ஊரக வேலை உறுதி திட்டம் பலியாவதா? ஒன்றிய அரசுக்கு ராகுல்காந்தி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

ஊரக வேலை உறுதி திட்டம் பலியாவதா? ஒன்றிய அரசுக்கு ராகுல்காந்தி கண்டனம்

 புதுடில்லி, பிப்.18 ஊரக வேலைஉறுதி திட்டத்தில் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கினால் 57 சதவீதம் ஏழைகள் தங்கள் அன்றாட ஊதியத்தை இழப்பார்கள் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். ஒன்றிய அரசு கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் செயல்படும் திட்டத்திற்கு நிதிஒதுக்கீட்டை வெகுவாக குறைத்து உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்  ராகுல் காந்தி கூறியதாவது: ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆதாரை இணைப்பதன் மூலம், சமூகத்தின் ஏழைப் பிரிவினருக்கு எதிராக அரசு ஆதாரை தவறாகப் பயன்படுத்துகிறது. ஏனெனில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தின் அடித்தளம். எண்ணற்ற குடும்பங்களை வாழவைத்த ஒரு புரட்சிகர கொள்கை. கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமான இந்த திட்டத்தை ஒன்றிய அரசு தனது அரசியல் அடக்குமுறைக் கொள்கைகளுக்கு பலி கொடுத்து விட்டது. மேலும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கினால் 57 சதவீத கிராமப்புற தொழிலாளர்கள் தங்கள் அன்றாட ஊதியத்தை இழப்பார்கள். புதிய வேலைவாய்ப்பை வழங்குவதற்கான எந்தக் கொள்கையும் அரசிடம் இல்லை. 

ஆனால் மக்களின் வேலை வாய்ப்பைப்  பறித்து ஏழைகளுக்கு உரிய பணத்தைப் பெறுவதில் சிரமத்தை ஏற்படுத்துவது  மட்டுமே இந்த அரசின் நோக்கமாக மாறியுள்ளது. புதிய யோசனை இல்லை, புதிய திட்டம் இல்லை. இந்த அரசின் ஒரே கொள்கை’ ஏழைகளை சித்திரவதை செய்வது’ இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், 

’மோடி அரசின் கோடாரி, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் அழிவு வேலை  நிதியை குறைத்ததன் மூலம் வேலை செய்கிறது. இந்த திட் டத்திற்கான நிதியில் 33 சதவீதம் குறைத்து இருக்கிறது. மேலும் இந்த திட்டத்திற்கு மாநிலங்கள் 40 சதவீத பணத்தை செலுத்த வேண்டும். இந்த முடிவால் ஏழைகள் உங்களை மன் னிக்க மாட்டார்கள்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.


No comments:

Post a Comment