வணிக வளாகமாக மாறும் சென்னை அடையாறு பேருந்து பணிமனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 30, 2022

வணிக வளாகமாக மாறும் சென்னை அடையாறு பேருந்து பணிமனை

சென்னை,டிச.30- சென்னையில் உள்ள அடையாறு பேருந்து பணிமனையை 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.993 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 30-க்கும் மேற்பட்ட பேருந்து டிப்போக்கள் உள்ளன. இவற்றில் இருந்து தினசரி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் அடையாறு பேருந்து பணிமனை மிகவும் பழைமையான பேருந்து பணிமனை ஆகும். இந்நிலையில், இந்த பேருந்து பணி மனையை மேம்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அடையாறு பேருந்து பணிமனை மொத்தம் 5.63 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பணிமனையில் இருந்து தினசரி 159 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2 மாடிகள் கொண்ட இந்த பணிமனையில் நிர்வாக அலு வலகம், வாகன நிறுத்துமிடம், டயர் பிரிவு, பராமரிப்புப் பிரிவு, உணவகம் உள்ளிட் டவை செயல்பட்டு வருகின்றன.

இதற்கு அருகில் அடையாறு மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரை உள்ள வழித்தடத்தில் அடையாறு மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையம் அடையாறு பேருந்து பணிமனைவில் இருந்து 800 மீட்டர் தொலைவில் அமைய உள்ளது. எனவே, அடையாறு பணிமனையை பல்வேறு வசதிகளுடன் கூடிய வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி தரைத் தளம் மற்றும் முதல் தளம் பேருந் துகளை நிறுத்துவதற்கான இடமாக பயன்படுத்தப்படும். 2ஆவது தளம் பேருந்து டிப்போ மற்றும் வணிகக் கடைகள் இருக்கும் தளமாக இருக்கும். மூன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள தளங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் உள்ள தளமாக அமைக்கப்படும். இவற்றில் தியேட்டர், உள் அரங்க விளையாட்டுகள், கூட்ட அரங்கம் ஆகியவைகள் இருக்கும்.

இந்த திட்டமானது ரூ.993 கோடி செலவில் செயல் படுத்தப் படவுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு உள்ள வணிக வளாகங்கள் மூலம் ரூ.120 கோடியும், மற்றவை மூலம் ரூ.6 கோடியும் என மொத்தம் ரூ.126 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு

தமிழ்நாடு அரசின் பயிற்சி மய்யத்தில் 

பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை,டிச.30- தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மய்யத்தில், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங் கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர் கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மய்யம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், இப்பயிற்சி மய்யத்தில் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை ஒன்றிய தேர்வாணையத்தால்  நடத்தப் பட்ட இந்திய வனப்பணி முதன்மைத் தேர்விற்காக 9 ஆர்வலர்கள் தங்கிப் பயின்றார்கள். அவர்களில் 5 ஆர்வ லர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்  3  ஆர்வலர்கள்  மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த ஆர்வலர்களுக்கு இப்பயிற்சி மய்யத்தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வு,  பணியில் உள்ள, ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது, தேர்ச்சி பெற்றுள்ள  ஆர்வ லர்கள், தங்களது மாதிரி  ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும்.

இப்பயிற்சி மய்யத்தின் மூலம் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள் தவிர, மேற்குறித்த வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற ஆர்வலர்களும், இப்பயிற்சி மய்யத்தில் 2.1.2023 மற்றும் 3.1.2023 அன்று நடைபெறவுள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெறலாம். அவ்வாறு பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள், தங்களது விருப்பத்தினை, (DAF-I  மற்றும் DAF-II) aicscc.gov@gmail.com  என்ற  மின்னஞ்சல் முகவரிக்கு 30.12.2022-க்குள் அனுப்பலாம். இது தொடர் பான விவரங்களை www.civilserviceindia.com என்ற இணைய தளத்தில் காணலாம்.

372 இடங்களில் நவீன கழிப்பறைகள்

சென்னை மாநகராட்சி அனுமதி

சென்னை,டிச.30- மெரினா உள்ளிட்ட 3 மண்டலங் களில் நவீன கழிப்பறைகளை ரூ.430 கோடியில் அமைக் கும் பணிக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித் துள்ளது.

சென்னையில் பொது இடங்களில் கழிப்பறை வசதியை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி மண்டலம் 5, 6 மற்றும் 9 வது மண்டலத்தின் மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் வடிவமைப்பு, கட்டுமானம், செயல்படுத்துதல், திருப்பி அளித்தல் என்ற முறையின் கீழ் கழிப்பறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து ஒப்பந்தம் கோரி இருந்தது.

தற்போது இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணிகளை மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 372 இடங்களில் ரூ.430.11 கோடி மதிப்பில் தனியார் பங்களிப்புடன் பொது கழிப்பறைகள் கட்டப்படவுள்ளது. ஒராண்டு காலத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நவீன கழிப்பறைகளில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் புகார்களை தெரிவிக்கும் வசதி, டிடிசிவி, மாற்றுத் திற னாளிகளுக்கு ஏற்ற கட்டமைப்பு உள்ளிட்டவைகள் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment