சென்னையில் மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மய்யம்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 2, 2023

சென்னையில் மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மய்யம்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைப்பு

சென்னை, மார்ச் 2- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செயல்பட்டுவரும் பகுப்பாய்வுக் கூடம் மற்றும் குருதி சுத்திகரிப்பு நிலையம் முழு உடல் பரிசோதனை நிலையமாக உயர்த்தப்பட்டது. இதை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட 113-ஆவது வார்டு வள்ளுவர் கோட்டத்தில் செயல்பட்டு வரும் பகுப்பாய்வுக்கூடம் மற்றும் குருதிச் சுத்திகரிப்பு நிலையம், 2000ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது தொடங்கப்பட்டது. தற்போது இந்த மய்யத்தில் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மய்யத்தில் ஏற்கெனவே குருதிப் பரிசோதனைகள் இ.சி.ஜி, ஸ்கேன், ஊடுகதிர், சளி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை முதலிய பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரம் பேர் மருத்துவ உதவி பெற்றுள்ளனர். இங்கு ஏற்கெனவே, 17 கருவிகளுடன் குருதிச் சுத்திகரிப்பு மய்யம் இயங்கி வரும் நிலையில், தற்போது ஹெப்படிஸ் பி மற்றும் சி நோயாளிகள் பயன்பெறும் வகையில் புதிதாக 5 குருதிச் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், முழு உடல் பரிசோதனை சேவைகளுடன் கூடுதலாக உடல் பரிசோதனைக் கருவிகள் அமைக்கப்பட்டு, முதலமைச்சரின் ஒருங்கிணைந்த முழு உடல் பரிசோதனை நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை அமைச்சர் நேரு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 1.3.2023 அன்று திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னையில் கடந்த ஆண்டை விட தற்போது கூடுதலாக தண்ணீர் இருப்பு உள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பில்லை. தற்போது குடிநீர் வழங்கல் துறை மூலம் 15 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தினமும் 550 எம்எல்டி குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நெமிழி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 2 மாதங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.


No comments:

Post a Comment