சுயமரியாதைச் சுடரொளி அ.அப்துல் அஜிஸ் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 19, 2023

சுயமரியாதைச் சுடரொளி அ.அப்துல் அஜிஸ் படத்திறப்பு

 

நயினார்பாளையம், பிப். 19- சின்னசேலம் ஒன்றிய கழகத் தலைவரும், பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவருமான கா. அசன்  அவர்களின் மகன் சுயமரியாதைச் சுடரொளி அ.அஜிஸ் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி, நயினார் பாளையம் பெரியார் பள்ளியில் 12.02.2023 அன்று மாலை 4 மணிக்கு நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். கருங்குழி வெற்றிவேல் வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் த.பெரியசாமி, எழுத்தாளர் மதியழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுயமரியாதைச் சுட ரொளி அ.அஜிஸ் உருவப் படத்தை, மாவட்ட கழக இலக்கிய அணித் தலைவரும், மேனாள் மாவட் டக் கல்வி அலுவலருமான பெ.சயராமன் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். அவர் தனது உரையில், “பெரியார், கல்வியின் மூலம் மூடநம்பிக்கையை ஒழித்து முன்னேறமுடியும் என்று கூறியதற்கேற்ப, அசன் அஜிஸை நன்றாக படிக்க வைத்து பட்டதாரி ஆசிரியராக்கி யுள்ளார். அதைப்போலவே அஜிஸ் அவர்களின் இணையர் ஆப்தா முதுகலை ஆசிரியராக இருக் கிறார். இருவரும் சிறப்பான ஆசிரியர்கள் என்று பெயர்பெற்றவர்கள். பெரியார் கூறியபடி ஒரு மகன், ஒரு மகளோடு அளவான குடும்பத்தை அமைத்துக் கொண்டார். மகன் பொறியியல் பட்ட தாரி, மகள் வேளாண்மை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட பெருமைக்குரிய அஜிஸ் தனது 51-ஆவது வயதிலேயே இயற்கை எய்திவிட்டது என்பது நம் அனைவருக்கும் வருத்தமாக உள்ளது. பெரும்பாலும் கழகக் குடும்பங்கள் வளமாக, நலமாக பெரியார் சிந்தனைகளை சுவாசிப்பதனால் நீண்ட காலம் வாழ்வார்கள்; தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு உதவுபவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் அவரின் குடும்பம் விளங்கியதை அறிய முடிகிறது. அவர் மறைந்தாலும் அவரின் வாழ்க்கையை பாடமாகக் கொண்டு அவரின் இணையரும், பிள்ளைகளும் வாழவேண்டும். அஜீஸை இழந்து வாடும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி முடித்தார். தோழர் திருமால், அன்புமதி, அரசு போக்குவரத்து கழகத் தோழர் நாகராஜன் ஆகியோர் உட்பட பலர் இரங்கலுரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் இந்திரா அன்டிரன், கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வீ.முருகேசன், ரிஷிவந்தியம் ஒன்றிய கழகத்  தலைவர் அர.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment