ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 10, 2023

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

சென்னை, மார்ச் 10- ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண் டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தமிழ்நாட்டின் 2023-2024 ஆம் ஆண்டுக் கான நிதிநிலை (பட்ஜெட்) வருகிற மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று (9.3.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்ச ரவைக் கூட்டத்தில் ஆன்லைன் தடை மசோதாவை வருகிற சட்டப்பேரவை கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு சட்ட அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இணையவழி சூதாட்டங்களை தடை செய்தல் மற்றும் இணையவழி விளை யாட்டுக்களை முறைப்படுத்துவது குறித்து சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட் டது. அவர் சில சந்தேகங்களை கேட்ட போது தெளிவான விளக்கம் தந்தோம். ஆனால், இன்றைய தினம் 6 ஆம் தேதி சட்டப்பேரவையில் சட்டம் இயற்றுவதற்கு தமிழ்நாட்டிற்கு அதிகாரம் இல்லை என்று திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த அதிமுக அரசு இதே சட்டத்தை இயற்றியபோது நீதிமன்றம், இந்த சட் டத்தில் உள்ள பல்வேறு குறைகளை காட்டி நிவர்த்தி செய்து புதிய சட்டம் கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்று சொல்லி தீர்ப்பு தந்தது. நீதிமன்றமே சட்டமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளது. 

ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி அதிகாரம் இல்லை என்கிறார். இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஆன்லைன் விளையாட்டு, ஆப்லைன் விளையாட்டு என இரண்டுக்கும் உள்ள வித்தியாசங் களை நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கி றோம். ஆளுநர், குறிப்பிட்டதுபோல் 33 ஆவது பிரிவின் கீழ் இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. இது ஆப் லைன் விளையாட்டுக்காக அல்ல. ஆன்லைன் விளையாட்டுக்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆப் லைன் என்பது நேரடியாக ஆட்கள் விளையாடுவது. அங்கு தவறு நடப்பதற்கு இடம் கிடையாது. ஆன்லைன் ஒரு புரோகிராம். அதில் தவறு நடக்கும். இதுபோன்ற விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளது குறித்து இன்று (9.3.2023) அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. அதனால், இந்த சட்ட முன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிறார், நாங்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்ற அதிகாரம் இருக்கிறது என்று சொல் கிறோம். சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் புதிய கருத்துகள் சொன்னால் ஏற்றுக் கொள்ளப்படும். ஆளுநர் திரும்ப திரும்ப ஒரே கருத்தை தான் சொல்லி இருக்கிறார். நீதிமன்றத்துக்கு நாங்கள் போக வேண்டிய அவசியமே இல்லை. காரணம், ஏற் கெனவே எங்களுக்கு சட்டம் இயற்ற நீதிமன்றம் அதிகாரம் தந்துள்ளது. அதற்கு பிறகு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து, பொது மக்களிடம் கருத்து கேட்டுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2 ஆவதாக சட்டம் இயற்ற எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. 2 ஆவது முறையாக சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பும் போது அவரால் நிராகரிக்க முடியாது. இது பொதுமக்களை காப்பாற்ற, பாதுகாக்க கொண்டு வந்த சட்டம். நாங்கள் கண் துடைப்புக்காக இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை. வரக்கூடிய சட்ட மன்றத்தில் இந்த சட்டம் நிச்சயமாக கொண்டு வரப்படும். 2 ஆவது முறை யாகவும் ஆளுநர் கிடப்பில் போட்டால் அதற்கு பிறகு பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment