வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தமிழர் தலைவர் மூடநம்பிக்கைகளை கண்டித்து கருத்துரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 18, 2023

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தமிழர் தலைவர் மூடநம்பிக்கைகளை கண்டித்து கருத்துரை!

 மூடநம்பிக்கை, முன்னேற்றத்தை தடுக்கும் என்பதற்கு சேது சமுத்திரத் திட்டமே சாட்சி!

பாரதக் கலாச்சாரம்தான் மக்களுக்கு சூதாட்டத்தைக் கற்றுக் கொடுத்தது!

காட்பாடி.பிப்.18 சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கம், மீண்டும் சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்ற பரப்புரைப் பயணத்தில் காட்பாடி, திருவண்ணாமலை பகுதி களில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

வேலூர்-காட்பாடி

வேலூர் காட்பாடி காந்தி நகரில் 17.2.2023 அன்று நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இர.அன்பரசன் தலைமை வகித்தார். வேலூர் மாநகர தலைவர் விசுவநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல மகளிரணி செயலாளர் ந.தேன்மொழி இணைப்புரை வழங்கினார். பெரியார் மருத்துவரணி செயலாளர் பழ.ஜெகன்பாபு, மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட மகளிரணி தலைவர் ச‌.கலைமணி, மாநகர செயலாளர் சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், இளங்கோவன் சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மகளிரணி- மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தொடக்க உரையாற்றினார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அதானி என்றொரு ஏழைப் பங்காளன்!

இறுதியாக பேசிய தமிழர் தலைவர், நல்ல ஆங்கிலப் புலமையோடு சங்கராச்சாரியார் யார்? எனும் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அய்யா சுப்பிரமணியம் அவர்களை அளித்த ஊர் இது. இன்று அவர் இல்லை என்று குறிப்பிட்டு, ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாமல் வாழ்த்து அனுப்பி வைத்துள்ள அமைச்சர் துரைமுருகன் அவர்களைப்பற்றியும் குறிப்பிட்டார். பிறகு,  கருத்துரிமை, கல்வி சுகாதாரம் பற்றி சற்று விரிவாகப் பேசினார். தொடக்கத்தில் பி.பி.சி ஆவணப்படத்தை குறிப்பிட்டும், இந்தியாவில் பி.பி.சி அலுவலகத்தில் சோதனையிடுவதை நினைவுபடுத்தி, பிரிட்டிஷ் அரசாங்கமே பி.பி.சி.யை மிரட்ட முடியாது. ஆனால் இங்கே பி.பி.சி. அலுவலகத்தை சோதனை போடுகிறார்கள். கருத்தை கருத்தால் சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதைச் சொல்வதற்கு தங்களுக்கு தகுதி உண்டு என்பதை, ‘ஆர்.எஸ்.எஸ். மீது எங்களுக்கு கொள்கை ரீதியாக கடும் எதிர்ப்பு உண்டு. ஆனால், அன்றிலிருந்து இன்று வரை அதை தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறியதில்லை. மத பயங்கரவாதம் காரணமாகத்தான் அது மூன்று முறை தடை செய்யப்பட்டது’ என்றார். தொடர்ந்து, ’பா.ஜ.க. இந்திய அரசியல் சட்டப்படி எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணப்படி ஆட்சியை நடத்து கிறதா? இல்லையே’ என்று அண்மையில் எழுந்துள்ள அதானி - மோடி குற்றச்சாட்டு குறித்து பேசினார். 

அதாவது, ’அதானி என்றொரு ஏழைப்பங்காளன் இருக்கிறாரே’ என்று தொடங்கினார். மக்கள் புரிந்து கொண்டு சிரித்தனர். தொடர்ந்து, கரோனா காலகட்டத்தில் மருத்துவ மனைகள் தவிர அனைத்தும் முடங்கின. தொழில்கள் நசிந்தன. பலரும் நட்டமடைந்தனர். ஆனால், அதானி மட்டும் நாள் ஒன்றுக்கு அதிகமில்லை தோழர்களே, 1000 கோடிதான் வருமானம் ஈட்டினார் என்று கூறிவிட்டு,  ’இது குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால். பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டியது தானே? மாறாக ராகுல் காந்தி மீது உரிமை மீறல் நடவடிக்கை பாயும் என்கிறார்கள்’ இது சரியா? என்று கேட்டுவிட்டு, நிகழ்ச்சியின் நோக்கத்திற்கு வந்தார். அதாவது, ’ஒரு பஞ்சாயத்து தேர்தலில் கூட நிற்காத நாங்கள் ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஏன்? ஒன்று சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும், மற்றொன்று திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பை மக்கள் மத்தியில் விளக்கிச் சொல்வதற்கு, அடுத்து சேது சமுத்திரத்திட்டம் மீண்டும் செயல்படுத்த வேண்டும். இந்த மூன்றுக்காகத்தான் இந்த பரப்புரைப் பயணம்’ என்றார்.

அண்ணாமலைகள் 

அரோகரா பாடலாமே தவிர...

தொடர்ந்து, ஒரு மனிதனுக்கு கல்வி, சுகாதாரம் தான் மிகவும் இன்றியமையாதது. தமிழ்நாடு இந்த இரண்டிலும் சாதனை செய்திருக்கிறது. அதை பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே ஒத்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறிவிட்டு, பாலியல் நீதி கலந்த சமூக நீதி தான் தங்களின் நிலைப்பாடு என்றார். அதற்கு மாறாக இன்றைக்கும் ராஜஸ்தானில் சதி மாதா கோயில் இருப்பதாகவும் கூறி, அதைப் பற்றி சுருக்கமாகப் பேசி, கணவன் இறந்த பிறகு மனைவியை உயிருடன் கொளுத்திய பிறகு அந்தப் பெண்ணுக்கு கோயில் கட்டி வணங்கும் கொடுமையை வேதனையுடன் குறிப்பிட்டார். அது நடந்தது ஆரிய வர்த்தத்தில். திராவிட நாட்டில் அதற்கான தேவையே ஏற்படவில்லை என்று தொடர்ந்தார். அதுமட்டுமல்ல, இங்கே விதவைக்கு மறுமணம் செய்து வைக்கப்பட்டது என்று ஆரிய, திராவிட பண்பாட்டையும் லேசாகத் தொட்டுக் காட்டினார். மேலும், கல்விக்காக நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான தியாகராயரில் தொடங்கி இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரையிலும் உணவு கொடுத்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்திருப்பதையும், பெண் குழந்தைகளுக்கு திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் கலைஞர் எப்படியெல்லாம் பெண் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுத்தார் என்றும், அதை இப்போதிருக்கும் முதலமைச்சர் மாதம் 1000 என்று விரிவு படுத்தி உள்ளதையும் எடுத்துரைத் தார். பிறகு, ‘இப்படிப்பட்ட ஒரு ஆட்சியைத்தான் ஒழிக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்’ என்றார். அதற்குப் பின்ன ணியாக, ‘எதைக்கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்கலாகாது என்ற மனுதர்மம் இருக்கிறது’ என்று ஆழமாகச் சென்று புரிய வைத்தார். ஆனாலும் அண்ணா மலைகள் அரோகரா பாடலாமே தவிர ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றார். தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தின் வரலாற்றை சுருக்கமாகக் கூறினார். அப்போதுதான் ‘மூடநம்பிக்கை எப்படி நம்முடைய முன்னேற்றத்தை தடுக் கிறது என்பதற்கு சேது சமுத்திரத் திட்டத்தின் முடக்கமே கண்கண்ட சாட்சி!’ என்றார். ஆகவே இந்தத் திட்டம் மீண்டும் வரவேண்டும்! இலட்சக்கணக்கான படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கும், பா.ஜ.க. காரர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் போராடுகிறோம் என்று கனிவுடன் சொன்னார். இறுதியில், ஆகவே நாங்கள் பேசுவது, எங்களுக்காக அல்ல, உங்கள் பிள்ளைகளுக்காக! உங்கள் சந்ததிகளின் எதிர்காலத்திற்காக! ஆதரியுங்கள்! வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு! என்று தனது உரையை நிறைவு செய்தார். 

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் தி.மு.க. பகுதி கழக துணை செயலாளர் கே.எஸ்.கண்ணன், ம.தி.மு.க.மாநகர செயலாளர் கோபி, சி.பி.எம்.மாவட்ட செயலாளர் தயாநிதி, காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி.அணி மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.ரவி, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.

முடிவில் காட்பாடி ஒன்றிய கழக அமைப்பாளர் கோ.சஞ்சீவி நன்றி கூறினார். கூட்டம் முடிந்த பிறகும் தமிழர் தலைவர் தனது வாகனத்திற்கு உடனடியாக  செல்ல இயலவில்லை. அதையும் கடந்து 80 கி.மீ. மேல் இருக்கக்கூடிய திருவண்ணா மலைக்கு புறப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அறிஞர் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பெரும் பயணக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் இராம் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் பட்டாபிராமன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வழக்குரைஞர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்த னர். திராவிடர்  கழக மகளிரணி மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தொடக்க உரையாற்றினார்.

கல்வி என்பது 

நமது அறிவை சாணை தீட்டும்!

இறுதியாக பேசிய தமிழர் தலைவர், “கல்வி என்பது நமது அறிவை சாணை தீட்டும் கருவி! அதைத்தான் 100 ஆண்டு களுக்கு முன்னால் நமக்கு கிடைக்க விடாமல் தடுத்தார்கள் என்று தொடங்கி, மகாராட்டிரத்தில் ஜோதிபா பூலே எதிர்த்தார். கோலாப்பூர் சாகுமகராஜ் சமூகநீதியை ஏற்றுக் கொண்டதை யும், 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இதே காரணத்திற்காக புத்தர் போராடியதையும், அவரது கருத்துகள் நாடு கடத்தப் பட்டதையும் சொல்லி, இதை எதிர்க்கத்தான் திராவிடர் இயக்கம் உருவானது’ என்று திராவிடர் இயக்கத்தின் அருமையை புரிய வைத்தார். இதற்கு இடையூறாக குலக்கல்வியைக் கொண்டு வந்தவர்தான் ராஜாஜி என்று ஆரியத்தை அம்பலப்படுத்தினார். அதற்கு இடையூறாக கொண்டு வரப்பட்டுள்ளதுதான் மோடியின் புதிய தேசிய கல்விக்கொள்கை’ என்று 2000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் போராட்டத்தை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, பள்ளிக்கூடத்திற்கு வா, வா என்று காமராசர் காலத்தில் தமிழ் நாடு அரசு அழைத்தது. மாணவர்கள் போகவில்லை. அதுவொரு காலம். பின்னர் கல்வியின் அருமையை பெற்றோர் புரிந்து கொண்டு பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு போ, போ என்றார்கள். அதுவும் ஒரு காலம்! இன்று தளபதி மு.க.ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி கொண்டுவந்திருக்கிறார்! மக்களைத் தேடி மருத்துவம் கொண்டு வந்திருக்கிறார்! என்று திராவிடர் இயக்கம் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார். 

ஆளுநரை கண்டித்து பேச வந்த போது, ‘பாரதக் கலாச்சாரம்தானே சூதாட்டத்தைக் கொண்டு வந்தது? அதுதானே இன்று ஆன் லைன் சூதாட்டம் வரை வந்துள்ளது? என்றார். அதிலும் தர்மன் சூதாடிய யோக்கியதையை விளக்கினார். தொடர்ந்து 2014 இல் ஆட்சிக்கு வந்த மோடி கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டதற்கு அமித்ஷா ”ஜூம்லா” என்று சொன்னதையும், திராவிட மாடல் ஆட்சி வந்த 20 மாதங்களில் 85% வாக் குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தார். மோடி மாடலை குஜராத் மாடல் என்றும், தமிழ்நாட்டு மாடலை திராவிட மாடல் என்றும் ஒப்பிட்டார். இறுதியாக சேது சமுத்திரத்திட்டம் பற்றி சுருக்கமாகப் பேசி உரையை நிறைவு செய்தார்.

கலந்து கொண்ட தோழர்கள்!

இந்த பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தி.மு.க. பொறுப்பாளர் பன்னீர்செல்வம், ம.தி.மு.க.பொறுப்பாளர் வழக்குரைஞர் பாசறை பாபு, சி.பி.அய். பொறுப்பாளர் தங்கராசு, ம.ம.க.மாவட்ட தலைவர் கலிமுல்லா, எஸ்.டி.பி.அய்.மாவட்ட தலைவர் முஸ்தாக் பாஷா, தி.மு.க.பொறுப்பாளர் நேரு, கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஜானகிராமன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் காமராஜ் நன்றி கூறினார். 

கழகத் தலைவர் மேற்கொண்டுள்ள சூறாவளி பரப்புரை பயணத்தில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ்,  மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment