திருப்பத்தூர் முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் எழுச்சி முரசம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 18, 2022

திருப்பத்தூர் முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் எழுச்சி முரசம்!

சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் எடுத்துக்காட்டான ஒப்பற்ற பெரியார் தொண்டர்!

பெண்களும், ஒடுக்கப்பட்டவர்களும் உரிமை பெற்றதும், கல்வி பெற்றதும் திராவிட இயக்கத்தால்தான்!

'அனைவருக்கும் அனைத்தும்' என்ற தத்துவம்தான் ‘திராவிட மாடல்’ என்பது!

2023 பிப்ரவரி முதல் சமூகநீதி உரிமைகளை மீட்டெடுக்க சூறாவளி சுற்றுப்பயணம் தொடங்குவோம்!

இறுதிமூச்சு உள்ளவரை உழைத்துக்கொண்டே இருப்பேன்!

திருப்பத்தூர் முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் எழுச்சி முரசம்!

திருப்பத்தூர், டிச.18 ‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்பதே ‘திராவிட மாடல்’ அரசு. சட்டப்படியான உரிமைகளையும் பறிக்கும் ஆபத்து இப்பொழுது; சமூகநீதியை மீட்டெடுக்க வரும் பிப்ரவரி முதல் சூறாவளி சுற்றுப்பயணம் - என்று முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் முழங்கினார்.

திருப்பத்தூர் முப்பெரும் விழாவில்

நேற்று (17.12.2022)  மாலை  திருப்பத்தூரில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா -  தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா -  60 ஆண்டு ‘விடுதலை’ ஆசிரியர் பணியைப் பாராட்டி  சந்தா வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்த திருப்பத்தூர் மாநகரில் வரலாற்று நிகழ்வாக அண்மைக்காலத்தில் ஒரு பெரிய பதிவாக நடைபெறக் கூடிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்நாள் முதுபெரும் தொண்டர், தொண்டறச் செம்மல், துடிப்புமிகுந்த கொள்கை வீரர், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியாரை வரித்துக் கொண்டது மட்டுமல்ல, தன்னுடைய குடும்பத்துப்  பிள்ளைகளாக இருந்தாலும், இயக்கத்தில் இளைஞர்களாக இருந்தாலும், அவர்கள் அத்துணைப் பேரையும் தனக்குப் பின், இந்த இயக்கத்தில் உருவாக்கவேண்டும் என்று கொள்கையின் அடிப்படையில் வார்த்து எடுத்தவர் மறைந்த நமது அருமை நண்பர் திருப்பத்தூர் ஏ.டி.கோபால் அவர்கள்.

இங்கே நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னார்களே, இது ‘திராவிட மாடல்' என்று - அந்தத் திராவிடம் ஆயிரங்காலத்துப் பயிர் - அதை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்று. எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், அதை எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சலை இன்றைக்குப் பெற்றிருக்கிறது; எடுத்துக் காட்டாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவில், அமைந்திருக்கின்றது. முப்பெரும் விழாவின் இந்த சிறப்பான நிலைக்கு - அருமைச் சகோதரர்கள், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், அதுபோலவே, இங்கே உள்ளூரில் இருக்கக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர்கள், நகராட்சித் தலைவராக இருக்கக்கூடிய அம்மையார் ஆகியோர்- இப்படி பல்வேறு வகையில் உள்ளவர்களால் இந்த மேடை இன்றைக்குச் சிறப்பாக அமைந்து, இந்தத் திருப்பத்தூர் மாநகரில் ஒரு வரலாற்றுச் சிறப்பைப் பெற்றிருக்கிறது. நூற்றாண்டு விழா நாயகராக நாம் அடையாளம் காட்டக்கூடிய இளம் தலைமுறைக்கு,  இன்றைக்கு வரலாற்றுச் சுவடுகளைப்  பாருங்கள் சொல் லிக்காட்டக்கூடிய, அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கக் கூடிய உழைப்பின் வடிவம், அருமை நண்பர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஏ.டி.கோபால் அவர்களுடைய நூற்றாண்டு விழா -அவரைப் போன்ற வர்களுடைய உழைப்பின் விளைவே எண்ணற்ற தொண்டர்கள். அவர் ஓர் அடையாளம். ஏராளமான தொண்டர்கள் இங்கே - ஒவ்வொருவருடைய பெயரும் எனக்குத் தெரியும்.

1950 இல் இதே ஊரில் பெஞ்சு மேல் ஏறி நின்று பேசியிருக்கிறேன்

ஏனென்றால், நான் மாணவப் பருவத்தில் இருந்து இந்த ஊரில் தொடர்புடையவன். உங்களுக்குத் தெரிய வேண்டுமானால், எல்லாவற்றிற்கும் ஆதாரங்களை எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் திராவிடர் கழகத்துக் காரர்கள். பக்கத்தில் இருக்கக்கூடிய இந்தக் கண்காட்சி யில், ஒரு நோட்டீசை வைத்திருக்கிறார்கள். அதைப் பெரிதாக்கிக் பதித்திருக்கிறார்கள். நம்முடைய ஏ.டி.ஜி. அவர்களுடைய குடும்பத்துப் பிள்ளைகள் அதை மிகவும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

1950 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களின் அறிக்கைப்படி ஜூலை மாதம் பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த நாளையொட்டி, ‘‘திராவிட நாடு - பிரிவினை நாள்’’ என்று கொண்டாடுவது - திராவிடர் கழகத்தினுடைய அந்நாளையத் திட்டம்.

அப்படி திராவிடர் கழகம் முடிவுக்கு வந்த நேரத்தில், இந்த ஊரிலே, ‘‘15 வயது சிறுவன் கடலூர் வீரமணி, திருக்குறளாரோடு பேசுவார்’’ என்று அச்சடித்த நோட்டீசை இத்தனை ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

ஏ.டி.கோபால் அவர்கள் என்னை அழைத்து  அந்தக் கூட்டம் நடத்தியது 1950 ஆம் ஆண்டு என்றால்,  அதன் படி 72 ஆண்டுகளாக ஒரு சிறுவனாக, ஓர் இளைஞராக இருந்து  இந்த மேடையில் தூக்கிவிடப்பட்டு நிறுத்தப்பட் டுள்ளவன்; இந்த மேடையில் இருக்கக்கூடிய எல்லோ ரும் இன்றைக்கு என்னை கனம் தாங்க முடியாத அள விற்கு, ‘‘இன்னும் வேகமாக ஓடுங்கள்; இன்னும் வேகமாக ஓடுங்கள்'' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

‘‘ஓடினால் போதாது; வேகமாக ஓடுங்கள்'' என்று சொல்லுகிறார்கள். அதிலும் நம்முடைய அமைச்சர் அவர்கள், ‘‘எங்கள் ஊர்க்காரர்; எங்கள் ஊர் மாப்பிள்ளை'' என்று சொல்லி நான் இன்னும் அதிகமாக ஓடுவதற்குத் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருக் கிறார்கள். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்; தாய்மார்கள், சகோதரர்கள் இருக்கிறார்கள்; ஒரு குடும்பமாக நாம் இருக்கிறோம். இங்கே ஜாதி இல்லை; மதம் இல்லை; கட்சி இல்லை; பேதம் இல்லை -  இதுதான் ‘திராவிட மாடல்’ நண்பர்களே!

சனாதனம் மக்களைப் பிரிப்பது - திராவிடம் ஒன்றாக இணைப்பது.

இந்த உணர்வைக் கட்டியவர் நூற்றாண்டு விழா நாயகர் ஏ.டி.கோபால் அவர்கள்.

தந்தை பெரியார் நமக்குத் தந்த பேராயுதம் ‘விடுதலை!’

அதற்கடுத்து இன்னும் சிறப்பான ஒரு செய்தி என்னவென்றால், தந்தை பெரியார் அவர்கள் நமக்குத் தந்திருக்கின்ற அறிவாயுதம் - பெரியாரே ஒரு பேராயுதம். அந்தப் பேராயுதம், அந்தப் பாசறைக் கிடங்கு, ஆயுதக் கிடங்கு நமக்குத் தந்ததில் ஓர் அற்புதமான ஆயுதம் எதுவென்றால், அறிவாயுதமான ‘விடுதலை' நாளேடு.

பேரறிஞர் அண்ணா அவர்கள் 1940 ஆம் ஆண்டி லிருந்து, 1942 ஆம் ஆண்டுவரை ‘விடுதலை' ஏடு ஈரோட்டில் நடந்த நேரத்தில், அதனுடைய நிர்வாக ஆசிரியராக, ‘திராவிட நாடு' தொடங்குவதற்கு முன்னதாக இருந்தவர்.

என்னை அய்யா அவர்கள் அந்த இடத்தில் அமர்த் தினார்  என்று சொன்னால், அதற்குமுன் நான் அச்சப் பட்டதற்குக் காரணம் என்னவென்றால், முன்பு இருந்த ஆசிரியர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; பேரறிஞர் அண்ணா அவர்கள் அமர்ந்த இடம் அது. அவர்கள் எழுதிய இடம் அது.

அய்யா அவர்களின் அனுமதியோடு பின்பு ‘திராவிட நாடு' பத்திரிகையை அண்ணா அவர்கள் தொடங்கினார்.

அதற்குப் பிறகு ‘விடுதலை'யில்  பூவாளூர் பொன்னம் பலனார்; அதற்குப் பிறகு குத்தூசி குருசாமி போன்ற வர்கள்; அய்யா அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள எனக்குக் கட்டளையிட்டார்கள் என்பதற்காக - முடியுமா? முடியாதா? என்று சிந்தித்துப்  பார்க்கவில்லை; கட்டளையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஓர் இராணுவ வீரனுக்கு எப்படி கடமை இருக்கிறதோ, அந்தக் கடமை உணர்வு உருவாவதற்கு என்ன காரணம் என்றால், ஏ.டி.கோபால் போன்ற வர்கள்தான்.

அப்படிப்பட்ட ‘விடுதலை' நாளிதழுக்கு சந்தாக்கள் சேர்க்கவேண்டும் என்று தோழர்கள் மிகப்பெரிய அளவிற்கு உழைக்கிறார்கள். இங்கே பக்கத்தில் அமர்ந்திருந்த ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் சொன்னார், ‘‘தோழர்கள் சலிப்பில்லாமல் சந்தாக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே'' என்று சொன்னார்.

ஆம், ‘விடுதலை' நாளிதழ் என்பது பாதுகாப்பு - இந்த சமுதாயத்திற்குப் பாதுகாப்பு - வருகின்ற ஆபத்துகளி லிருந்து உடல்நலனைப் பாதுகாப்பதற்கு முதலாவது ஒரே வழி, நாள்தோறும் ஊசி போடவேண்டும்.

கரோனா (கோவிட்-19) தொற்றுக்குத் தடுப்பூசி போட்டோம் அல்லவா! கோவிட் தொற்று வந்தால் நீங்கும்; ஆனால், இப்பொழுது வடக்கே இருந்து வந்திருக்கக் கூடிய மதவெறி நோய் இருக்கிறதே, காவி நோய், அது சாதாரணமாக வந்தால், அவ்வளவு சீக்கிரம் போகாது; அது வருவதற்கு முன்பு ஒரே ஒரு தடுப்பூசி போடவேண்டும்; அதுதான் பெரியாரியம் என்று சொல்லக்கூடிய சுயமரியாதை உணர்வு; அதுதான் திராவிடம் என்று சொல்லக்கூடியது.

அந்தத் தடுப்பூசியினுடைய மருத்துவர்தான் ‘திராவிட மாடலி’னுடைய ஒப்பற்ற முதலமைச்சராக இருக்கக்கூடிய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

எனவே, அதை செய்வதற்கான - செய்து முடிப்பதற் கான ஒரு வாய்ப்பு, இரண்டாவது.

என்னுடைய பிறந்த நாள் விழா என்பது  ஓர் அடையாளம் - அவ்வளவுதான்!

மூன்றாவது, என்னுடைய பிறந்த நாள் விழா என்பது இருக்கிறதே, அது ஓர் அடையாளம், அவ்வளவுதான்.

அய்யா தந்தை பெரியார் அவர்களே சொல்வார்கள்; அவருக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடும்பொழுது சொல்லுவார்,   ஏன் பிறந்த நாள் கொண்டாடவேண்டும்? என்று சொல்லிவிட்டு, அதுகுறித்து விளக்க ஆரம்பிப்பார்.

‘‘பிறக்காத கடவுளுக்கெல்லாம் பிறந்த நாள் கொண் டாடுகிறான்; பிறந்திருக்கின்ற நமக்கு பிறந்த நாள் கொண்டாடவேண்டாமா?’’ என்று கேட்டார்.

எல்லோருக்கும் தெரியும், பிறப்பும், இறப்பும் அற்றவர் கடவுள்கள் என்று சொல்கிறார்கள், அவர்களுடைய வாதப்படி - நாம் யாரையும் சங்கடப்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை.

பிறப்பும், இறப்பும் அற்றவர் கடவுள் என்று சொல்லிவிட்டு, முருகன் இங்கே பிறந்தான்; ராமன் அங்கே பிறந்தான்; பிள்ளையார் அங்கே பிறந்தான் என்று வரிசையாக பிறக்காத கடவுளுக்குப் பிறந்த நாள் கொண்டாடும்பொழுது, பிறந்த எனக்கு, நமக்குப் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமா? என்று தந்தை பெரியார் கேட்பார். அது ஒரு பிரச்சார விழா - அது ஒரு கொள்கைப் பிரச்சாரம்தானே தவிர, வேறொன்றுமில்லை.

இங்கே ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களும் சொன் னார்கள், நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர் களும் சொன்னார்கள்; மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது என்னவென்றால், புத்தகம் கொடுப்பது மட்டுமல்ல; அந்தப் புத்தகத்தைப்பற்றி கேட்பார்; அதற்காக நான்  படித்துவிடுவேன். அவர் கேட்பார் என்பதற்காகத்தான் பயந்து கொண்டிருப்பேன் என்று.

கலைஞர் அவர்கள்; ‘முரசொலி’ படித்துவிட்டீர்களா? என்று அவரிடம் கேட்பார் என்றும் சொன்னார்.

அவர் மிக அழகாக சொன்னார், ‘‘அவசர அவசரமாக கீழே  இருக்கும் சண்முகநாதன் அறையில்  அமர்ந்து ‘முரசொலி’யைப் படித்துவிட்டு, அந்த நாளிதழ் கலைஞருக்குத் தெரியும் படியாக நான் மாடிக்குச் செல்வேன்’’ என்று.

கலைஞர் அவர்கள் மிகவும் கெட்டிக்காரர், குரு குலத்தில் படித்தவர், பெரியாரிடம்.

முத்தமிழறிஞர் கலைஞரின் கவலை!

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது கலைஞர் ஒருமுறை சொன்னார், ‘‘ஆசிரியர், ஒரு வேடிக்கை தெரியுமா? எங்கள் தோழர்கள் சில பேர் படிப்பதைக் குறைத்துக் கொண்டார்கள். ஆகவேதான், நான் அவர்களிடம் இன்றைய ‘முரசொலி’ தலையங்கம் என்ன? கடிதம் என்ன எழுதியிருக்கிறேன்? என்று கேட்பேன் என்று நினைத்து, அன்றைய ‘முரசொலி’யை மட்டும் படித்துவிட்டு வருவார்கள். அதை நான் கண்டு பிடித்துவிட்டேன்; ஆகவே, நேற்று முன்தினம் வந்த ‘முரசொலி'யில் வெளிவந்த தலையங்கம் என்ன? என்று கேட்பேன்'' என்று சொன்னார்.

ஏனென்றால், அன்றைய நாளிதழைப் படித்துவிடலாம்; ஆனால், முந்தா நாள் பேப்பரை அவசர அவசரமாகப் படிக்க முடியாது.

அப்படிப்பட்ட ஓர் உணர்வு  - ஒரு பிரச்சாரம்.

இவற்றை உள்ளடக்கி மிகச் சிறப்பாக நம் முடைய அத்துணைத் தோழர்களும் - திராவிடர் கழகத் தோழர்கள் மட்டுமல்ல - இங்கே இருக்கின்ற இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆக்கப் பூர்வமான மாவட்டச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர், நகராட்சி உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆகிய எல்லா தோழர்களும் இணைந்து, ஓர் அருமையான கொள்கைத் திருவிழாவாக இதை ஆக்கியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட அருமையான இந்நிகழ்ச்சியை, திராவிடர் கழக மாவட்டத் தலைவராக இருக்கக் கூடிய எழிலரசன் அவர்கள் என்னிடத்தில், ‘‘கடந்த 2 ஆம் தேதியே இந்த முப்பெரும் விழாவை நடத்தவேண்டும்'' என்றார்.

முப்பெரும் விழாவிற்கு ஒத்துழைத்த - உதவி செய்த தோழர்கள்!

2 ஆம் தேதி பிறந்த நாள் விழாவை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தியதால், இந்த விழா இன்றைக்கு இங்கு நடைபெறுகிறது. இந்த விழா, ஒரு நல்ல குடும்ப விழாவாக - கொள்கைக் குடும்ப விழாவாக ஆக்கியிருக்கின்ற எழிலரசன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் கலைவாணன் அவர்களே, 

தொடக்கவுரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் அன்பிற்குரிய அருமை கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்களே,

எங்களுடைய பாராட்டுதலுக்குரிய பொதுப்பணித் துறை அமைச்சர், கொள்கை வீரர், சீரிய பகுத்தறிவாளர் மாண்புமிகு மானமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களே,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் விடைபெற்றுச் சென்றிருக்கக்கூடிய தோழர் ஈ.வி.கி.ச.இளங்கோவன் அவர்களே, அவருடைய உடல்நிலைக் குறைவையும் பொருட்படுத்தாமல், வர முடியாத சூழல் இருந்தும், வந்தே தீருவேன், உரையாற்றியே தீருவேன் என்று இங்கே வந்து அருமையாக உரையாற்றி சென்றிருக்கின்றார்.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் அருமைக்குரிய பொறியாளர் செந்திலதிபன் அவர்களே,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், இன்றைய இளைஞர்களுடைய துடிப்புமிகுந்த வாதத்தில் வல்லவராக இருக்கக்கூடிய ஆளூர் ஷாநவாஸ் அவர்களே,

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களே, அவருடைய வாழ்விணையர் டாக்டர் சரோஜா அவர்களே,

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் - அண்ணா அவர்களுடைய பெயரை பல பேர் வைத்திருக்கிறார்கள். ஆனால், இவருக்கு ஏற்பட்டு இருக்கின்ற ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், இவருக்குப் பெயரே சி.என்.அண்ணாதுரை எம்.ஏ., என்பதாகும்.

தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றபொழுது, முதன் முதலில் அவரை வேட்பாளர் என்று அறிமுகப்படுத்தினார்  நம்முடைய அமைச்சர் அவர்கள். எப்படி பொருத்தமாக அமைந்திருக்கிறது பாருங்கள்.

சில பைத்தியக்காரர்கள் சொல்லுகிறார்கள், ‘‘வாரிசு அரசியல், வாரிசு அரசியல்'' என்று.

இந்தக் கொள்கை ஆயிரங்காலத்துப் பயிராக உள்ளதால், வாழையடி வாழையென வந்ததொரு கூட்டம்.

அதனால்தான் அண்ணாதுரை வருகிறார்;

அதனால்தான் அன்பழகன் வருகிறார்;

அதனால்தான் மதியழகன் வருகிறார்.

மாறி மாறி இந்த இயக்கத்திற்கு வரக்கூடிய அளவிற்குப் பெயர்கள் வைக்கக்கூடிய சூழ்நிலை.

இந்தக் கொள்கைக்கு காவலர்களாக மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை என்று வரக்கூடிய சூழ்நிலை.

அதுபோலவே நண்பர்களே, திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் அன்புச்சகோதரர் தேவராஜ்  அவர்களே,

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அவர்களே,

அவருடைய தாத்தா காலத்தில், அய்யாவை வைத்து அவர் திருமணம் நடத்தியவர் மட்டுமல்ல; முழுக்க முழுக்க பகுத்தறிவாளர். பல பேருக்கு இந்தத் தகவல் தெரியாது. நான் சொன்னதினால், இனிமேல் அவருக்கு எதிர்ப்பு அதிகமாகுமோ என்று தெரியாது - இருந்தாலும், அவர் அருமையாக அதனைச் சமாளிப்பார். இரண்டு முறை வென்ற வெற்றி வீரர் அவர்.

தி.மு.க. மாவட்டச் செயலாளர் நந்தகுமார் அவர்களே, ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அருமைத் தோழர் வில்வநாதன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர், ஆவின் மாவட்டப் பெருந்தலைவர் இராஜேந்திரன் அவர்களே,

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகுமார் அவர்களே,

திருப்பத்தூர் நகர மன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேசன்  அவர்களே,

இந்த அம்மையார் அவர்கள் என்னிடம் தொலைப் பேசியில் பேசும்பொழுது ஒரு செய்தியைச் சொன்னேன். ‘‘ஏ.டி.கோபால் அவர்களுடைய நூற்றாண்டு விழாவிற்கு அங்கே வருகிறோம். அவருடைய துணைவியார் ஏ.டி.ஜி.சந்திரா அவர்கள் இரண்டு முறை கவுன்சிலராக இருந்தவர். ஒருமுறை அவர்களையே சேர்மேன் ஆக்கவேண்டும் என்று வந்து, இந்த ஊரில், அய்யா சிலை வந்தது - அந்தக் காலத்திலேயே அவர் கொடுத்த முதல் தீர்மானம் நகராட்சியில், தந்தை பெரியாருக்குச் சிலை வைக்கவேண்டும் என்பதுதான்’’ என்று அவரிடம் சொன்னேன்.

இந்த நகரில் இன்றைக்குத் தலைவரே பெண் தலைவர். இதுதான் ‘திராவிட மாடல்’.

பெண்ணை, அடுப்பங்கரையிலேயே இரு என்று சொன்னது - சொல்வது குஜராத் மாடல்.

‘திராவிட மாடல்’ என்பது என்ன?

‘திராவிட மாடல்’ என்பது, அடுப்பங்கரையில் இருந்த பெண்களை, வெளியே கொண்டு வந்து, சட்டமன்றத்தில்,  நகர மன்றத்தில், ஊராட்சி மன்றத்தில் அமர வைத்தது மட்டுமல்ல - ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்லக் கூடிய அந்த உரிமையைப் பெற்றுத் தந்திருக்கின்ற அமைப்பிற்குப் பெயர் ‘திராவிட மாடல்’.

‘திராவிட மாடல்’ என்றால், வேறொன்றுமில்லை. சிலருக்குப் புரியவில்லை என்கிறான். என்ன புரிய வில்லை?

உன் தாயை அவமானப்படுத்தாதே; ‘‘உன் தாய் விதவை என்பதால், உனக்குத் திருமணம் நடக்கும் பொழுதுகூட, உன்னைப் பெற்ற தாய்,  எதிரே இருக்கக் கூடாது’’ என்று சொல்வதுதானே உன்னுடைய ஹிந்து மதம்; அதுதானே நீ பெருமையாகப் பேசக்கூடிய மதம். 

வளர்த்த தாய் எதிரே வரக்கூடாது; இந்த இயக்கம் இல்லையென்றால், இன்றைக்கு என்ன நிலை?

அனைவருக்கும் அனைத்தும் என்பது பார்ப்பனருக்கும் பொருந்தும்!

என்ன செய்தது திராவிட இயக்கம் என்று கேட்டால், ஒன்றே ஒன்று சொல்கிறேன் - பெண் களைப் பொறுத்தவரையில், உயர்ஜாதிப் பெண்கள், பார்ப்பன சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள், முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும்கூட, அவர்கள் அத்துணை பேரும் ‘‘நமோ சூத்திரர்கள்'' என்று எழுதி வைத்திருக் கிறான். அவர்களுக்குத் தனி உரிமை கிடையாது. அப்படிப்பட்ட நேரத்தில், இந்த இயக்கம் என்ன செய்தது என்பதற்கு ஒன்றே ஒன்று சொல்கின்றேன் - நாங்கள் யாரையும் வெறுக்கச் சொல்லவில்லை, பார்ப்பனர்கள் உள்பட.

உங்களுக்குரிய பங்கை நீங்கள் வாங்கிக் கொள் ளுங்கள்; மற்றவர்களுடைய பங்கை எடுத்து நீங் கள் கபளீகரம் செய்யலாம் என்று நினைக்காதீர்கள்.

அதுதான் சமூகநீதி - அனைவருக்கும் அனைத்தும்!

‘திராவிட மாடல்’ முதலமைச்சர் என்ன சொன்னார்?

பெரியார் சொன்ன வாக்கியத்தை எடுத்துச் சொன்னார் - ‘‘அனைவருக்கும் அனைத்தும்.’’ அதில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது.

ஆனால், ‘‘எல்லாம் எனக்கே என்பதுதான்’’ அதற்கு எதிரானது.

‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்பது எல்லோ ருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்பது தான்.

அப்படிப்பட்ட இடத்தில், இன்றைக்கு அவர் நகர் மன்றத் தலைவராக அமர்ந்திருக்கின்றார். 

இன்றைக்குப் பெண்களுக்கு 31 சதவிகிதமே குஜராத் மாடலில் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால்,  தமிழ்நாட்டில் பெண்களுக்கு 50 சதவிகிதத்திற்குமேல் நகராட்சியில், ஊராட்சியில் கொடுத்த பெருமை இன்றைய முதலமைச்சர் அவர்களையே சாரும். ‘திராவிட மாடலி’னுடைய ஆட்சியில், தலைசிறந்த சாதனைகளில் அது மிக முக்கியமானதாகும்.

அதுபோலவே, மாநகர ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகுமார் அவர்களே,

மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தோழர் பிரபு அவர்களே, காங்கிரஸ் கமிட்டியினுடைய மாநிலப் பொதுச்செயலாளர் விஜில் இளஞ்செழியன் அவர்களே,

காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளையின் தலைவர் பண்பாளர் அய்யா கணேஷ்மல் அவர்களே,

காங்கிரஸ் கமிட்டியின் திருப்பத்தூர் சட்டமன்றப் பொறுப்பாளர் பரத் அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் கண்ணதாசன் அவர்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களே,

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர் அவர்களே,

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் அவர்களே, அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் அவர்களே, மண்டலச் செயலாளர் குடியாத்தம் சடகோபன் அவர்களே, மாநில மகளிரணி பொருளாளர் தோழர் அகிலா எழிலரசன் அவர்களே, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்  தமிழ்ச்செல்வன் அவர்களே, மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவணன் அவர்களே,  பகுத்தறிவாளர் கழக மாவட்டக் கழகத் தலைவர் பகுத்தறிவன் அவர்களே, மாவட்டச் செயலாளர் அன்பு அவர்களே, மண்டல இளைஞரணி செயலாளர் சிற்றரசன் அவர்களே,  மாவட்ட இளை ஞரணி தலைவர் சுரேஷ்குமார் அவர்களே, மாவட்டக் காப்பாளர் நரசிம்மன் அவர்களே, மாவட்ட துணைத் தலைவர் அசோகன் அவர்களே, மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் அவர் களே, மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம் அவர் களே, நகர தலைவர் காளிதாஸ் அவர்களே, மாநில மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி அவர்களே, நகர செயலாளர் ஏ.டி.ஜி.சித்தார்த்தன் அவர்களே, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவரும், நூற்றியொரு வயது கண்டு அமைதியாக இன்றைக்கும் எங்களுக்குத் துணையாக இருக்கக்கூடிய அய்யா பொத்தனூர் சண்முகம் அவர்களே,

103 வயதுள்ள இளைஞர் பெங்களூரு வேலு அவர் களே, 101 வயது கடந்த ஆத்தூர் தங்கவேலு அவர்களே, இவர்கள் நூறாண்டை தாண்டியவர்கள்.

பொதுச்செயலாளர்கள் அன்புராஜ் அவர்களே, இரா.ஜெயக்குமார் அவர்களே, கழகப் பொருளாளர் கும ரேசன் அவர்களே,

கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே,

தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் அவர்களே, அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம் அவர்களே, பொன்னேரி பன்னீர்செல்வம் அவர்களே, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் மதிவதினி அவர்களே, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் மோகன் அவர்களே,

மற்றும் ஏ.டி.ஜி. அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்த அத்துணைப் பிள்ளைகளே, பேரப் பிள்ளைகளே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பார்ந்த வணக்கம் மட்டுமல்ல - அனைவருக்கும் நன்றி!

அனைவருடைய ஒத்துழைப்பினால் - மாநாடு போன்ற இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

ஆகவே, அனைவருக்கும் நன்றி சொல்லுவதற்காகத் தான் இந்த நீண்டப் பெயர் பட்டியலைப் படித்தேன். இதில் அத்துணை பேருடைய உழைப்பும் இருக்கிறது - அவர்களுக்குத் தலைதாழ்ந்த நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் விடுபட்டவர்கள் இருந்தால், அவர்கள் பொறுத்தருள வேண்டுகிறேன்.

சுருக்கமாக ஒரே ஒரு செய்தி!

இங்கே அருமையாக கருத்துகளைத் தோழர்கள் சொன்னார்கள்.

மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் சொன்ன சுவையான செய்தி!

இங்கே நம்முடைய அமைச்சர் அவர்கள் ஒரு செய்தியை சொன்னார். ‘‘படிப்பதற்காக நான் புத்தகத் தைக் கொடுத்தால்,  என்ன படித்தீர்கள்? என்று கேட் பார்கள்; அதற்காக அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்‘‘ என்று சொன்னார்.

எனக்கு என்ன பெயர் கொண்டு அழைக்கிறீர்கள்? ஆசிரியர், ஆசிரியர் என்று அழைக்கிறீர்கள்.

ஆசிரியர், புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, சும்மா இருந்தால், அவர் கடமையைச் செய்கிறார் என்று அர்த்தமா?

ஆசிரியர், புத்தகத்தைக் கொடுத்த பிறகு, அதை வாங்கியவர்கள் அதை ஒழுங்காகப் படித்தார்களா?  இல்லையா? என்று கேட்பதுதானே அவருடைய பணி.

எனவேதான், அந்த அளவிற்கு உங்களுடைய அன்பு இன்றைக்குப் பெருகிக் கொண்டிருக்கின்றது.

ஏ.டி.கோபால் எத்தகையவர்?

ஏ.டி.கோபால் அவர்கள், எழில் போன்றவர்களை, சித்தார்த்தன் போன்றவர்களை, இந்திரஜித் போன்ற இளைஞர்களைத் தயாரித்திருக்கிறார்.

ஏ.டி.ஜி. அவர்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர் அவர். மிக உரிமையாக எங்கள் இல்லத்திற்கு வருவார்; இரவு 11 மணிக்கு வந்து கதவைத் தட்டுவார். என்னுடைய வாழ்விணையர் கதவை திறப்பார்.

‘‘அம்மா, எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது; என்ன இருக்கிறது? வெறும் சாதகமாக இருந்தாலும் பரவாயில்லை, தண்ணீர் ஊற்றி சாப்பிடுகிறேன்’’ என்று சொல்வார்.

இதுதான் குடும்ப உறவு. வாரிசு அரசியல் என்று சில பைத்தியக்காரர்கள் சொல்கிறார்கள். இந்தக் கொள்கை உறவுதான் மிக முக்கியம்.

அதேபோன்று கே.கே.சி.  - கே.கே.சி. என்றால், நமது எழிலரசின் தந்தையார் - சுயமரியாதைச் சுடரொளி கே.கே.சின்னராசு.

இந்த இயக்கம் பெரிய அளவிற்கு வந்திருக்கிறது. என்னுடைய வயதைப்பற்றியெல்லாம் சொன்னீர்கள். இந்த விழாக்களுக்கு வருவதால் எனக்கு ஒரே ஒரு சங்கடம்தான்.

உற்சாகப்படுத்துகிறீர்கள்; உந்து சக்தி என்கிறீர்கள்; வேலை வாங்கவேண்டும் என்கிறீர்கள்; ஓடுவது போதாது, இன்னும் அதிகமாக ஓடவேண்டும் என்று சொல்கிறீர்கள், அதெல்லாம் சரி.

90 வயது 90 வயது என்று அடிக்கடி சொல்லி என்னைக் கிழவன் ஆக்காதீர்கள்!

ஆனால், 90 வயது, 90 வயது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே, அதுதான் சங்கடமாக இருக்கிறது. வயதைப்பற்றி நான் நினைப்பதே இல்லை. ஆனால், நீங்கள் மறுபடியும் மறுபடியும் ஏதோ கிழவன்மாதிரி ஆகிவிட்டேன் என்று வயதைப்பற்றியே சொல்கிறீர்கள்.

இந்த நிகழ்ச்சியில், நம்முடைய அய்யா சண்முகம் நூற்றியொரு வயது; 103 வயதான பெங் களூரு வேலு; 102 வயதான ஆத்தூர் தங்கவேலு ஆகியோரை அழைத்துப் பாராட்டுங்கள் என்றேன்.

அவர்களைப் பாராட்டுவதிலும் எனக்கு ஒரு சுயநலம் உண்டு. அது என்ன சுயநலம் என்று நீங்கள் கேட்கலாம்; அந்த ரகசியத்தைச் சொல்கி றேன்.

