடல் அரசு' எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) விலையை பல மடங்கு உயர்த்தி, அடுப்புப் பற்ற வைக்க கஷ்டப்பட்டு, புகை அடுப்புத் தேடி வாடிய இல்லத்தரசிகள் வடிக்கும் கண்ணீர் இதன்மூலம் துடைக் கப்படுவது உறுதி!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் (இந்தியாவின் இதர ஆட்சிகளுக்குதிராவிட மாடல்' ஆட்சி நடைபெறும் தமிழ்நாடே வழிகாட்டி மாநிலமாக உள்ளது), அவர்களது பெண் குழந்தைகள் கல்லூரியில் படித்தால், மாதாமாதம் 1000 ரூபாய், மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், அரசுப் பள்ளி, தொடக்கப் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்காகஅரக்க பரக்க சமைத்து ஊட்டிவிடும்' அந்த வேலையையும் இப்போது மிச்ச மாக்கி, குழந்தைகளுக்குக் காலைச் சிற்றுண்டி - ஏற்கெனவே இருந்த மதிய சத்துணவு திட்டத்துடன்... இத்தியாதி.....  எந்த காலத்தில் இந்த நாடு கண்டது?

மனுதர்மம் ஆண்ட - ஆள விரும்பும் சனாதன மாடலைப் புகுத்த நினைக்கும் சதிகாரர்கள் ஆண்டால் இப்படிஅனைவருக்கும் அனைத்தும்' கிடைக்குமா? என்று மக்கள் சிந்திக்கவேண்டும்.

திராவிட மாடல்' ஆட்சிக்கு மறுபெயர் சமூகநீதியைப் பரப்பும் மக்கள் நல ஆட்சி!

சுயமரியாதை - பகுத்தறிவு இலட்சியத்தின் வெளிச்சம்!

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரைத் துடைத்து, மக்களை மகிழ்ச்சிக் கடலில் திளைக்க வைக்கும் திராவிடர் ஆட்சி - இதுதான் சுயமரியாதை - பகுத்தறிவு இயக்கத்தின் இலட்சிய வெளிச்சம்.

எல்லாவற்றையும்விட புது வரி ஏதும் போடாததால் - இது சாதனை பட்ஜெட் ஆகும்!

அறிக்கை நீண்டுவிட்டது - எஞ்சிய சாதனைகள் நாளை!

பாராட்ட வார்த்தைகளே இல்லை; ‘‘இடியாப்ப சிக்கலில் இத்தனை சாதனைகளா? நிதித் துறையில்'' என்று உலகம் வியக்கும் வண்ணம் சாதனை சரித்திரம் தொடருகிறது.

மக்களின் மகிழ்ச்சியும், புது வாழ்வும், புது வெள்ளமாகி வருகிறது!

வளர்க, வாழ்கதிராவிட மாடல்' ஆட்சி!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

21.3.2023    

 


No comments:

Post a Comment