பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையம் பி.பி.மண்டல் தலைமையிலானது பி.பி.மண்டல் அவர்களையும், குழுவினரையும் அழைத்து பெரியார் திடலில் வரவேற்பு கொடுத்தோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 13, 2023

பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது ஆணையம் பி.பி.மண்டல் தலைமையிலானது பி.பி.மண்டல் அவர்களையும், குழுவினரையும் அழைத்து பெரியார் திடலில் வரவேற்பு கொடுத்தோம்!

50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற உச்சநீதிமன்றம், உயர்ஜாதிக்கு 10 % கொடுத்து 60% ஆக்கிவிட்டது!

இப்பொழுது நமது உரிமைப் போர் என்ன?

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை 27%-லிருந்து 52% ஆக்குவதே!

ஆந்திர மாநிலம் குண்டூரில் பி.பி.மண்டல் சிலையை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை

குண்டூர், பிப்.13  50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று சொன்னது உச்சநீதிமன்றம். உயர்ஜாதி ஏழைகளுக்கு என்ற பெயரால் தனியே 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அளித்து மொத்த இட ஒதுக் கீடு அய்ம்பதையும் தாண்டி 60 சதவிகிதமாக ஆக்கி யுள்ளது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் என்பதை 52 சதவிகிதமாக ஆக்குவதற்காகப் போராடுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பி.பி.மண்டல் சிலை திறந்து 

தமிழர் தலைவர் சிறப்புரை

நேற்று (12.2.2023) முற்பகல் ஆந்திர மாநிலம்  குண் டூரில் சினிஸ் ஸ்கொயர் முக்கிய சாலையில் பி.பி.மண்டல் சிலையைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

வரலாற்று நாயகர் பி.பி.மண்டல்

பேரன்புமிக்க சமூகநீதி வரலாற்றில், இந்தியாவிலேயே வேறு எவரும் பெறாத பெருமை, பீகாரில் நம்முடைய வரலாற்று நாயகராக இருக்கக்கூடிய பி.பி. மண்டல் அவர்கள், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கான ஓர் அரசமைப்புச் சட்ட ஆணையத்தை அமைத்த நேரத்தில், அவர் கொடுத்திருக்கின்ற அறிக்கை இருக்கிறதே, அந்த அறிக்கை ஒரு வரலாற்றுப் பூர்வமான அறிக்கையாகும்.

அந்த அறிக்கை செயலான நிலையில்தான், இன்றைக்கு இந்தியா முழுவதும் அதிகாரப்பூர்வமாக இதற்கு முன், சுதந்திரம் பெற்ற பிறகு, இதுவரையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாத காலகட்டத்தில், முதன் முறையாக, இவருடைய பரிந் துரையால் அமலாகி, 27 சதவிகித இட ஒதுக்கீட்டை இன்றைக்கு இந்தியா முழுவதும் அனுபவிக்கிறோம் என்றால், இங்கே சிலையாக இருக்கிறாரே, அந்த பி.பி.மண்டல்தான் காரணம்; அவருக்கு சிலை எடுத்த உங்களையெல்லாம் பாராட்டுகிறோம்.

உங்களைப் பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம், 

நன்றி செலுத்துகின்றோம்

இங்கே வீற்றிருக்கின்ற அத்துணை தலைவர்கள், இந்தியா முழுவதுமிருந்து வந்திருக்கக்கூடிய பிற்படுத்தப் பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் முதற்கொண்டு, என்னுடைய அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் உள்பட, தமிழ்நாடு உள்பட எல்லா மாநிலங் களிலிருந்தும் நீங்கள் அழைத்திருக்கின்றீர்கள்; எங்களை நீங்கள் பெருமைப்படுத்துவதைவிட, உங் களை நாங்கள் பெருமைப்படுத்தி, நன்றி செலுத்த வேண்டும்; ஆந்திர மாநில நண்பர்கள்; குறிப்பாக குண்டூர் தமிழர்களான டாக்டர் அவர்களும், மற்றவர் களும் முயற்சி எடுத்து, முதல் முறையாக இந்தியா விலேயே வேறு மாநிலங்கள் பெறாத சிறப்பை ஆந்திர மாநிலம் பெற்றிருக்கிறது; குண்டூர் பெற்றிருக்கிறது. நீங்கள்தான் பி.பி.மண்டலுக்கு சிலையை இன்றைக்குத் திறந்திருக்கின்றீர்கள்.

அதற்காக சமூகநீதி மண்ணான, பெரியார் மண்ணான தமிழ்நாடு மக்கள் சார்பாக மட்டுமல்ல; இந்தியா முழு வதும் உள்ள கோடான கோடி பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் சார்பாக உங்களைப் பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம், நன்றி செலுத்துகின்றோம்.

எனக்கு முன்பு இங்கே வரவேற்புரையாற்றிய அருமைச் சகோதரர் சொன்னார்கள், சகோதரர்களே, சகோதரிகளே என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

நாடாளுமன்றத்தையே பார்க்காமல் முடங்கிப் போனது காகாகலேல்கர் கமிஷன்

அரசமைப்புச் சட்டப்படி, நிர்ணயிக்கப்பட்ட, நியமிக் கப்பட்ட ஆணையம் இந்த மண்டல் ஆணையம். ஆனால், அந்த மண்டல் ஆணையம், 10 ஆண்டுகளாக, நாடாளுமன்றத்தையே சந்திக்கவில்லை. அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தை நடைமுறையில் சந்திக்காதது மட்டு மல்ல - இங்கே சுட்டிக்காட்டியபடி, முன்பு வந்திருக்கக் கூடிய காகாகலேல்கர் கமிஷன், நாடாளுமன்றத்தையே பார்க்காமல் முடங்கிப் போனது. 

ஆனால், மண்டல் ஆணைய அறிக்கை அப்படியல்ல - மண்டல் அறிக்கையை வெளியே கொண்டு வரு வதற்காக - எங்களைப் போன்றவர்கள், மற்றவர்கள், வடபுலத்தில் இருந்த அத்துணை பேரும், ஒரு பக்கத்தில் சந்திரஜித் யாதவ் போன்றவர்கள், இன்னொரு பக்கத்தில் தாம்பிரகாஷ் போன்றவர்கள், ராம்விலாஸ் பஸ்வான் போன்றவர்கள் வேறுபாடில்லாமல் நாடாளுமன்றத்திற் குள்ளேயும், வெளியேயும் பணி செய்தோம். கருநாடக மாநிலத்தில் தேவராஜ் அர்ஸ் அவர்களை அழைத்து மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் சென்னையில் மாநாட்டை நடத்தினோம்.

42 மாநாடுகள், 16 போராட்டங்கள்!

இந்தியா முழுவதும் 42 மாநாடுகளையும், 16 போராட் டங்களையும் நடத்தினோம். தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

அதன் காரணமாக, இன்றைக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அனுபவிக்கக் கூடிய அளவிற்கு, அது நடைமுறையாக 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அன்றைய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மண்டல் ஆணையக் குழுவிற்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு - சென்னை பெரியார் திடலில்!

இந்தியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது ஆணையத்தின் தலைவரான பி.பி.மண்டல் தமிழ்நாட் டிற்கு வந்தார். அப்பொழுது எம்.ஜி.ஆர். அரசு தமிழ்நாட் டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், அரசு சார்பாக கருத்தை அறிவதற்காக, பி.பி. மண்டல் அவர்களும், ஆணைய உறுப்பினர்களும் வந்த நேரத்தில் - பெரியார் திடலுக்கு வரவேண்டும்;  திராவிடர் கழகத் தலைமை நிலையத்திற்கு வரவேண்டும் - அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கவேண்டும் என்று - நாங்கள் ஏற்பாடு செய்து - பெரியார் திடலுக்கு 1978 இல் அவர்கள் வந்தபொழுது, அவர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான வரவேற்பைக் கொடுத்தோம்.

மண்டல் கூறியது என்ன?

அப்பொழுது மண்டல் என்ன பேசினார்?

மண்டல் எங்களைப் பார்த்துச் சொன்னார், ‘‘மண்டல் ஆணையத்தின் சார்பில் நாங்கள் அறிக்கை கொடுத்து விடுவோம்; ஆனால், என்ன நடக்கும் என்று சொன்னால், ஏற்கெனவே காகாகலேல்கர் ஆணைய முதல் அறிக் கையை, வெளிச்சத்தையே பார்க்காமல், இருட்டில் குழிதோண்டி புதைத்துவிட்டார்கள். அதே நிலை மண்டல் அறிக்கைக்கும் ஏற்படக் கூடாதென்றால், உங்களைப் போன்ற போராளிகளின் கைகளில்தான் இருக்கிறது; நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போரா டினால்தான், அந்த அறிக்கையை செயல்படுத்துவார்கள் என்று சொன்னார்.

ஒன்றாக இணைந்து 

போராட்டம் நடத்தினோம்!

அதற்காக 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில், இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இடையறாமல், இன் றைக்கு நீங்கள் ஒன்று சேர்ந்திருப்பதைப்போல, நாம் ஒன்று சேர்ந்திருப்பதைப்போல, ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தினோம்.

அதனுடைய விளைவுதான் நண்பர்களே, 1980 ஆம் ஆண்டு மண்டல் அறிக்கை கொடுக்கப்பட்டது. வெளிச் சத்தைப் பார்க்க முடியாமல் இருந்தது. அதற்குப் பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஆணையம் நடைமுறைக்கு வந்தது.

மண்டல் ஆணைய அறிக்கையைப் புதையுங்கள்! என்று தலையங்கம் எழுதியது பார்ப்பன நாளிதழ்!

உயர்ஜாதிக்காரர்கள், ஏற்கெனவே வசதியாக, இட ஒதுக்கீடு தராமல், எதிர்த்துக் கொண்டிருக்கின்ற பார்ப் பனர்கள், அவர்களுடைய ஆங்கில நாளேட்டில், மண்டல் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படு வதற்கு முன்பாகவே தலையங்கம் எழுதினார்கள்.

Burry the Mandal Commission  என்று சொன்னார்கள்; மண்டல் ஆணைய அறிக்கையைப் புதையுங்கள்! என்ற தலைப்பில். 

உடனே நாங்கள் முழக்கம் எழுப்பினோம் Hurry the Mandal Commission  என்று நாங்கள் சொன்னோம்.  விரைவுபடுத்துங்கள், மண்டல் கமிசனை நீங்கள் புதைக்க முடியாது; அப்படி புதைத்தாலும் மீண்டும் எழுந்து வரும். ஆகவே, விரைவுபடுத்துங்கள் என்று சொல்லித்தான், தொடர்ந்த போராட்டத்தினால், அது நடைமுறைக்கு வந்தது. 27 சதவிகித இட ஒதுக்கீட்டின் சுருக்கமான வரலாறு இது.

50 சதவிகிதத்திற்குமேல் 

இட ஒதுக்கீடு போகக்கூடாதாம்!

நாம் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களெல்லாம் எஸ்.டி., எஸ்.சி., ஓ.பி.சி. என்று இருந்தாலும், அவர்கள் எல் லோரும் ஒன்றாக இணையவேண்டும்; ஒன்றாக இட ஒதுக்கீட்டைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான் நண்பர்களே, 27 சதவிகித இட ஒதுக்கீட்டை எப்படி நாங்கள் கணக்கிட்டோம் என்று சொன்னால், 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் - 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது  என்று உச்சநீதிமன்றத்தில், அவர்களே ஒரு தீர்ப்பு எழுதிவிட்டார்கள். அரசமைப்புச் சட்டத்தில் அதுபோன்று எதுவும் கிடையாது.

50 சதவிகித இட ஒதுக்கீட்டில் ஏற்கெனவே, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 22.5 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது.

ஆகவே, 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் 22.5 சதவிகிதத்தைக் கழித்தால், 27 சதவிகிதம்.

மண்டல் அவர்களுடைய விருப்பம் -உயில்!

அப்படித்தான், 52 சதவிகிதமாக இருக்கக்கூடியவர் களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொடுத்து, நாம் ஒருவருக்கொருவர் முரணல்ல. எல்லோரையும் அணைத்துச் செல்கிறோம் என்கின்ற காரணத்தினால் தான், இன்றைக்கு நாம் அத்துணை பேரும் ஒன்றாக இருக்கிறோம்; நம்மில் யாரும் பிரிவினை செய்யவேண் டிய அவசியமில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள், சமூக அநீதிக்கு ஆளானவர்கள் அத்துணைப் பேரும் ஒன் றாகச் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும்; இதுதான் மண்டல் அவர்களுடைய விருப்பம் -உயில் ஆகும்.

இன்றைக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு உயர்ஜாதி யினருக்கு - அதுவும் எல்லா ஏழைகளுக்கும் அல்ல; உயர்ஜாதி ஏழைகளுக்கு.

27 சதவிகிதத்தை 52 சதவிகிதமாக ஆக்குங்கள் என்பதுதான் இந்த மாநாட்டினுடைய கோரிக்கை!

10 சதவிகித இட ஒதுக்கீடு என்று சொல்லி, இன்றைக்கு 60 ஆக்கிவிட்டார்கள். எனவே, அந்த 50 உடைந்து விட்டது. அப்படியானால், நம்முடைய இந்த மாநாட்டுக் கோரிக்கை என்னவாக இருக்கவேண்டும் என்றால், 27 சதவிகிதத்தை 52 சதவிகிதமாக ஆக்குங்கள்; 50 சத விகிதத்தைத் தாண்டுங்கள் என்று கேட்கவேண்டியது - இந்த மாநாட்டினுடைய கோரிக்கையாக அமைய வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே! 27 சதவிகிதத்தை எழுத்திலே கொடுத்திருக்கிறார்களே தவிர, நடைமுறையில் இன்னும் அமலாகவில்லை என்பதுதான் உண்மை.

உயர்ஜாதிக்காரர்கள்தான் இன்னமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்

தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டவுடன், 27 சதவிகிதத்தை நிரப்பவில்லை; வெறும் 12, 14 சத விகிதத்தைத்தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். 27 சதவிகிதம் எழுத்தில் இருக்கிறது; நீர் எழுத்தாக இருக் கிறது; நடைமுறையில் நம்மை ஏமாற்றி, அதிலேயும் உயர்ஜாதிக்காரர்கள்தான் இன்னமும் ஆதிக்கம் செலுத் திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த 27 சதவிகிதம் கிடைக்கவில்லை என்பது மட்டு மல்ல; 23 சதவிகிதத்திலும், எஸ்.சி., எஸ்.டி., என்ற நம்மு டைய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு இடமில்லை.

நேரத்தின் நெருக்கடியினால் இரண்டே இரண்டு செய்திகளை சொல்ல விரும்புகின்றேன்.

27 சதவிகித இடஒதுக்கீடும் 

கிடைக்காத நிலையை உருவாக்குகிறார்கள்!

நமக்குப் பொதுத்துறையில், மண்டல் ஆணைய அறிக்கை வந்த பிறகுதான், அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக, அய்.பி.எஸ். அதிகாரிகளாக பிற்படுத்தப்பட்டவர்கள் வர முடிந்தது; மண்டல் அறிக்கை வரவில்லையானால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அந்த இடங்கள் கிடைத் திருக்காது.

ஆனால், வங்கிகளில் இடம் கிடைத்தது. இதை யெல்லாம் இன்றைய ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்றால், தனியார் மயமாக்கி, கார்ப்பரேட் மயமாக்கி, அதில் இட ஒதுக்கீடு இல்லாமல், 27 சதவிகித இடஒதுக் கீடும் கிடைக்காத நிலையை உருவாக்குகிறார்கள்.

எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தனி யார்த் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது இந்த மாநாட்டினுடைய கோரிக்யை£க இருக்கவேண்டும்.

இறுதியாக ஒன்று, எல்லா சட்டமும் செல்லும், செல்லாது என்பது இருக்கிறதே - அதை உச்ச, உயர்நீதி மன்றங்கள்தான் சொல்லுகின்றன.

ஆனால், உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நிய மனத்தில் இட ஒதுக்கீடு கிடையாது.

உச்சநீதிமன்றத்தில் உள்ள 34 நீதிபதிகளில், 30 இடங்களில் உயர்ஜாதிக்காரர்களாகத்தான் இருக் கிறார்கள். 79 சதவிகிதம் அவர்கள்தான் இருக்கிறார்கள். எஸ்.சி., எஸ்.டி., பி.சி. பிரிவினருக்கு 2 சதவிகிதம்தான்.

உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனங்களில் இட ஒதுக்கீடு தேவை

எனவே, தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு தேவை என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோலத்தான் நண்பர்களே, உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத் திலும் நீதிபதிகள் நியமனங்களில் இட ஒதுக்கீடு தேவை, தேவை என்பதை இந்த மாநாட்டில் நீங்கள் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிறோம்.

பெரியார் பூமியிலிருந்து 

உங்களுக்கு வாழ்த்துகள்!

பெரியார் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்த்துகள்!

நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்!

எது உங்களை இணைக்கிறதோ, அதை பல மாக்குங்கள்; 

எது பிரிக்கிறதோ, அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்!

இங்கே பலதரப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த மக்கள் வந்திருக்கிறார்கள்; அவர்களைப் பாராட்டுகிறோம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.


No comments:

Post a Comment