அரசியல் லாப நோக்கத்துக்காக நாடகமாடும் ஆர்.எஸ்.எஸைப் புரிந்துகொள்வீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

அரசியல் லாப நோக்கத்துக்காக நாடகமாடும் ஆர்.எஸ்.எஸைப் புரிந்துகொள்வீர்!

 வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசங்களைக் கண்டு வெற்றி பெற்று ''வைக்கம் வீரர்'' என்று திரு.வி.க.வால் பாராட்டப்பட்டவர் தந்தை பெரியார்!

வைக்கம் போராட்டத்தில் ஈடுபடாத - அதேநேரத்தில் இன்றுவரை ஜாதி - தீண்டாமையை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். வைக்கம் போராட்டத்திற்கு உரிமை கோருவதா?

1924 ஆம் ஆண்டு - வைக்கம் போராட்டத்தின் நூற் றாண்டு விழாவை - வைக்கம் போராட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத ஆர்.எஸ்.எஸ். உரிமை கோரி கொண்டாடுவது அசல் ஏமாற்று வேலை - வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்துப் போராடி, வெற்றி கண்டவர் 'வைக்கம் வீரர்' தந்தை பெரியார் என்பது வரலாறு. ஆர்.எஸ்.எஸின் ஏமாற்று வேலையைப் புரிந்து கொள்வீர்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1924 ஆம் ஆண்டு (இருபதாம் நூற்றாண்டு) தொடங்கி, ஏறத்தாழ ஓராண்டு தொடர்ந்து நடந்த அறப்போர் - வைக்கம் சத்தியாகிரகம். அன்றைய திருவிதாங்கூர் ராஜ்ஜியம் - இன்றைய கேரளாவின் வைக்கம் என்ற ஊரில், கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் கீழ்ஜாதியர்கள் குறிப்பாக ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் போன்றவர்களுக்கு நடக்கவே உரிமை கிடையாது; காரணம், கீழ்ஜாதியர்களின் நிழல்பட்டால்கூட வைக்கத்தப்பன் என்கிற மகாதேவக் கடவுள் தீட்டுப்படுவார் என்று கூறி, சனாதனம் தனது விஷப்பல்லை நீட்டித் தடுத்தது!

வைக்கத்திலிருந்து - போராட்டத் தலைவர்கள் தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதம்!

நடக்க உரிமை கோரும் இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை கேரளப் போராளிகளான டி.கே.மாதவன், ஜாரஜ் ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, கே.பி.கேசவமேனன் போன்றவர்கள் தொடங்கினர். அவர்களையெல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தது அந்நாளைய திருவிதாங்கூர் அரசு. காரணம், அதற்குள்ள ஹிந்து - சனாதன - வர்ணதர்மம் காப்பாற்றும் உறுதியே!

சிறைக்குள்ளிருந்தபடியே, தமிழ்நாடு காங்கிரஸ் தலை வரான ஜாதி- தீண்டாமை ஒழிப்புப் பிறவிப் போராளியும், அதே சமகாலத்தில் சேரன்மாதேவி குருகுலத்தில் ஜாதி வேறுபாட்டை பயிற்சி பெறும் இளம்பிள்ளைகளிடம்கூட காட்டியதை எதிர்த்து வெற்றி கண்டவருமான தந்தை பெரியாருக்குத் தங்களது சத்தியாகிரகமியக்கத்தை மேலும் முன்னெடுத்துத் தலைமை தாங்கி நடத்த கேரளத் தலைவர்கள் விடுத்த அழைப்பை  தந்தை பெரியார் ஏற்று, வைக்கத்திற்குச் சென்று சத்தியாகிரகப் போராட்டத்தை மேலும் வலுவுள்ள வகையில் நடத்தி, இரண்டு முறை தண்டிக்கப்பட்டு சிறையேகி, தனது துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மையார் என்ற பெண்களையும் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். பிறகு தெருக்களில்   கீழ்ஜாதியினர் நடக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.

''வைக்கம் வீரர்'' என்று தந்தை பெரியாருக்குப் பட்டம் கொடுத்து 'நவசக்தி'யில் எழுதியவர் திரு.வி.க.!

அதனால், தந்தை பெரியார் அவர்கள், திரு.வி.க.வால் ‘‘வைக்கம் வீரர்'' என்று பாராட்டப்பட்டார்! (‘நவசக்தி'யில்)

அந்த வைக்கம் சத்தியாகிரகப் போர் - நாமறிந்தவரையில் ஒரு தலைசிறந்த மனித உரிமைப் போர்! ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்குக் கால்கோளிட்ட மகத்தான மக்கள் போராட்டமாகும்!

அதன் நூற்றாண்டு விழாவை ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்டு, அதனை வாழ்வில் கடைப்பிடிக்கும் இயக்கத்தவர் கொண்டாடினால் அது கொள்கைத் திருவிழா என்ற அடிப் படையோடு கொண்டாடப்படும் விழாவாக அமையும்.

ஜாதி வர்ணம் - தீண்டாமையை ஆதரிக்கிறவர்கள் வைக்கம் போராட்டத்திற்கு உரிமை கோருவதா?

ஜாதி - வர்ணதர்மம் - தீண்டாமை என்பது முன்ஜென்ம கர்ம வினைப் பயன் என்று அதற்கு நியாயம் கற்பித்து எழுதியும், பேசியும் வரும் ஹிந்துத்துவ சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்களை தலையில் சுமந்து, ‘சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்' ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்' என்று பேசி, ‘‘சூத்திரர்களும், பெண்களும் பாவ யோனியி லிருந்து பிறந்தவர்கள்'' என்றும் (அத்தியாயம் 4) கூறும் பகவத் கீதையை பாட புத்தகமாக்கிடும், கல்விக் கொள்கையாளர்களான ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவை நடத்த உண்மையான கொள்கைத் தகுதியோ, தார்மீக உரிமையோ உண்டா?

இப்போது இப்படி திட்டமிட்டு ஓராண்டுக்குமுன்பே 1001 பேரை கேரளத்தில் கமிட்டி அமைத்து நடத்தும் ‘‘வியூகம் - வித்தைகள்'' எதனை நோக்கி - தேர்தலில் ஒடுக்கப்பட்டோரின் வாக்கு வங்கியை நோக்கித்தானே! அல்லது தந்தை பெரியார் பெயரை இருட்டடித்து புதுக்கதை கட்டி - மற்ற வரலாறுகளைத் திரித்து எழுதுவதுபோல, வைக்கம் சத்தியாகிரகத்தையும் கொச்சைப்படுத்தவா?

வைக்கம் நடந்தது 1924. அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பிறக்கவே இல்லை! அதனால் என்ன? கொண்டாடக் கூடாதா? என்று சிலர்  கேட்கலாம்!

கொண்டாடலாம்; எப்போது, அதற்கு அந்தத் தகுதி வரும்?

ஆர்.எஸ்.எஸ்.சின் குருநாதர் கோல்வால்கர் 'ஞானகங்கை'யில் எழுதியது என்ன?

ஜாதி - தீண்டாமையைப்பற்றி ஆர்.எஸ்.எஸ். கொள்கைக் கர்த்தாவான கோல்வால்கரின் ‘‘ஞானகங்கை'' நூலில் (''ஙிuஸீநீலீ ஷீயீ ஜிலீஷீuரீலீts''),

‘‘நமது சமுதாயத்தின் மற்றொரு விசேஷ அம்சம் நான்கு வர்ண அமைப்பு ஆகும். இன்று அது ஜாதிவாதம் என்று கூறி கேலி செய்யப்படுகிறது. வர்ண அமைப்பு என்று கூறுவதே கேவலமானது என்று நம் மக்கள் எண்ணுகின்றனர். அந்த நால் வர்ண அமைப்பினை, சமூக சம நீதிக்குப் புறம்பானது என்று தவறாக எண்ணுகின்றனர்.....''

‘‘...சமுதாயம் என்பது இறைவனின் நான்கு வகை தோற்றங்கள் - அதனை அனைவரும் தத்தம் இயல்புக்கேற்ற முறையில், தமக்கே உரிய முறையில் வழிபடவேண்டும் என்று கூறி வந்தனர்!''

- ‘ஞானகங்கை', பக்கம் 162

இக்கருத்தினை ஆர்.எஸ்.எஸ். மாற்றிக் கொண்டதா இன்று?

ஒரே நாடு, ஒரே மதம் என்பவர்கள் 

ஒரே ஜாதி என்று கூறத் தயாரா?

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேசன் கார்டு, ஒரே தேர்தல் என்று ‘‘ஒரே, ஒரே'' பேசுகிறார்களே, நாடு முழுவதும் ஒரே ஜாதிதான் என்று அவசரச் சட்டம்மூலம் பிரகடனப்படுத்துவார்களா?

ஒரே சுடுகாடு அனைவருக்கும் ஏற்படுத்துவார்களா? காரணம், ஒரே ரேசன் கார்டு, ஒரே மதம்தான் என்று கூறி, சட்டம் இயற்றிவிட்டு, வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டை கொண்டாட முன்வரட்டும்! வருவார்களா?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதைத் தடுப்பவர்கள் யார்?

இதன்மூலம் தங்களது இரட்டை வேடத்தை மறைத்து, கேரளத்தில் காலூன்ற முடியவில்லை; தமிழ்நாடு போன்றே என்ற கவலையில், இப்படி ஓர் அரசியல் தூண்டிலில் வைக்கம் சத்தியாகிரகத்தை ஓர் அரசியல் கருவியாக்கி, கேரள மக்களை மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், ‘பாசாங்கு' செய்து ‘பாவ்லா' காட்டி வஞ்சிக்க வருகிறார்கள்!

ஆனால், இவர்களது வேடத்தைப் பார்த்து ஒருபோதும் ஏமாறமாட்டார்கள்!

காங்கிரஸ் தியாகத்தினைத் தள்ளி - ஆர்.எஸ்.எஸ்.சினர் ஏதோ தாங்களே 24 காரட் தேச பக்தி வழிவந்தவர்கள் என்று காட்ட - சத்தியாகிரகப் போராட்டத்தைப் பயன்படுத்தப் பார்க்கின்றனர் சிறிதும் வெட்கமின்றி!

சிலரை சில காலம் ஏமாற்றலாம்! 

வைக்கம் போராட்டத்தில் கைதியாகி சிறையிலிருந்த தந்தை பெரியார் சாகவேண்டும் என்று யாகம் நடத்தியவர்கள் நம்பூதிரிகள்!

தமிழ்நாடு அரசும், கேரள அரசும் இணைந்து வைக்கம் நினைவுச் சின்னம் ஏற்படுத்தினார்கள்.

காங்கிரஸ் வெள்ளி விழா, பொன்விழா கொண்டாடியது.

அப்போது இந்த ஆர்.எஸ்.எஸ். வீரர்கள் அவற்றில் பங்கு பெற்றார்களா? அல்லது தனியே ஏதாவது நிகழ்ச்சிகளை நடத்தினார்களா?

மாறாக, வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட தந்தை பெரியார் சாகவேண்டும் என்று ‘‘சத்ரு சங்கார யாகம்'' நடத்தியவர்கள் நம்பூதிரிப் பார்ப்பனர் களாயிற்றே!

அப்போது இல்லாது, இப்படி என்ன திடீர் அவசரக் காதல் - வைக்கம் சத்தியாகிரக முழக்கமிட்டு, அரசியல் வித்தை!

அரசியல் வித்தை!! 

அவர்களின் ஏமாற்று வித்தைகளைப் புரிந்துகொள்வீர்!


-கி.வீரமணி 

தலைவர்,திராவிடர் கழகம்

சென்னை

18.1.2023

No comments:

Post a Comment