விளையாட்டிலும் அரசியல் விளையாட்டா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 13, 2023

விளையாட்டிலும் அரசியல் விளையாட்டா?

இந்திய விளையாட்டுத்துறை நேசனல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அதாரிட்டியை ஒன்றிய பாஜக அரசுபதவி ஏற்ற பிறகு 'கேலோ இந்தியா' என்று பெயர் மாற்றியது, அதாவது 'விளையாடு இந்தியா' என்பது இதன் தமிழ் பெயராகும்.

விளையாட்டு மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுஜித் குமார் குப்தா ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது? விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ஒன்றிய அரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில்; மாநிலங்களுக்குக் கடந்த 3 ஆண்டுகளில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் அதிகபட்சமாக பாஜக ஆளும் குஜராத் மாநிலத்துக்கு 285 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைத் தவிர மற்ற மாநிலங்கள் எதற்கும் அதற்கு இணையான தொகை ஒதுக்கப்படவில்லை. குஜராத்துக்கு அடுத்தப்படியாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ரூ.46 கோடியும், பஞ்சாப்புக்கு ரூ.45 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தென் மாநிலங்களுக்கு மிகச் சொற்பமாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஒன்றிய அரசின் புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு 4.32 கோடி ரூபாய் மட்டுமே விளையாட்டு மேம்பாட்டுக்காக ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.

இதேபோல் ஆந்திராவுக்கு ரூ.5 கோடியும், தெலுங் கானாவுக்கு 7 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் பாஜக ஆளும் மாநிலமான கருநாடகாவுக்கு 41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிகவும் குறைவாக புதுச்சேரிக்கு 89 லட்சம் ரூபாய் மட்டுமே  ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது.

2021-இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பாக  31 பேர் அரியானாவிலிருந்து பங்கேற்றனர். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபிலிருந்து 19 பேரும் தமிழ்நாட்டிலிருந்து 11 பேரும் பங்கேற்றனர். அதேபோல் ஜூன் மாதம் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் அரியானாவில் நடந்து முடிந்தது. அதில் அரியானா மாநிலம் 137 பதக்கங்கள் பெற்று அதிக பதக்கங்கள் பெற்ற மாநிலம் என்ற சிறப்பைப் பெற்றது. அதற்கு அடுத்தபடியாக மகாராட்டிரா 125 பதக்கங்கள், டில்லி 79 பதக்கங்கள், கருநாடகா 67 பதக்கங்கள், கேரளா 55 பதக்கங்கள், தமிழ்நாடு 52 பதக்கங்களைப் பெற்றிருந்தன.

இப்படி மேலே குறிப்பிட்டிருக்கும் எந்த ஒரு தொடரிலும் அதிகம் பங்குபெறாத வெற்றிபெறாத குஜராத் மாநிலத்திற்கு ரூ.285.37 கோடி. கொடுக்கப்பட்டுள்ளது. அதிக நிதி பெற்றுள்ள பட்டியலில் முதல் பத்து மாநிலங்களில் 7 மாநிலங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களேதான். ராஜஸ்தானைத் தவிர ரூ.100 கோடிக்கு மேல் பெற்றுள்ள அய்ந்து மாநிலங்களும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்தான்.

கூடுதல் வளர்ச்சி தேவையுள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி தேவை என்பது சிறந்த வாதம்தான். ஆனால் 31 மாநிலங்கள் கொண்ட நாட்டில் மொத்தமுள்ள 2754.28 கோடி ரூபாயில் சுமார் 1100 கோடி ரூபாயை விளையாட்டுக் குறித்து எந்த ஒரு திட்டமுன்வரைவும் செய்யாத மாநிலங்களுக்கு மட்டுமே ஒதுக்குவதை எந்தக் கோணத்தில் எப்படிப் பார்க்க முடியும்? விளையாட்டுக்கான வளர்ச்சித் திட்ட நிதி என்பதால் அதை மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்பப் பிரித்து வழங்குவதுதான் ஒரு வகையில் சரியாக இருக்கும். ஆனால் அந்தக் கோணத்திலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி பொருந்தவில்லை. தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கெல்லாம் நிதி குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் தொகை மிகக்குறைவாக உள்ள அருணாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2023இல் ஆசியப் போட்டிகள், 2024இல் ஒலிம்பிக்ஸ், பல விளையாட்டுகளில் தொடர்ந்து உலக வாகையர் பட்டப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் வரும் காலங்களில் நடக்கவுள்ளன. தமிழ்நாட்டில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஆசியக் கடற்கரை போட்டிகளைச் சென்னையில் நடத்தவும், தமிழ்நாடு முயற்சி செய்து வருகிறது.  பல்வேறு விதங்களில் விளையாட்டுகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் வழங்கப்படும் நிதியோ அநீதியாக உள்ளது. 

நிச்சயம் விளையாட்டு மேம்பாட்டுக்கு ஒரு மாநிலத் திற்கு ரூ.500-600 கோடி வழங்குவது பாராட்டக் கூடிய விஷயம்தான். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு அதில் 5 முதல் 10 விழுக்காடு மட்டுமே வழங்குவதுதான் பிரச்சி னையாக உள்ளது. அதுவும் விளையாட்டை மேம்படுத்த பல முயற்சிகள் எடுக்கும் மாநிலங்களுக்கு அது நிச்சயம் ஒரு பின்னடைவாகத்தான் இருக்கும். இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் ஒன்றிய அரசு தாங்கள்  ஆளும் மாநிலங்களுக்குப் பெரும்பாலான நிதியை  வழங்கி தேசிய விளையாட்டுகளிலும் பச்சையான அரசியல்  விளையாட்டை மேற்கொள்வது சிறுபிள்ளை விளையாட்டே!

நாட்டு மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 2024இல் இதற்கான விலையை ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொடுக்கத்தான் போகிறது. அதையும் பார்க்கத்தான் போகிறோம்.


No comments:

Post a Comment