பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் பகிரங்கக் கடிதம் (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் பகிரங்கக் கடிதம் (2)

அன்புள்ள பா.ஜ.க. தலைவருக்கு கருஞ்சட்டையின் வணக்கம். 

நேற்றைய (19.3.2023) கடிதத்தைப் படித்திருப்பீர் களென நம்புகிறேன். 

ஒருவேளை படிக்காவிட்டால் இத்துடன் சேர்த்து வைத்தாவது படியுங்கள்.

நீங்கள் சென்னையில் தந்துள்ள பேட்டி பூணூல் மலரில் "விஸ்தாரமாக" அப்படியே வந்துள்ளது. (சென்னை, 20.3.2023).

வழக்கமான தடாலடிப் பேச்சுகள் எங்கே?

அது ஒரு ‘மலைப் பிரசங்கமாக மட்டுமா உள்ளது?

தங்களின் வழக்கமான சவால் பேச்சுகள் - சவடால் பேச்சுகள் - பேட்டிகள் வகையறாவிலிருந்து மாற்றம் அடைந்து வேகத்தின் இடத்தை விரக்தி அல்லவா பிடித்துக் கொண்டுள்ளது என்பதை அறியாதவர்களுக் குக்கூட புரிய வைப்பதாக இருக்கிறது! ஒரு முறை நீங்களே உங்கள் பேட்டியை படித்துப் பார்த்து, பிறகு இந்தக் கடிதத்தின் கருத்துக்களை அசைபோடத் துவங்குங்கள்.

"கடனாளியாக இருக்கிறேன்!"

"தற்போது தமிழக அரசியல் களத்தில், பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலை உள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் தனி மனிதனாக, அது போன்ற ஒரு தேர்தலை சந்திக்க, எனக்கு உடன்பாடு இல்லை. அரசியல் மாற்றம் என்பதில், அரசியலை முன்னெடுக்கும் உத்திகள் அனைத்தும் நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அது, மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அதில், நான் உறுதியாக இருக்கிறேன். எந்த கட்சிக்கும் எதிராக நான் இல்லை. அவர்களுக்கு சரி என தோன்றுவதை, அவர்கள் செய்கின்றனர். அவர்களின் நிலைப்பாட்டை தவறு என சொல்வதற்கு, எனக்கு உரிமை இல்லை.

அரசியல் களத்தில் மிகப் பெரிய மாற்றத்திற்கு, தமிழக மக்கள் காத்திருக்கின்றனர். நேர்மையான, ஓட்டுக்கு பணம் கொடுக்காத அரசியலுக்கு காத்திருக் கின்றனர் என, நான் உறுதியாக நம்புகிறேன்.

நேர்மையான முறையில் மக்களிடம் முறையிட்டு, அதன் வாயிலாக ஓட்டுகளை பெறுவதற்கு நேரம் வந்து விட்டது என்பது என் நிலைப்பாடு.

இதுபோன்ற அரசியல் முன்னெடுப்பில் மட்டுமே, என்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறேன்" என்று வேதனைப் பட்டுள்ளீர்கள்.

கடனாளியாகிவிட்ட உங்கள் நிலை - இந்தக் காவிக் கட்சி, குற்றவாளிகளின் கூடாரமாகத் திகழ்வதால் மேனாள் காவல் துறை அதிகாரியான நீங்களும் சேர்ந்து ஒரே கொடியைப் பிடிப்பதே ஒரு விசித்திர நகை முரண் அல்லவா?

மேலும் கூறியுள்ளீர்கள் -

"நேர்மையாக, நாணயமாக, பணம் இல்லாத அரசியலை முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் மாற்றம் என்பது, 1,000 ஆண்டுகளான பின்னும் நடக்காது என்ற, எண்ண ஓட்டத்திற்கு வந்து விட்டேன்.

கூட்டணி குறித்து அதற்கான நேரம் வரும் போது, எங்களது தலைவர்கள் தெரிவிப்பர். எந்தக் கட்சிக்கும், தலைவருக்கும் நான் எதிரி கிடையாது. மாற்றத்தை தர வேண்டும் என வந்து, சில தவறுகளை செய்ய நான் தயாராக இல்லை. நேரம் வரும் போது விவரமாகப் பேசுவேன்.

போலீசில் ஒன்பது ஆண்டுகளில் சம்பாதித்த பணம், அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட்டபோது செலவாகி விட்டது. தேர்தல் முடிந்த பின், நான் கடனாளியாக உள்ளேன். இந்த நேரத்தில், மீண்டும் லோக்சபா தேர்தலை சந்திக்க விரும்பவில்லை.

தமிழக அரசியல் களத்தில், லோக்சபா தேர்தலில், ரூ.80 கோடி முதல், 120 கோடி ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும் என்பது, பொது கணக்காக உள்ளது. இதை செய்து விட்டு, நேர்மையான அரசியல் என்று பேச முடியாது. அதற்கான உரிமையையும், தகுதியையும் இழந்து விடுவோம்.

தமிழக மக்கள் நேர்மையான அரசியலை பார்க்க விரும்புகின்றனர் என, என் உள்மனது சொல்கிறது. இது, என் தனிப்பட்ட கருத்து.

அரசியலில் இதற்கு மேலும் இருக்க வேண்டும் எனில், இந்த பாதையில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கத் துவங்கி விட்டேன்.

என்னை மாற்றிக் கொள்ள நான் விரும்பவில்லை. அப்படி மாறித் தான் அரசியலில் இருக்க வேண்டும் எனில், அப்படிப்பட்ட அரசியல் தேவை இல்லை என்ற முடிவுக்கும் வந்து விட்டேன்" என்று கூறியுள்ளீர்கள்.

அய்.பி.எஸ். பதவியும் போச்சே!

இரண்டொரு கேள்விகள் - நமக்கு பதில் அளித்தால் உங்களது சுய பரிசோதனைகளின்  சோர்வை நீக்கி - ‘மிஸ்டுகாலை' நம்பி, சொந்தக்காலில் இன்னும் நிற்க வைக்க முடியாத பொய்க்கால குதிரை கட்சியை நம்பி இப்படி சமூகநீதி உங்களுக்கு வழங்கிய அருட்கொடை யான அய்.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்து, ‘பிடிப்பதை எண்ணி இருந்ததை விட்டு விட்டு' இப்படி ஓலமிட்டுப் பேசுவது எவ்வளவு பெரிய தப்புக் கணக்கு - புரிகிறதா?

உண்மையான தேர்தல் செலவைக் காட்டுவோர் யார்?

மேலே காட்டிய பேட்டியில் பணம் செலவு செய்யாத தேர்தலையே விரும்பும் தங்களது லட்சியம் - இன்றைய தேர்தல் சட்டங்களும் அமைப்பும், நடைமுறையும் அமலில் இருக்கும் வரை நடைமுறை சாத்தியமா? சற்றே நிதானமாக யோசியுங்கள்!

மற்றெங்கும் போக வேண்டாம்!

நீங்கள் போட்டி போட்டுத் தோற்ற அரவக்குறிச்சி தொகுதித் தேர்தலில் ஈடுபட்டதனால் கடனாளியாகி விட்டேன் என்கிறீர்கள்!

தேர்தல் கமிஷன் ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலுக்கும் செலவழிக்க வேண்டிய உச்ச வரம்புத் தொகையை நிர்ணயம் செய்து தருகிறதே - அதற்கு உட்பட்டு தான் உங்கள் தொகுதியில் நீங்கள் செல வழித்தீர்களா? (40 லட்ச ரூபாய்)

செலவுக் கணக்குகளைத் தேர்தல் ஆணையத்துக்கு அளித்தபோது அப்படி ஒரு கணக்குகளைத் தான் வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த அத்துணை வேட்பாளர்களும் தருகிறார்கள்! அது, ஒரு நீதி மன்றத்தில் டிபென்ஸ் தரப்பு சாட்சியும் பிராசிக்கியூஷன் தரப்பு சாட்சியும் பெட்டியில் ஏறியவுடன் ‘கடவுள் சாட்சியாக உண்மை, உண்மையைத் தவிர வேறு இல்லை நான் சொல்வது' என்று கூறும் வழமை போல் ஒரு வெற்று சடங்குதான்!

உங்கள் மனச்சாட்சிப்படி, நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள் - அந்த உச்சவரம்புக்குள்தானா செல வழித்தீர்கள்?

நடந்த கதை எல்லாத் தொகுதிகளில் எப்படி என்பது நாடறிந்ததுதானே!

கருநாடகத்துக்குப் போய் யோசனை சொல்வீர்களா?

அப்புறம் என்ன தர்ம, நியாயம் பேசுவது? அதை விட்டுத் தள்ளுவோம் - வரப்போகும் கருநாடக மாநில தேர்தலில் பா.ஜ.க. மேற்பார்வையாளராக - பா.ஜ.க. பொறுப்பாளர் பதவியில் தங்களை போட்டுள்ளார்கள்! 

அங்கே இந்த யோசனையை செயலாக்கிக் காட்டி நாட்டையே இன்ப அதிர்ச்சியில் தள்ளலாமே, நீங்கள் செய்வீர்களா? அரிய வாய்ப்பாயிற்றே அரசியலைத் தூய்மைப்படுத்த!

அங்கேயுள்ள பா.ஜ.க. அரசுக்கு சுருக்கமான பெயர் ‘40 பர்சென்ட்' அரசு என்றுதானே எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல - மற்றவர்களும் சர்வசாதாரணமாக அழைக்கிறார்கள்!

ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ., பல கோடி ரூபாய் சம்பாதித்தது மட்டுமல்ல - அவர் மகன் வாங்கிய லட்சக்கணக்கான லஞ்சம் பிடிபட்டு, அவரே இராஜி னாமா செய்துவிட்டுப் போனார். அது மாதிரி இல்லாத சுத்த சுயம் பிரகாசமாக பாஜக சங்கிகளைத் தட்டிப் பார்த்து பாஜக வேட்பாளர் என்று அறிவிக்க முடியுமா?

தூய யோக்கியராகக் 

காட்டுவீர்களா?

கூட்டணியை முடிவு செய்வது மேலிடம் என்கிறீர்கள் - சரி - அகில இந்திய கட்சி - பின் உங்களுக்கு அங்கென்ன வேலை? - இப்படி ஒரு ‘தூய யோவான் நான்' என்று கூறி (தப்பு தப்பு யோவான் - கிறிஸ்தவர் ஆயிற்றே) தூய யோக்கியர் என்று காட்டி புகழேணியைப் பிடிக்க முடியுமா? முயற்சிப்பீர்களா? இப்போதைக்கு இது - தேவைப்பட்டால் மீண்டும் கடிதம் வரும் ‘எதிர்பாருங்கள்'

- கருஞ்சட்டை


No comments:

Post a Comment