முசிறி, குளித்தலை பகுதிகளில் தமிழர் தலைவர் கருத்துரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 9, 2023

முசிறி, குளித்தலை பகுதிகளில் தமிழர் தலைவர் கருத்துரை!

 'அனைவருக்கும் அனைத்தும்' எனும் 

திராவிட மாடலில், பார்ப்பனர்களும் அடக்கம்!

இந்த நாட்டில்தானே இறந்த பிறகும் 'ஜாதி' உயிரோடு இருக்கிறது?

பரப்புரைப் பயணத்தின் 6 ஆம் நாளில் 

முசிறி, பிப்.9 சமூக நீதி பாதுகாப்பு, 'திராவிட மாடல்' விளக்கப் பெரும் பயணத்தின் 6 ஆம் நாளில் முசிறி, குளித்தலை பகுதிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.

முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று (8.2.2023) நடைபெற்ற 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் மா.இரத்தினம் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் துறையூர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திருச்சி மண்டல தலைவர் ப.ஆல்பர்ட் மாவட்ட தலைவர் தே.வால்டேர், தொட்டியம் ஒன்றிய தலைவர் ஆசிரியர் சண்முகம், நகர செயலாளர் சீனி வாசன், தொட்டியம் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், ப.க. பொறுப்பாளர் மாணிக்கம், மாநில திராவிடர் கழகத் தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முதலாவதாக மாநில கிராமப் புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் உரை யாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப் புரையாற்றினார்.

முதல் சுற்று முழு வெற்றி!

கடந்த பிப்ரவரி 3, அறிஞர் அண்ணா நினைவு நாளில், தமிழ்நாடு தழுவிய அளவில் கொள்கைப் பிரச்சார நோக்கோடு ஈரோட்டில் தொடங்கி, அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 இல் கடலூரில் முடியும் சமூக நீதி, 'திராவிட மாடல்' விளக்கப் பெரும் பயணத்தின் 6 ஆம் நாள் சுற்றுப்பயணம் நேற்று (8.2.2023) திருச்சியிலிருந்து புறப்பட்டது. முதல் கூட்டம் முசிறியிலும், இரண்டாம் கூட்டம் குளித்தலையிலும் நடைபெற்றது. 

முசிறி

இந்த சுற்றுப்பயணம் பல கோணங்களில் திட்டமிடப் பட்டு, தமிழர் தலைவர் அடிக்கடி செல்லாத பகுதிகளாக பார்த்துப் பார்த்து தேர்வு செய்திருந்தனர். அதனாலேயே அவர் ஒவ்வொரு இடத்திலும் உரையைத் தொடங்கும் போது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 7 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை சந்திக்க வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றே தன் உரையைத் தொடங்கினார். இந்த கால இடைவெளி காரணமாகவே, ஓர் அரசியல் கட்சித் தலைவரை சந்திக்கும் ஆவலைக் காட்டிலும், ஆசிரிய ரைக் காண மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்து கண்டு, செவி விருந்து உண்டு சென்றதைப் பார்க்க முடிந்தது. மற்றுமொன்று 10 ஆண்டுகளுக்குப் பிறகும் அன்று பார்த்ததைப் போலவே இருக்கிறாரே; நிதானமாக நடந்து வருவார் என்றெண்ணியிருந்ததற்கு மாறாக, வேக நடையில் வருகிறாரே, இவருக்கு வயது 90 தானா? என்று அய்யுற்று, ”நம்பவே முடியவில்லையே” என்றெல் லாம் வெளிப்படையாக பலர் பேசுவதை எல்லாக் கூட்டங்களிலும் காண முடிந்தது. அந்த வியப்பிலேயே அவரது உரையை முழுமையாகக் கேட்டு இன்புற்றனர். புத்தகம் வாங்கி கையெழுத்துப் பெறவோ அல்லது ஆடையணிவித்தோ  எப்படியாவது அவருடன் ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று துடித்தனர். எங்கே அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்று தவித்தனர். இன்னும் எத்தனையோ உணர்வுகள் மக்களுக்கு! கூட்டங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவது மட்டுமல்ல சிறப்பு, கழகக் கட்டமைப்பு இல்லாத இடங்களிலெல்லாம், அன்றே கழகம் அமைக்கப்பட்டு, மேடையிலேயே ஆசிரியரால் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அப்படித்தான் பொள் ளாச்சியில் அறிவிக்கப்பட்டது! அப்படித்தான் முசிறியில் அறிவிக்கப்பட்டது! ஆகவே, இந்த பெரும் பயணத்தின் 6 ஆம் நாளிலேயே சுற்றுப்பயணம் பல பரிமாணங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் அடிமைத்தனமும், சமூக அடிமைத்தனமும்!

தோழர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பேசி முடித்த பின்னர், ஆசிரியருக்கு அனைவர் சார்பிலும் ஆடையணிவித்தும், ஆடைக்குப் பதிலாக ரூபாய் களாகவும் கொடுத்தனர். இறுதியாக ஆசிரியர் பேசினார். “நான் இங்கு வந்து நீண்ட காலம் ஆகிறது என்று சொன் னார்கள். முசிறியில் தனி கழக மாவட்டம் அமைக்க இருக்கிறோம். அதன் மூலம் இங்குள்ள மக்களை இனி அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும்” என்றே தொடங்கினார். தொடர்ந்து தோழர் தன்னாசி, ராஜன், மைக்கேல், நாயக்கன்பட்டி முத்துசாமி ஆகியோரை நினைவுகூர்ந்தார். பிறகு, “சொல்வதற்கு ஏராளம் இருக் கின்றன. எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. ஆகவே, புத்தகங்கள் இருக்கின்றன. வியாபாரத்துக்காகச் சொல்லவில்லை. நாங்கள் பேசுவதற்கு அதில்தான் ஆதாரங்கள் இருக்கின்றன” என்றார். தொடர்ந்து அவர், “வெள்ளைக்காரன் நம்மை 200 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டான். அது அரசியல் அடிமைத்தனம். ஆனால், ஆரியன் நம்மை 2000 ஆண்டுகளாக ஆண்டு கொண் டிருக்கின்றான் இது சமூக அடிமைத்தனம். இது எதிலிருக்கிறது? மனுஸ்மிருதியில் இருக்கிறது!” என்று அசல் மனுதர்ம சாஸ்திரப் புத்தகத்தை எடுத்து மக்களுக்குக் காட்டினார். 

குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலப்பதா?

உலக நாடுகளில் மனிதன் பிறக்கிறான். இங்கே மனிதன் பிறக்கிறானா? என்றொரு புதிரான ஒரு கேள்வியைக் கேட்டு, இங்கே மனிதன் தனியாகப் பிறப்பதில்லை; ஜாதியோடு பிறக்கிறான். பேதத்தோடு பிறக்கிறான். “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை'' என்று சொல்வார்கள். ஆனால், ஆரியம் நம்மை கூறு போட்டு விட்டது. இந்த நாட்டில்தானே மனிதன் செத்த பின்னும் ஜாதி உயிரோடு இருக்கிறது. அதனால்தானே புதுக் கோட்டையில் தாழ்த்தப்பட்ட எங்கள் சகோதரன் பயன் படுத்தும் குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலக்குகிறான். எவ்வளவு பெரிய கொடுமை? மலத்தை கையால் தொட்டு எடுக்கிறோமே என்பதைக் கூட அவன் உணரவில்லை. ஜாதி வெறி அவ்வளவு ஏறியிருக்கிறது. அதுவும் எப்போது? 'திராவிட மாடல்' ஆட்சி வந்த பிறகு?” என்று ஆவேசப்பட்டார். தொடர்ந்து, “இதைப் போக்கத்தானே 'அனைவருக்கும் அனைத்தும்' என்கி றோம். அதைத்தானே சமூக நீதி நாள் உறுதியேற்பில் நமது ஒப்பற்ற முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்! அதைத்தானே 'திராவிட மாடல்' என்று சொல்கிறோம். 'அனைவருக்கும் அனைத்தும்' என்று சொல்வதில் பார்ப்பனர்களும்தானே அடக்கம்! அவர்கள் இல்லை யென்று சொன்னோமா?” என்று அடுக்கடுக்காக கேள்வி களைத் தொடுத்தார். தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தின் தேவைகளைப் பட்டியலிட்டு, முசிறி கழக மாவட்டத்துக்கான பொறுப்பாளர்களை அறிவித்தார். தொடர்ந்து, மக்களை சுட்டியபடி, “இதுபோன்ற பரப் புரையை எங்களுக்காகவா செய்கிறோம்? உங்களுக்காக! உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக! ஆகவே உங்கள் ஆதரவு தேவை” என்று கூறி முடித்துக் கொண்டார்

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் முசிறி நகர்மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சுந்தரராசு, காங்கிரஸ் கட்சி நகர செய லாளர் காமராஜ், வி.சி.க. தொகுதி செயலாளர் கலைச் செல்வன், த.வா.க. மாவட்ட செயலாளர் இராவணன், சி.பி.எம். நகர செயலாளர் கிருஷ்ணன், பெரியார் பெருந்தொண்டர்கள் பி.என்.ஆர்.அரங்கநாயகி, பொதுக்குழு உறுப்பினர் தர்மராஜ், மாவட்ட துணை செயலாளர் சித்தார்த்தன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சு. அறிவன், அரியலூர் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வீரா.திராவிட முத்து, க.சத்தியராஜ், ஜெ.ரமேஷ்,  முசிறி அருணகிரி, ஆசிரியர் விஜயகுமார், தொட்டியம் தோழர்கள் துரைராஜ், தண்டபாணி, பாரதிராஜா,  துறையூர் தோழர்கள் பால்ராஜ், திலீபன், கருணாகரன், பிளாசம் ஸ்டாலின், விஷ்ணுவர்தன், தன்ராஜ், தமிழ்ச் செல்வன், மேட்டுப்பாளையம் அசோகன், கிருஷ்ணசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் அங்கமுத்து நன்றி கூறினார்.

குளித்தலை

அங்கிருந்து புறப்பட்டு வந்து, குளித்தலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை பெரும் பயண கூட்டத்தில் தமிழர் தலைவர் கலந்து கொண்டார். மேடை ஏறுவதற்கு முன்பே, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் மறைந்த பஞ்சப்பட்டி சு.இராஜலிங்கம், ரா.சாவித்திரி, குளித்தலை கி.திராவிடமணி, குளித்தலை சு.செல்லத்துரை, குளித் தலை நா.சந்தானகிருஷ்ணன் ஆகியோரது படங்களை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காளிமுத்து அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாநில தொழி லாளரணி செயலாளர் மு.சேகர், மண்டல தலைவர் ஆல்பர்ட், துறையூர் மாவட்ட தலைவர் மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, பொதுக்குழு உறுப்பினர் வைரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெக நாதன், ப.க. அமைப்பாளர் பொம்மன்  ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் தொடக்க வுரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

சுதந்திர நாட்டில் பார்ப்பான் ஏன்? பறையன் ஏன்?

இரண்டாம் கூட்ட இடமான குளித்தலைக்கு மிக விரைவில் வந்து சேர்ந்தது பயணக்குழு. மிக விரைவாக வந்து சேர்ந்ததற்குப் பின்னால் திராவிடர் இயக்கத்தின் மகத்தான வரலாறு ஒன்று இருந்தது. அது இக்கூட்டத்தில் பேசப்பட்டது. குளித்தலை மேடை ச.செல்லத்துரை நினைவு அரங்கமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் மேடைக்கு வந்தவுடன் அதிரடி க.அன்பழகன் தன் உரையை விரைந்து முடித்துக்கொண்டார். தமிழர் தலைவருக்கு அனைத்துத் தரப்பினரும் பயனாடை அணிவிக்கும் நிகழ்வுகள் முடிந்த பின்னர் ஆசிரியர் உரையாற்றினார்.  

தொடக்கத்தில், சந்தானகிருஷ்ணன், ராஜலிங்கம், சாவித்திரி, திராவிடமணி, செல்லதுரை ஆகியோரைக் குறிப்பிட்டு, “குளித்தலையில் ஈடுசெய்ய முடியாத தோழர்களை இழந்திருக்கிறோம்” என்றார். சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? சுதந்திர நாட்டில் பார்ப்பான் ஏன்? பறையன் ஏன்? என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தச் சொல்வதற்கான காரணமாக பெரியார் சொன்னதை நினைவூட்டினார். அதற்காக குளித்தலை தோழர்கள் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தி சிறை சென்றதை எடுத்துரைத்தார். மேலும், “பார்க்காதே? தீண்டாதே? அணுகாதே? என்று மனிதர்களுக்குள்ளேயே பேதம் எந்த நாட்டிலாவது உண்டா? இதைச் சொன்னால், உடனே ஆ... ஹிந்துக்கள் மனதை புண் படுத்துகிறார்கள் என்று கூப்பாடு போடுகிறார்களே, எருதின் புண் காக்கைக்குத் தெரி யுமா?” என்று கூறி, ஹிந்து மதத்தால் யாருடைய மனம் புண்பட்டிருக்கிறது என்பதை ஒரு சொலவடையின் மூலமே புரியவைத்தார். குளித்தலையில் பெரியார் போராடியதால் 6 மாதம் சிறை சென்றதையும், கலைஞர் முதலில் தேர்தலில் நின்ற இடம் இதுவென்பதையும் மக்களுக்கு நினைவூட்டினார். 

குளித்தலை பாலமும், சேது சமுத்திரத் திட்டமும்!

தொடர்ந்து தமிழ் மொழி மானம், சமஸ்கிருதம் திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கை என்னும் பேரால் சமூகநீதிக்கு ஆபத்து என் பதை எடுத்துரைத்து, “திராவிட மாடல் ஆட்சி இல்லையென்றால் நமது நிலைமை என்ன?” என்று கேள்வி கேட்டு, அதற்கு பதிலும் சொன்னார். அடுத்து சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசினார். அப்போது கலைஞர் உரையிலிருந்து ஒரு பகுதியை வாசித்துக் காட்டினார். அதைக் கேட் டதும் மக்கள் சிலிர்த்துப் போயினர். சேது சமுத்திரத் திட்டம் குறித்து கலைஞர் பேசி வெளியாகியுள்ள புத் தகத்திலிருந்து படித்துக் காட்டினார். அதாவது, “1957 இல் கலைஞர் குளித்தலை யில் தேர்தலில் நிற்கிறார். அப்போது மக்கள் கலைஞ ரைப் பார்த்து ‘நாங்கள் ஓட் டுப் போடுகிறோம். நீங்கள் முசிறிக்கும், குளித்தலைக் கும் இடையில் இருக்கும் ஆற்றுக்குக் குறுக்கே பாலம் கட்டித்தருவீர்களா?’ கட்டிக் கொடுத்தால், எங்கள் பொருட்களை அங்கும், அவர்கள் பொருட்களை இங்கும் விற்பனை செய்ய முடியும். வியாபாரம் பெருகும்! எங்கள் வாழ்க்கைத் தரமும் உயரும்’ என்று கேட்கிறார்கள். 

அப்போது கலைஞர், மோடியைப் போல ‘‘ஜூம்லா” (சும்மானாச்சுக்கும்) காட்டாமல், ‘எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாகக் கட்டித் தருகிறோம்’ என்று பதில் சொன்னார். என்பதை வாசித்து காட்டி விட்டு நிமிர்ந்து பார்த்து, “அதே போல 1967 இல் ஆட்சிக்கு வந்தபிறகு ஆற்றுக்கு குறுக்கே பாலம் கட்டிக் கொடுத்தார்'' என்று நிறுத்தினார். மக்கள் ஆரவாரித்துக் கையொலி எழுப்பி னர். தொடர்ந்து, ”சொல்வதைச் செய்வோம்! செய் வதையே சொல்வோம்! இதுதான்யா திராவிட மாடல்” என்று சொன்னவுடன் மக்கள் உற்சாக மிகுதியில் வேக மாகக் கைகளைத் தட்டி ஆரவாரித்தனர். உற்சாகத்துடன் தொடர்ந்த ஆசிரியர், “ஒரு கி.மீ. தூரம்தான். இப்போது பாலத்தின் மூலம் குறைந்த நேரத்தில் வந்து விட முடிகிறது. பாலம் இல்லாத நாள்களில் நாங்களே கூட 65 கி.மீ பயணம் செய்து திருச்சி சென்று, பின்னர் இங்கே வந்திருக்கிறோம்” என்று குளித்தலையின் வரலாற்றை சொல்லிக் கொண்டு வந்தவர், ”இதுதாங்க சேது சமுத் திரத்திட்டம்” என்று நிறுத்தினார். உடனடியாக உணர்வுப் பூர்வமாகப் புரிந்து கொண்ட மக்கள் மறுபடியும் ஆரவாரித்தனர். இறுதியாக, ‘‘இந்த உண்மை களை பெரும்பான்மை மக்களின் கருத்தாக மாற்றுவதற்குத்தான் இந்த பயணம்! அதற்கு நீங்களும் தயாராக வேண்டும்'' என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ்,  மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, ம.ம.க. பொறுப்பாளர் முகம்மது லியாகத் அலி, அயூப் கான், சாமானிய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் குணசேகரன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கடவூர் மணிமாறன், ஆண்டிப்பாளையம் விடுதலை, ஆதித்தமிழர் பேரவை நகர செயலாளர் ரமேஷ், செ.சந்தானகிருஷ்ணன், ரா.தேன்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் ராஜூ நன்றி கூறினார். 

கூட்டம் முடிந்து திருச்சி முகாம் அலுவலகத்திற்கு பரப்புரைப் படை திரும்பியது.

No comments:

Post a Comment