பொதுமக்களுடன் காவலர் கலந்தாய்வு: ஒரே நாளில் 212 இடங்களில் நடைபெற்றது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 10, 2023

பொதுமக்களுடன் காவலர் கலந்தாய்வு: ஒரே நாளில் 212 இடங்களில் நடைபெற்றது

சென்னை, ஜன.10 சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக, அனைத்து காவல்நிலைய காவலர்களும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தினருடன் கலந்தாய்வு மேற்கொள்ளவும், அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை காவலர்கள்  79 குடியிருப்போர் நலச் சங்கத்தினர், 93 குடிசை மாற்று வாரியப் பகுதிகள், 40 காவல் சிறார் மன்றங்களில் உள்ளோரிடம் கலந்தாய்வு நடத்தினர். சந்தேக நபர்கள் குறித்தும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் அறிய நேர்ந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேலும், தேவை ஏற்பட்டால் காவல்துறை உதவி எண் 100, அவசர உதவி எண் 112, பெண்கள் உதவி மய்யம் எண் 1091, முதியோர் உதவி மய்யம் எண் 1253, குழந்தைகள் உதவி மய்யம் எண் 1098 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும்போது, ‘‘காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், காவல்துறையின் 24 மணி நேர உதவி குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையிலும் இதுபோன்ற கலந்தாய்வுக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்’’ என்றார்.

தேசிய வாக்காளர் தினம்: 

பள்ளி மாணவர்களுக்கு விநாடி-வினா போட்டி

சென்னை, ஜன.10 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்திய தேர்தல்கள் மற்றும் பொது அறிவு தொடர்பான விநாடி-வினா போட்டி நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

 13-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டும், வருங்கால வாக்காளர்களின் தேர்தல் பங்களிப்பை மேம்படுத்தும் வகையிலும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, இந்தியத் தேர்தல்கள் மற்றும் பொது அறிவு குறித்து மாநில அளவிலான விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியிலும் 2 மாணவர்கள் வரை பங்கேற்கலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சிறந்த 2 அணிகள், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் முதல்நிலைப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும். மொத்தம் 76 அணிகள் முதல்நிலைப் போட்டியில் பங்கேற்கும்.3 அணிகளுக்கு பரிசு வழங்கப்படும். முதல்நிலை, அரையிறுதி மற்றும்இறுதிநிலைப் போட்டிகள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வரும் 10, 11-ஆம் தேதிகளில் காணொலிக் கருத்தரங்கு மூலம் நடத்தப்படும். இதில் வெற்றிபெறும் 3சிறந்த அணிகளுக்கு மாநில அளவிலான தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின்போது பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவே இறுதியானது. இவ்வாறு சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.


தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் 

 பணியிடங்களை 3 மாதத்துக்குள் நிரப்ப அரசாணை

சென்னை, ஜன 10 சென்னை சேப்பாக்கத்தில் உள்ள புதிய விருந்தினர் மாளிகையில், தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹல்தார் நேற்று (9.1.2023) செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறையின் செயலர் டி.எஸ்.ஜவகர், தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குநர் டாக்டர் சுனில்குமார் பாபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அருண் ஹல்தார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் துறை சார்பில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் மொத்தம் 13 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில்10 வழக்குகளுக்கு தீர்வுகள் காணப்பட்டன. மீதமுள்ள வழக்குகள் மேல் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மனிதக்கழிவா அல்லது விலங்குகளின் கழிவா என்பதைஉறுதி செய்ய நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக 11 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த விவகாரத்தின்போது நிகழ்வு நடைபெற்ற இடத்தில், பயன்பாட்டில் இருந்த அலைபேசி குறித்து அலைபேசி கோபுரம் மூலமாக அதனுடைய விவரங்கள் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் ஆணையம் உறுதியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோ ருக்கான 10,402 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதில்அதிகபட்சமாக 6,841 பணியிடங்கள் ஆயத்தீர்வைத் துறை, உள்துறைஆகியவற்றிலும், 228 பணியிடங்கள் எரிசக்தித் துறையிலும் காலியாக உள்ளன. இவற்றை 3 மாதத்துக்குள் நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



 

No comments:

Post a Comment