சட்டம் - ஒழுங்கு பிரச்சினை: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை:

காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

சென்னை, ஜன.20 "காவல் நிலையத் திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலை யத்திலும் உருவாக்கப்பட வேண்டும்” என்று மாநில சட்டம் - ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (19.1.2023) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர், தமிழ்நாடு இவ்வரசின் தலைமையில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருவதால், முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினம் ஆகியவற்றை மிக அமைதியாக நடத்திக் காட்டியிருக்கிறது என்று தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மற்றும் கள்ளக் குறிச்சி நிகழ்வுகளில் நமது காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, சிறப்பாக செயல்பட்ட போதிலும், இம் மாதிரியான நிகழ்வுகள் தொடர்பாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை முன்கூட்டியே எடுக்க, காவல் துறையின் முக்கிய பிரிவுகளுக்கிடைய மேலும் வலுவான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

 மாவட்டங்களில் கொலைக் குற்றங்கள், ஆதாயக் கொலைகள், கூட்டுக்கொள்ளைகள், கொள்ளை  போன்ற குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும், இதுபோன்ற குற்ற நிகழ்வுகள் நடைபெறும் போது மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் பணியினை விரைந்து மேற்கொண்டு, குற்றவாளி களை கைது செய்து, கொள்ளை போன நகைகளை மீட்டு, இழந்தவர்களுக்குத் திரும்ப வழங்கும் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதில் தாமதம் காணப்பட்டால், அது நீதிக்கு நாம் செய்யும் பிழையாகி விடும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

காவல் துறையின் சிறப்பான, பாரபட்சமற்ற, திறமையான, துரிதமான பணியே, மக்களிடம் காவல் துறைக்கும் அரசுக்கும் நல்ல பெயரை ஈட்டித் தரும். சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் எந்த சக்திகளையும் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.  

புகார் அளிக்க வரும் ஏழை, எளிய மக்கள், குறிப்பாக பெண்கள் நட வடிக்கை கோரி அணுகும்போது, அவர்களை மனிதநேயத்தோடு அணுகி அவர்களது புகாரை பதிவு செய்து, உரிய மேல்நடவடிக்கை எடுக்க  

ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் நிலைய அளவில் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பதியப்பட்ட புகார்களின் மீதான விசாரணை நிலை, கைது நடவடிக்கைகளை எந்த நிலை யில் உள்ளன என்பதை கண்காணிக்க வேண்டும், ஆய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள், பின்பற்றப்படாத நிகழ்வுகள் இருக்குமானால், சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேசமயம், சிறப்பாக மக்கள் பணியாற்றும் காவல் அலுவலர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண் டார். மக்களின் நம்பிக்கைக்கு முழு மையாக நீங்கள் பாத்திரமாக வேண்டும். காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இதனை காவல் துறைத் தலைவர் உறுதி செய்திட வேண்டும். இதைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.  இதைத்தான் மக்களும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டும். செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று முதலமைச்சர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment