பெரியார் திரைப்படத்தில் நடித்த திரைக்கலைஞர் டி.பி.கஜேந்திரன் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

பெரியார் திரைப்படத்தில் நடித்த திரைக்கலைஞர் டி.பி.கஜேந்திரன் மறைவு

சென்னை,பிப்.5- பிரபல திரைப்பட இயக்குநரும், திரைக் கலைஞருமான டி.பி.கஜேந்திரன் (வயது 68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (5.2.2023 காலமானார். இயக்குநராக மட்டுமின்றி 

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்த டி.பி.கஜேந்திரன் ‘பெரியார்’ படத்தில் பெரியாரின் நண்பர் கதாபாத்திரமேற்று சிறப்பாக நடித்தவர். வீடு மனைவி மக்கள், பாண்டி நாட்டு தங்கம், சீனா தானா, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி யுள்ளார். அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கல்லூரி வகுப்புத் தோழரும் ஆவார்.

முதலமைச்சர் இரங்கல் 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டதாவது: பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன்.தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. திரு. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக் குநர் டி.பி.கஜேந்திரன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது டி.பி.கஜேந்திரன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட வர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment