மக்களவையில் பிரதமரை திக்குமுக்காடச் செய்த ராகுல் காந்தியின் கேள்விக் கணைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 8, 2023

மக்களவையில் பிரதமரை திக்குமுக்காடச் செய்த ராகுல் காந்தியின் கேள்விக் கணைகள்!

 * உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609 ஆம் இடத்திலிருந்த அதானி 2 ஆம் இடத்திற்கு வந்தது எப்படி?

* எத்தனை முறை அதானி பிரதமரோடு வெளிநாட்டுக்குப் பயணித்தார்?

* பி.ஜே.பி.க்கு அதானி கொடுத்த தொகை எவ்வளவு?

* அனாமதேய நிறுவனங்கள் நடத்தும் அதானிபற்றிய விவரம் என்ன?

புதுடில்லி, பிப்.8 உலகப் பணக்காரர்கள் வரிசையில் 609 ஆம் இடத்திலிருந்த அதானி 2 ஆம் இடத்திற்கு வந்தது எப்படி?  எத்தனை முறை அதானி பிரதம ரோடு வெளிநாட்டுக்குப் பயணித்தார்? பி.ஜே.பி.க்கு அதானி கொடுத்த தொகை எவ்வளவு? அனாமதேய நிறுவனங்கள் நடத்தும் அதானிபற்றிய விவரம் என்ன?மக்களவையில் பிரதமரை திக்குமுக்காடச் செய்தன ராகுல் காந்தியின் கேள்விக் கணைகள்!.

அதானி குழும மோசடி நாட்டில் கொழுந்து விட்டெரியும் பிரச்சினையாக இன்று ஆகிவிட்ட நிலையில், நேற்று (7.2.2023) நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை தன் கேள்விக் கணைகளால் உலுக்கியெடுத்துள்ளார் ராகுல் காந்தி.

அதானி குழுமத்திற்கு அயல்நாட்டு அனாமதேய நிறுவனங்களிலிருந்து பணம் ஆறாக ஓடிப் பாய்ந்தது பற்றி மோடி அரசு ஏன் புலனாய்வு செய்யவில்லை என்பது ராகுலின் முதல் கேள்வி.

''பல நிறுவனங்களை கூட்டுக் கலவையாக வைத்துக் கொண்டுள்ள கவுதம அதானி, இந்தியத் துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்துவிட்டார். நாட்டின் பாதுகாப்பு சார்ந்த உற்பத்திகளில் அவ ருடைய செயல்பாடுகள் அச்சம் விளைவிக்கின்றன. எனவே, இது தேசியப் பாதுகாப்புப் பிரச்சினையாகி விட்டதை மறுக்க முடியாது'' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் ராகுல்.

''சில நாள்களுக்கு முன் ஹின்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது. அதானிக்குச் சொந்தமான பல அனாமதேய போலி நிறுவனங்கள் அயல்நாடுகளில் உள்ளதை அந்தத் தகவல் அறிக்கை சுட்டிக்காட்டி யுள்ளது. அவை பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன. அதெல் லாம் யாருடைய பணம்? அந்த நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் யார்?'' என்று ராகுல் கேட்டார்.

ஒன்றிய அரசு ஏன் இதுவரை விசாரிக்கவில்லை

''தனக்கே உரிய வணிகத் தந்திரத்துடன் அதானி பல வியாபாரத் துறைகளில் ஈடுபட்டுள்ளார். பல இந்தியத் துறைமுகங்களிலும், விமான நிலையங் களிலும் அவருடைய ஆதிக்கம் காணப்படுகிறது. அயல்நாட்டு அனாமதேய நிறுவனங்கள் குறித்து ஒன்றிய அரசு ஏன் இதுவரை விசாரிக்கவில்லை என்பதே என் கேள்வி'' என்று ராகுல் கூறியுள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்தல் நிறைவுற்ற பிறகு, அவையில் நடந்த விவாதத்தின்போது ராகுல் இவ்வாறு கேள்வி எழுப்பி, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதானி குழும மோசடி குறித்து ஆராய்ந்து விசாரிக்க 'நாடாளுமன்ற கூட்டுக் குழு'' (யிஷீவீஸீt  றிணீக்ஷீறீவீணீனீமீஸீtணீக்ஷீஹ் சிஷீனீனீவீttமீமீ - யிறிசி) ஒன்று அமைக்கப்படவேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ''ஜேபிசி, ஜேபிசி!'' என்று அவையில் குரலெழுப்பினர்.

அனாமதேய போலி நிறுவனங்கள் 

உண்மையில் யாருக்குச் சொந்தமானவை!

''வணிகத் தந்திரத்தால் இயங்கிவரும் அதானி நிறுவனங்களில் வேறு பல நிறுவனங்களுக்கும் தொடர்பு உண்டு. அத்தகைய நிறுவனங்களில் யாருடைய நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன? ஒன்றிய அரசுக்கு அந்த நிறுவனங்கள்பற்றி எதுவும் தெரியவில்லை. இது நாட்டின் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினை. அத்தகைய நிறுவனங்கள்பற்றி உங்களுக்கு எப்படித் தெரியாமல் போகலாம்? எவ்வளவு பணம் உள்ளே பாய்கிறது? அது யாருடைய பணம்? இந்த அனாமதேய போலி நிறுவனங்கள் உண்மையில் யாருக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறிய வேண்டியது ஒன்றிய அரசின் கடமை'' என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியிடமிருந்து 

எந்தவிதமான பதிலும் இல்லை

அமெரிக்க நிறுவனமான ஹின்டன்பர்க் அதானி குழும மோசடிகள் குறித்து ஆய்வு நடத்தி கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியிட்ட தகவல் அறிக்கைக்கு இன்று வரை பிரதமர் மோடியிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. அந்த அறிக்கையின்படி அதானி குழுமம் கணக்கு வழக்குகளில் மோசடி செய்துள்ளது. வரி வருமானம் அளிக்கக் கூடிய  அயல்நாட்டு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளது அதானி குழுமம். இதனால், அதானி குழுமத்தின் மதிப்பு பங்குச் சந்தையில் பாதியாகக் குறைந்துள்ளது. இச்சரிவின் விளைவாக இருபதாயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பங்குகளின் விற்பனையையே அதானி குழுமம் கைவிட்டுள்ளது.

அதானி குழுமமோ ஆய்வு அறிக்கை கூறும் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்துள்ளது. ஆனால், மக்களவையில் ராகுல் பல விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார். 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பொறுப்பேற்ற நாளிலிருந்து அதானி குழுமம் படிப்படியாக அடைந்த வளர்ச்சி குறித்தும், அதன் அபாரமான முன்னேற்றம் குறித்தும் புள்ளி விவரங்களை ராகுல் மக்களவையில் வழங்கியுள்ளார்.

தொழிலதிபர் அதானியின் 

வெற்றி ரகசியம் என்ன? 

''கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை நான் மேற்கொண்ட நடைப்பயணத்தின் போது வழிநெடுகிலும் நான் சந்தித்த மக்களோடு நான் உரையாடியபோதெல்லாம் அவர்கள் உச்சரித்த ஒரே பெயர் ''அதானி.'' அவரைப் பற்றியே மக்களின் உரையாடல் பெரும்பாலும் இருந்தது. தொழிலதிபர் அதானியின் வெற்றி ரகசியம் என்ன? என்பதைத் தெரிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டினர். நுழைந்த ஒவ்வொரு துறையிலும் அதானி அபார வளர்ச்சியடைந்ததன் மர்மம் என்னவென்று கேட்டு மக்கள் என்னைத் துளைத்தெடுத்தனர்'' என்று ராகுல் கூறியுள்ளார்.

எப்படி என்பதே புரியாத புதிர்!

அவர் மேலும் கூறியதாவது:

''இன்று அதானியின் ஆதிக்கமும், ஆக்கிரமிப்பும் இல்லாத துறையே நாட்டில் இல்லை. அதானியின் சொத்து மதிப்பு ரூ.800 கோடியிலிருந்து ரூ.140 ஆயிரம் கோடியாக எப்படி திடீரென்று உயர்ந்தது என்று பொதுமக்கள் என்னைக் கேட்டார்கள். 2014 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களின் பட்டியலில் அதானி 609 ஆம் இடத்தில்தான் இருந்தார். என்ன மாயமோ தெரியாது - 2023 ஆம் ஆண்டில் அவர் 2 ஆம் இடத்திற்கு வந்தார். எப்படி என்பதே புரியாத புதிர்!''

என்ன நடந்திருக்கும் என்பதற்கு ராகுல் இரண்டு உதாரணங்களை எடுத்துரைத்தார். விமான நிலையங்களை தனியார்க்குத் தாரை வார்த்த விவகாரத்திலிருந்து தொடங்கினார் ராகுல்.

''விமான சேவையில் அனுபவம் இல்லாத எவருக்கும் ஒப்பந்தம் அளிக்கப்படக் கூடாது என்ற விதியை மீறி அதானிவசம் ஆறு விமான நிலையங்கள் ஒப்படைக்கப்பட்டன'' என்றார் ராகுல்.

அமைச்சர்களின் எதிர்ப்புக் குரலையும் மீறி ராகுல்காந்தி தொடர்ந்து பேசினார்.

''விமானப் போக்குவரத்தில் 24 சதவிகிதம் இன்று அதானியின் கைவசம். விமான சேவைமூலம் கிடைக்கும் நிகர வருமானத்தில் 31 சதவிகிதம் அதானிக்குப் போய்ச் சேருகிறது. இந்தியப் பிரதமரின் உபயம் இது.''

அரசு செலவில் வெளிநாடு போவது பிரதமர் மோடி- 

வியாபார ஒப்பந்தமோ அதானிக்கு!

ராகுல் மேலும் கூறியதாவது:

''அதானிக்கு ராணுவ விவகாரங்களில் முன் அனுபவம் ஏதுமில்லை. ஆனால், இஸ்ரேல் நாட்டின் எல்பிட் என்னும் நிறுவனத்துடன் இணைந்து ட்ரோன்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இஸ்ரேலுக்குப் போவது மோடி, வியாபார ஒப்பந்தம் கிடைப்பது அதானிக்கு. ராணுவத்திற்குப் பயன்படும் ஆயுதங்கள், தளவாடங்களையெல்லாம் அதானி தயாரித்துக் கொண்டிருக்கிறார். இந்திய - இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தமும் அதானியின் கையில்! ஆல்ஃபா டிசைன் என்னும் பிரபலமான நிறுவனத்தையும் அதானி கபளீகரம் செய்துவிட்டார்.''

ஒரு காற்றாலை நிறுவனத் திட்டத்தையும் மோடிமூலம் அதானி பெறப் போகிறார்!

ராகுல்காந்தி மேலும் கூறியதாவது:

''பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றபோது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஅய்) அதானிக்கு ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. இதன் மர்மம்தான் என்ன? மின்சாரம் விற்க பங்களாதேசத்துடன் மோடி ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சில நாள்களிலேயே பங்களாதேசம் அதானியோடு 25 ஆண்டுகாலத்திற்கு ஒப்பந்தம் செய்துகொண்டு கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புதிர்களையெல்லாம் விடுவிப்பாரா பிரதமர் மோடி?'' இதெல்லாம் போதாதென்று, ''ஒரு காற்றாலை நிறுவனத் திட்டத்தையும் மோடிமூலம் அதானி பெறப் போகிறார். எனக்கு ஆதாரப்பூர்வமான தகவல் கிடைத்துள்ளது.''

தொடர்ந்து ராகுல் கூறியதாவது:

''இவை யாவும் இந்தியாவின் அயல்நாட்டு வணிகத் திட்டங்களோ, கொள்கைத் திட்டங்களோ அல்ல. அவ்வளவும் அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள்!

ஒரு நாட்டு அரசாங்கத்தின் அதிகாரமும், 

வளமும் ஒரு தனி மனிதரின் வணிக வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படும், பயன்படுத்தலாம்

ஹார்வர்டு மேலாண்மைக் கல்வி நிறுவனம் போன்ற வணிகம்  குறித்த கல்வி நிலையங்கள் இவற்றையெல்லாம் தங்கள் ஆய்வுக்குப் பாடங்களாகப் பயன்படுத்திக் கொண்டால் நல்லது. ஒரு நாட்டு அரசாங்கத்தின் அதிகாரமும், வளமும் ஒரு தனி மனிதரின் வணிக வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படும், பயன்படுத்தலாம் என்பதையெல்லாம் கற்றுத்தர நம் நாட்டின் அவல நிலை அவர்களுக்கு உதவும்.''

தனியார்த் துறை வங்கிகள் அதானி குழுமத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளன என்ற புள்ளி விவரத்தையும் ராகுல் மக்களவையில் வெளியிட்டார்.

எஸ்.பி.அய். - ரூ.27,000 கோடி.

பஞ்சாப் நேஷனல் வங்கி- ரூ.7,000 கோடி

பாங்க் ஆஃப் பரோடா - ரூ.5,500 கோடி

பட்டியல் இன்னும் நீளும் என்றார் ராகுல்.

எல்.அய்.சி.யின் 36,000 கோடி ரூபாய் விவகாரமும் பட்டியலில் உள்ளது என்றார் அவர்.

பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கருத்து

ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:

2022 ஆம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் உலகிலேயே பசுமை ஹைட்ரஜன் சூழல் திட்டத்தைத் தொடங்குவதாக அதானி அறிவித்தார். அந்தத் திட்டத்திற்கு ரூ.19,700 கோடி  ஊக்கத் தொகை வழங்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெரிவித்துள்ளார். அதாவது அதானிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 

தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அதானிக்கு 50 புதிய விமான நிலையங்கள், கடற்புர கப்பல் போக்குவரத்து, தோட்டக்கலை விளைபொருள் சேமிப்பு நிறுவனங்கள் அமைத்திட உறுதி அளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் மேலும் கூறுகிறார்:

குஜராத் அரசுக்கு ஒரு முதுகெலும்புபோல இருந்தார் அதானி!

அதானிக்கும், மோடி அவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள்; 

''மோடிக்கும், அதானிக்கும் உள்ள தொடர்புபற்றி நாட்டு மக்களுக்கு நான் விளக்கிச் சொல்கிறேன். அவர்களுக்கிடையிலான தொடர்பு பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. அப்பொழுது மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தார். இந்தியாவிலுள்ள தொழிலதிபர்கள் மோடிக்கு எதிராக கேள்விகள் தொடுத்தபொழுது, மோடியின் தோளோடு தோள் கொடுத்து அதானி துணை நின்றார். மோடிக்கு விசுவாசமான அந்த நிலை பாராட்டப்பட்டது.

குஜராத் மாநிலம் ஏற்றம் கொள்ள திட்ட நிர்மாணத்திற்கு மோடிக்கு உதவியாக அதானி இருந்தார். தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து 'துடிப்பான குஜராத்' என  அரசுக்கு ஒரு முதுகெலும்புபோல இருந்தார். இதன் முடிவு என்னவென்றால், குஜராத்தில் அதானியின் வியாபாரம்தான் மிகப்பெரிதாக வளர்ந்தது. முழுமையான ஜாலம் மோடி 2014 ஆம் ஆண்டில் டில்லிக்கு வந்தபொழுதுதான் வெளிக்கிளம்பியது.

அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு தனி நபர் விவாதத்தை அரசு அளிக்க முன்வராது என்பதை உணர்ந்த நிலையில், குடியரசுத் தலைவரின் உரைகுறித்து பேசுகையில், அதானி விவகாரம் பற்றி தொடர்ந்து பேசினார். 

குடியரசுத் தலைவரின் உரைபற்றிப் பேசுகையில், அதானிபற்றிய விசயத்தை மட்டும் பேசுவது சரியல்ல என்று அவைத் தலைவர் எடுத்துரைத்தாலும், ராகுல் காந்தி முழுமையாக தனது பேச்சினை முடிக்க அனுமதித்தார். குஜராத்தில் தொடங்கியது, 2014 இல் தேசிய விவகாரமாகி, இன்று அகில உலக விவகாரமாகி விட்டது.

பிரதமர் மோடிக்கு நமது கேள்விகள்!

இதுகுறித்து பிரதமர் பதிலளிப்பார் என கருதுகிறேன்.  அவருக்கு நமது கேள்விகள்:

* எத்தனை முறை நீங்கள் (பிரதமர்) அதானியுடன் வெளிநாட்டுக்குப் பயணம் செய்தீர்கள்?

* எத்தனை முறை உங்களது பயணத்தில் அதானி பின்னர் சேர்ந்து கொண்டார்?

* எத்தனை முறை நீங்கள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்த பிறகு, அதானி அந்த நாட்டிற்குச் சென்றார்?

* எத்தனை நாடுகள், உங்களது பயணத்திற்குப் பின்னர் அதானியுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டன?

முக்கியமான கேள்வி:

* எவ்வளவு பணத்தை அதானி கடந்த 20 ஆண்டுகளில் பாரதீய ஜனதா கட்சிக்குக் கொடுத்துள்ளார்?

* எவ்வளவு பணம் கட்சிக்கு தேர்தல் பத்திரத்தின்மூலம் நன்கொடையாக அளிக்கப்பட்டது?

முன்னர் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் குறிப்பிட்டதை மறுபடி குறிப்பிடுகிறேன்.

ஒன்றாக இணைவது தொடக்கம்

ஒன்றாக இருப்பது முன்னேற்றம்

ஒன்றாகப் பணியாற்றுவது வெற்றி

அதானிஜி, மோடிஜி உங்கள் இருவருக்கும் நன்றி!''

- இவ்வாறு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

ராகுலின் பேச்சும், கேள்விகளும் நாடாளுமன்ற மக்களவையில் புயலையே கிளப்பிவிட்டது என்றாலும், மிகையாகாது.


No comments:

Post a Comment