நூல் அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

நூல் அரங்கம்

நூல்: எண்ணம் பிறந்த மின்னல் 

( விருத்தப் பாக்கள் ) 

ஆசிரியர்:

 செல்வ. மீனாட்சி சுந்தரம் 

வெளியீடு: கீழடி பதிப்பகம் 

முதல் பதிப்பு : 2021 

பக்கங்கள்: 200 

விலை: 200/-

பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாட்டின் பல நகரங்களில் சிறப்பாக பணியாற்றிய மதுரைக்காரர். பெரியாரின் கொள்கைகளில் பற்றுடையவர். பகுத்தறிவை தன் பாக்களில் பாடி வைப்பவர்!

இந்த நூலில் - 114 தலைப்புகளில் பல்வேறு விடயங்களை கருப் பொருளாக்கி சிறப்பாக பாக்களைப் படைத்துள்ளார். இது அவரது ஆரம்ப கால, நடை பயண காலத்தின் பாக்கள் என்றால் - நர்த்தனம் ஆடும் காலத்தின் பாக்கள் இன்னும் எத்தனை மடங்கு வீரியத்தோடு வெளிவருமோ!

பாவேந்தர் வழியிலே பயணிக்கும் நமது பாவலர் - இரவைப் பற்றி பாடுகிறார்! இணையரைப் பற்றி பாடுகிறார்!!

பெரியாரைப் பற்றி பாடுகிறார் ! பெரியாரைப் பற்றி படர்கிறார்!!

காலை, நூலை, கடமையை, காசை, பாவேந்தரை, பாட்டரசரை இப்படி இவர் 

பாடாத விடயமில்லை! 

தேடாத தடயமில்லை!!

தாயைப் பற்றி பாடாத பாவலரும் உண்டோ?

அம்மா என்றழைக்காத உயிரும் தான் உலகில் உண்டோ ?

தாயை பாட வந்த தனயன், தான் ஒரு நாத்திகவாதி என்பதையும் நினைவூட்டி, நயத்தக்க முறையில் பாடுகிறார் :

கடவுளின் இருத்தல் தன்னைக்

கடுமையாய் மறுக்கு மென்னைக்

கடவுளே நீதா னென்று

கடிதினில் நம்ப வைத்தாய் ! 

நம்பிக்கை தான் கடவுள் என்று இறுதியில் சொல்லி வைத்தார் பெரியார் தொண்டர் !

தாயைப் பாக்களில் கொண்டு வந்த பலர், தகப்பனை பாடவில்லை.. அந்த குறையைப் போக்கி, அப்பா என்ற தலைப்பில் பாடியுள்ளார்:

எனக்கிது வேண்டு மென்றே

எடுத்து நான் சொன்னால் போதும் 

பணமது வந்து சேரும் !

பைதனில் இல்லாப் போதும் ! ....

எல்லா அப்பாக்களும் இப்படித்தான் என - 

இப் பாக்களும் அல்லவா சொல்கிறது !

உவமைக் கவிஞருக்கு உவமையாக சொல்வதற்கு - ஒரு பொருளும் இல்லை .. பொக்கிஷமும் இல்லை !

'விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்' என்ற உவமைக்கு இணையான உவமை உண்டா ? 

உவமைக் கவிஞர் சுரதாவோடு எனது நட்பு ஆழமாக இருந்தது.

சுரதா பற்றிய பாவலரின் பாக்கள் சுவையாக இருந்தது :

சாயாதே கோபுரமும் மாடு முட்டி !

தண்மலரின் வேர்வையெனத் தேனைச் சொன்னார் !

ஓயாதே பசித்துன்பம் நுரையைத் தின்றே !

ஒப்பில்லா உவமை சொன்னார் உவமை வேந்தர்!

மதிய உணவைத் தந்த மகராசன் - காமராசரைப் பற்றி இவ்வாறு புகழ்கிறார் :

பள்ளியில் படிக்கும் பிள்ளை

பசிதனைப் போக்கும் வண்ணம்

அள்ளியே உணவை உண்ண

அனுதினம் தொடர்ந்து தந்தார் !

பாவலரின் பாக்களில் வெப்பமும் உண்டு ! நுட்பமும் உண்டு! பாவேந்தர் பாரதிதாசனைப் பாராட்டும் பாக்களில் அதைப் பார்க்கலாம் :

வரிப்புலியின் உறுமலினை எழுத்தில் தந்தார்!

வாள் கொண்ட கூர்மையினைச் சொல்லில் கொண்டார்!

தெறித்திடுமே நரம்பெல்லாம் உணர்ச்சி பொங்கி!

தீநாக்குக் கவிதைகளின் எழுச்சி யோங்கி!

பாவலரோ பெரியார் தொண்டர். 

பெரியாருக்கு அவர் சொல்லும் வணக்கம் இவ்வாறு :

சாத்திரம் மதத்தின் வேராய்

தாங்கிடும் கடவுள் கண்டாய்!

சூத்திரன் என்றே சொல்லித்

தூற்றினார் கடவுள் பேரால்!

ஆத்திரம் கொண்டு நீயும்

ஆண்டவன் பழைமை தன்னைக்

காத்திடும் மதங்கள் ஜாதி

களைந்திடல் கடனே யென்றாய்!

பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரத்தின் பாக்கள்

அறிவானவை! அழகானவை!

சுவையானவை! சுகமானவை!

பயனானவை! பண்பானவை! 

நித்தமும்  நினைவானவை !

நித்தமும் நினைவில் வை!!

பாவலர் அவரது பாக்களை -

எண்ணம் பிறந்த மின்னல் என்கிறார் !

படித்தபின் அவரது பாக்களை

வண்ணம் நிறைந்த ஜன்னல்

என்கிறேன் !

- பொ. நாகராஜன்

 பெரியாரிய ஆய்வாளர்.


No comments:

Post a Comment