காரமடையில் நடைபெற்ற மூன்றாம் நாள் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 6, 2023

காரமடையில் நடைபெற்ற மூன்றாம் நாள் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

 நாங்கள் நாடு உள்ளவர்கள்; அதனால்தான் தமிழ்நாடு! நாடற்ற வந்தேறிகளுக்கு இது புரியாது!



காரமடை. பிப்.6 மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் காரமடையில் நடைபெற்ற பரப்புரை பயணக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரைப் பயணத்தின் மூன்றாம் நாளில் அய்ந்தாம் கூட்டம் 5.2.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு காரமடையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட காப் பாளர் சாலை வேம்பு சுப்பையன் தலைமை தாங்கினார். காரமடை ஒன்றிய தலைவர் அ.மு.இராஜா அனை வரையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் வேலுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் பாசமலர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் அரங்கசாமி, பெரியார் வீர விளையாட்டு கழக பொறுப்பாளர் தேக்கம்பட்டி சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காரமடை நிகழ்ச்சியின் சிறப்பு!

சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரைப் பயணத்தில், முதல் கூட்டமான குமாரபாளையம் தொடங்கி தமிழர் தலைவர் மேடைக்கு வருகிறபோது, இந்த பயணத்தின் நோக்கத்தை விளக்கும், “தோழா முன்னேறு! வீரமணியோடு!” என்ற எழுச்சிகரமான பாடலின் பின்னணியுடன்தான் அவர் தனது வாகனத்திலிருந்து இறங்கி மேடையில் ஏறி அமர்கிறார். காரமடையில் மேடை அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு பக்கவாட்டிலேயே இந்து முன்னணி அலுவலகம் இருந்தது. அதுவும் “காரியாலயம்” என்று வடமொழியில் இருந்தது. அதுவும் “கார்யாலயம்” என்ற பிழையுடன். அதை முன்னிட்டோ என்னவோ அங்கே காவல்துறையினர் அதிகம் குவிக்கப்பட்டிருந்தனர். எதிர்பார்த்த படியே சங்கிகளின் நடமாட்டம் இருந்ததை நமது தோழர்கள் கண்டறிந்து காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். எதிர்பார்த்தது போலவே, நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போதே எதிர்ப்பு தெரிவித்த சிலரை காவல்துறையினர் அவர்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். அதனால் நிகழ்ச்சி இன்னும் களை கட்டத் தொடங்கியது. முனைவர் அதிரடி அன்பழகன் “பார்ப்பனர்களுக்கு மூளை வலிமை அதிகமா? ஆசிரியரின் மூளைக்கு வலிமை அதிகமா?'' என்று ஆசிரியரின் இடஒதுக்கீடு சாதனைகளை பட்டியலிட்டு பேசியதைக் கேட்டு பொதுமக்கள் தாமாக ஏராளமாகக் கூடிவிட்டனர்.

திராவிடத் தத்துவத்தில் 

முதல் இடம் பகுத்தறிவுக்குத்தான்!

அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் பேசியபின் ஆசிரியர் 8.30 மணிக்குப் பேசத் தொடங்கி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசினார். தொடக்கத்தில், முரட்டு சுயமரியாதைக்காரர் சாலை வேம்பு சுப்பையன், சாவித்திரி சுப்பையன், அடுத்து தான் சட்டக் கல்லூரியில் பயிலும் போது தன்னுடன் இணைபிரியாமல் இருந்த 7 நண்பர்களில் ஒருவரான காரமடை வழக்குரைஞர் தங்கவேல் உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்கள் சிலரைப் பற்றி பெருமையுடன் நினைவு கூர்ந்து விட்டு, “நாங்கள் யாரையும் புண்படுத்துவதற்காக வரவில்லை. மக்களை பண்படுத்துவதற்காக வந்திருக்கிறோம்” என்று முன் னோட்டமாக கூறினார். தொடர்ந்து, 

திராவிடத் தத்துவத்தில் முதல் இடம் பகுத்தறிவுக்குத்தான்! என்று கூறிவிட்டு, ஆனால் சனாதனத்திற்கு? என்று கேள்வி கேட்டு, “சொல்வதை நம்பு, இல்லையென்றால் நரகத்துக்குப் போவாய்” என்று அதற்கான பதிலையும் சொன்னார். அப்படி நாங்கள் அச்சுறுத்த மாட்டோம் என்று ஒரு விளக்கத்தையும் இணைத்துக்கொண்டார்.  மாநில உரிமைகளைப்பற்றிப் பேசும்பொழுது, நாங்கள் நாடு உள்ளவர்கள்; அதனால்தான் தமிழ்நாடு! நாடற்ற வந்தேறிகளுக்கு இது புரியாது என்றார்.

திராவிட மாடலின் அடுக்கடுக்கான சாதனைகள்!

திராவிடத் தத்துவத்தில் பகுத்தறிவுக்குத்தான் முதல் இடம் என்று சொன்னதால் அது குறித்து சிறிது தொட்டுக் காட்டினார். அதாவது, ”மின்சாரத்தை கண்டுபிடித்தது யார்?” என்று கேட்டார். முக்கோடி தேவாதி தேவர்கள், கின்னரர், கிம்புருடர், அட்டதிக்கு பாலகர்கள், நந்தி, நாரதர் என்று பட்டியல் இருக்கு - எந்தக் கடவுளுக்காவது மின்சாரம்னா என்னவென்று தெரியுமா? மின்சாரம் இல்லாமல் ஒரு மணி நேரம் நம்மால் இருக்கமுடியுமா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு, கடவுள் இல்லாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கமுடியுமே என்று சொன்னார். அதைத் தொடர்ந்து 'திராவிட மாடல்' ஆட்சியைப்பற்றிக் குறிப்பிட்டார். அதன் தொடக்கமாக தந்தை பெரியார் பிறந்த நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த உறுதிமொழியில் இடம்பெற்ற அனைவருக்கும் அனைத்தும் என்பதைப்பற்றி பெருமையுடன் சுட்டிக்காட்டினார். அந்த அனைவரும் என்பதில் பார்ப்பனர்களும் அடக்கம் என்று முத்தாய்ப்பு வைத்தார். அவர்கள் 3 விழுக்காடு என்றால் அந்த 3 விழுக்காட்டுக்கான பயனைப் பெறலாம். 100 விழுக்காடும் தங்களுக்கு என்று சொல்லக்கூடாது என்று எச்சரித்தார். திராவிடத் தத்துவம் அனைவருக்கும் கல்வி என்கிறது. ஆரியக்கல்வி நம்மை படிக்காதே என்கிறது. இது எப்படி சரியாகும்? என்று கேட்டார். திராவிட மாடல்தான் 69% திராவிட மாடல்தான் தமிழில் 40% மதிப்பெண் பெற்றால்தான் தமிழ்நாடு அரசுப் பணி எனும் ஆணை! 'திராவிட மாடல்'தான் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்! 'திராவிட மாடல்'தான் கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய்! என்று அடுக்கினார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கே 

சேதுசமுத்திரத்திட்டம் தேவை!

மேலும் அவர், பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் உள்ள உறவை அம்பலப்படுத்தினார். கோல்வால்கரின் ஞானகங்கை புத்தகத்தில் இருக்கும் மாநிலங்களே விசவித்துகள்  என்றிருக்கும் பகுதியை படித்துக்காட்டி, அதனால்தான் பா.ஜ.க.வினர் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று பேசுகிறார்கள் என்று அதன் ரகசியத்தின் மூலத்தை மக்களிடம் எடுத்துவைத்தார். இவையெல்லாம் எங்களிடம் பலிக்காது என்று சொல்ல, “நாங்கள் நாடு உள்ளவர்கள்; அதனால்தான் தமிழ்நாடு! நாடற்ற வந்தேறிகளுக்கு இது புரியாது என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே கூறி, சேதுசமுத்திரத்திட்டம் பற்றி விரிவாகப்பேசி, அதனால் கிடைக்கவிருக்கும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பா.ஜ.க.காரர்களுக்கும் சேர்த்துதான், ஆர்.எஸ்.எஸ்.கார்களுக்கும் சேர்த்துதான் என்று எதிர்முகாமின் மனசாட்சியையும் உலுக்கிவிட்டு, சேதுசமுத்திரத்திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கே தேவையான ஒன்று என்றுகூறி தனது உரையை நிறைவு செய்தார்.

கலந்துகொண்ட தோழர்கள்!

இந்த நிகழ்வில் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், பெரியார் மருத்துவ குழுமத் தலைவர் மரு.இரா.கவுதமன், கோவை மண்டல தலைவர் ஆ.கருணாகரன், நீலமலை மாவட்ட தலைவர் நாகேந்திரன், இந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் ராஜலெட்சுமி, ம.தி.மு.க.நகர செயலாளர் சுந்தரம், சி.பி.எம்.தாலுகா செயலாளர் கனகராஜ்,சி.பி.அய். நகர் செயலாளர் அக்குசாமி, தி.மு.க.மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு பொறுப்பாளர் ரங்கராஜன், தமிழ்ப்புலிகள் கட்சி மாநில பொறுப்பாளர் சபாபதி, தி.மு.க. மாணவரணி செயலாளர் மேட்டூர் கணேசன், தி.மு.க.ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குணசேகரன், ப.க. மாநில துணைத் தலைவர் தரும்.வீரமணி, மாநில சட்டத்துறை துணைத்தலைவர் திருப்பூர் பாண்டியன், தி.க. பொதுக்குழு உறுப்பினர் சாவித்திரி சுப்பையன், கோபி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் நம்பியூர் சென்னியப்பன், கோவை மாவட்ட காப்பாளர் சந்திரசேகரன், மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் கோவை பிரபாகரன், த.மு.மு.க. பொறுப்பாளர் முபாரக் அலி, மாநில மாணவர் கழக துணை செயலாளர் கோவை இராகுல், மேட்டுப்பாளையம் நகர தலைவர் பழனிச்சாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முடிவில் கோவை மண்டல இளைஞரணி செயலாளர் வீரமணி நன்றி கூறினார்.

மக்களின் அன்பு மழையில் தமிழர் தலைவர்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காரமடையில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்ற வந்ததால் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமான பொதுமக்களும் பயனாடை அணிவித்தும் நன்கொடைகள் வழங்கியும் வரவேற்று மகிழ்ந்தனர். கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன்,பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ்,  மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

பொள்ளாச்சி வருகை தந்த தமிழர் தலைவரை கழகத் தோழர்கள் உற்சாகமாக வரவேற்றனர்



No comments:

Post a Comment