பள்ளி ஆசிரியரிடம் படிப்பது கல்விக் கணக்கு - பெரியார் பாசறை ஆசிரியரிடம் படிப்பது பகுத்தறிவுக் கொள்கைக் கணக்கு!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 2, 2022

பள்ளி ஆசிரியரிடம் படிப்பது கல்விக் கணக்கு - பெரியார் பாசறை ஆசிரியரிடம் படிப்பது பகுத்தறிவுக் கொள்கைக் கணக்கு!!


ம.கவிதா, மாநிலத் துணைத் தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

ஏதுமறியாமல் இச்சமூகம் எனை உள்ளிருப்பில் தள்ளி வைத்தது. "உன் சுதந்திரத்தை நீ தான் பெற வேண்டும், உன் குழந்தையை வேறு யாரேனும் பெறுவரோ?" என்ற அவரின் சொற்கள் என்னை சுண்டி இழுத்தன. கூடுக்குள் ஒளியும் நத்தையைப் போல வீட்டிற்குள் முடங்கிய எனக்கு அவை விடுதலை வேட்கையைத் தந்தன. "நீ ஒரு பெண்!" என்று புறச்சூழல் எனை துரத்திய போதெல்லாம் அந்த எழுத்தில் பத்திரமாக நான் பதுங்கத் தொடங்கினேன். அவர் எங்கோ எழுதினார், அதில் நான் எழுந்தேன்! இனிப்பைத் தேடும் எறும்புகள் போல அவர் எழுத்தில் ஊர்ந்து நான் மொய்த்தேன்!" 

அவர் மட்டுமல்ல அவரின் அசைவுகளும் வாழ்வியலைப் பேசுகின்றன. அவரின் அறிக்கைகள் சமூக நீதியைப் பேசுகின்றன. அகவை பத்திலிருந்து இன்றைய 90 வரை பல்லாயிரக்கணக்கான மேடைகளில் பேசிய அவரைப் பேசாவிட்டால் -அவர் பேசியதைப் பேசாவிட்டால் அன்றைய பொழுது சொல்லிக் கொள்ளும்படி ஏதுமில்லாமல் போனதென்றொரு உணர்வு தோன்றுகிறது.

அவர் எனக்காக எழுதுகிறார், என்னைப் போன்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் எழுதுகிறார், எல்லோருக்குமாக எழுதுகிறார்... ஒடுக்கப் பட்டவர்களுக்காக எழுதுகிறார்...

ஜாதி ஒழிய எழுதுகிறார், பாலின பேதம் ஒழிய எழுதுகிறார்... எழுச்சி தரும் அந்த எழுத்துகளை நிழல் போல் நான் தொடர்ந்தேன். விளைவு?... பெரியாரை என்னுள் நிரப்பிக் கொண்டேன். ஏனெனில், அவரின் வாழ்வு அவருக்கானதாகத் தெரியவில்லை...  புத்தகத்தில் படித்த, கண்ணெதிரில் பார்த்த நாளிலிருந்து அவர் அப்படித்தான் பறந்தோடிக் கொண்டிருக்கின்றார்...

பெரியாரைக் கொண்டு சேர்ப்பதற்காகத்தான் பெரியாரால் ஆசிரியர் என்று அடையாளம் காட்டப்பட்ட தமிழர் தலைவரின் இந்தப் பெரு ஓட்டம் என்பது நன்கு புரிகின்றது.

எதை எப்படி எடுத்துச் சொல்வது?

எல்லோரும் எழுதிவிடலாம்- பேசிவிடலாம்; எதிரில் இருப்பவர்களுக்குப் புரியும்படி எழுதுவது - பேசுவது - எடுத்துச் சொல்வது என்பதொரு தனிக்கலை. அதுவே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் தனித்தன்மை! 

பொதுவாக, சிரிக்கச் சொன்னால் சரி சரி என்று தலையாட்டி விட்டுக் கடப்போரும், "சிரிக்காதவர்கள் நோயாளிகளாகிவிடும் ஆபத்துள்ளது" என்று ஆசிரியர் எடுத்துக்காட்டும்போது கடைசியாக, எப்போது சிரித்தோமென மனக்கணக்குப் போட்டுப் பார்ப்பார்கள். மெல்ல மெல்லச் சிரிக்கப் பழகுவார்கள். இந்தக்  கைப்பேசி- கணினி யுகத்தில் தூங்குங்கள் என்று சொல்லாமல், "நாளும் இரவு 10:00 மணிக்குப் பிறகு இருளில் சுரக்கும் 'மெலடோனின்' நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும். கண்கள் வெளிச்சத்தில் பட்டுக்கொண்டிருந்தால் பீனியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது. புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் எனும் இயற்கை மருந்தை நாம் இழந்தவர்கள் ஆகி விடுவோமே!" என்று ஆசிரியர் எடுத்துக்காட்டும்போது, எந்த வேலையாவது கிடக்கட்டும் என்று படுக்கைக்குப் போகாமல் எவரும் விழித்திருப்பார்களோ? 

கோபப்படாதீர்கள் என்று நாம் சொன்னால், நம் மீது சிலர் கோபத்திற்கு வருவார்கள். ஆனால், "சரியான பேர் வழியைக் கண்டுபிடித்து, சரியான நேரத்தில், சரியான அளவு (ஞிமீரீக்ஷீமீமீ), சரியான காரணத்திற்காக, சரியான வழியில் கோபப்படுங்கள். பெரும்பாலான மக்களுக்குத் தன்மானத்தைத் தந்த தந்தை பெரியாரின் கோபத்தைப் போல, ஜாதி மீதும் மூடநம்பிக்கையின் மீதும் புத்தருக்கு ஏற்பட்ட கோபத்தைப் போல, ஏற்றத்தாழ்வின் மீது காரல் மார்க்சுக்கு ஏற்பட்ட கோபம் போல சரியான கோபம் தான் முறையான  தேவை!" என்று ஆசிரியர் எடுத்துக் காட்டினால்  எவர்தான் எதற்கெடுத்தாலும் கோபப்படுவர்? 

இப்படி வாழ்வியலில் மட்டுமல்ல, எல்லாத் தளங்களிலும் அழுத்தமான உண்மைகளை நயமுற எடுத்தாள்வார். இட ஒதுக்கீடு என்றால் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டால் "நாம் ஜாதி ஒழிப்புப் பாலம் கட்டுகிறோம் அப்பணி நிறைவடையும் வரை அமைக்கிற மாற்றுப் பாதை தான் இட ஒதுக்கீடு" என்பார். பொருளாதார அளவுகோல் ஏன் வேண்டாம் என்றால், "அது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல அது ஒரு ஜாதி உணர்வு ஒழிப்புத் திட்டம்!" என்பார். இப்பதிலைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் பொறிதட்டாமலும் போகுமோ?

"அடிபட்டு அவசரப் பிரிவில் இருப்பவர்கள் அவரவர் ஜாதிப் பிரிவு இரத்தம்தான் வேண்டும் என்பார்களா?" என்ற அவரின் கேள்வியை எந்த ஜாதி வெறியர்தான் மறுத்துப் பேசிவிட முடியும்?

"ஒரே நாடு- ஒரே மொழி என்போர் ஒரே ஜாதி என்றாக்கவில்லையே?" என்ற அவரின் கிடுக்கிப் பிடி கேள்வியில் ஒன்றிய அரசின் ஒடுக்குமுறை மொத்தமும் சத்தமின்றி அம்பலமாகிறது அல்லவோ?! 

கேட்பவர்கள் யாராக இருந்தாலும் - அவர்கள் மாணவர்களோ - கற்றாய்ந்த அவையினரோ - பாமரர்களோ - அவர்களும் ஏற்கும்படி ஆசிரியரின் பேச்சுத் தன்மை இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால், தனக்கு முன்னால் பேசுபவர்கள் தன்மானக் கருத்தை எதிர்த்துப் பேசினால்கூட, நயமாக மறுத்து தன்வயப்படுத்தல் என்பது வேறு எவருக்கும் எளிதில் வாய்க்காத நம் தமிழர் தலைவரின் தனித்திறன் எனலாம். 

