"செய்தியும் பின்னணியும்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

"செய்தியும் பின்னணியும்"

மணியோசை

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து அப்போது புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக்கப்பட்டன.

புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத் தப்பட்டன.

ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக 58 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்குப்பின் சென்ற டிசம்பர் 7ஆம் தேதி (2022) அன்று தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு இதனை விசாரித்து 2.1.2023 அன்று தீர்ப்புக் கூறி யுள்ளனர்.

இதில் 4 நீதிபதிகள் (பெரும்பான்மை) ‘இந்த நடவடிக்கை சட்டப்படி சரியானது' என்றும், ஒரு நீதிபதி ‘சட்டப்படி சரியானதல்ல - முரணானது' என்று மாறுபட்டும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்!

"கருப்புப் பணத்தை ஒழித்தல், பயங்கரவாத இயக் கங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களைக் கருத்தில் கொண்டே ஒன்றிய அரசால் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என்பது பெரும்பான்மை நீதிபதிகள் தந்த தீர்ப்பில்  உள்ளது.

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை சட்டத்துக்குப் புறம்பானது என மாறுபட்ட தீர்ப்பு எழுதிய ஜஸ்டிஸ் திருமதி பி.வி.நாகரத்னா, "பண மதிப்பிழப்பை அரசாணை மூலமாக ஒன்றிய அரசு நிறைவேற்றியது சட்டத்திற்குப் புறம்பானது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் மாறுப்பட்ட தீர்ப்பில்.

"பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மொத்தமாக 24 மணி நேரத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி சுதந்திரமாகச் செயல்பட்டதாகத் தெரியவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் ஒன்றிய அரசின் அதிகாரம் நாடாளுமன்றத்தின் மூல மாக மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் விரிவாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். மாறாக வெறும் அரசாணை வெளியிடுவதன் மூலம் ஒன்றிய அரசு அதன்அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது" என்று சுட்டிக் காட்டியிருக் கிறார் மாறுபட்ட தீர்ப்பு எழுதிய நீதிபதி அம்மையார்!

"பணமதிப்பிழப்பு முன்மொழிவு என்பது ஒன்றிய அரசின் திட்டம். ரிசர்வ் வங்கியிடம் இதுகுறித்து நடத்திய ஆலோசனையால் ஆர்.பி.அய். சட்டம் 26(2) கீழ் உள்ள பரிந்துரை அம்சங்கள் நிறைவேறிவிட்டதாகக் கருத முடியாது" என்பதும் முக்கியமான கருத்தாகும். "ஆலோசிக்க 24 மணி நேரம் அவகாசம் கூட ரிசர்வ் வங்கிக்குத் தரப்படவில்லை" என்றும் அந்த மாறுபட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரச்சினையில் பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பும்கூட, ஒரே அடியாக இந்த முடிவு - பணமதிப் பிழப்பினை வரவேற்றோ, ஆதரித்தோ நியாயப்படுத்த வில்லை - சட்ட ஆய்வுரையே!

பெரும்பான்மைத் தீர்ப்பு பற்றி ஒருகருத்து சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

"The Word "Any" would mean "All" under section 26(2) of the Act".

இரண்டு சொற்களுக்கும் ஒரே பொருளா என்பதை ஆங்கில அகராதி தொகுப்பாளர்களைத்தான் கேட்க வேண்டும்.

பா.ஜ.க.வினர் "பெரும்பான்மை தீர்ப்பு; எனவே செல்லும்" எனத் துள்ளிக் குதிக்கின்றனர்!

பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், மாறுபட்ட சிறுபான்மைத் தீர்ப்புகள் தான் பின்னாளில் ஏற்கப்பட்டு சட்டங்களாலும், சமூகத்தாலும், அரசுகளா லும் ஏற்கப்பட்டதான வரலாறு  உச்சநீதிமன்ற - உயர் நீதிமன்ற வரலாற்றில் உண்டு.

எடுத்துக்காட்டாக,

கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என்ற உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பில் ஜஸ்டிஸ் என்.சோமசுந்தரம் மாறுபட்ட கருத்தினையே தனித்து சொன்னார்.

பிறகு பஞ்சாப் அய்க்கோர்ட் தீர்ப்பு - ஓம் பிரகாஷ் Vsஅரசு (Om Prakash Vs State) என்ற தீர்ப்பில் பெரும்பான்மையை விட்டு மாறுபட்ட தீர்ப்புதான் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்பிறகு அரசமைப்புச் சட்டத்திருத்தம் 15(4) எப்படி வந்தது என்பதும் சுட்டிக் காட்டப்படவேண்டிய தாகும்.

அதுபோல முன்பு இடஒதுக்கீட்டில் எம்.ஜி.ஆர். அரசு 1979இல் கொண்டு வந்த 9 ஆயிரம் ஆண்டு வருமான வரம்பு பற்றிய உயர்நீதிமன்ற வழக்கில் பெரும்பான்மை நீதிபதிகள் செல்லும் என்றனர். ஒரு நீதிபதி ஜஸ்டிஸ் வி.இராமசாமி மாறுபட்ட தனித் தீர்ப்பு எழுதினார். பிறகு அதுதான் மக்கள் மன்றத்தில் நின்று வென்றது!

இப்படிப் பலப்பல தீர்ப்புகள். பெரும்பான்மையா? சிறுபான்மையா? மாறுபட்டதா? என்பதல்ல - மக்கள் மன்றத்தின் கேள்வி!

கால வெள்ளத்தில் நிற்கக்கூடிய தீர்ப்பு எது என் பதே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய தீர்வாகும்!

சட்டப்படி சரியா? நியாயப்படி சரியா? என்பது மில்லியன் டாலர் கேள்வி!

ஒரு நோக்கம் வெற்றி பெறுகிறதா? தோல்வி அடைகிறதா என்பதே சரியான அளவுகோல்! 

No comments:

Post a Comment