உச்ச - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 20, 2023

உச்ச - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி.,

 தமிழர் தலைவர் வாழுங்காலத்திலேயே சமூகநீதிக்கான அரணைப் பாதுகாக்கவேண்டும்!

உச்ச - உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளில் சமூகநீதி என்பது அவசியம் தேவை!

சென்னை, பிப்.20  தமிழர் தலைவர் வாழுங்காலத்திலேயே சமூகநீதிக்கான அரணைப் பாதுகாக்கவேண்டும்! உச்ச - உயர்நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளில் சமூகநீதி என்பது அவசியம் தேவை என்றார் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள்.

சமூகநீதிகோரி ஆர்ப்பாட்டம்!

கடந்த 11.2.2023 அன்று முற்பகல் 11 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே  ‘‘உச்ச - உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கமா? தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவது ஏன்?’’சமூகநீதி கோரி திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்   விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆர்ப்பாட்டத்தில், சென்னையில் தலைமை தாங்கி இதனை நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் பெருமதிப் பிற்குரிய அண்ணன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இங்கே உரையாற்றி அமர்ந்திருக்கின்ற பெருமதிப்பிற்குரிய தோழர் மு.வீரபாண்டியன் அவர்களே,

திராவிடர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகி களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தோழமை இயக்கங்களைச் சார்ந்த பொறுப்பாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர் அவர்களின் குரல் 

முதல் குரல் - போர்க் குரல்!

சமூகநீதிக்கான களத்தில், எப்பொழுதும் அய்யா ஆசிரியர் அவர்களின் குரல் முதல் குரல் - போர்க் குரல் என்பதை நாம் அறிவோம்.

இன்றைக்கு உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதில் நிகழ்ந்திருக்கின்ற அநீதியைக் கண்டிக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும் திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங் களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பேசக்கூடிய ஓர் அரிய வாய்ப்பை வழங்கியமைக்காக தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு முதலில் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம்

உச்சநீதிமன்றத்திலும் சரி, உயர்நீதிமன்றத்திலும் சரி இன்னும் விளிம்பு நிலை மக்களுக்கான பிரதிநிதித்துவம் கிட்டவில்லை. அதற்கு நாம் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம்.

தந்தை பெரியார் - 

தமிழர் தலைவர் ஆகியோருக்கு 

நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம்

தந்தை பெரியார் அவர்களுடைய சமூகநீதிக்கான இந்தப் போராட்டம் இன்றைக்குத் தமிழர் தலைவர் அவர்களின் தலைமையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய தொடர் போராட் டங்களின் விளைவாகத்தான், நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓ.பி.சி. சமூகத்தைச் சார்ந்தவர்களும், பட்டியல் பழங்குடி சமூகங்களைச் சார்ந்தவர்களும், இஸ்லாமியர், கிறித்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களும் இன்றைக்கு நீதிபதிகளாகப் பொறுப்பேற்கக்கூடிய, மிகமிக சொற்பமான அளவு என்றாலும்கூட, அந்த வாய்ப்பை இன்றைக்கு நாம் பெற்றிருக்கின்றோம். அதற்காக நாம் இந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கும், தொடர் போராட்டத் தில் களத்தில் நின்று கொண்டிருக்கிற தமிழர் தலைவர் அவர்களுக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண் ணிக்கை 34. இந்த எண்ணிக்கையை எப்படி தீர்மானிக் கிறார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. அந்த மொத்த எண்ணிக்கையில் 30 பேர் உயர்ந்த ஜாதி என சொல்லிக் கொள்கிறவர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். நான்கே நான்கு பேர்தான் விளிம்பு நிலை சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள்.

எவ்வளவு பெரிய அநீதி என்பதை 

இன்னும் நாம் உணராமல் இருக்கிறோம்

இது எவ்வளவு பெரிய அநீதி என்பதை இன்னும் நாம் உணராமல் இருக்கிறோம். இதற்குப் போராடிய தற்கும்,  இதற்கான விழிப்புணர்வைத் தூண்டுவதற்கும் திராவிடர் கழகம், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் போன்ற இயக்கங்கள்தான் களத்தில் நிற்கிறோம், குரல் கொடுக்கிறோம்.

ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், திராவிட இயக்கங்களை விமர்சிப்பதையே தன் கடமையாக சிலர், தோள்மேல் சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். அதை எண்ணும்போதுதான், மிகுந்த கவலையளிக்கிறது.

34 உச்சநீதிமன்ற நீதிபதிகளில், நான்கே நான்கு பேர் - ஒருவர் பட்டியல் சமூகம்; ஒருவர் பிற்படுத்தப்பட்ட சமூகம்; ஒருவர் இஸ்லாமியர்; ஒருவர் கிறித்துவர்.

அகில இந்திய அளவில், உச்சநீதிமன்றத்தில் 34 பேர் நீதிபதிகளாக இடம்பெறும் நிலையில், நான்கு பேர்தான், நான் பிராமின் என்கிற பார்ப்பனரல்லாதவர்கள் இடம் பெற முடியும் என்று சொன்னால், எந்த அளவிற்கு அவர்கள் இங்கே கோலோச்சுகிறார்கள், கொட்டமடிக் கிறார்கள், மேலாதிக்கம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். இதைவிட வேறு சான்று தேவையில்லை.

நாடு விடுதலைப் பெற்று பல 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபாபூலே போன்ற தலை வர்கள் எல்லாம் இந்த மண்ணில் சமூகநீதிக்காக போராடி யிருக்கிற நிலையில், தொடர்ந்து தமிழர் தலைவர் தலைமை தாங்கி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற இந்த சூழலில், இன்னும் ஒரே ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கின்ற நிலை.

பட்டியல் சமூகத்தினரைப்போல மூன்று மடங்கு பெரும்பான்மை மக்கள் தொகையைக் கொண்டிருக் கின்ற ஓ.பி.சி. சமூகத்திலிருந்து ஒருவர்தான் இடம்பெற முடியும் என்ற நிலை.

அவர்கள் எல்லா தளங்களிலும் 

ஆதிக்கம் செய்கிறார்கள்

மக்கள் தொகையில், 20 விழுக்காடு அளவில் இருக்கக்கூடிய சிறுபான்மைச் சமூகத்திலிருந்து இரண்டு பேர்தான் இடம்பெற முடியும் என்கிற நிலை இருக்கிறது என்றால், எந்த அளவிற்கு அவர்கள் எல்லா தளங்களிலும் ஆதிக்கம் செய்கிறார்கள் என்பதை நாம் உணரக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

உணர்ந்தால் மட்டும் போதாது; போராட வேண்டிய நிலை இருக்கிறது. போராடுவதிலே இன்னும் நமக்குத் தீவிரம் தேவைப்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களை பிளவுபடுத்தவேண்டும் என்பதிலும் குறியாக இருக்கிறார்கள்!

மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் அவர்கள் இங்கே  வெறுப்பு அரசியலையும் இணைத்துக் கொண்டி ருக்கிறார்கள். ஷெட்யூல்டு காஸ்ட் என்கிற பெயரில் இந்த மக்கள் அகில இந்திய அளவிலே ஒருங் கிணைந்து விடக் கூடாது. ஓ.பி.சி. என்கிற பெயரிலும், பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் அகில இந்திய அள விலே ஒருங்கிணைந்துவிடக் கூடாது; அவர்களைப் பிளவுபடுத்தவேண்டும் என்பதிலும் குறியாக இருக் கிறார்கள்; காய்களை நகர்த்துகிறார்கள்; மிகச் சாமர்த்தியமாக காய்களை நகர்த்துகிறார்கள்.

ஜாதிப் பெயர்களைப் பேசக்கூடியவர்களை ஊக்கப் படுத்துவது; ஜாதி சங்கங்களை ஊக்கப்படுத்துவது; ஜாதி உணர்வை இப்போதும் அடை காக்கிற வகையில், அந்த உணர்வுக்கு முன்னுரிமை அளிப்பது. இவையெல்லாம் தனித்தனி ஜாதிகளாக சிதறிக் கிடக்கவேண்டும் என்பதற்கான முயற்சி. இதிலுள்ள நுட்பத்தை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம்.

ஓ.பி.சி. சமூகம், ஓ.பி.சி. என்கிற பெயரில்கூட ஒருங் கிணைந்துவிடக் கூடாது.

ஜாதிகளை மறந்து, ஓ.பி.சி. என்கிற வகையறா அடிப்படையில்கூட ஒருங்கிணைந்துவிடக் கூடாது.

ஆகவே, ஜாதி உணர்வைத் தூண்டுவது என்பது, ஜாதிப் பெருமையை சொல்லுவது என்பது, ஓ.பி.சி. அடிப்படையில், ஒருங்கிணைய விடாமல் தடுப்பதற்கான முயற்சி. தனித்தனி ஜாதி பெருமை.

எம்.பி.சி. என்பதில்கூட, நூற்றுக்கும் மேற்பட்ட ஜாதிகள் இருக்கின்றன. எம்.பி.சி. என்று அவர்கள் தங் களை உணராமல் இருக்கவேண்டுமானால், நான் வன் னியர், நான் முதலியார், நான் செட்டியார் என்று தனித் தனி ஜாதி உணர்வைத் தூண்டிவிட்டால், அவர்களுக்கு எம்.பி.சி. என்கிற உணர்வும் இல்லாமல் போய்விடும்.

மிக சாதுர்யமாக அவர்கள், ஜாதியின் பெயரால் ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்துகிறார்கள் ஹிந்துக் களை ஜாதியின் பெயரால் பிளவுபடுத்துகிறார்கள்; இந்தியர்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்துகிறார்கள்.

மத மாற்றம் செய்கிறார்கள் என்ற பெயரிலே மற்ற மதத்தினரை அவர்கள் தாக்குகிறார்கள்!

நாம் எல்லோரும் ஹிந்துக்கள்; அவர்கள் முஸ்லிம் கள்; அவர்கள் கிறித்தவர்கள் என்று பிளவுபடுத்து கிறார்கள். மத மாற்றம் செய்கிறார்கள் என்ற பெயரிலே மற்ற மதத்தினரை அவர்கள் தாக்குகிறார்கள். அதில் எவ்வளவு பெரிய அநீதி இழைக்கப்படுகிறது என்பது தெரிந்தாலும்கூட, மத உணர்வு, மதவெறி என்பது - கும்பல் கும்பலாக அவர்களைப் போய்த் தாக்கி, படு கொலை செய்யக்கூடிய நிலையிலும்கூட, வேடிக்கைப் பார்க்கிற நிலை இருக்கிறது; அல்லது அதிலேயும் சேர்ந்து கொள்ளுகின்ற நிலை இருக்கிறது.

மண்டல் கமிசன் பரிந்துரைக்குப் பிறகு, இந்திய அரசி யல் என்பது, மிக மோசமாக மாறிக் கொண்டிருக்கின்றது.

ஷெட்யூல்ட் காஸ்ட், ஷெட்யூல்ட் டிரைப்ஸ்சுக்கு இட ஒதுக்கீடு இருந்த காலத்தில், அவர்களைப் பெரி தாகப் பாதிக்கவில்லை என்பதால், அமைதி காத்தார்கள்.

அதனை நடைமுறைப்படுத்த விடாமல், மறை முகமாக எவ்வளவு இடையூறுகளைச் செய்ய முடியுமோ, அந்த இடையூறுகளைச் செய்தார்கள்.

லியோ பிபி என்கிற ஒரு துறை இருக்கிறது - அந்தத் துறையின்மூலமாக நிறைய அபிசியல் மெமோராண் டம்ஸ் என்கிற பெயரால், அரசு குறிப்பாணைகளைப் பிறப்பித்தார்கள்.

அந்தக் குறிப்பாணைகளைப் பின்பற்றித்தான் அதி காரிகள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவேண்டும்.

அந்தக் குறிப்பாணைகள், இட ஒதுக்கீட்டைப் பயன் படுத்த முடியாத அளவிற்கான நெறிமுறைகளைக் கொண்டதாக மாறிவிடும்.

இட ஒதுக்கீடு இருக்கும்; ரெக்யூர்ட்மெண்ட் இருக் கும்; ஆனால், எஸ்.சி., எஸ்.டி., மக்கள் உள்ளே போக முடியாது.

எந்த அளவிற்குத் தடுக்க முடியுமோ,  அப்படித் தடுப்பதற்கு அவர்களுக்கு அந்தந்த அதிகார மட்டங் களில் ஆள் இருக்கின்ற நிலையில் சாதித்துக் கொண் டார்கள்.

எந்தத் துறையிலும் 100 விழுக்காடு இட ஒதுக்கீடு இதுவரையில் நிரப்பப்பட்டதில்லை!

அகில இந்திய அளவில் 15 சதவிகிதம் எஸ்.சி., சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், 15 சதவிகிதம் எந்தத் துறையிலும் 100 விழுக்காடு இட ஒதுக்கீடு இதுவரையில் நிரப்பப்பட்டதில்லை.

அகில இந்திய அளவில் பொதுத் துறை நிறுவனங் களில், ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஏழரை சதவிகிதம் இட ஒதுக்கீடு உண்டு பழங்குடியினருக்கு. ஆனால், இத்தனை 10 ஆண்டுகளில் ஒரு துறைகளில்கூட ஏழரை சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்பட்ட தில்லை. அதிலும் அதிகாரம் உள்ள பதவிகளில் இட ஒதுக்கீடு கிடையாது.

நாலாந்தர வேலைகளில், கலாசி வேலைகளில்தான் எண்ட்ரி லெவல் - நுழைகிற இடத்தில்தான் இட ஒதுக்கீடு - பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கிடையாது. நாலாந்தர வேலைகளில்தான் இட ஒதுக்கீடு. அதிலும்கூட முழு மையாக நடைமுறைப்படுத்துவதில்லை. எப்படியெல் லாம் அதைத் தடுக்க முடியுமோ, அப்படியெல்லாம் தடுத்துக் கொண்டிருந்தார்கள்.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்

ஓ.பி.சி. மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதிப் படுத்தியவுடன், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள், ஆட்சியே பறிபோனாலும் அதைப்பற்றி நான் கவலைப் படமாட்டேன் என்று அவர் துணிந்து முடிவெடுத்தார். அதற்காக அவருடைய ஆட்சியைக் கலைத்தார்கள்.

சமூகநீதிக்கான ஆட்சி, இந்திய மண்ணில் முதல் முறையாக மலர்ந்தது; புதுடில்லியில் மலர்ந்தது. வி.பி.சிங் அவர்களின் தலைமையில் மலர்ந்தது.

அந்த ஆட்சியை, மண்டல் பரிந்துரையை அவர் நடைமுறைப்படுத்தினார் என்பதற்காக கவிழ்த்தார்கள். உடனே கவிழ்த்தார்கள். அதுமட்டுமல்ல, அப்பொழுது தான் அத்வானி தலைமையில் ரத யாத்திரை புறப்பட்டது.

அந்த ரத யாத்திரை, இந்த மண்டல் பரிந்துரையை எதிர்த்து அறிவிக்கப்பட்ட ரத யாத்திரை.

பள்ளிகளில் இருந்தும், கல்லூரிகளில் இருந்தும், பல்கலைக் கழகங்களில் இருந்தும் பார்ப்பனச் சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் வீதிக்கு வந்தார்கள் முதன்முறையாக - மண்டல் பரிந்துரையை எதிர்த்து.

ஓ.பி.சி. சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்லது ஓ.பி.சி. சமூகத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்கிற ஜாதி அமைப்பைச் சார்ந்தவர்கள் இந்த இடத்தை மிக கவனமாக நோக்கவேண்டும்.

பாரதீய ஜனதா கட்சியில் சேரக் கூடியவர்கள்; அல்லது அவர்களை சேர்க்கக் கூடியவர்கள் கவனமாக நோக்கவேண்டும்; கவனிக்கவேண்டும்.

தமிழ்நாட்டில்தான் எம்.பி.சி., பி.சி., அதுதான் ஒட்டுமொத்தமாக ஓ.பி.சி.

வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இயக்கம்தான் பி.ஜே.பி.

அந்த ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று இந்திய அளவிலே வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இயக்கம்தான் பி.ஜே.பி. அதிலே கொண்டுபோய்தான் இன்றைக்கு ஓ.பி.சி. இளைஞர்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்; தமிழ்நாட்டிலும் அந்த வேலை நடந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு எஸ்.சி., எஸ்.டி.,யில் இருந்தும் அந்த வேலை நடக்கிறது.

தனியொரு நபருக்கு அமைச்சர் பதவியோ, கட்சிப் பதவியோ கொடுத்தால், அந்தப் பிழைப்புவாதிகள் ஒட்டுமொத்த சமூகத்தையே கொண்டு போய் சங் பரிவாரிடம் அடமானம் வைக்கிறார்கள். அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மண்டல் பரிந்துரைக்கு முன் -

மண்டல் பரிந்துரைக்குப் பின் என்று இந்திய வர லாற்றை நாம் இப்பொழுது பார்க்கவேண்டி இருக்கிறது; சமூகநீதி வரலாற்றைப் பார்க்கவேண்டி இருக்கிறது.

பி.பி.மண்டல் அவர்களையும் நாம் நினைவுகூர கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்

அதனால்தான் நாம், புரட்சியாளர் அம்பேத்கரை எப்படி சமூகநீதி தளத்தில் நாம் போற்றுகிறோமோ, தந்தை பெரியார் அவர்களை எப்படி சமூகநீதி தளத்தில் போற்றிக் கொண்டாடுகிறோமோ அப்படி பி.பி. மண்டல் அவர்களையும் போற்றவேண்டிய தேவை இருக்கிறது என்று நான் பேசி வருகிறேன்.

நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம், பி.பி.மண்டலுக்கு தமிழ்நாட்டில் சிலை எழுப்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

இதைகூட சிலர், பி.பி.மண்டல் தெலுங்கர், அவருக்கு ஏன் தமிழ்நாட்டில் சிலை என்று கேட்பார்கள், இன வாதிகள், இன எதிரிகள்.

பி.பி.மண்டல் அவர்கள், இந்தியா முழுமைக்கும் இருக்கிற ஓ.பி.சி. மக்களுக்கான சமூகநீதியை உறுதிப் படுத்தியவர்.

எப்படி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும், தந்தை பெரியார் அவர்களையும் சமூகநீதி தளத்தில் போற்றிக் கொண்டாடுகிறோமோ, நன்றி செலுத்துகி றோமோ அப்படி பி.பி.மண்டல் அவர்களையும் நாம் நினைவுகூர கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

அவருடைய பரிந்துரையை வி.பி.சிங் அவர்கள் நடைமுறைப்படுத்தினார். அவரும் இந்த வரிசையிலே நாம் நினைத்துப் போற்றத்தக்க ஒரு மாபெரும் ஆளுமை.

அவரை நாம் ராஜபரம்பரையைச் சார்ந்தவர் என்று புறந்தள்ளிவிட முடியுமா? வட இந்தியர் என்று புறந்தள்ளிவிட முடியுமா?

அவர் ஒரு சமூகநீதி சிந்தனையாளர் - பெரியார் எப்படியோ, அப்படித்தான்; புரட்சியாளர் அம்பேத்கர் எப்படியோ, அப்படித்தான். அதனால்தான் அவர், பிரத மராக இருந்த காலத்தில், மண்டல் பரிந்துரை நடை முறைக்கு வந்தது. எப்படி அதை நாம் மறந்துவிட முடியும்?

ரத யாத்திரை என்பது 

ரத்த யாத்திரையாக முடிந்தது

ஆகவே, ஓ.பி.சி. மக்கள் எம்பவர் ஆகிறார்கள் என்றவுடன், அத்வானியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; பி.ஜே.பி.யால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; சங் பரிவார்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உடனே வீதிக்கு வந்தார்கள்; ரத்தக் களறியை ஏற்படுத்தினார்கள்; ரத யாத்திரை என்பது ரத்த யாத்திரையாக முடிந்தது.

அதனுடைய தாக்கம்தான், பாபர் மசூதி இடிப்புவரை போய் நின்றது. பாபர் மசூதி இடிப்புதான், பி.ஜே.பி.யை ஆட்சிக்குக் கொண்டு வந்தது.

சொல்லப்போனால், பி.பி.மண்டல் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதன் எதிர்விளைவாக இது நிகழ்ந் திருக்கிறது. பக்க விளைவாக நடந்திருக்கிறது.

அதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொண்டது, ஹிந்துத்துவா என்ற ஒரு புதிய அரசியல்.

ஹிந்துத்துவா என்பது, ஹிந்து மதத்தின்மீது நம் பிக்கை வைத்திருப்பவர்களின் ஆன்மிகக் கோட்பாடு அல்ல. பி.ஜே.பி.யும், சங் பரிவார்களும் உருவாக்கிய அரசியல் கோட்பாடு. 

அது வேறு - இது வேறு.

சிவனை நம்புவது என்பது ஹிந்து மத நம்பிக்கை.

மகாலஷ்மியை நம்புவது என்பது அவர்களின் நம்பிக்கை. 

அந்தக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவது என்பது அது ஹிந்துத்துவம். அது வேறு; அது ஹிந்துயிசம்.

ஒருங்கிணைக்கிற அரசியலை பெரியார் செய்தார்; அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் செய்தார்

ஆனால், சங் பரிவார்கள் ஓ.பி.சி.யினரையும் இணைத்துக்கொண்டு, தங்களின் எடுபிடிகளாக மாற்றிக் கொண்டு, தங்களின் அரசியலைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது, தங்களின் அதிகாரத் தலைமை யைத் தக்க வைத்துக் கொள்வது, பார்ப்பனர்களைத் தனிமைப்படுத்துகிற அரசியலை - அவர்களைப் பிரித்து, தனிமைப்படுத்தி, மற்றவர்களை ஒருங்கிணைக்கிற அரசியலை பெரியார் செய்தார். அதைத்தான் புரட்சி யாளர் அம்பேத்கர் செய்தார்.

அவர்கள் வேறு; நாம் வேறு.

அவர்கள் ஆரியர்கள்; அவர்களின் கோட்பாடு பார்ப்பனியம்; அதுதான் பிராமணிசம்.

அவர்கள்தான் எல்லா தளங்களிலும் கோலோச்சு கிறார்கள்; தலைமுறை தலைமுறையாகக் கோலோச்சு கிறார்கள். அதனால் இந்தப் பாகுபாடுகளை நிலைப் படுத்திவிட்டார்கள்.

பார்ப்பனரல்லாதார் அனைவரும் ஒருங்கிணையவேண்டும்!

எனவே, அதிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டு மானால், நாம், பார்ப்பனரல்லாதார் அனைவரும் ஒருங்கிணையவேண்டும் என்பதுதான் புரட்சியாளர் அம்பேத்கரின் பார்வை; தந்தை பெரியாரின் பார்வை; அதுதான் மகாத்மா ஜோதிபாபூலேவின் பார்வை; அதுதான் கன்ஷிராம் அவர்களின் பார்வை.

பகுஜன் என்று அவர் சொல்வது, பகுஜன் என்றால், பெரும்பான்மை மக்கள்; பெரும்பான்மை மக்கள் என் றால், பார்ப்பனர்கள் சிறுபான்மை -நாம் அனைவரும் பெரும்பான்மை என்கிற உணர்வை உணர்த்துவதற் காகத்தான் பகுஜன் என்று சொன்னார்.

அதை இன்னும் நாம் யாரும் புரிந்துகொள்ளவில்லை.

பகுஜன் என்றால், தலித் என்று எண்ணிக் கொண்டிருக் கின்றோம்; அதுவே நம்முடைய முட்டாள்தனமான புரிதல்.

சிதறடிக்கப்பட்ட 

விளிம்பு நிலை மக்களைக் குறிக்கும்!

பகுஜன் என்றால், தலித்தைக் குறிக்காது; ஏன்? தலித் என்றால்கூட ஷெட்யூல்ட் காஸ்ட்டை குறிக்காது.

தலித் என்பதுகூட, சிதறடிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களைக் குறிக்கும்.

ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் வேறு; அவர்களால் பாதிக்கப்பட்ட அனைவரையும் குறிக்கின்ற சொல்தான் தலித்.

பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். அதுதான் பகுஜன்; அதுதான் பகுஜன் அரசியல்.

ஆனால், இன்றைக்கு நாம் தனித்தனி ஜாதிப் பெருமைகளைப் பேசிக்கொண்டு, சிதறிக் கிடக்கிறோம்.

தமிழ்நாட்டிலே இன்றைக்கு ஷெட்யூல்டு காஸ்ட் என்ற இந்த சமூகத்தை, மூன்று பெரும் பிரிவுகளாக உடைத்து இடைவெளியை ஏற்படுத்திவிட்டது சங் பரிவார் அரசியல்.

அவர்கள் ஒருங்கிணைந்து இன்றைக்கு மேடையில் நிற்க முடியாத நிலை. கேட்டால், ஜாதிப் பெருமை.

நான் வேறு; நீ வேறு.

என்னுடைய பாரம்பரியம் வேறு; உன்னுடைய பாரம்பரியம் வேறு.

இதனை ஊக்குவிப்பது சங் பரிவார் அரசியல்.

நாம் எதற்காக ஒன்றிணையவேண்டும். ஒரு குறிப் பிட்ட ஜாதியின் அளவில் மட்டும் அக்கறை இருந்தால், ஒரு ஜாதி பெயரை மட்டும் சொல்லி அரசியல் செய்யலாம்.

பாதிக்கப்பட்ட அனைவரையும் சேர்க்கிறபொழுது, நமக்கு ஒரு பொதுப் பெயர் தேவைப்படுகிறது.

இந்தியாவில் இருக்கிற பாதிக்கப்பட்ட அனை வரையும் ஒருங்கிணைக்க நாம் முன் நிற்கிறபொழுது, முனைகிறபொழுது பொதுப் பெயர் தேவைப்படுகிறது.

அதனால்தான், தலித் என்றோ, பகுஜன் என்றோ நாம் சொல்லுகிறோம்.

தமிழ்நாட்டில், இன்றைக்கு சங் பரிவார்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது

இந்தப் புரிதல் இல்லாதவர்கள்தான் இன்றைக்கு ஜாதிப் பெருமையைப் பேசிக்கொண்டு சிதறிக் கிடக் கிறார்கள். மிகவும் ஆபத்தாகப் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில், இன்றைக்கு சங் பரிவார்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது. மேடையேறி இன்றைக்கு அவர் கள் வெளிப்படையாக சவால்விட்டுப் பேசுகிறார்கள்.

பெரியார்  சிலையை அவமதிக்கிறார்கள்; திருவள் ளுவர் சிலையை அவமதிக்கிறார்கள்.

இன்றைக்குப் பெரியார் சிலையையும் அவமதிக்கின்ற துணிச்சல் வருகிறது!

ஒரு காலத்தில் அம்பேத்கர் சிலை மட்டும்தான் இந்த மண்ணில் அவமதிக்கப்பட்டது. இன்றைக்குப் பெரியார் சிலையையும் அவமதிக்கின்ற துணிச்சல் வருகிறது.

தன் வீட்டிற்குமுன், பட்டா நிலத்தில் வைக்கப்பட் டிருந்த பெரியார் சிலையை, காரைக்குடியில் அப்புறப் படுத்தக் கூடிய அளவிற்கு, இன்றைக்கு அவர்கள் செல் வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது கவலையளிப்பதாக இருக்கிறது.

எனவே தோழர்களே! ஒட்டுமொத்தமாக நாம் நீதி மன்றங்களில் நடக்கின்ற இந்த அநீதியைக் கண்டிக்க வேண்டும்; சமூகநீதியை நிலைநாட்டவேண்டும் என்று திராவிடர் கழகம் இன்றைக்குத் தமிழர் தலைவர் அவர்களின் தலைமையில்  இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினாலும், இதன் பின்னணியில் இருக்கின்ற சூழ்ச்சியை நாம் புரிந்துகொள்ளவேண்டி இருக்கிறது.

தமிழ்நாட்டையாவது இன்றைக்கு 

நாம் பாதுகாத்தாகவேண்டும்

தமிழ்நாட்டையாவது இன்றைக்கு நாம் பாதுகாத் தாகவேண்டும்; தமிழ்நாடு என்கிற இந்த ஒற்றை நிலப் பரப்பையாவது நாம் கையில் வைத்துக்கொண்டால்தான், இந்தியா முழுவதும் தொடர்ந்து நாம் போராடுவதற்கு ஏதுவாக இருக்கும்.

தமிழ்நாட்டையும் விட்டுவிட்டால், நிற்க இடமில்லை என்ற நிலை உருவாகிவிடும்.

எப்பொழுதும், லிப்ராயல் செய்வதற்கு ஓர் இடம் இருந்தால்தான், முன்னோக்கிப் பாய்வதற்கு முயற்சி செய்ய முடியும். பின்வாங்குவதற்குக்கூட இடம் இல்லை என்றால், போராட முடியாது, எந்தப் போராளியாலும்.

பெரும்பாலான மாநிலங்களை 

சங் பரிவார் அரசியல் விழுங்கிவிட்டது

ஆக, தமிழ்நாட்டையாவது பாதுகாக்கவேண்டும். இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களை சங் பரிவார் அரசியல் விழுங்கிவிட்டது. பெரும்பாலான தலைவர்களை விழுங்கிவிட்டார்கள்.

பி.ஜே.பி. எதிர்ப்பு என்பது வெறும் அரசியல் எதிர்ப் பாகத்தான் இருக்கிறது; மம்தா எதிர்ப்பது வெறும் அரசி யல் எதிர்ப்பு; கெஜ்ரிவால் எதிர்ப்பது வெறும் அரசியல் எதிர்ப்பு; நிதிஷ்குமார் எதிர்ப்பது வெறும் அரசியல் எதிர்ப்பு.

அவர்கள் பார்ப்பனிய எதிர்ப்பு என்கிற அடிப் படையில் பி.ஜே.பி.யை எதிர்க்கவில்லை. 

கம்யூனிஸ்டுகள் கொள்கை அடிப்படையில் பி.ஜே.பி.யை எதிர்க்கிறார்கள்.

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கை அடிப்படையிலே பி.ஜே.பி.யை எதிர்க்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை அடிப்படையிலே பி.ஜே.பி.யை எதிர்க்கிறது.

வெறும் தேர்தல் அரசியல் அடிப்படையில் நாங்கள் எதிர்க்கவில்லை. வாக்கு வங்கி அரசியல் எதிர்ப்பு அல்ல. இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்றுவதற் கான ஒரு கொள்கை யுத்தமாகும்.

நம்முடைய மாநில உரிமைகளை இழந்து கொண்டிருக்கின்றோம் தோழர்களே! 

மிக முக்கியமான யுத்தத்தை நடத்துகின்ற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்

தமிழ்நாட்டையும், தமிழ் மண்ணையும் பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான யுத்தத்தை நடத்துகின்ற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இன்றைக்கு அய்யா பெரியார் இல்லை - அவருடைய உண்மையான அரசியல் வாரிசு - கொள்கை வாரிசு நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள், இன்றைக்கு அவர் 90 வயதைக் கடந்த நிலையிலும், இளைஞரைப் போல ஓடோடி பயணித்துக் கொண்டிருக்கிறார். 90 வயது என்று சொன்னால்கூட, அவர் நம்மைக் கண்டிப்பார்.

ஏனென்றால், அவருக்கு அவருடைய வயது நினைவில்லை. நாம்தான் நினைவுப்படுத்துகிறோம்.

தமிழர் தலைவர் காலத்திலேயே நாம் இந்தப் பாதுகாப்பு அரணை வலுப்படுத்தவேண்டும்!

அவர் ஓடுகிற வரையில்தான், நாமும் ஓட முடியும்; அவர் சுற்றுகிற வரைதான் நாமும் சுற்ற முடியும். அவர் காலத்திலேயே நாம் இந்தப் பாதுகாப்பு அரணை வலுப் படுத்தவேண்டும்; தமிழ்நாட்டைப் பாதுகாக்கவேண்டும். இந்த சங் பரிவார் சக்திகளை விரட்டியடிக்கவேண்டும் - அகில இந்திய அளவிலே அவர்களை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்பதை இந்த நேரத்தில் சொல்லி, 

கொலிஜியம் முறையை 

முற்றாக மாற்றவேண்டும்

நீதிபதிகள் நியமனங்களில் நடைபெற்று இருக்கக் கூடிய அநீதிகளை வன்மையாகக் கண்டித்து, கொலி ஜியம் முறையை முற்றாக மாற்றவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி, வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் சிறப்புரையாற்றினார்.

No comments:

Post a Comment