ஆசிரியர் அவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்று, பேசுவதற்காக அமர்ந்திருக்கும் பொழுது அதற்கு முன்பு பேசிய ஒருவர், திருமண நிகழ்ச்சிக்கு இப்படி கருப்புச் சட்டையில் வந்திருக்கிறாரே என்று கேட்க, நம் தோழர்கள் கொந்தளிக்க, "இருங்க நாம்தான் பிறகு பேசப் போகிறோமே அப்போது பதில் சொல்லிவிடலாம்" என்று தலைவர் ஆற்றுப்படுத்தி இருக்கிறார். பின்பு உரையாற்றுகையில், "கருப்பைப் பற்றி தோழர் பேசினார், நீதிபதிகளே கருப்புடைதான் அணிந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... ஒவ்வொருவர் தலையிலேயே கருப்பு உள்ளதே... மணப் பெண்ணுக்கு இளநரை இருந்தால் கொஞ்சம் கருப்படித்து அவர்களை இளமையாகக் காட்டியிருக்கலாம் என்றுதானே திருமணத்திற்கு வந்தவர்களும் சொல்வீர்கள்... அதைப்போல, நாங்களும் அறிவு இளமையாக இருப்பதற்குத் தான் இந்தக்  கருப்புச் சட்டை அணிகிறோம்" என்று ஆசிரியர் அவர்கள் சொன்னவுடன் அரங்கமே சிரித்திருக்கிறது. அறியாமையைக் காட்டியவரிடம் அமைதியாக அறிவைக் காட்டினார் நம் தலைவர் என்பது நம் கருத்துக்கு மறுப்புரைப்போரிடமும் எப்படி நடந்து கொள்வது என்று நமக்குப் பாடமாகிறது.

அவரின் அசைவுகளும் கற்பிக்கும்!

திருமண நிகழ்ச்சிகளில் பெண்ணுரிமைக் கொள்கைகளை ஆசிரியர் அவர்கள் புரிய வைக்கும் பாங்கே அலாதியானது.

தான் யாருக்கேனும் பயனாடை அணிவித்துச் சிறப்புச் செய்கையில், அவர்கள் தனக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கூட தலையைக் குனியக் கூடாது என்பார். "நிமிர்ந்து நிற்பதற்குத் தான் தந்தை பெரியார் பாடுபட்டார்!" என்று நொடியில் விளங்க வைத்து விடுவார்.

சில அசைவுகளில் கூட வாழ்வியலை எளிமையாக்கிச் சொல்லித் தரும் தலைவரின் இத்தன்மை என்பது தன்னிகரற்றது. இப்படித்தான் 20. 11. 2022 அன்று நடைபெற்ற தமிழீழம்- ராஜ்குமார் திருமணத்திலும் ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. மணமகளின் மாலையைப் பெறுவதற்காக சற்றே தலையைக் குனிந்தார் மணமகன். உடனே தலைவர் அவர்கள் "வாழ்க்கையில் எப்பொழுதும் இப்போது தலை குனிந்ததை மறக்காமல் இருங்கள். உங்களுக்குள் என்ன சிக்கல் வந்தாலும் இதை நினைத்துக் கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை சிறப்பாகும் என்பதை எப்போதும் இதன்மூலம் நினைவில் கொள்ளுங்கள்" என்று நகைச்சுவையோடு கூறி சிரிக்கவும் சிந்திக்கவும் வாழ்க்கைக்கு வழி காட்டவும் செய்தார்.

ஒன்றா, இரண்டா? ஆசிரியரின் அனிச்சைச் செயல்களும் கூட ஆயிரம் பாடம் எடுக்கும் நமக்கு.

"சாணத்தைக் கும்பிட்டால் பக்தி; அதைக் கழுவினால் புத்தி" என்ற பெரியாரின் கருத்தை, பெரும் வரையறைகள் இல்லாமலே புரிய வைத்து பரப்பும் ஆசிரியர் அவர்கள் இப்படித் தன் பேச்சிலும் எழுத்திலும் தன் உழைப்பிலும் ஏன் தன் உடலசைவிலும் கூட பகுத்தறிவை வெளிப்படுத்தி வாழ்கின்ற ஓர் அரிய மனிதர். அவரைத் தலைவராக வாய்க்கப் பெற்றது நமக்கு எத்துணை வாய்ப்பானது! வகுப்பு ஆசிரியர்களிடம் பள்ளிக்கூடத்தில் பாடம் பயின்றோம். அது நமக்கொரு மனனம்.நாடு நலமுற ஓயாதுழைக்கும் நம் 'விடுதலை' ஆசிரியரையே பாடமாக்கிக் கொண்டால் நம் வாழ்வு பயனுறும் என்பது திண்ணம்.

ஆசிரியர் என்னும் சொல்லும்

அவராலே மேன்மை கொள்ளும்!


No comments:

Post a Comment