பெரிய கோடு, சின்ன கோடு என்று இருக்கிறது. நான் இளைஞன் என்று காட்டுவதற்கு என்ன செய்யவேண்டும்? 101 வயதுக்காரரை காட்டினால் தான், நான் இளைஞன் என்று காட்ட முடியும். அதற்காகத்தான் அவர்களை அழைத்துப் பாராட்டச் சொன்னேன்.

இன்னும் நான் இளைஞன்தான், என்னை வயதானவன் என்று சொல்லாதீர்கள் என்பதற்காக.

தோழர்களே,  எதனால் இந்த உணர்வு ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னால், ஒரு செய்தியை உங்களுக்குச் சொன்னால் வியப்படைவீர்கள். இதுவரை யாருக்கும் அந்தச் செய்தி தெரியாது.

திருப்பத்தூரில் தந்தை பெரியார் ஊர்வலம் - ஓர் அதிசயமான நிகழ்ச்சி!

முதலமைச்சர் கலைஞர், அமைச்சர்கள், மற்றவர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, பழைய கருத்துகளைப்பற்றி பேசும்பொழுது, கலைஞர் சொன்ன நிகழ்வைக் கேட்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். 

அமைச்சரவையில் இருப்பவர்களுக்கே பாடம் எடுப்பது போன்று சொல்வார். ஆசிரியருக்குத் தெரியும் என்று சொல்வார்.

அப்பொழுது உங்கள் ஊர் சம்பவம் ஒன்றை சொல் வார்; அது நடந்த சம்பவம். அந்த சம்பவம் கலை ஞருடைய மனதில் நன்றாகப் பதிந்த சம்பவம்.

''ஒரு பெரிய விழாவிற்குக் கோபால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இங்கே திராவிடர் கழகத்தில் ஆட்கள் நிறைய பேர் இருக்கமாட்டார்கள்; 

அவரே இளைஞர் போன்று எல்லாவற்றையும் செய்வார்.

தந்தை பெரியார் கூட்டம் என்றால், எல்லாக் கட்சிகாரர்களுக்கும் மரியாதை. 

இந்தப் பக்கத்தில் எள் உருண்டையைக் கொடுப் பார்கள். அய்யாவிற்கு எள் உருண்டை என்றால், மிகவும் பிரியும். பழையதாக இருந்தாலும், அதைக் கீழே போடமாட்டார் அய்யா.

அதைச் சாப்பிட்டவுடன், காலையிலிருந்து, மதியம் வரை கடுமையான வயிற்றுப் போக்கு. இங்கே பயணியர் விடுதியில்தான் தங்கியிருந்தார்.

மணியம்மையார் அவர்கள், அய்யா சோர்வாக இருப்பதைப் பார்த்து, கஞ்சி காய்ச்சி கொடுக்கிறார்கள்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா? ஊர்வலத்தில்   அமர்ந்து வரவேண்டும், எப்படி வரு வீர்கள்; வேண்டாம் என்று எல்லோரும் சொன்னார்கள்.

அப்பொழுது கோபால் அவர்கள், சின்ன பிள்ளை போன்று, தேம்பித் தேம்பி அழுகிறார்.

அய்யா, நான் பொதுக்கூட்டம், ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றேனே, நீங்கள் வராமல் போனால் என்னாவது? என்று குழந்தை போன்று அழுகிறார்.

இங்கே காவல் நிலையம் பக்கத்தில்தான் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சரி, கோபால் வருகிறேன். கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டாம்; எப்படியும் பேசிவிடுவேன் என்கிறார்.

ஒரு யோசனையை அய்யா அவர்கள் சொன்னார்.

எனக்கு வயிறு அடிக்கடி தொந்தரவு செய்யும். ஆகவே, நான் அமர்ந்திருக்கும் நாற்காலியில் ‘கம்மோடு’ அடியில் வை என்றார்.''

இதுபோன்ற வேறு எந்தத் தலைவரையாவது நினைத்துப் பார்க்க முடியுமா?

தன்னுடைய தொண்டர்களின் உணர்வை மதிக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய உடல்நலத்தைப் பற்றிக் கூட கவலைப்படமாட்டார்.

ஊர்வல வண்டியில் அய்யாவைத் தூக்கி உட்கார வைத்தார்கள். நிறைய சால்வை போட்டிருப்பார் அய்யா. 

ஊர்வலத்தில் பெரியார் வாழ்க, வாழ்க என்று தோழர்கள் முழக்கமிடுகிறார்கள்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து நடத்தி பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்கள். கம்மோட்டில் அமர்ந்து வந்தார் அய்யா அவர்கள்.

கலைஞர் அவர்கள் கடைசி வரையிலும் ஆச்சரியத் தோடு சொல்கிற விஷயம் அது.

இப்படி பாடுபட்டார் அய்யா, அது சாதாரணமான விஷயமல்ல என்பார்.

அப்படி பாடுபட்ட ஓர் அரிய தலைவருடைய தொண்டன், வாழ்நாள் தொண்டன் என்று சொல்லும் பொழுது, 90 வயதாகிவிட்டது என்பதற்காக ஒதுங்கிப் போக முடியுமா? அதிலும் மோசமான எதிரிகள் படையெடுக்கும்பொழுது, ஒதுங்கிப் போக முடியுமா?

நமக்கு எல்லோருக்கும் இருக்கும் கடமை என்ன?

சமூகநீதியினுடைய வரலாற்றைச் சொன்னார்களே நண்பர்கள்- 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப்பற்றி அமைச்சர் சொன்னாரே!

அதற்குமுன் எத்தனை பேர் படித்தார்கள்?

ஆசிரியர்களில் நம்மாட்கள் உண்டா? ஆனால், இன்றைக்கு திருப்பத்தூர் முழுவதும் பார்த்தீர்கள் என்றால், பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில், மூன்றாவது தலைமுறையில், நான்காவது தலைமுறையில் படித்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நிறைய இருப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இன்றைக்கு நாம் கஷ்டப்பட்டு பெற்று வளர்த்தையெல்லாம், முழுமையாக இட ஒதுக்கீட்டில் இவ்வளவு போராடி வெற்றி பெற்ற பிறகும், இங்கே எம்.பி., இருக்கிறார்; சட்டமன்ற உறுப் பினர்கள் இருக்கிறார்கள்; விவரம் தெரிந்த மக்கள் இருக்கிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்; அவர்களுக்கும் சேர்த்துச் சொல்கிறேன், நாம் பாடுபட்டு கொண்டு வந்ததை, கொஞ்சம் கொஞ்சமாக அரிப்பதுபோன்று, செல்லரிப்பது போன்று இன் றைக்குத் திருடிக் கொண்டிருக்கிறார்கள்; சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சூறையாட்டத்தைத் தடுக்கவேண்டும்; அதற்கு சுயமரியாதை உணர்வு ஒவ்வொருவருக்கும் உருவாகவேண்டும்.

அதற்காகத்தான் இந்தக் கூட்டம். 

அரும்பாடுபட்டோம், தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி இருப்பதினால், 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கிறது.

பெரியார் பாடுபட்டு, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தியவுடன், இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு.
கெட்டதிலும் ஒரு நல்லது!

தமிழ்நாட்டினுடைய கம்யூனல் ஜி.ஓ.தான் செல்லாது என்று வந்தது. கெட்டதில் ஒரு நல்லது என்னவென்றால், இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முதன்முறையாக, அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டது 15(4) என்று போடப்பட்டது, அய்யாவினுடைய உழைப்பினால்.
அதேமாதிரி, திராவிட மாடல் ஆட்சி இருந்ததினால், மருத்துவப் படிப்பு படிக்கிறார்களே, அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இன்றைக்கு நீட் தேர்வை உள்ளே கொண்டு வந்து நுழைக்கிறார்களே - நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்பு என்ன நிலை இருந்தது?

சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், மருத்துவப் படிப்பிற்கே மனு போட முடியும். இல்லையென்றால், மருத்துவராக முடியாது.

அதை ஒழித்ததுதான் திராவிட மாடல் ஆட்சி யினுடைய தொடக்கம். அதுதான் நீதிக்கட்சி. மறுபடியும் அது வரப் போகிறது - நாங்கள் ஏமாந்தால், நீங்கள் ஏமாந்தால் வரப் போகிறது.

எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு நாங்கள் சுற்றுப் பயணங்களை மேற்கொள்கிறோம். எங்கள் வீட்டுப் பிள் ளைகளுக்காகவா? உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்காக!

ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. பக்கம் செல்லும் பார்ப்பனரல்லாதார் சிந்தனைக்கு!

பா.ஜ.க. நண்பர்களே, தெரிந்தோ தெரியாமலோ ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குப் போயிருக்கின்ற நண்பர்களே, பார்ப்பனர் போனால் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால், நம்மாட்கள் போயிருக்கிறார்களே, அவர்களுக்கும் சேர்த்து சொல்கிறேன், உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் படிக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
எங்களுக்காக அல்ல - திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல; திராவிடர் கழகத்துக்காரர் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல! உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்காகவும்தான்.

அவ்வளவு கஷ்டப்பட்டதில், இன்றைய ஆட்சி வந்து, திராவிட மாடல் முதலமைச்சராக, நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்ததினால், வழக்குப் போட்டார்.

27 சதவிகித இட ஒதுக்கீட்டினை பிற்படுத்தப்பட் டோருக்குக் கொடுக்கவில்லை முதலில். அதைக் கண்டித்து நாங்கள் எல்லோரும் வழக்குப் போட்டோம்.
தி.மு.க. வழக்குரைஞர்கள் வாதம் செய்த பிறகு, உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது; உச்சநீதி மன்றத்திலும் பிறகு உறுதி செய்யப்பட்டது.

சட்டப்படியான உரிமைகளையும்  பறிப்பதா?

27 சதவிகித இட ஒதுக்கீடு இன்றைக்குக் கிடைக்கிறது என்றால், இந்தியா முழுக்க உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்கிறது என்றால், தமிழ்நாட்டில் இருக்கிற திராவிட மாடல் ஆட்சியினுடைய செயலினுடைய கனிந்த பலன்.

அதனால்தான், இதனை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்; அதனால்தான் இதை ஒழித்தாக வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள்.
ஆனால், எதிரிகள் பல ரூபத்தில்  வருவார்கள்.

27 சதவிகிதம் நிரம்பியிருக்கிறதா?

நேற்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் சொல்லியிருக்கிறார், 13 சதவிகித இட ஒதுக்கீடுதான் இதுவரையில் கொடுத்திருக்கிறார்கள். 27 சதவிகித இட ஒதுக்கீடு நமக்குக் கிடைக்கவேண்டியது சட்டப்படி  - பிச்சையல்ல, சலுகையல்ல, உரிமை!

ஆனால், ஏமாற்றியிருக்கிறார்கள். 27 சதவிகிதத்தில் 13 சதவிகிதம்தான் கிடைத்திருக்கிறது என்று சொன்னால், மீதமுள்ள 14 சதவிகிதம் அத்தனையும் உயர்ஜாதிக் காரர்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் எஸ்.சி., எஸ்.டி., சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதிகள் உண்டா? 

தலைமை நீதிபதியாக உயர்நீதிமன்றத்தில் இருக் கிறார், நம்முடைய சமுதாயத்தைச் சார்ந்தவர்.

எதிர்த்துப் பேசுகின்றவர்களை வெளியில் அனுப்பு கிறார்கள்.  எனவேதான் நண்பர்களே, அதைப் பார்த்து கொதித்துப் போயிருக்கின்றோம் நாங்கள் எல்லாம்.

தமிழ்நாட்டினுடைய ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று சொல்வதினுடைய நோக்கம் இதுதான்.

அதற்கு முதல் கட்டம் 10 சதவிகித இட ஒதுக்கீட்டுப் புண்ணுக்கு புனுகு பூசுவதுபோன்று, விஷத்தை உள்ளே வைத்து, தேன் தடவுகிறார்கள்.

ஏழைகள் பார்ப்பனர்களில் மட்டும்தான் இருக்கிறார்களா?


ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தால் நல்லதுதானே என்று நம்மாட்களிலும் சில பேர் தலை யாட்டுகிறார்கள்.

இட ஒதுக்கீடு என்பது படிப்பில்லாதவனுக்கு; உத்தி யோகம் கிடைக்காதவனுக்கு. ஏற்கெனவே சாப்பிட்ட வர்களுக்கு அல்ல.

இட ஒதுக்கீடு உணவை, பசியேப்பக்காரனுக்குக் கொடுக்கவேண்டும் பந்தியில். சமைத்து வைத்தது கொஞ்சம்.

பசியேப்பக்காரர்களை வெளியே நிறுத்திவிட்டு, புளியேப்பக்காரனை, அஜீரணத்தில் உள்ளவர்களை உள்ளே வா என்று சொல்லாதே என்று சொல்வதுதான் நம்முடைய எதிர்ப்பு.

இதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

முன்பு 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபொழுது அதை எதிர்த்து, பெரியார் நூற்றாண்டோடு, மாநாடு நடத்தினோம்.

சரி, ஏழைகள் என்று சொல்கிறீர்களே, எஸ்.சி., எஸ்.டி., சமுதாயத்தில் ஏழைகள் இல்லையா?

இன்றைக்குக் காலையில் ஒரு செய்தி வந்திருக்கிறது-
நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நரிக்குறவர், இருளர் சமுதாயத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று ஒரு மசோதாவை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.,க்காரர்கள் இருளர் சமு தாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்ன பெயர் வைத்தி ருக்கிறார்கள் என்றால், வனவாசி - காட்டுப் பயல் என்று.

கலைஞர் செய்தது என்ன?

அதேநேரத்தில், கலைஞர் அவர்கள் முதல மைச்சராக இருந்தபொழுது, குற்றப்பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்று சொன்னவர்களை, சீர்மர பினர் என்று பெயர் மாற்றம் செய்தார் கலைஞர்.

ஊனமுற்றோர் என்று சொன்னவர்களை, கலைஞர் அவர்கள், மாற்றுத் திறனாளி என்று சொன்னார்.

சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு இருக்கிறது; உடனே என்ன சொல்வார்கள், ஆகா, மோடி செய்தார் என்று சொல்வார்கள்.
மோடி செய்தார் சரி; யார் சொல்லி செய்தார்? அதை மறைத்துவிடுகிறார்கள் பத்திரிகைகளில்.

அதை முதன்முதலில் எடுத்துச் சொன்ன பெருமை நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தான் சாரும்.

நாடோடி போன்று இருப்பவர்களுக்கு வாய்ப்பு, வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்து, அதற்காக ஒரு குழு இருக்கிறது; அந்தக் குழுவும் ஒப்புக்கொண்ட பிறகு, அது ஒன்றிய அரசால், நாடாளுமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

எனவேதான், இப்படி எல்லாவற்றையும் செய்வ தற்குத் தேவை இருக்கிறது. இந்த சூழ்நிலையில், கொடுத்ததைப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.
உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் என்றால் என்ன அர்த்தம்?
இந்தக் கேள்வியை நாங்கள் மட்டும் கேட்கவில்லை, உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கேட்டிருக்கிறார்கள்.

யார் ஏழை?

ஒரு நாளைக்கு, ரூ.2,230 சம்பாதிப்பவர் ஏழை, அவர்கள் கணக்கில்.
நம்மூரில், வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர் களுக்குக்கூட நகரத்தில் ஓர் அளவுகோல் - இரண்டரை லட்சம் ரூபாய்க்குமேல் சம்பாதித்தால், வருமான வரி செலுத்தவேண்டும்.

வருமான வரித் துறையினருக்கு ஓர் அளவுகோல். 
அவாளுக்கு என்ன சொல்கிறார்கள்? உயர்ஜாதியில் உள்ள ஏழை என்று சொன்னால், ஓராண்டிற்கு 8 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவர்கள்; அதாவது ஒரு நாளைக்கு 2,230 ரூபாய் - அதுமட்டுமல்ல 5 ஏக்கர் நிலம் உள்ளவர்கள் ஏழையாம்.

எனவேதான் நண்பர்களே, இப்படிப்பட்ட ஒரு பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

உயர்ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது, அவர்களுக்கு உதவி செய்வதற்காக மட்டுமல்ல - இந்தச் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளவேண்டும் என்றால், பெரியார் கண்ணாடியைப் போட்டுப் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் விஷக் கிருமிகளைக் கண்டுபிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நண்பர்களே, அடுத்த கட்டமாக இட ஒதுக்கீடே நமக்குக் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஒட்டகம் முதலில் உள்ளே நுழைந்திருக்கிறது.  10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது, ஒரு கண்ணிவெடி.

அதை உடனே அடையாளங்கண்டு அதை முறியடிக்கக் கூடிய ஆற்றல் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குத்தான் உண்டு. தென்னாட்டிற்குத்தான் உண்டு; தமிழ்நாட்டிற்குத்தான் உண்டு. அந்தப் பணியைச் செய்ய முடிவெடுத்திருக்கின்றோம்.

பிப்ரவரி மாதத்தில் ஒரு சூறாவளி சுற்றுப்பயணம்
நீங்கள் கொடுத்த உற்சாகத்தினால், நிச்சயமாக வருகின்ற பிப்ரவரி மாதம் முதல், தமிழ்நாடு முழுக்க, கிராமங்கள், நகரங்கள் எல்லா இடங்களிலும் எங்கள் பிரச்சாரம் என்பது, இட ஒதுக்கீடு, சமூகநீதியைக் காப்பாற்றுவதற்காக சுழன்று சுழன்று அடிக்கும்.

நம்முடைய பிள்ளைகள் எல்லாம் மறுபடியும் மாடு மேய்க்கவேண்டுமா? தோளிலே துண்டு போட்டிருக் கின்றோமே, இந்த உரிமை நமக்கு முன்பெல்லாம் உண்டா? முழங்காலுக்குக் கீழே  வேட்டிக் கட்டிக் கொள்ளக்கூடிய உரிமை முன்பு உண்டா?

மறுபடியும் பழைய கருப்பனாக வேண்டும்; மறு படியும் மனுதர்மம் ஆட்சி ஆள வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு ஆபத்து வந்திருக்கிறது.

அதற்குத்தான் வடக்கே இருந்து சனாதனம் வருகிறது; அதற்குத்தான் காசிக்குக் கூப்பிடுகிறான்.

ஆகவே நண்பர்களே, இந்த இயக்கம் இருக்க வேண்டும் - எங்களுக்காக அல்ல - உங்களுக்காக.

இந்தக் கொள்கைப் பரவவேண்டும் - வருங்கால சந்ததியினுடைய பாதுகாப்பிற்காக - நம்முடைய பிள்ளைகளுடைய கல்விக்காக - படித்த நம்முடைய பிள்ளைகளுடைய வேலைக்காக - அதற்குத்தான் ஏ.டி.கோபால் உழைத்தார் - அதற்குத்தான் ‘விடுதலை' - அதற்குத்தான் திராவிட மாடல் ஆட்சி.
எனவே, இதனைப் பாதுகாருங்கள் - ஆட்சிக்காக அல்ல - உங்கள் மீட்சிக்காக - இனத்தின் மீட்சிக்காக!

ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், சந்தாக்களைத் திரட்டிய தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

இறுதி மூச்சு அடங்கும்வரை உழைத்துக்கொண்டே இருப்பேன்!

மீண்டும் உழைப்பேன், உழைப்பேன் -
இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், உழைத்து உங்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும், ‘கருப்புச் சட்டைக்காரன், காவலுக்குக் கெட்டிக்காரன்’ என்று சொல்லக் கூடிய அளவில், இளைஞர்களைத் திரட்டுவோம்!
அந்த முயற்சிகளை செய்வோம்! அனைவரும் ஆதரவு தாரீர், தாரீர் என்று சொல்லி,
வாழ்க பெரியார்!
வளர்க சமூகநீதி!
வாழ்க ஏ.டி.கோபால் போன்றவர்களுடைய புகழ்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment